சமீபத்தில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்று கூறி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதனால் கோபமடைந்த நாம் தமிழர் கட்சியின் தம்பிப் பிள்ளைகள் தங்களுக்கே உரிய 'பண்பாட்டோடு' மருத்துவர் ஷாலினி அவர்களை மிக மோசமான வகையில் விமர்சனம் செய்ததோடு, வழக்கம் போல சம்மந்தமே இல்லாமல் பெரியார் மீதும் சேற்றை வாரி இறைக்கும் வேலையிலும் இறங்கினர். 'தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக இப்பிரச்சனையைக் கொண்டு செல்வோம். இது போன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக் கொள்ள முடியாது' என்று அக்கட்சி அறிவித்திருக்கின்றது. இதற்கு ஷாலினி அவர்கள் பேஸ்புக்கிலும், காட்சி ஊடகத்திலும் கொடுத்த விளக்கங்கள் அவரின் ஆண்கள் மீதான காழ்ப்புணர்வையும், வரலாற்று அறிவின்மையும் தெளிவாகக் காட்டுகின்றது.

shalini on facebookஆண்கள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள், அயோக்கியர்கள்; பெண்கள் என்றாலே பரம யோக்கியர்கள் என்ற தொனியில் தொடர்ந்து அவர் கருத்துக்களை வைத்துக் கொண்டிருக்கின்றார். அதன் உச்சமாகத்தான் அருவருப்பூட்டும் எல்லைக்குச் சென்று, நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, இவர்கள் அனைவரும் சீமானின் பேச்சால் ஈர்க்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் என்ற பொருள் தரும்படி தனது கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். ஷாலினி அவர்களுக்கு சீமான் மீது தனிப்பட்ட முறையில் விமர்சனம் இருந்தால் அதை பொதுவெளியில் வைக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவரது கட்சியில் இருக்கும் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேச ஷாலினி அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இது அப்பட்டமான எல்லை மீறிய செயல். ஆனால் அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பவர்போல் இல்லை, தொடர்ந்து தனது இழிவான விமர்சனத்துக்கு சப்பைக்கட்டு கட்டும் முயற்சியிலேயே இருக்கின்றார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நான் நாம்தமிழர் கட்சியின் பெண்களை மட்டும் சொல்லவில்லை; உலகம் முழுவதும் இதுதான் நிலை” என்று, இன்னும் ஒருபடி மேலே சென்று தன்னுடைய வக்கிர கருத்துகளை பொதுமைப்படுத்தி இருக்கின்றார். மேலும் சீனப்புரட்சியைப் நடத்திய மாவோவைப் பற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்களைக் கேட்டால் “அவர்தான் எங்களின் தெய்வம், மீட்டு ரட்சிக்க வந்த தேவதூதன், அவர்தான் எங்களுக்கு எல்லாமே செய்யப்போறாரு” என்று சொல்வார்கள் என்றும், இப்போது போய் கேட்டால் “அவர் செய்தது முட்டாள்தனம், அது எங்க நாட்டையே அழித்துவிட்டது, அதனால் தான் நாங்கள் கஷ்டப்படுகின்றோம் என்று சொல்வார்கள்" என்கின்றார். உலக அரங்கில் இன்று சீனா மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கின்றது என்று சொன்னால் அதற்குக் காரணம் மாவோவின் காலத்தில் இடப்பட்ட அடித்தளமே ஆகும். ஒருவேளை சீனப் புரட்சி நடக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் சீனா ஏகாதிபத்தியங்களின் அடிமையாகவும், வேட்டைக் காடாகவுமே இருந்திருக்கும். சீன மக்கள் இன்றும் தங்களின் மாபெரும் தலைவராகக் கொண்டாடும் ஒருவரைப் பற்றி எந்தவித வரலாற்று அறிவும் இன்றி கம்யூனிச வெறுப்பில் பிதற்றி இருக்கின்றார் ஷாலினி அவர்கள்.

அடிப்படையில் பெண்ணுரிமை என்பது பெண்கள் மீது இந்தச் சமூகம் கட்டவிழ்த்துவிடும் எல்லாவித அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதும், அதை முடிவுக்குக் கொண்டுவரப் போராடுவதும்தான். ஆண்கள் இனிமையாகப் பேசினால் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்று சொல்வதெல்லாம் என்ன வகையான பெண்ணுரிமை? இதில் என்ன வகையான அறிவியல் பார்வை இருக்கின்றது? இது அடிப்படையில் பெண்களை கொச்சைப்படுத்தும் வக்கிரப் பார்வையாகும். எப்படி ராமதாஸ், 'தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும் போட்டுக்கொண்டு சூத்திரசாதிப் பெண்களை ஏமாற்றுகின்றார்கள்' என்று சொன்னாரோ, அதற்கு சற்றும் குறைந்தது அல்ல ஷாலினி அவர்களின் இந்தப் பேச்சு.

அடிப்படையில் ஆண்களும், பெண்களும் இயல்பாக பாரபட்சமற்று பழகும் ஒரு சமத்துவ சமூக அமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்திற்கே வேட்டு வைக்கக் கூடியது ஷாலினி அவர்களின் பேச்சு. அவரின் கருத்து உண்மையானது என்றால், ஒரு பெண் தன்னுடைய தந்தையோ, அண்ணணோ இனிமையாகப் பேசினால் கூட அதை சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்க வேண்டி வரும். பெண்கள் ஆண்களின் இனிமையான பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வருகின்றார்கள் என்பதெல்லாம் வெற்றுப் பிதற்றல் ஆகும். எந்த ஒரு தத்துவமும் சமூகத்தில் அதற்கான தேவையில்லை என்றால் நிச்சயம் அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதுதான் சமூகவிதி. சீமானை நோக்கி பெண்கள் ஏன் ஈர்க்கப்படுகின்றார்கள் என்று ஷாலினி அவர்கள் அறிய விரும்பினால், அதற்கான காரணத்தை சமூகத்தில் தேட வேண்டுமே ஒழிய, சீமானின் வாயில் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.

யாரைப் பற்றியும் மிகை மதிப்பீடுகள் தவறான பொருள்கொள்ளலுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். ஆண்களில் எப்படி பாலியல் வக்கிரம் பிடித்த, ஆணாதிக்கப் பொறுக்கிகள் இருக்கின்றார்களோ, அதே போல பெண்களிலும் பாலியல் வக்கிரம் பிடித்த, ஆண்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் பொறுக்கிப் பெண்களும் இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் சமூகத்தில் விதிவிலக்குகளே தவிர, விதிகள் அல்ல. யாரோ சில ஆண்கள் பெண்களை ஏமாற்றுகின்றார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றவாளிகள் ஆக்குவதும், அதே போல யாரோ ஒரு பெண் தன்னுடைய பாலியல் தேவையையோ, இல்லை பணத்தேவையோ நிறைவு செய்துகொள்ள ஆண்களை ஏமாற்றுவதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பெண்களும் கீழ்த்தரமான நடத்தை கொண்டவர்கள் என்று மதிப்பிடுவதும் பெரும் பிழையில் முடிந்துவிடும். நாம் குற்றவாளிகளை சமூகத்திற்கு அடையாளப்படுத்தி, ஒட்டு மொத்த சமூகத்திற்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டும், ஒழுக்க விழுமியங்களில் வீழ்ச்சியும், முதலாளித்துவ நுகர்வு வெறியும், பார்ப்பனிய ஆணாதிக்க சிந்தனையுமே இது போன்று பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலுக்குக் காரணம் என்பதை பொதுச்சமூகத்திற்கு விளக்கி, அதில் இருந்து விடுபட வழிகாட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு சமூகத்தில் இருக்கும் ஆண்கள் எல்லாமே பெண்களை ஏமாற்றி மோசடி செய்பவர்கள் என்ற தொனியில் பேசுவது முற்போக்கு அமைப்புகளில் பெண்ணுரிமைக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் இழிபெயரை தேடிக் கொடுத்துவிடும்.

நாம் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை உருவாக்க பாடுபடுவோம். ஆண்கள் பெண்களிடம் இனிமையாகப் பேசட்டும், அதே போல பெண்களும் தன்னை கட்டுப்படுத்தும் தளைகளை உடைத்துவிட்டு ஆண்களிடம் இனிமையாகப் பேசட்டும். ஆண், பெண் என்பதெல்லாம் உறுப்புகளின் அடையாள வெளிப்பாடே தவிர, அது சக மனிதர்கள் மீது நாம் காட்டும் அன்புக்கும், பரிவுக்கும், ஆதரவுக்கும் ஒரு தடை இல்லை. பெரியாரையோ, மார்க்ஸையோ ஏற்றுக் கொண்டவார்கள் யாரும் தன்னுடன் பழகும் பெண்களிடமோ, ஆண்களிடமோ பால் சார்ந்து பேசுவதும் இல்லை, பழகுவதும் இல்லை. அப்படியான சிந்தனை இன்னும் நீங்காமல் இருந்தால் நிச்சயம் அவர்கள் பெரியாரையோ, மார்க்ஸையோ பின்பற்ற எந்தத் தகுதியும் அற்றவர்கள் ஆவார்கள்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கும் இந்த அபாயகரமான சூழலில் நம்முடைய கருத்துகள் இன்னும் ஆண், பெண் உறவுகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டிய திசையில் இருக்க வேண்டுமே ஒழிய, அவர்களை எதிர் எதிராக நிறுத்தி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. டாக்டர் ஷாலினி அவர்கள் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்கள் பற்றி எழுதியது மிக மோசமான கருத்து வெளிப்பாடு ஆகும். நிச்சயம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் தன்னை பெரியாரின் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பெரியாரைப் பின்பற்றுவதாக சொல்பவர்கள், பெரியாருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செய்து இது போன்ற செயல்களால் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விடாதீர்கள் என்பதுதான் நமது வேண்டுகோள்.

- செ.கார்கி

Pin It