சென்னை மாகாண சட்டசபை முதலியவைகளுக்கு இம்மாதம் நாலாம் தேதி அபேக்ஷகர்கள் நியமனம் செய்யப்பட்டு விட்டது. அபேக்ஷகர்கள் பற்பல கக்ஷிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு நியமனம் பெற்று இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர் கட்சி, பார்ப்பனரல்லாதார் கட்சி என்னும் இரண்டு கட்சிகளுக்குள்ளாகவே ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் இரு கட்சிகளையும் பற்றி லட்சியமில்லாமல் தங்கள் சுயநலமொன்றையே பிரதானமாய்க் கருதி நின்றிருக்கலாம். அதாவது, பார்ப்பனரல்லாதார்களில் யார் யார் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நிறுத்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தை உத்தேசித்தே அக்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக, சுயராஜ்யக் கட்சியில் இருக்கும் பார்ப்பனரல்லாதாராகிய ஸ்ரீமான்கள் முத்தையா முதலியார், துளசிராம் போன்ற பலரைச் சொல்லலாம். இவர்கள் முதலில் ஜஸ்டிஸ் கக்ஷியில் இருந்து மனஸ்தாபத்துடன் விலகினவர்கள். இப்போது சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இதற்குக் காரணம் இதுசமயம் பார்ப்பனர் தயவில்லாமல் சட்டசபைக்கு வர முடியாது என்கிற பயமும், எதிர்க் கட்சியில் இருந்து மிரட்டினால் ஜஸ்டிஸ் கட்சியார் பயந்து கொண்டு ஏதாவது உத்தியோகம் கொடுக்க மாட்டார்களா என்கிற தந்திரமும் தான்.
பார்ப்பனர்களும் எப்படியாவது யாரைக் கொண்டாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து விடவேண்டும் என்கிற கொள்கையுடையவர்களாயிருப்பதால் அங்கு யார் சண்டை போட்டுக் கொண்டு வருகிறவர்களானாலும், அவரைப் பூரண கும்பத்துடன் வரவேற்கிறார்கள். மற்றும் பலர் தாங்கள் இதுசமயம் சுயராஜ்யக் கட்சிப் பெயரைச் சொல்லிக் கொண்டால் பார்ப்பனர் உதவி செய்து சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கச் செய்து விடுவார்கள்; பிறகு எப்படி வேண்டுமானாலும் திரும்பிவிடலாம் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அந்தக் கட்சியின் பெயரைத் தற்கால சாந்தியாகச் சொல்லிக்கொண்டு நின்றிருக்கிறார்களே அல்லாமல் உண்மையான கட்சிப் பற்று என்று சொல்லவே முடியாது. மற்றும் பலருக்கு எந்தக் கட்சியின் பெயரையும் சொல்லிக் கொள்வதற்கு தைரியமில்லாதவர்களாகி ஒரு கட்சியிலும் சேராதவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயேச்சைவாதிகளாக நின்றிருக்கிறார்கள்.
இம்மாதிரி இதுவரை சென்னை சட்டசபைக்குப் பொதுத் தேர்தலில் நின்ற எல்லா அபேக்ஷகர்களிலும் 64 பேர் சுயராஜ்யக் கட்சி காங்கிரஸ் கட்சி என்றும் சொல்லிக் கொள்பவர்கள்; 56 பேர் ஜஸ்டிஸ் கட்சி என்றும் 61 பேர் சுயேச்சைவாதிகள் என்றும் சொல்லிக் கொள்பவர்களாக நின்றிருந்த போதிலும், சுயராஜ்யக் கட்சித் திட்டத்தின்படி பணம் கொடுத்து முச்சலிக்காவில் கையெழுத்துச் செய்திருப்பவர்கள் 10 அல்லது 15 பேர் கூட இருக்கமாட்டார் கள். அன்றியும் எலக்ஷன் நடப்பதற்குள்ளாகக் கட்சி மாறுகிறவர்கள் பலர் இருக்கலாம். எலக்ஷன் ஆனவுடன் மாறுகிறவர்கள் பலர் இருக்கலாம். உதாரணமாக, ஸ்ரீமான்கள் திருச்சி சேதுரத்தினமய்யர், டி.எ.ராமலிங்கம் செட்டியார் போன்றவர்கள் நாட்டில் சுயராஜ்யக் கட்சிக்குச் செல்வாக்கிருக்கிறது என்கிற எண்ணத்தின் பேரில் சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் கையொப்பமிட்டு ரூபாயும் கொடுத்தவர்கள்; இப்போது அக்கட்சிக்கு தேசத்தில் செல்வாக்கு இல்லை என்று தெரிந்தவுடன் தங்களை சுயேச்சைக் கட்சியார்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். எப்படி இருந்த போதிலும் சட்டசபைகளில் சுயராஜ்யக் கட்சி என்கிற பார்ப்பனர் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சி என்கிற பார்ப்பனரல்லாதார் கட்சியும் தன் தன் நோக்கங்களை நிறைவேற்றும்போது பார்ப்பனர்கள் பார்ப்பன ஆதிக்கத்திற்குத்தான் ஓட்டுச் செய்வார்கள். பார்ப்பனரல்லாதார் பெரும்பாலும் சிலர் தவிர மற்றவர்கள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்குத்தான் ஓட்டுச் செய்வார்கள் என்பது உறுதி.
உதாரணமாக, தேவஸ்தான மசோதா வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம் முதலியவைகளில் ஸ்ரீமான்கள் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், டி.எ. ராமலிங்கம் செட்டியார் ஆகியவர்கள் செய்கையைப் பார்க்கலாம். இது போலவேதான் சுயேச்சைவாதிகள் என்பாருள் பெரும்பாலோரும் நடந்து கொள்ளுவார்கள். ஆதலால் சுயேச்சைவாதிகளில் உள்ள பார்ப்பனர்களை சுயராஜ்யக் கட்சியிலும், பார்ப்பனரல்லாதாரை ஜஸ்டிஸ் கட்சியிலும் சேர்த்து தான் கணக்குப் பார்க்க வேண்டும். மற்றும் தேர்தல் ஆனபிறகு சில பேர் சுயராஜ்யக் கட்சியில் இருந்தும் மெல்ல மெல்ல சுயேச்சைவாதியாகி கடைசியாக ஜஸ்டிஸ் கட்சிக்கு வரக்கூடும். ஏனெனில் இதுசமயம் சுயராஜ்யக் கட்சி என்கிற பார்ப்பனர் கட்சிக்குத்தான் பிரசாரம் செய்யவும் மக்களை ஏமாற்றவும் பத்திரிகைகளும் மடாதிபதிகள் பணமும் கூலி ஆட்களும் தாராளமாய் இருப்பதால் அதன் பெயரைச் சொன்னால்தான் அநுகூலங் கிடைக்குமென்று நம்பும்படியாக நமது பார்ப்பனர்கள் பொய்ப் பிரசாரம் செய்துவிட்டதால், இப்போது அந்தப்படி சொல்லிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் சுயேச்சைவாதிகளிலும், சுயராஜ்யக் கக்ஷியாரிலும் பலபேர் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு வந்து சேருவார்கள் என்று எதிர்பார்ப்பது போல் ஜஸ்டிஸ் கக்ஷியிலிருந்து சுயராஜ்யக் கக்ஷிக்கு யாராவது வந்து சேருவார்களா என்று எதிர்பார்க்க முடியாது. இதை ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும் பார்ப்பனப் பத்திரிகைகளும் ஒப்புக் கொள்ளுகின்றன. ஏனெனில் அப்படிச் சேருகிறவர்களாயிருந்தால் இப்போதே பார்ப்பனர் விளம்பரங்களைக் கண்டு மயங்கிப்போய் அதில் போய்ச் சேர்ந்திருப்பார்கள். ஆதலால் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவு ஜால வித்தை செய்தாலும், எவ்வளவு பொய்ப் பிரசாரம் செய்தாலும், அடுத்துக் கூடும் சட்டசபை பார்ப்பன ஆதிக்கத்திற்கு உலை வைக்கக் கூடியதாகத்தான் முடியும்.
நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து எத்தனையோ பார்ப்பனரல்லாத ஆட்களைச் சுவாதீனம் செய்து பார்த்தார்கள். ஒரே நிலையாய் ஒரு வருஷமாவது பார்ப்பனரோடு இருந்த ஒரு பார்ப்பனரல்லாதார் பெயரையாவது கண்டுபிடிக்கக் கூடுமானால் பார்ப்பனரல்லாதாரால் பார்ப்பனரல்லாதார் கட்சியைக் கெடுக்கக் கூடும் என்று நினைக்கலாம். இதுவரை பார்ப்பனர்கூடச் சேர்ந்திருந்த பார்ப்பனரல்லாதார் எல்லோரும் பார்ப்பனர் யோக்கியதை அறிந்து ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இனியும் வெளிவரத்தக்க ஆட்கள்தான் அவர்களோடு இருக்கிறார்களே தவிர அவர்களுக்கு அனுகூலமாக யோக்கியமுள்ள ஒருவராவது இது சமயம் அவர்களிடம் இல்லை. உதாரணமாக, சென்னை பார்ப்பன பிரசங்க மேடைகளில் இருக்கும் ஆட்களைக் கவனித்துப் பார்த்தாலே தெரியவரும். ஆகையால் வரப்போகும் தேர்தலின் முடிவானது சென்ற வருஷம் பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருந்த சட்டசபை மெம்பர் களின் எண்ணிக்கையை விட குறைந்தது 10 அங்கத்தினராவது அதிகமாயிருக்குமே தவிர எவ்விதத்திலும் குறையாது. வீணாக ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியின் ‘புரட்டையும்’ சுதேசமித்திரனின் ‘புளுகையும்’ கண்டு யாரும் மயங்க வேண்டியதில்லை என்றும், எந்த விதத்திலாவது அடுத்த வருஷத்திய சட்டசபையில் பார்ப்பனர் கை உயர்ந்து விடுமோ என யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் உறுதி கூறுவோம்.
(குடி அரசு - தலையங்கம் - 10.10.26)