ஊழலின் ஊற்றுக்கண் எது? ஊழலின் உற்பத்தி எங்கிருந்து தொடங்குகிறது? இந்தக் கேள்விக்கு சரியாக பதில் கூற வேண்டுமானால் பார்ப்பனியமும் அது பெற்றெடுத்த இந்து மதமுமே என்று உரத்துக் கூற முடியும். உழைக்கின்ற மக்களை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று முத்திரை குத்தி, அதை கடவுளின் ஆணையாக்கி, உழைக்காத ஒரு கூட்டம், சமூகச் சுரண்டலுக்கு வழி வகுத்துக் கொண்டது. இந்த சமூக அமைப்பிலிருந்துதான் ஊழல் தொடங்குகிறது. இந்த ஊழல் பார்ப்பனிய சமூகத்தின் விளைவுகளால் அரசியல் மற்றும் பொருளாதார ஊழல்கள் அணி வகுத்தன.
“மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியைப் பட்டினிப் போட்டுக் கொடுமைப்படுத்திய குணமும், ராமராச்சியம் முதல் தர்மத் தேவதை ராச்சியம் ஈடாக, பிரிட்டிசு ராச்சியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது” - என்றார் பெரியார்.
உழைக்கும் மக்களிடமிருந்து திருடப் பெற்ற உபரி உற்பத்தியே முதலாளித்துவத்தின் இலாபமாகக் குவிகிறது என்பதை, விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தார் காரல் மார்க்ஸ்.
பார்ப்பனியமும், முதலாளித்துவமும் - இவைகளின் இணைப்பால் உருத் திரட்சிப் பெற்றுள்ள ‘பன்னாட்டு நிறுபனங்கள்’ என்ற கொடூர அமைப்பும் - சமூக அரசியல், பொருளாதார ஊழல்களை நியாயங்களாகவும், தர்மங்களாகவும் கட்டமைத்து அரசு நிறுவனங்களின் அங்கீகார முத்திரைகளையும் பெற்றுவிட்டன.
இப்போது ஊழல் மற்றும் பதுக்கல் பணத்தை ஒழிக்க இந்தப் பார்ப்பனிய சக்திகள் இரண்டு தனி மனிதர்களைக் களம் இறக்கியிருக்கின்றன. ஒருவர் - காந்தியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அன்னாஹசாரே, மற்றொருவர் காவியுடையில் வலம் வரும் பெரும் தொழிலதிபரான ‘யோக குரு’வாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பாபா ராம்தேவ். ரூ.18 கோடி செலவிட்டு ‘உண்ணாவிரத’ நாடகத்தை அரங்கேற்றிய பாபா ராம்தேவ், 11 ஆயிரம் கோடி செல்வத்துக்கு உரிமையாளர் என்கிறார், மற்றொரு பார்ப்பன மடாதிபதியான பூரி சங்கராச்சாரி!
நேரடியாக களமிறங்க முடியாமல் மக்கள் செல்வாக்கு இழந்து நிற்கும் பார்ப்பன இந்துத்துவா சக்திகள் - இந்த இரண்டு ‘தனிமனிதர்களை’ களமிறக்கி, அவர்களை மக்களின் ஒருமித்த பிரநிதிகளாக்கிக்காட்ட முயற்சிக்கிறார்கள். பார்ப்பன ஊடகங்கள் இதற்கு கட்டுப்பாடாக ஆதரவு தருகின்றன.
அண்மைக்காலமாக தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் மேல் மட்ட அரசியல் ஊழல்களால் மக்களிடம் உருவாகியுள்ள எதிர்ப்புணர்வுகளை அரசியல் மூலதனமாக்கிக் கொண்டு, கொல்லைப்புற வழியில் களத்துக்குள் நுழையும் வாய்ப்புகளுக்காக பா.ஜ.க. - பார்ப்பன இந்துத்துவா சக்திகள் காத்திருக்கின்றன. மக்கள் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, நாங்களும் ஊழல் எதிர்ப்பாளர்களே என்று காட்டிக் கொள்ள காங்கிரசும், இதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தது. இதற்காகவே பாபா ராம்தேவிடம் சமரசம் பேச நான்கு மத்திய அமைச்சர்கள் ஓடினார்கள்.
ஊழல் ஒழிப்புக்கு - பிரதமர் மற்றும் அமைச்சர்களையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்த ‘லோக்பால்’ என்ற அமைப்பை சட்டரீதியாக உருவாக்க வேண்டும் என்கிறார்கள். மக்கள் இயக்கமாக தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சினையை சட்டப் பிரச்சினையாக குறுக்கிடும் முயற்சிதானே இது? அன்னா ஹசாரே, நரேந்திர மோடி ஆட்சியைப் புகழ்கிறார். பாபாராம்தேவுக்குப் பின்னால் அயோத்தியில் இராமன் கோயிலைக் கட்ட வேண்டும் என்று களம் அமைக்கும் அத்வானிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் இராம் மாதவ், ரவிசங்கர் போன்றவர்கள் நிற்கிறார்கள். அன்னா ஹசாரே ‘உண்ணாவிரதப் பந்தலில்’ காந்தியின் படம் இல்லை; மாறாக இந்துத்துவத்தின் குறியீடான ‘பாரத் மாதா’ படம் மாட்டப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் இப்படித்தான் இந்திரா ஆட்சிக்கு எதிராக ‘முழுப் புரட்சி’ இயக்கத்தைத் தொடங்கியபோது, ஆர்.எஸ்.எஸ் ஜனசங்க சக்திகள், அதைப் பயன்படுத்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி தந்தன. மீண்டும் அதே நாடகங்கள் புதிய நடிகர்களோடு அரங்கேற்றப்படுவதாகவே தெரிகிறது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள திருட்டுப் பணம் ரூ.9,58,500 கோடி என்று தேவ்கர் என்ற பொருளாதார ஆய்வாளர் தலைமையிலான குழு சர்வதேச அளவில் நடத்திய ஆய்வு கூறுகிறது. இதில் ரூ.6,20,000 கோடி, 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது ‘தாராளமய’ கொள்கை அமுலுக்கு வந்த பிறகுதான் 68 வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஊழல் பாய்ச்சல் வேகம் பெற்றது - ‘தாராளமயமாக்கல்’ தொடங்கிய பிறகுதான். ஆனால், இந்தக் கொள்கைக்கு காங்கிரசும், பா.ஜ.க. இரண்டுமே பேராதரவு! இவர்கள்தான் ஊழல் ஒழிப்பு நாடகமாடுகிறார்கள்.
முதலில் ஊழல் என்ற கருத்தியலை எதிர்ப்பவர்கள். அதை சாதிய சுரண்டல் சமுதாய அமைப்பாக மாற்றி சுரண்டலையும், ஊழலையும் ‘தெய்வீகமாக்கி’யுள்ள பாhப்பனிய - இந்துக் கருத்தியலை - தூக்கி எறிய முன் வரவேண்டும். இந்த பார்ப்பனிய எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு, அதன் பாதுகாவலர்களாக செயல்படும் கூட்டங்களே ‘ஊழலை’ எதிர்க்க முன் வருவது நச்சு மரத்தின் வேருக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்துக் கொண்டு, அதன் கிளைகளை மட்டுமே வெட்டும் மோசடியாகும்.
‘படையல்’, ‘காணிக்கை’, ‘தட்சணை’, ‘வேண்டுதல்’, ‘உண்டியல்’ என்று கடவுள்களையே ஊழல்களோடு இணைத்து அதை சமூக வாழ்க்கை முறையாகவே மாற்றிவிட்டார்கள். அதன் தாக்கங்களாக விரிவடைந்து அரித்துக் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதார ஊழல்களை மட்டும் ஒழிக்கக் கிளம்புவது மக்களை ஏமாற்றும் ‘மெகா ஊழல்’ தான்!
மக்களைச் சுரண்டும் ஒவ்வொரு அரசியல் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் நிலை பெற்று நிற்கிறது.
பார்ப்பன - இந்துத்துவ எதிர்ப்பையும் இணைத்து நடத்தப்படும் ஊழல் எதிர்ப்பு இயக்கமே உண்மையான - நாணயமான இயக்கமாக இருக்க முடியும். - இது கல்லில் செதுக்கப்பட வேண்டிய உண்மை.