பிரணாப் முகர்ஜி 1984-இல் நிதி அமைச்சராக, முதலாவது வரவு-செலவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அப்போது மன்மோகன்சிங் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்தார். இப்போது மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக வீற்றிருக்க, பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக ஆறாவது தடவையாக நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைப் படித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கட்டுப்பாடின்றி உயர்ந்து வரும் பணவீக்கம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, தில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த நிதி முறைகேடுகள், மும்பையில் ஆதர்ஷ் வீட்டுவசதி ஒதுக்கீடுத் திட்டத்தில் நடந்த தில்லுமுல்லுகள், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1,76,000 கோடி அளவில் நடந்த மாபெரும் முறைகேடு, இதையும் விஞ்சும் படியாக, பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் நடந்த எஸ்-பேண்ட் ஊழல், வெளிநாட்டு வங்கிகளில் இந்திய ஆளும் வர்க்கத்தினர் ரூ.70 இலட்சம் கோடி அளவுக்கு சேர்த்து வைத்துள்ள கறுப்புப் பணம் ஆகியவற்றால் நடுவண் அரசு சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் சூழலில், 2011-12ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 28.2.2011 அன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திட்டவட்டமான செயல்திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, ‘ஆம் ஆத்மி’ எனப்படும் ஏழை எளிய - வெகுமக் களுக்கான சமூக நலத் திட்டங்களுக்கும், வேளாண்மைக்கும், கல்விக்கும், மக்கள் நலவாழ்வுக்கும், இந்த நிதிநிலை அறிக்கையில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகப் பொய்யான புள்ளிவிவரங்களைக் காட்டி நிதி அமைச்சர் மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார்.
உலகவங்கி, பன்னாட்டு நிதியம், உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் ஆணைப்படி, 1991இல் பி.வி. நரசிம்மராவ் ஆட்சியில், நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன்சிங் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற கொள்கை யைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். வாஜ்பாய் பிரதம ராக இருந்த ஆறு ஆண்டுகால ஆட்சியிலும் இதே கொள்கை தான் பின்பற்றப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாகப் பொது மக்களுக்கான அரசின் திட்டங்களும், நிதி ஒதுக்கீடு களும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் தங்குதடை யின்றிக் கொள்ளையடிப்பதற்கான வழிமுறைகளை வகுப்ப தாகவே ஒவ்வொரு ஆண்டும் இந்திய வரவு-செலவுத் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் உருவான காலம் முதலே, பெரும்பான்மையோர் சுரண்டப்படும் வர்க்கமாக வும், சிறுபான்மையினர் சுரண்டும் ஆளும் வர்க்கமாகவும் இருந்து வருகின்றனர். பெரும்பான்மையினராக உள்ள சுரண்டப்படும் மக்கள் உயிர் பிழைத்திருந்தால்தான் அவர் களின் உழைப்பைச் சுரண்ட முடியும். அதனால்தான் அம்மக் கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்த அளவு ஊதியத்தை - அடிப்படை வசதிகளை அளிக்க வேண்டியது சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் தவிர்க்க முடியாத ஒரு கட்டாயமாக இருந்து வருகிறது. பொய்யான பொன் முலாம் பூசப்பட்ட சனநாயக ஆட்சியில் வெகுமக்களை வஞ்சிப்பது மிகவும் தேர்ந்த கலையாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை வாயிலாகத் திறம்பட இது நிறைவேற்றப்படுகிறது.
வண்ணவண்ணப் பலூன்களை வானில் பறக்க விட்டு சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டுவது போல், முதலாளிய ஊடகங்கள் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கும், வேளாண் மைக்கும், சமூகநலத் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடுகளை வண்ணவண்ண பலூன்கள் போல் ஊதிப் பெருக்கிக் காட்டி மக்களை ஏமாற்று கின்றன.
நலத்திட்டமா? நிதிப்பற்றாக்குறையா?
பிரணாப் முகர்ஜி, நிதி நிலை அறிக்கையின் முதல் பத்தியிலேயே, வரவு-செலவுத் திட்ட அறிக்கையின் முதன்மை யான நோக்கம், நிதிப் பற்றாக் குறையைக் குறைப்பது, பொருளாதார வளர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவது ஆகும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமாயின், வருவாயைப் பெருக்க வேண்டும். இதற்காகப் பெருமுதலாளிகள், வணிகர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் மீது இன்னும் கூடுதலான வரி விதித்து, அரசின் வருவாயை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் நடுவண் அரசும், மாநில அரசுகளும் இதற்கு நேர்மாறாக, வெகுமக்களுக்கான நலத்திட்டங்களுக் கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகின்றன. இதுதான் உலகமயக் கோட்டின் அச்சாணி!
உலக வங்கி, பன்னாட்டு நிதியம், மேலை நாடுகளின் நிதி முதலீட்டாளர்கள் ஆகியோரின் வற்புறுத்தலால், 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் ‘நிதிப் பொறுப்பாண்மை மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம்’ (Fiscal Responsibility and Budgetary Management Act - FRBM) என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, 2006ஆம் ஆண்டிற்குள் நடுவண் அரசும், மாநில அரசுகளும், தங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் வருவாய்ப் பற்றாக்குறையை 0% நிலைக்கும், நிதிப் பற்றாக்குறையை 3% என்ற அளவுக்கும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு பற்றாக்குறைகளைக் குறைத்தால்தான் அந்நிய நேரடி முதலீடும், அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் முதலீடும் இந்தியாவுக்கு அளிக்கப்படும் என்று பன்னாட்டு நிதியமும், மேலைநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் மிரட்டின. எனவே இதன்படி, நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை 2006-07ஆம் ஆண்டில் 3.3% ஆகவும், 2007-08ஆம் ஆண்டில் 2.5% ஆகவும் அப்போதிருந்த நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தால் குறைக்கப்பட்டது.
ஆனால் 2007ஆம் ஆண்டில் வடஅமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் உலகம் முழுவதும் பரவியது. அதனால் இந்தியாவில் 2008-09ஆம் ஆண்டு நிதிப் பற்றாக்குறை 6% ஆகவும், 2009-10ஆம் ஆண்டு 6.3% ஆகவும் உயர்ந்த்து. 2010-11ஆம் ஆண்டு நிதி அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை 5.5% ஆக இருக்கும் என்று அறிவித்தார் பிரணாப் முகர்ஜி.
புள்ளிவிவரப் புரட்டு
25.2.2011 அன்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த 2010-11ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில், நிதிப் பற்றாக்குறை 5.5% என்பதிலிருந்து 5.1% ஆகக் குறைக் கப்பட்டுள்ளது என்று பிரணாப் முகர்ஜி பெருமிதத்துடன் அறிவித்தார். 2011-12க்கான நிதிநிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை 4.6% ஆகக் குறையும் என்று கூறியிருக்கிறார்.
2010-11ஆம் ஆண்டில் பணவீக்கம் தொடர்ந்து 10 விழுக்காட்டிற்குமேல் இருந்துவந்தது. 2010-11ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.69.35 இலட்சம் கோடியாக இருக்கும் என்றும், இதன் அடிப்படையில் நிதிப் பற்றாக்குறை 5.5% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால் பணவீக்கம் 10% க்குமேல் இருந்ததை அடிப்படை யாகக் கொண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.78.78 இலட்சம் கோடி என்று மதிப்பிட்டு, நிதிப் பற்றாக் குறை 5.1% ஆகக் குறைந்துள்ளது என்று பிரணாப் முகர்ஜி கூறுகிறார். மேலும் 2010-11ஆம் ஆண்டில் 3-ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு ஏலத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ.70,000 கோடி கூடுதல் வருவாய் வந்தது. ஆனால் இந்த உண்மை களை மூடிமறைத்துவிட்டு நிதிப் பற்றாக்குறையை 5.1% ஆகக் குறைத்துவிட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்.
இந்தியாவின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 2003-2004ஆம்ஆண்டில் 5.5% ஆக இருந்தது. 2004ஆம் ஆண்டில் தலைமை அமைச்சராக மன்மோகன்சிங் பொறுப்பேற்றது முதல், ஆண்டுப் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்க (10%) எண்ணாக உயர்த்துவதே முதன்மையான குறிக் கோள் என்று கூறிவந்தார். 2007-08ஆம் ஆண்டில் 9.3 விழுக்காடாகப் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது. 2008இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2008-09இல் இது 6.8% ஆகச் சரிந்தது. 2009-10இல் 8%, 2010-11இல் 8.6% என உயர்ந்துள்ளது. 2010-12ஆம் ஆண்டில் 9% ஆக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.
ஆனால் இப்பொருளாதார வளர்ச்சியின் பயன்களில் பெரும்பகுதி சிறுபான்மையினராக உள்ள மேல்தட்டுப் பிரிவினருக்கே கிடைக்கிறது. முதலில் மேல்தட்டில் இருப் பவர்களுக்குக் கிடைக்கும் இப்பயன்கள் படிப்படியாக - மண்ணில் மழைநீர் இறங்குவது போல் - கீழ்த்தட்டு மக் களுக்குப் போய்ச் சேரும் என்று முதலாளிய வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாகப் புதிய பொருளாதாரக் கொள்கை உலக அளவில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மொத்த வருவாயில் மேல்தட்டில் உள்ள 20 விழுக்காட்டினர் 84 விழுக்காடும், நடுத்தட்டில் உள்ள 20 விழுக்காட்டினர் 10 விழுக்காடும், கீழ்த்தட்டில் உள்ள 60 விழுக்காட்டினர் 6 விழுக்காடும் தான் பெறுகின்றனர். எனவேதான் நடுவண் அரசு அமைத்த அர்ஜுன் சென்குப்தா குழு, இந்தியாவில் 77 விழுக்காடும் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவான வருவாய் பெறும் வறிய நிலையில் இருக்கின்றனர் என்று தன் அறிக்கையில் கூறியது.
முதலாளிகளுக்குக் கோடிகளில் வரிச்சலுகை
நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்காக, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக என்று கூறி பெருமுதலாளிய வணிகக் குழுமங்களுக்கு நடுவண் அரசு பலவகையான வரிச் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் ஆய்வாளர் பி. சாய்நாத் 7.3.2011 அன்று ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
2005-2006 முதல் 2010-11 வரையிலான 6 ஆண்டு களில் பெரு முதலாளிய நிறுவனங்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்ட வகையில் ரூ.3,74,937 கோடி நடுவண் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2005-06இல் வருமான வரிச் சலுகை ரூ.34,618 கோடியாக இருந்தது. இது 2010-11இல் ரூ.88,268 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 155 விழுக்காடு உயர்வாகும். அதாவது ஒரு நாளைக் குப் பெருமுதலாளியக் குழுமங்களுக்கு (கார்ப்பரேட்) ரூ.240 கோடிக்கு வருமான வரிச் சலுகையை அரசு அளித்துள்ளது. ஒரு நாளைக்கு இதே அளவுப் பணம் அயல்நாட்டு வங்கி களில், கறுப்புப் பணமாகக் கார்ப்பரேட் நிறுவனங்களால் சேமிக்கப்படுகிறது. ’வருவாய் இழப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் நிதி நிலை அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளதால் இதை எவரும் மறுக்க முடியாது.
இதேபோன்று உற்பத்தி வரி, சுங்கவரிகளில் தரப்படும் சலுகைகளால் பெரு முதலாளிகளும், வணிகர்களும், பெரும் பணக்காரர்களும் கொள்ளை இலாபம் பெற்று வருகின்றனர். 2010-11ஆம் ஆண்டில் மட்டும் வைரம், தங்கம் மீதான சுங்கவரிக் குறைப்பால் ரூ.48,798 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் இதை ‘ஆம் ஆத்மி’ - சாதாரண வெகு மக்களுக்கான நிதிநிலை அறிக்கை என்று நிதி அமைச்சர் வாய்கூசாமல் கூறுகிறார்.
பெரும் பணக்காரர்களுக்குக் கொள்ளை இலாபம் தரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்நாட்டில் ஏழைகளுக்கான திட்டமாகக் காட்டப்படுகிறது. உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், வைரம், தங்கம் தொழில் பாதிக்கப்படுமாயின், அத்தொழிலை நம்பியுள்ள பல இலக்கம் ஏழைகள் வேலை இழப்பார்கள் என்று வரிச் சலுகைக்கு விளக்கம் கூறப்பட்டது. ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா? இவ்வளவு கோடிப் பணத்தைச் சுங்கவரி விலக்கு மூலம் அளித்த பிறகும், சூரத் நகரில் இத்தொழிலில் ஈடு பட்டிருந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தத்தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். 2010-11ஆம் ஆண்டில் சுங்கவரிச் சலுகையால் மட்டும் ரூ.1,74,418 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இந்த ஓராண் டில் உற்பத்தி வரிச் சலுகையால் ரூ.1,98,291 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொகையில் ஒரு காசுகூட ஏழை எளிய மக்களுக்குச் செல்வதில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளில் இம்மூவகை வரிச்சலுகை களால் ரூ.21,25,023 கோடி நடுவண் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 2011-12ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் மொத்தச் செலவைப் போல் இரண்டு மடங்காக உள்ளது. ‘உலக நிதிய ஒருங்கிணையம்’ என்கிற அமைப்பு இந்தியாவில் 1948 முதல் 60 ஆண்டுகளில் இந்திய ஆளும் வர்க்கத்தினர் சட்டத்திற்குப் புறம்பாக அயல்நாட்டு வங்கிகளில் ரூ.20 இலட்சம் கோடி சேமித்து வைத்துள்ளனர் என்று கூறியுள்ளது. ஆனால் இதைவிட அதிகமான தொகை வரிச் சலுகை என்ற பெயரில் ஆறே ஆண்டுகளில் பெருமுதலாளிய - வணிக நிறுவனங்களுக்கு அரசு சட்டப்படியான முறையில் கொட்டி அழுகிறது.
2010-11ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் சேவைத் துறை 55%, தொழில் துறை 27%, வேளாண்மைத் துறை 18% பங்கு வகிக்கின்றன என்று பொரு ளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சேவைத் துறை 9.6%, தொழில்துறை 8.6%, வேளாண் துறை 5.4% என்ற அளவில் வளர்ச்சி அடைந் துள்ளன.
புறக்கணிக்கப்படும் வேளாண்மை
தாராளமய, தனியார்மயக் கொள்கை நடைமுறைப்படுத் தப்பட்ட கடந்த இருபது ஆண்டுகளில் சேவைத்துறை நாட்டின் உற்பத்தியில் முதல் இடத்துக்கு வந்துவிட்டது. வேளாண்மையோ கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. 60% மக்கள் வேளாண்மையையும் அது சார்ந்த தொழில் களையும் நம்பி வாழ்கின்றனர். ஆனால் நாட்டின் உற்பத் தியில் இதன் பங்கு வெறும் 18% மட்டுமே உள்ளது. 2009-10ஆம் ஆண்டில் அதன்பங்கு 14.6% ஆக இருந்தது.
கடந்த பத்து ஆண்டுகளாக வேளாண்மையின் ஆண்டு வளர்ச்சி 2% என்ற நிலையிலேயே இருந்தது. 2008-09இல் - 0.2% ஆகவும், 2009-10இல் 0.4% ஆகவும் மிகவும் தாழ்ந்திருந்தது. போதிய மழையின்மையும், வறட்சியும், உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடியும் வேளாண்மை வளர்ச்சி இந்த அளவுக்குத் தாழ்ந்ததற்குக் காரணங்கள் என்று அரசு விளக்கமளித்தது. 2010-11ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பரவலாகப் போதிய மழை பெய்தது. இதனாலும், முன்னைய ஆண்டுகளின் குறைந்த வளர்ச்சி விழுக்காட்டின் அடிப்படையிலும் கணக்கிட்டதாலும் வேளாண் வளர்ச்சி 5.4% ஆகக் காட்டப்பட்டுள்ளது. 2011-12ஆம் ஆண்டில் இது 4% ஆக இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் பெரு மூச்சு விடுகிறார். ஆனால் 2 விழுக்காட்டைத் தாண்டுவதற்குக் கூட வாய்ப்பில்லை. ஏனெனில் வேளாண்மை அரசுகளால் அந்த அளவுக்குப் புறக்கணிக்கப்பட்டு, நிலை குலைந்து கிடக்கிறது.
வேளாண்மைக்கு முதன்மை தருவதாகக் காட்டிக் கொள்வதற்காக நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைக்கு 20 பத்திகள் ஒதுக்கப்பட்டுள் ளன. ஆனால் 2005-06 முதல் ஓராண்டில் இடப்படும் மூலதனத்தில் வேளாண்மையில் இடப்படும் மூலதனம் 7.5% க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. வேளாண்மையில் எல்லாப் பிரிவுகளுக்கும் அளிக்கப்படும் மொத்த மாநியம் 2010-11இல் ரூ.1,54,212 கோடியாக இருந்தது. இது 2011-12இல் ரூ.1,34,411ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. உரமானியம் ரூ.4,978 கோடியும், உணவு மானியம் ரூ.27 கோடியும் குறைக் கப்பட்டுள்ளது. 2010-11இல் 10 விழுக்காடாக நீடித்த பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால், 2011-12ஆம் ஆண்டிற்கு ஒதுக்கியுள்ள மானியத் தொகையின் மதிப்பு மேலும் குறையும்.
அரைத்த மாவையே அரைப்பது போல் 2010-11ஆம் ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் வேளாண்மை தொடர் பாக அறிவித்த திட்டங்கள் - கூடுதல் நிதி ஒதுக்கீடு இன்றி, அப்படியே அறிவிக்கப்பட்டுள்ளன. அசாம், மேற்குவங்காளம், பீகார், ஜார்கண்ட், கிழக்கு உ.பி., சத்தீஷ்கர் ஆகியவை அடங்கிய கிழக்கு இந்தியப் பகுதியில் பசுமைப் புரட்சியை முடுக்கிவிட ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டும் தொடர்கிறது. இதேபோன்று 60.000 கிராமங்களில் மானாவாரியில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்கு விக்க ரூ.300 கோடி 2011-12ஆம் ஆண்டிலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. ரூ.300 கோடியை 60.000 கிராமங்களுக்குப் பிரித்தால், ஒரு கிராமத்துக்கு ரூ.50,000 தான் கிடைக்கிறது. இதனால் குறிப்பிடும்படியான பயன் விளையாது. பயறு வகைகள் தேவையில் 30% இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே பயறு வகை விளைச்சலை மேம்படுத்த அரசு அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சமையல் எண்ணெய்த் தேவையில் 50% இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே 60,000 எக்டேரில் எண்ணெய் பனைப் பயிரிட ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து கொண்ட கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறு தானிய விளைச்சலைப் பெருக்க ரூ.300 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுகள் கடலில் கரைத்தப் பெருங்காயமாகவே இருக்கும். எனவே தான் முதலாளிய ஊடகங்கள் போற்றுகின்ற வேளாண் வல்லுநர் எம்.எஸ். சுவாமிநாதனே வேளாண்மையில் அடிப்படை மாற்றங் களைக் கொண்டுவருவதற்கு நிதி நில அறிக்கையில் உருப் படியான திட்டம் அறிவிக்கப்படவில்லை என்று குறை கூறியுள்ளார்.
வேளாண் கடன் அதிகரிப்பு என்ற ஏமாற்று
வேளாண் கடனுக்கான தொகையை அதிகப்படுத்தியிருப் பதைப் பெரும் சாதனையாக அரசு பறைசாற்றுகிறது. 2003-04ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியில் வேளாண் கடன் ரூ.86,981 கோடி ஒதுக்கப்பட்டது. அப்போது வேளாண் கடனுக்கான வட்டி 11% ஆக இருந்தது. உண்மையில் வேளாண் கடனுக்கான தொகை, வரவு-செலவுத் திட்டத்தால் ஒதுக்கப்படுவதில்லை. மக்களின் சேமிப்புப் பணத்திலிருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. 2004-05 முதல் வேளாண் கடன் தொகை வேகமாக உயர்த் தப்பட்டது. 2010-11 நிதி நிலை அறிக்கையில் ரூ.3,25,000 கோடி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திருத்திய மதிப்பீட்டின் படி ரூ.3,75,000 கோடி அளிக்கப்பட்டது. 2011-12க்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் கடன் ரூ.4,75,000 கோடி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
1997 முதல் 2010 வரையிலான காலத்தில் இந்தியாவில் உழவர்கள் கடன் சுமை தாங்காமல் 2,60,000 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒருபுறம் இலட்சம் கோடிகளில் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. மறுபுறம் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக நீடிக்கிறது. ஏன் இந்த முரண்பாடு? வேளாண் கடன் என்ற பெயரில் விதை, பூச்சிமருந்து, உரம், நீர்பாசனக் கருவிகள், டிராக்டர், அறுவடை இயந்திரம் தயாரிக்கின்ற மற்றும் விற்பனை செய்கின்ற நிறுவனங்கள் - முதலாளிகள் பல இலட்சக்கணக்கிலும், கோடிகளிலும் வங்கிகளில் கடன் பெறுவதால், ஏழை, எளிய சிறு, குறு உழவர்களுக்குக் கடன் கிடைப்பதில்லை.
வேளாண் கடனுக்கான வட்டி 2003-04ஆம் ஆண்டில் 11% ஆக இருந்தது. ஆண்டுதோறும் பல ஆயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டதன் விளைவாக எழுந்த எதிர்ப்பால், இந்த வட்டி 7% ஆகக் குறைக்கப்பட்டது. கடன் தவணைகளை உரிய காலத்திற்குள் செலுத்தும் உழவர்களுக்கு வட்டியில் 1% தள்ளுபடி செய்யப்படும் என்று 2009-10ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2010-11இல் இது 2% என அறிவிக்கப்பட்டது. 2011-12 நிதி நிலை அறிக்கையில் இது 3% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உரிய தவணைக் காலத்திற்குள் சாதாரண விவசாயிகளால் தொடர்ந்து கடனைச் செலுத்த முடியாது. எனவே இந்த வட்டிச் சலுகையைப் பல இலட் சங்கள், கோடிகளில் கடன்பெறும் பணக்காரர்களால் மட்டுமே பெற முடியும்.
சில்லறை வணிகத்தில் பல வணிக முத்திரை கொண்ட வணிகத்தில் அந்நிய நாட்டு நிறுவனங் களைத் தங்கு தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் அரசு துடியாய்த் துடிக்கிறது. குறிப்பாக, காய்கறிகள் பழங்களில் 40 விழுக்காடு அழுகி வீணா கின்றன. இவற்றின் மதிப்பு ரூ.58,000 கோடி என்று இந்திய தொழில் - வணிகக் கூட்டமைப்பு கூறுகிறது. தொடர் சங்கிலி போன்ற குளிர்பதனக் கிடங்குகள், குளிர்பதனம் செய்யப்பட்ட வாகனங்கள் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்க ரூ.20,000 கோடி தேவைப்படும். எனவே அந்நிய முதலீட்டு நிறுவனங் களை இதில் அனுமதிக்க வேண்டும் என்று நடுவண் அரசு வாதிடுகிறது. இவ்வாறான கட்டமைப்புகளை உருவாக்கி விட்டால், களத்துமேட்டு விலைக்கும் (Farmgate price) நுகர்வோர் விலைக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு நீங்கும்; விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இடைத் தரகர்கள் ஆதிக்கம் இல்லாமல் போகும் என்றெல்லாம் இதன் ஆதரவாளர்களால் காரணங்கள் அடுக்கப்படுகின்றன. 2011-12 நிதிநிலை அறிக்கையில் இதை அரசின் கொள்கையாகப் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். எனவே வேளாண் மையைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வேலையை நடுவண் அரசு வேகமாகச் செய்து கொண்டி ருக்கிறது.
சமூக நலத் திட்டங்கள்
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கியிருப்பதாகப் பொய்யான கருத்து பரப்பப்பட்டுள்ளது. திட்டச் செலவினத்தின் கீழ் 2010-11ஆம் ஆண்டில் ரூ.1,36,941 கோடி ஒதுக்கப் பட்டது. இது 2011-12இல் ரூ.1,53,182 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது. இதில் ரூ.16,241 கோடி உயர்ந்துள்ளது. ஆனால் சமூக திட்டங்களில், திட்டம் அல்லாத செலவினத்தில் 2010-11ஆம் ஆண்டில் ரூ.35,085 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 2011-12இல் இது ரூ.20,862 கோடி யாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆக ரூ.14,223 கோடி குறைக்கப் பட்டுள்ளது. இவ்வாறாகப் புள்ளிவிவரங்களில் பிரணாப் முகர்ஜி சித்து விளையாட்டுகள் காட்டி, இது வெகுமக்களின் மேம்பாட்டுக்கான நிதிநிலை அறிக்கை என்று கூறி ஏய்க்கப் பார்க்கிறார்.
2004ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கிய குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காடாகவும் மக்கள் நல்வாழ்வுக்கான ஒதுக்கீடு 2-3 விழுக்காடாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சியில் 5 அகவை முதல் 14 அகவையின ருக்குத் தொடக்கக் கல்வி அளிக்க வேண்டியது என்பது அடிப்படை உரிமையின்கீழ் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. மன்மோகன் ஆட்சியில் இலவச கட்டாயத் தொடக்கக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் தனியாக இயற்றப்பட்டது. ஆனால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.98 விழுக்காடாகவும், மக்கள் நலவாழ்வுக்கான நிதி 1.27 விழுக்காடாகவும் இருக்கிறது. உலக மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி, ஒருவர் பள்ளியில் படிக்கும் சராசரி ஆண்டு இந்தியாவில் 4.4, வங்கதேசம் 4.8, பாக்கிஸ்தான் 4.9, சீனா 7.5, இலங்கை 8.2 என இருக்கிறது. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் 169 நாடுகளின் பட்டியலில் இந்தியா 119 ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.
பணமாக மானியம்
புதிய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாகச் செயல்படுத்துவதன் மூலமே சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியும் என்று நடுவண் அரசு கூறிவருகிறது. இதன் ஒரு பகுதியாக உரங்கள், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை மானிய விலையில் விற்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக மானியத் தொகையைப் பணமாக வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்குக் கொடுப்பது என்ற திட்டத்தை 2012 ஏப்பிரல் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
பங்கீட்டுக் கடைகளில் மானியத்தில் கோதுமை, அரிசி, சர்க்கரை ஆகியவற்றை வழுங்குவதை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாகக் கூப்பன் முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து ஆளும் வர்க்கத்தால் பரப்பப்பட்டு வருகிறது. கூப்பனைத் தனியார் கடைகளில் கொடுத்து மானிய விலையில் அரிசி, கோதுமையை மக்கள் வாங்கிக் கொள்ளலாம். மானியத் தொகையை அரசு கடைக்காரருக்கு அளிக்கும். கூப்பன் முறை யை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவற்றைக் கொள்முதல் செய்வது, சேமிப்பது, விநியோகிப்பது என்ற பொறுப்பு அரசுக்கு இல்லாமல் போய்விடும். இவற்றால் ஏற்படும் பெருஞ்செலவு குறையும். இப்பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடலாம் என்று தாராளமய ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். இதன் உண்மையான நோக்கம் அரசின் கட்டுப்பாடு முழுமையாக அகற்றப்பட்டு, தாராளமயச் சந்தைக்கு முழுமையாக வழிவிட வேண்டும் என்பதேயாகும்.
இதைப்போலவே மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, இரசாயன உரங்கள் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விடுபட்டு, இவற்றைச் சந்தையின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்ல வேண்டும் என்று நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இவ்வாறு இப்பொருள்கள் வழங்கப்படு வதாக அரசு கூறுகிறது. பிரேசில், மெக்சிகோ நாடுகளில் பலவகையான கடுமையான நிபந்தனைகளின் பேரில் தனியார் கடைகளில் மானிய விலையில் ஒரு பிரிவு மக்கள் இதுபோன்ற அடிப்படைத் தேவையான பொருள்களை வாங்குகின்றனர். இந்தியாவில் பொது விநியோக முறையில் மண்ணெண்ணெய் வழங்குவதில் கலப்படமும், கள்ளச்சந்தையில் விற்பதும் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. மராட்டியத்தில் மண்ணெண்ணெய் திருடும் கும்பலால் ஒரு அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். பொது வழங்கல் முறையில் பொருள்களை வழங்குவதில் பலமுறைகேடுகளும், ஊழல்களும் உள்ளன. 35 விழுக்காடு அளவுக்குப் பொருள்கள் வெளியில் விற்கப்படு கின்றன.
பொது வழங்கல் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்கு மாறாக பொது வழங்கல் முறையையே அடியோடு ஒழித்துக்கட்ட முயல்வது சந்தைப் பாசிசமாகும். இந்தியாவில் கிராமங்களில் 40 விழுக்காடு வீடுகளுக்கு மின் வசதி இல்லை. இவர்கள் மண்ணெண்ணெயைத்தான் நம்பி உள்ளனர். வேளாண்மையில் இறைவைப் பாசனத்தில், 50 விழுக்காடு டீசல்-மண்ணெண்ணெயைக் கொண்டே இயக்கப் படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை மூலம் மானியத்தைப் பணமாக அளிக்க முடியும் என்று கூறுவது வெகுமக்களை வஞ்சிப்ப தாகும். ஒவ்வொரு குடிமகனும் அடையாள அட்டை அளிப்பது என்கிற திட்டம் பல குளறுபாடுகள் கொண்டதாக உள்ளது.
தனிநபர் வருமான வரி விதிப்புக்கான வரம்பு ரூ.1.60 இலட்சம் என்பதிலிருந்து ரூ.1.80 இலட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. வருமான வரம்பைக் கணக்கிட மூத்தகுடி மக்களுக்கான அகவையை 65லிருந்து 60ஆகக் குறைக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு ரூ.2.5 இலட்சம் வரை வருமான வரி விலக்கும், 80 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 இலட்சம் வரை வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரடி வரி விதிப்புதான் நிதிநிலை அறிக்கையின் கதாநாயகனாகக் காட்டப்படுகிறது. 18-65 வயதுக்குள் உள்ள உழைக்கும் மக்களில் 8 விழுக்காடு பேர் மட்டுமே அமைப்புச் சார்ந்த தொழில்களில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மட்டுமே இந்த நேரடி வரி விதிப்புப் பொருந்தும். 92 விழுக்காடாக உள்ள அமைப்புச் சாரா உழைக்கும் மக்களுக்கு நிதிநிலை அறிக்கையில் பயன்படும்படியான எந்த அறிவிப்பும் இல்லை. மாதச் சம்பளம் பெறுகின்ற - பிற உயர் வருவாய்ப் பிரிவினரின் வாங்கும் சக்தியை நம்பியே சேவைப் பிரிவு களிலும் நுகர்வியப் பொருள்கள் உற்பத்தியிலும் பெருமுத லாளிகள் மூலதனத்தைக் குவித்துக் கொள்ளை இலாபம் ஈட்டி வருகின்றனர்.
நிதிநிலை அறிக்கையின் எந்தவொரு பகுதியை ஆராய்ந் தாலும் வெகுமக்களுக்கான திட்டங்கள் யானைக்குச் சோளப் பொறி போடுவதாகவும், பெருமுதலாளிய வணிகக் குழுமங் களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் பெரிய விருந்து படைப்பதாகவும் இருப்பதைத் தெளிவாகக் காணலாம்.
ஒட்டுமொத்தத்தில், தாராளமய - தனியார் மயச் சந்தை யின் விரிவாக்கத்துக்கு மேலும் வழிகோலுவதாகவே 2011-12 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஒவ்வொருவரும் கவலையோடு சிந்திக்க வேண்டும்.