எல்லாத் துறைகளிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் விமோசனமில்லை. பெண்கள், சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றமேயல்லாமல், மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்களென்பேன்.
நாமும் அவர்களை சிசு, குழந்தைப் பருவம் முதல் ஓடி ஆடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்தும் பேத உணர்ச்சியற்று ஒன்றுபோலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன், அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரம் அல்லாமல், அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை, அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாகச் செய்து கொண்டு, அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஒரு அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.
இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு, ஒரு பெண்ணாக அமைவது. அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு கருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஒரு ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப் புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது, ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்! இந்த இழிநிலையில் பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.
நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன், பெண்களுக்குங்கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழைஅடித்துப் பாடமந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசிப் பற்றுப் போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதியல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழப்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல் மருந்து) போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி! அழுத்திப் பிடித்துக் கண்டித்து, அதட்டி அறுத்துத் தீர வேண்டியதாகும்.
நம் பெண்கள் உலகம், பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்ணை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தியடைகிறார்கள்; பெருமையடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பொம்மைகளாக (பதுமைகளாக) ஆக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
நம் பெண்கள் நாட்டுக்கு சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன, ஒழுக்கமற்ற சினிமாப் படங்களையும், சினிமா நட்சத்திரங்களையும் பார்த்து தினம் ஒரு ‘பேஷன்' நகை, துணிக்கட்டு, வெட்டு சாயல் ஏற்பட்டதுவே என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? இவை எல்லாவற்றையும் நம்குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றால் கீர்த்தி பெற்ற ஆண்களைப்போல் தாங்களும் ஆகவேண்டும் என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொ ண்டு திரிவது, பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகின்றேன்.
எனவே, பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்போல் கட்டுவித்தல் வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும் கீர்த்தி புகழ் பெறும் பெண்மணியாகவும் ஆக்க வேண்டும். பெண்ணும், தன்னைப் பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும், நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு - தாழ்வு என்ற எண்ணம் எழவேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படக்கூடாது. அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
(‘வாழ்க்கைத் துணை நலம்' நூலிலிருந்து. (1958 ஆம் ஆண்டுப் பதிப்பு))
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்று எந்த ஜீவபட்சியாவது இருக்கிறதா?
- விவரங்கள்
- பெரியார்
- பிரிவு: பெரியார்