‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.
ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.
சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.
காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.
பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?
ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?
மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.
ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற் கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.
(‘குடி அரசு' இதழின் தலையங்கம் 29.5.1932)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்
- விவரங்கள்
- பெரியார்
- பிரிவு: பெரியார்