ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி.
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி.)
ஆந்திர மாநில மசோதா விவாதத்தின் போது 15-7-1953 இல் சட்டசபையில் பேசிய விநாயகம் சித்தூர் பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறிவிட்டு,
“I cannot understand why the Government or the Members interested in the Andhara Bill should take objection. It narrates the history of the chittor district. After all it is a history of how the Tamillians were slowly made to appear as Telugus in my parts.”
“என்னுடைய பகுதியின் பிரச்சனையை அரசாங்கமோ, உறுப்பினர்களோ புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய பகுதியில் தமிழர்கள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாகத் தெலுங்கர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள்” என்று வேதனையோடு பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் இராஜகோபாலச்சாரியார்,
“It is a very good thing” -இது நன்றாக இருக்கிறதே என்று கமண்ட் அடித்தார் (ஆதாரம்: சட்டமன்ற விவாதங்கள் (பக் 153) நாள் 15.7.1953) ஆந்திர மாநில மசோதாவின் விவாதத்தில் பேசிய இந்தியப் பொது வுடைமைக் கட்சியைச் சேர்ந்த ப.ஜீவானந்தம் அவர்கள் பேசும்போது சில முக்கியமான செய்திகளைக் கூறியுள்ளார்.
“இந்த மசோதாவைக் கொண்டு வரும்போது நான் ஏற்கெனவே கூறினேன், இந்த அமைப்பு (மொழிவழி மாநில அமைப்பு) தேசிய ஒற்றுமைக்கு ஏற்றதாக இருக்காது என்றும் இது தேசத்திற்கு விரோதம் என்றும் இதில் உள்ளது. மசோதாவில் மார்ச் 25 ஆம் தேதி பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நேரு பிரகடனம் செய்தபோது ஆந்திர மாகாணம் அமைந்ததும் உடனடியாக ஒரு கமிஷன் அல்லது பல எல்லைக் கமிஷன்கள் ஏற்படுத்தி எல்லைகள் நிர்ணயிக்கப்படும் என்று கூறினார்.
இன்று இருக்கக்கூடிய எல்லையைக் கொண்டு ஆந்திர ராஜ்யம் அமைக்கப்படும் என்றும் பிறகு எல்லைக் கமிஷன் நியமிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால் இன்று இந்த மசோதாவில் என்ன பார்க்கிறோம்? எல்லைக் கமிஷன் நிர்ணயம் செய்யப் படுவது துண்டு விழுந்திருப்பதைப் பார்க்கிறோம். எங்கு தேடிப் பார்த்தாலும் ஒரு இடத்திலாவது எல்லைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டியதைப் பற்றி இந்த மசோதாவில் கூறவே இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்”...
இராஜாஜி தயாரித்த ஆந்திர பிரிவினை மசோதாவில் எல்லைக் கமிஷன் வேண்டும் என்ற விதி உருவாக்கப்படவில்லை.
“ஆகவே நான் சொல்லுகிறேன் மொழி வாரியாக மாகாணங்கள் அமைப்பதில் அமைத்துக் கொள்வதில் சகோதரச் சண்டைகள் வேண்டாம். நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் போராட்டங்கள் தற்போது எழுந்திருக்கிற சண்டையும்கூட இந்தத் தாலுகா அத்துடன் சேருவதா, இத்துடன் சேருவதா என்ற எல்லையை நிர்ணயப்பதில் ஏற்பட்டிருக்கும் தகராறு தான். எல்லைகளைச் சண்டை சக்சரவுகள் இன்றிச் சமாதான முறையிலேயே, ஜனநாயக ரீதியாக நிர்ணயிக்க முடியும் என்று தான் கம்யூனி°டு கட்சி கூறுகிறது”. (சட்ட மன்ற விவாதங்கள் பக்-171-176 நாள் 15-7-1953).
இப்படிச் சட்டமன்றத்தில் பேசிய ஜீவானந்தமும் அவருடைய கம்யூனி°டு கட்சியும் வடக்கெல்லைப் போராட்டத்தில் தமிழகத்துக்குத் துரோகமே இழைத்தது. அதை ஜீவானந்தமே ‘ஜனசக்தி’ தலையங்கத்தில் எழுதியுள்ளார்.
‘புதிய தமிழகம்’ என்ற தலைப்பில் 26-7-52 இல் ஜீவா ஒரு தலையங்கம் எழுதியுள்ளார்.
“திருப்பதி வரையில் சித்தூர் ஜில்லாவின் பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் கிஞ்சிற்றும் நியாயமில்லை. ‘சித்தூர் ஜில்லாவும், திருப்பதியும் ஆந்திரர்களுக்கே உரியது’ என்று தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி 1948-லேயே மிக விளக்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை ஆந்திரர்கள் கோருகிற தவறுக்குக் குறையாத தவறு.
சரித்திர பூர்வமாகத் திட்டவட்டமாக ஆந்திர பிரதேசமாக உருவாகிவிட்ட சித்தூர் ஜில்லாவையும் திருப்பதி நகரையும் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோருவதும், இலக்கியத்தில் காணப்படுகிற சில எல்லைக் கோடுகளைக் கொண்டு யதார்த்த வாழ்வில் சரித்திர பூர்வமாக உருவாகி வந்திருக்கிற, தேசிய இன மக்களின் பிரதேசங்களை மாற்றி அமைத்துவிட முடியும் என்பது நியாயமல்ல. சரித்திரத்திற்குப் புறம்பானது என்பதைத் தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” (ப.ஜீவா. ஜனசக்தி 26.7.1952)
கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களைப் பொறுத்த வரை சட்டசபையில் என்ன பேசினாலும் வாக் கெடுப்பு என்று வருகிறபோது தங்கள் கட்சியின் நிலைபாட்டையே ஆதரிப்பார்கள். “கம்யூனிஸ்டு கட்சியினர் சட்டமன்றத்தில் ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்ததுபோல், தெற்கெல்லை போராட்டத்தில் கேரளாவுக்குச் சாதகமாக வாக்களித்துவிட வேண்டா மென்று அ.கோவிந்தசாமி மொழி வாரி மாநில சீரமைப்பு ஆணையத்தின் விவாதத்தின்போது சட்ட மன்றத்தில் கூறினார்...” (சட்டமன்ற விவாதங்கள் பக். 296 நாள் 23-11-1955)
ஆந்திர மாநில மசோதாவின் மீது பேசிய அ. கோவிந்தசாமி (இவர் 1952 இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் தி.க., தி.மு.க. ஆதரவால் உழைப் பாளர் கட்சி விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். அக்கட்சித் தலைமை காங்கிரஸ்ஆதரவு போக்குக்குச் சென்ற வுடன் இவர் தி.மு.க.விற்கு வந்துவிட்டார்).
15.7.53 அன்று சட்டமன்றத்தில் பேசிய அவர்,
“இன்றைய தினம் வடநாட்டினர், டில்லி சர்க்கார், நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு, தென்நாட்டை வியாபார ஸ்தலமாக வைத்துக்கொண்டு சுரண்டும் இடமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நாம் என்ன பார்க்கிறோம் - சேட்டுகளும் மார்வாடிகளும் மெத்தையில் படுத்துக்கொண்டு வியாபாரம் செய்யும் நிலைமையை நாம் இப்பொழுது பார்க்கிறோம். இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஜவுளிக் கடையின் முன்பாக, வடநாட்டார் வியாபாரம் செய்யும் கடைகளின் முன்பாக தியாகம் செய்து மறியல் செய்தார்கள்.
இதை அடிப்படையில் வைத்து கொண்டுதான் மொழி வாரி மாகாணம் முதலில் பிரிந்து இறுதியில் இனத்தின் அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வேலை செய்து வருகின்றன. இது எல்லோருக்கும் தெரியும். திராவிடம் பிரிய வேண்டும் என்பதற்காகத்தான் மதிப்புக்குரிய மாணிக்க வேலு நாயக்கர் அவர்களும், பக்தவச்சலு அவர்களும், இன்னும் இந்தப் பக்கத்திலுள்ள 38 பேர்களும் கையெழுத்திட்டுச் சென்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம். நாம் வடநாட்டை விட்டுப் பிரிந்து சுகமாக வாழவேண்டும் என்று தீர்மானித்தோம். காரணம் வட நாட்டார்கள் வரிகளையும், வருமானத்தையும் வாங்கிக் கொண்டு போகிறார்கள். இன்னும் சுரண்டல் மூலமாகவும் இன்சூரன்ஸ் மூலமாகவும், பாங்குகள் மூலமாகவும் சேட்டுகள் சுரண்டிக் கொண்டு போகிறார்கள்.
ஏன்? கல்லக்குடியை டால்மியாபுரம் என்று மாற்றும் போது எதைத்தான் செய்ய மாட்டார்கள். அதைப் போலவே சென்னையில் சௌகார்பேட்டை என்று பெயர்வைத்திருக்கிறார்கள் ஏன்? டில்லியில் காமராஜ் பேட்டை என்ற பெயரை வைக்க முடியுமா? அல்லது ராஜாஜிபேட்டை என்றுதான் வைக்க முடியுமா? நமது ராஜாஜி அவர்களும் அங்கு கவர்னர் ஜெனரலாகத் தான் இருந்தார்.
அப்படி இருந்தும் அவருடைய பெயரை அங்கு வைக்க முடியுமா? ஒருக்காலும் வைக்க முடியாது...... இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பெயரால் தன்னுடைய 60 ஆவது வயதில் பெரியாரும், தாளமுத்து நடராஜனும் இன்னும் பல தோழர்கள் சிறைச் சென்றார்கள்.. தாளமுத்துவும் நடராஜனும் சிறையில் பலியானார்கள். அதற்காகவே தான்! அண்ணாவும் போராட்டத்தை நடத்தினார்.... மொழியின் பெயரால் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகத்தான்... நேரு தலைவராக இருக்கும் வரையில் வடநாட்டு ஆதிக்கம் இருக்கும் வரையில் தீர்ப்புகிடையாது.
வாஞ்சுவை அனுப்பக் கூடிய வடநாட்டு ஆதிக்கம் இருக்கும் வரையில் நமக்குத் தீர்ப்பு கிடையாது. நாம் சுபிட்சமாக வாழ முடியாது. நாம் சுமூகமாக பங்கிட்டு கொள்ள முடியாது. அந்த ஆதிக்கம் இருக்கும் வரையில் குரங்கு அப்பத்தைப் பங்கிட்டுக் கொடுத்தது போல தான் ஆகும். இப்பொழுது இருக்கும் நிலைமையில் தமிழர்களுக்கும் ஆந்திரர்களுக்கும் கசப்பு, மலையாளிகளுக்கும் கன்னடியர்களுக்கும் கசப்புக் இதெல்லாம் ஏன் வருகிறது. நம்முடைய அதிகாரத்தை எல்லாம் வட நாட்டார் வைத்திருக் கிறார்கள். நாம் பிரிந்து கொள்ளக் கூட நமக்கு உரிமை இல்லை. நமக்கு எவ்விதமான உரிமையும் இப்போது இல்லை.
நாட்டில் எந்த விதமான கிளர்ச்சி வந்தாலும் மொழி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஆகவேதான் ஆகஸ்டு 1 ஆம் தேதியன்று பெரியாரும் அண்ணாவும் தமிழ் நாட்டில் திருப்பதியிலிருந்து தூத்துக்குடி வரையி லுள்ள இரயில்வே நிலையங்களிலுள்ள இந்தி மொழியை அழித்தார்கள். இந்திக்கு இங்கு என்ன இடம் இருக்கிறது? அன்று வெள்ளைக்காரன் மவுண்ட் பேட்டன் இருந்த இடத்தில் இன்று ராஜேந்திர பிரசாத் இருக்கிறார். அன்று ஹோப் இருந்த இடத்தில் இன்று ஸ்ரீ பிரகாசா (கவர்னர்) இருக்கிறார்.
அப்பொழுது எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதோ அவ்வளவு சம்பளம் தான் இப்பொழுதும் கொடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளைக்காரன் சுரண்டல் அப்பொழுது எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் வியாபார முறையில் வந்து இங்கிருந்து சுரண்டிக் கொண்டு போனார்கள். அன்று அவர்கள் எஜமானராக இருந்தார்கள். இன்று வடநாட்டினர் எஜமானர்களாக இருக்கிறார்கள்”....
“போராட்டம் நடக்கும் போது நானும் திருத்தணிக் குப் போயிருக்கிறேன். அங்கு பெருவாரியாகத் தமிழ் பேசுகிறார்கள். எந்தப் பக்கங்களில் தமிழ் பேசு கிறார்களோ அந்தப் பக்கங்களை தமிழ் நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைப் போலவே எங்கு தெலுங்கர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதியை ஆந்திர ராஜ்யத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
“ஆந்திரர்கள் புதிதாகத் தங்கள் ராஜ்யத்திற்குத் தலைநகரம் ஏற்படுத்த வேண்டும், அதற்காக நஷ்ட ஈடு கோருகிறார்கள் என்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் சொத்தை ஜனத்தொகை வாரியாகப் பிரித்திருக்கிறார்கள். அதே முறையில் கடனையும் பிரித்திருக்க வேண்டும். கடனை அப்படிப் பங்கிடாமல், தமிழர்களே கடனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை. ஒரு குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பாகம் பிரிகின்ற போது. சொத்தையும் பிரிப்பார்கள் கடனையும் பிரிப்பார்கள். அந்த முறையில் பிரித்திருக்கலாம். ஆனால் அப்படிப் பிரிக்கவில்லை.”
இராஜாஜி ஆந்திர அரசுக்கு புதிய தலைநகரை உருவாக்க 2.30 கோடி கொடுக்கவேண்டும் என்ற விதியை சேர்த்திருந்தார்.
“இராஜாஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; பல ஆயிரக்கணக்கான மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், நாடு பிரிகின்ற இந்த நல்ல நேரத்தில், இராஜாஜி கொண்டு வந்திருக்கின்ற புதுக் கல்வித் திட்டத்தை (குலக்கல்வித் திட்டத்தை) வாபஸ் வாங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.” ஆதாரம் (சட்டமன்ற நடவடிக்கை பக் 186 முதல் 190 வரை நாள் 15-7-1953)
(தொடரும்)