இந்தியக் குடும்பஅமைப்பு என்பது வன்முறையான ஜனநாயகம் அற்ற ஒரு அமைப்பு. இங்கு பெண் என்பவள் ஒரு சொத்து மட்டுமே. அவளின் உணர்வுகள், உணர்ச்சிகள் சமையலறையிலும், கட்டிலறையிலும் வைத்துப் புதைக்கப்படுகின்றன.

பெண் திருமணமாகிச் செல்லும் இடத்தில் சம்பளமில்லா வேலைக்காரியாக நடத்தப்படுவதும், பண்பாடு, கற்பு, பக்தி, ஒழுக்கம் எனும் பெயரில் அவளின் உழைப்பு இரக்கம் இல்லாமல் சுரண்டப்படுகிறது. ஒரு சமூகத்தில் ஏன் பெண்களின் நிலை இப்படி ஆனது என்பதை விசாரிக்க, நாம் சற்றுப் பின்னோக்கி பயணிக்க வேண்டி உள்ளது.

ஆம். ஆரியர் இந்நாட்டில் நுழையும்போது வந்தவர்கள் அனைவரும் ஆண்கள்தான். நாடோடியாய் மேய்ச்சல் நிலம் தேடி வந்தவர்கள் இங்குள்ள கருப்பு திராவிடப் பெண்களுடன் உறவு வைத்துக்கொள்கின்றனர். ஆரியர்கள் தனக்கான பெண் இணையை இந்த மண்ணிலேயே தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் வேறுவழி இல்லாமல் திராவிடப் பெண்களிடையே கலக்கும் நிலை ஏற்பட்டது.

தான் உயர்ந்தவன் என்கின்ற அகங்காரத்தின் காரணமாக தன்னுடன் சேர்ந்து வாழும் பெண்ணை ஆரியர்களால் அங்கீகரிக்கக்கூட முடியவில்லை. அனைத்துப் பிரிவினருக்கும் ஜாதியப் படிநிலையைக் கட்டமைத்த ஆரியர்கள், ஜாதி போன்ற (அவர்களது பார்வையில்) அந்தஸ்தையோ - பாதுகாப்பையோ பெண்களுக்கு வழங்கத் தயாரில்லை.

மேலும், பெண்களை நயவஞ்சகர்கள், சந்தேகத்திற்குறியவர்கள், பாவ யோனியில் பிறந்தவர்கள், சமமாக நடத்தப்படக் கூடாதவர்கள் என்றெல்லாம் சட்டமாக எழுதி வைத்தனர். இந்தச் சமூக ஒழுக்கக் கோட்பாடுகள் அனைத்தும் ஒரு மூலத்திலிருந்தே நகல் செய்யப்படுகிறது. இந்தப் பெண்ணடிமைத் தனத்தின் மூலம் பார்ப்பன வர்ணாசிரமக் கோட்பாடுதான்.

இந்தப் பார்ப்பன வர்ணாசிரமக் கோட்பாட்டில் இருந்தே இந்தச் சமூகம், தன் வாழ்க்கை முறையை நகல் செய்துகொண்டது. இந்தத் தோற்றுவாய்தான் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் வேதமாய், வெகு மக்களின் உளவியலாய் மாறியிருக்கிறது. இந்த வந்தேறி ஆரியச் சட்டங்களின் வெளிச்சத்தில்தான் தற்போதைய குடும்ப அமைப்பையும், பெண்ணுக்கான ஒழுக்க, கற்பு, கடவுள் விதிகளைப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டு உணவு மேசையிலும், அந்த வீட்டுப் பெண்ணின் ரத்தம் பறிமாறப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு வீட்டுப் படுக்கை அறையிலும் அந்தப் பெண்ணின் கற்பனைகள் காவு வாங்கப்படுகின்றது. உடலுறவின் விருப்பத் தேர்வு அங்கு நடைபெறுவதில்லை. தன் ஆசையையோ, அதிருப்தியையோ அவள் வெளிப்படுத்த முடியாத நவீன அடிமையாக நடத்தப்படுகின்றாள்.

எனவே, ஒரு தேசத்தில் அம்பது விழுக்காடு உள்ள உழைக்கும் சக்தியான பெண்களை வீட்டில் அடிமையாய் வைத்திருக்கும் எந்த ஆணுக்கும் வெளியில் சுதந்திரத்தைப்பற்றி பேச யோக்கியதை இல்லை. ஒரு தேச விடுதலை என்பது பெண் விடுதலையோடு தொடர்புடையது என்கின்ற நோக்கில் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டவனாவோம். இந்தச் சுயநலமான ஜனநாயகமற்ற, வன்முறையான குடும்ப அமைப்புதான் சொத்தையும், அரசையும் உருவாக்குகிறது.

‘குடும்பம்’ என்பது எப்படிப் பெண்களுக்கு எதிரானதோ, அதுபோல் ‘அரசு’ என்பது மக்களுக்கு எதிரானது. இந்த அரசை வீழ்த்த வேண்டுமானால் குடும்பத்தை வீழ்த்த வேண்டும். குடும்பத்தை வீழ்த்த வேண்டுமானால் குடும்பத்திலிருந்து பெண்களை விடுவிக்க வேண்டும். இதற்கு முதல் நிபந்தனையாக சமையலறை அற்றவீடு. அன்பால், காதலால் நண்பர்களாக வாழும் அமைப்பு.

பேராசான் காரல் மார்க்ஸ் வழங்கிய ‘கம்யூனிசம்’ என்பதன் பொருளே! ‘கம்யூன்’ என்றாலே இனக்குழு என்பதுதான். இனக்குழுக் களுக்கான அரசியலே கம்யூனிசம். எனவே ஒரு ‘கம்யூன் வாழ்க்கை’யில் தான், ஒரு பெண் தன் உடலைத் தானே சொந்தம் கொண்டாட முடியும். அப்படி அந்தப் பெண் தன் உடலைத் தானே சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டால், ‘குடும்பம்’ என்கின்ற அமைப்பு கட்டுடையும். குடும்பம் கட்டுடைந்தால் அரசு வீழும். அரசு இல்லாத ஒரு சமூகமே கம்யூனிசம். பெண் விடுதலை என்பது ஆண் விடுதலை மட்டுமல்ல, அது தேச விடுதலையோடும் தொடர்புடையது.

- தோழர் திருச்சி பெரியார் சரவணன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Pin It