சிந்துவெளி நாகரிகம், சிந்துவெளி நாகரிக எழுத்துமுறையானது அத்துறைசார்ந்த ஆய்வுலகில் ஒரு புதிரான நிலையிலேயே இருந்துவருகிறது. சிந்துவெளி நாகரிகத்திற்கு உரியனவாகக் கண்டெடுக்கப்பட்ட தடயங்களைக் கொண்டு அந்நாகரிகம் மற்றும் எழுத்துமுறை குறித்த புரிதலை உருவாக்கும் முயற்சிகள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகாலமாக நடைபெற்று வருகின்றன.

சிந்துவெளி நாகரிகத்திற்கு உரியனவாக அடையாளங்காணப்பட்ட குறியீடுகள், பண்பாடு சார்ந்த பல்வேறு ஆய்வுப் புதிர்களைக் கொண்டுள்ளன. 1920இல் சிந்துவெளிக் குறியீடுகள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் உலகளாவிய நிலையிலுள்ள அறிஞர்கள் இக்குறியீடுகளை வாசித்தறிவதிலும் சிந்துவெளி பண்பாட்டைக் கட்டமைப்பதிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இத்துறையில் இவ்வகை ஆய்வுகள் 1960க்குப் பிறகு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

சிந்துவெளிக் குறியீடுகள் குறித்து 1960க்குப் பிறகான முனைப்பான ஆய்வுகளால் இந்தியாவில் இருந்த மிகப் பண்டைய நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்துசமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானது என்பதுமான கருத்துக்கள் அத்துறை சார்ந்த அறிஞர்களால் முன்வைக்கப்படன. இன்னொரு முக்கிய அம்சம் சிந்துவெளிப் பகுதியில் பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்ற கருத்தையும் கூறிவருகின்றனர். எனினும் உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால சிந்துவெளி ஆய்வுப் போக்குகளை நோக்கின் கீழ்வரும் சில கருத்துக்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

  • சிந்துவெளி நாகரிகம் வெளிப்படுத்தப்பட்டுக் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழிந்தும் அந்நாகரிகம் குறித்த அடையாளப்படுத்தலில் கருத்து முரண்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
  • சிந்துவெளிப் பகுதியில் பேசப்பட்ட மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்றும் இருவேறு கருத்து நிலைகள் தொடர்ந்து இருந்துவருகின்றன.
  • சித்திர வடிவில் உள்ள எழுத்து வடிவங்கள் அறியப்பட்ட எந்தவொரு மொழிக் குடும்பத்து எழுத்து முறையோடும் தொடர்படுத்த முடியாதவாறு உள்ளன.
  • இன்னொருபுறம் இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீடுகள்தான் என்ற முற்றிலும் மாற்றானதொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
  • பெரும்பான்மையான அறிஞர்கள் சிந்துவெளிக் குறியீடுகள் எழுத்து வடிவமே என்றும் எழுதிய முறை வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதப்பட்டுள்ளது என்றும் கருதுகின்றனர்.
    • சிந்துவெளி நாகரிக அழிவிற்குப் பிறகு அங்கிருந்த மக்கள் எந்த திசைநோக்கிச் சென்றனர் என்ற முக்கியமான ஐயப்பாடும் தொடர்ந்து இருந்துவருகிறது.

மேற்குறித்த முரண்களின் ஊடாகச் சிந்துவெளி மக்களின் நாகரிகம், எழுத்துமுறை, வாழ்விடம் குறித்த ஆய்வுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.

பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள சிந்துவெளி ஆய்வுலகில் அத்துறை சார்ந்த இரு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஒரு கட்டுரை எழுதியவர் பின்லாந்து அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்போலா, மற்றொரு கட்டுரை முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதியது. 1960க்குப் பிறகான சிந்துவெளி குறித்த ஆய்வுகளைப் பல்வேறு புதிய அணுகுமுறைகளின்வழி முன்னெடுத்தவர்களுள் இவ்விருவரும் முக்கியமானவர்கள்.

சிந்துவெளி குறித்து அமெரிக்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேரா. பர்போலா ஆங்கிலத்தில் சொற்பொழிவு ஒன்றை (1996) நிகழ்த்தியுள்ளார். இதன் தமிழாக்கத்தைச்  ‘சிந்துவெளி எழுத்து’ எனும் தலைப்பில் தமிழோசை பதிப்பகம் (2009 திசம்பர்) வெளியிட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையில் (2009) ஐராவதம் மகாதேவன் நிகழ்த்திய அறக்கட்டளை உரையின் தமிழாக்கத்தைச் ‘சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்’ எனும் தலைப்பில் செம்மொழி நிறுவனம் (2010 சனவரி) வெளியிட்டுள்ளது.

சிந்துவெளிப் பண்பாடு/குறியீடுகள்/எழுத்து வடிவங்கள் முதலானவற்றின் கூறுகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவரும் இவ்விருவரின் கட்டுரைகள், நூல்கள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. முதன்முறையாக மேற்கண்ட இரு கட்டுரைகள் தமிழில் வெளிவந்துள்ளது. சிந்துவெளி ஆய்வு வரலாற்றுப் போக்கைப் புரிந்துகொள்ள உதவும் இவ்விரு கட்டுரைகளின் பங்களிப்பு குறித்த அறிமுகத்தை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சிந்துவெளி ஆய்வு வரலாற்றில் இரு கட்டுரைகளின் பங்களிப்பைத் திறனாய்வு செய்வது அல்ல.

சிந்துவெளி நாகரிகம், எழுத்துமுறை பற்றிய ஆய்வுகளின்வழி பண்டைய நாகரிகத்தை அடையாளப்படுத்தவும் குறியீடுகளை விளக்குவதற்கும் எவ்வகையான அணுகுமுறைகளை இவர்கள் பின்பற்றுகின்றனர் என்பதை இவர்களின் உரைவழி கண்டுணர முயலலாம்.

I

பெரும்பாலான பண்டைய எழுத்துக்களின் புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் சிந்துவெளி எழுத்துமுறையை மட்டும் படித்தறிவதில் தடைகள் ஏற்படுவது குறித்துக் கூறும் பர்போலா, படித்தறியும் முறைகள் குறித்தும் கோட்பாட்டு ரீதியிலான அணுகுமுறையை இவ்வுரையில் முன்வைக்கிறார்.

பொதுவாகச் சிந்துவெளி எழுத்துமுறையைப் படித்தறிவது கடினம் என்று கூறும் பர்போலா, சிந்துவெளி நாகரிகத்திற்குச் சமகாலத்தில் அறியப்பட்ட எழுத்துக்களிலும் மொழிகளிலும் சிந்துவெளி எழுத்திற்குப் பிற மொழி வழியான பெயர்ப்புகள் கிடைக்கப்படாமலிருப்பது அதற்கான முக்கியக் காரணம் என்கிறார். அறியப்படாத எழுத்துக்களுக்கான திறவுகோலைப் பெரும்பாலான நேரங்களில் இத்தகைய பிற மொழி பெயர்ப்புக்களே வழங்குகின்றன என்று கூறும் பர்போலா அத்தகைய பிறமொழித் திறவுகோல் இல்லாத சிக்கலைப் படித்தறிய ஏற்படும் தடைகளில் ஒன்றாகச் சுட்டுகிறார். எகிப்திய சித்திர எழுத்தின் புதிர்களை விடுவித்ததற்குப் பிற மொழிகளில் அமைந்த பெயர்ப்புகள் உதவியதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதேவேளையில், இவ்வகையான பிற மொழி வழியான பெயர்ப்புகள் கிடைக்கபெறாமல் போனதுடன் மற்றுமொரு சிக்கல் இருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

எகிப்திய ஆப்பு வடிவ எழுத்துக்கான (Cunei form Script) மொழிபெயர்ப்புகள் கிடைக்காத போதிலும், ஹிரோடோஸின் எழுத்துக்களிலிருந்தும் பைபிளிலிருந்தும் தெரியவருகிற பாரசீக மன்னர்களின் பெயர்களும் அவர்களது முன்னோர்களின் பெயர்களும் இதற்குத் தீர்வுகாண உதவின. வரலாற்றை ஆவணப்படுத்திய காலத்திற்கு முன்னதாகவே சிந்துவெளி நாகரிகம் அழிந்து போனதால் இவ்வகையான தகவலும் இல்லாமல் போய்விட்டது. (2009 : 8)

வரலாற்றைப் பதிவுசெய்யும் வழக்கத்திற்கு முன்னமே சிந்துவெளி நாகரிகம் முற்றாக அழிந்து போனதும் அதன் எழுத்து வடிவங்களை வாசித்தறிவதில் ஏற்படும் தடைகளுள் ஒன்றாக உள்ளது என்றும் கூறுகிறார். பின்லாந்தைச் சேர்ந்த பண்டைய ‘உகாரிதிக்’ எழுத்தை அது கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களிலேயே படித்தறிய முடிந்ததற்கும், கிரேக்க மொழி சார்ந்த ‘மைசினிய’ B வரிவடிவ எழுத்து(Mycenean B script) படித்தறியப்பட்டதற்கும் வரலாற்றுத் தொடர்ச்சி முற்றிலும் அறுபடாமல் இருந்ததை முக்கிய காரணமாகக் காட்டுகிறார்.

 படித்தறிவதில் உள்ள தடைகளுக்கு மேற்குறித்த காரணங்கள் முக்கியமானவையாகும். என்றாலும், சிந்துவெளி எழுத்தில் சுமார் நானூற்றுக்கும் அதிகமான வேறுபட்ட குறியீடுகள் உள்ள நிலையில் அவற்றின் சித்திர வடிவக் குறியீடுகளையும் வேறுசில அசைக் குறியீடுகளையும் வேறுபடுத்திக் காட்டுவது கடினமாக இருப்பதாகவும் அவ்வாறு வேறுபடுத்திக்காட்டும் சூழல் இல்லாதபட்சத்தில் அவற்றைப் படித்தறிவதில் சிக்கல் எழுவதாகவும் பர்போலா கூறுகிறார்.

சிந்துவெளிக் குறியீடுகள் அவற்றைப் போலவே தோற்றமளித்த படித்தறியப்பட்ட பிற எழுத்துக்களின் குறியீடுகளோடு ஒப்பிடப்பட்டன எனவும் அவற்றின் ஒலியியல் மதிப்புகள் சிந்துவெளி எழுத்துக்கு மாற்றப்பட்டன எனவும் இந்த அணுகுமுறையே பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது எனவும் கூறும் பர்போலா “எப்படியிருப்பினும் ஒப்புநோக்கும் எழுத்து முறைகள் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே இந்த ஆராய்ச்சிமுறை பயனளிக்கக் கூடியதாக இருக்கும். அதிலுங்கூடத் தவறான புரிதலுக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன” என்பதையும் தெளிவுபடுத்துகிறார். (2009 : 9)

சிந்துவெளி எழுத்து இதுவரை தெரியவந்த பிற எழுத்துமுறைகளுடன் ஒலி பெயர்ப்பில் எந்த ஒத்த தன்மையையும் கொண்டிருக்காததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிந்துவெளிக் குறியீடுகளின் ஒலிபெயர்ப்பு நிலைகளில் ஏற்படும் இடர்பாடுகளையும் கடந்து சில குறிப்பிட்ட நிலைகளின்கீழ் சிந்துவெளி எழுத்தைப் படித்தறிவதற்கான சாத்தியக்கூறுகளையும் பர்போலா முன்வைக்கிறார். இதற்காகக் கிடைக்கக்கூடிய எல்லா ஆதாரங்களையும் சேகரிப்பதும் நம்பத்தகுந்த வகையிலும் எளிதில் புரியக்கூடிய வகையிலும் தெளிவாகப் பதிப்பிப்பதுமே அடிப்படையான முதன்மைப் பணியாகக் கருதுகிறார். அந்த வகையில் ‘சிந்துவெளி முத்திரைகள் மற்றும் எழுத்துக் குறியீடுகளின் தொகுப்பு’ (Concordance of Indus Seals and Inscriptions) நூலை அவர் இரு தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கிறார். இந்த இரு தொகுதிகளைப் பதிப்பித்ததன்வழி சிந்துவெளிக் குறியீடுகளைப் படித்தறிவதற்கான நோக்கத்தைச் சாத்தியப்படுத்தியிருப்பதாகவும் அவர் நம்புகிறார் (2009 : 10).

சிந்துவெளி எழுத்து வடிவம் சித்திர–அசை எழுத்தாக உள்ள நிலையில் அகரவரிசை எழுத்து மற்றும் அசைகள் கொண்ட எழுத்தைப் படித்தறியப் பயன்படும் முறைகள் அதற்குப் பயன்படுவதில்லை என்னும் நிலைப்பாட்டினைப் பர்போலா கொண்டிருக்கிறார். இதனால் சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிவதற்கு ரீபஸ் (Rebus) முறை அல்லது சித்திரப்புதிர் எழுத்து முறையை அவர் பின்பற்றுகிறார்.

(ரீபஸ் முறை: குறிப்பிட்ட ஓர் ஒலியை அல்லது ஒரு சொல்லைக் குறிக்கும் சித்திரம் கருத்தளவில் அதற்குத் தொடர்பற்ற வேறொரு பொருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவது ரீபஸ் முறை எனக் குறிக்கப்படுகின்றது. ஒரு சொல்லையோ அல்லது பெயரின் ஒரு பகுதியையோ அறிவிப்பது போன்று சித்திரங்கள் அமைந்திருப்பதும், அந்தச் சித்திரங்களின் மூலம் மறைமுகமாக ஊகித்து அறியத்தக்க விதத்தில், ஒரே ஒலிப்புடைய சொற்கள் என்றும் சிலேடையைப் பயன்படுத்திக்கொள்ளும் முறையே ‘ரீபஸ்’ எனப்படும் (2009 : 10)).

தொடக்கக்காலச் சித்திர–அசை எழுத்துகள் ரீபஸ் முறையைப் பயன்படுத்தி எழுத்து முறையை வாசித்து அறியப்பட்டது என்று பர்போலா தெரிவிக்கிறார். இந்நிலையில், சிந்துவெளி எழுத்து சித்திர எழுத்தாக உள்ளதன் அடிப்படையில் ரீபஸ் முறையைப் பயன்படுத்தி அவற்றைப் படித்தறியும் முயற்சியை அவர் மேற்கொள்கிறார்.

சிந்துவெளி எழுத்திற்கு ஆதாரமாக உள்ள மொழியை அடையாளம் காண அது தொடர்பான குறியீடுகளின் ஒலியியல் மதிப்பைக் கண்டுணர நமக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. இவ்விசயத்தைப் பொருத்தமட்டில், ரீபஸ் என்னும் சித்திரப்புதிர்க் கோட்பாட்டைப் பயன்படுத்தி அவற்றைப் படித்தறிவதைத் தவிர வேறெந்த முறையும் படித்தறியும் முறை என்ற தகுதியைப் பெறாது (2009 : 11) என்ற உறுதியான முடிவை முன்வைக்கும் பர்போலா, சித்திரப்புதிர் எழுத்துக்கள் தொன்மையான மொழியொன்றினை அடையாளங்காண உதவுவதுடன் அதன் எழுத்து வடிவத்தின் சில பகுதிகளைப் படித்தறிவதற்கும் சாத்தியப்படும் என்றும் இதற்குக் கீழ்வரும் சில நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.

  • குறிப்பிட்ட சித்திர வடிவத்தில் சித்தரிக்கப்படும் பொருளை அடையாளம் காணுதல்
  • ஒரு சித்திர வடிவத்தின் மூலம் சுட்டப்படும் குறிப்பிட்ட புறப்பொருளுக்குரிய சொல்லிலிருந்து வேறுபட்ட அர்த்தத்தைத் தரக்கூடியதாகவும் அதேநேரத்தில் ஒரே ஒலிப்பு உடையதாகவும் விளங்கும் ஒரு சொல்லைக் குறிப்பதற்கு, சித்திர வடிவமானது ரீபஸ் ஆகப் பயன்படுத்தப்பட்டு வருதல்
  • இவ்வாறு தருவிக்கப்படும் அர்த்தம், அதன் பின்னணியிலிருந்து உய்த்துணரத் தக்கதாக இருத்தல்
  • காட்சியாகச் சித்தரிக்கப்பட்டது அதிலிருந்து உய்த்துணரத்தக்க அர்த்தம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ள, பலபொருள் தரும் ஒரு சொல் அந்த எழுத்துடன் வரலாற்று ரீதியாக நெருக்கமாக உள்ள மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் (2009 : 11).

பண்டைய உலகின் எழுத்துமுறைகள் மற்றும் அதைப் படித்தறிய உருவாக்கப்பட்ட அணுகுமுறைகள், சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிவதைச் சாத்தியமாக்குவதற்குச் செய்யப்படவேண்டிய நோக்கங்கள் குறித்தும், சிந்துவெளிக் குறியீடுகளில் வரையறையுடன் உட்பொதிந்துள்ள அர்த்தங்களை வாசித்து வெளிக்கொணரும் முயற்சியையும் பர்போலா மேற்கொள்கிறார்.

மேற்கண்ட ரீபஸ் அல்லது சித்திரப் புதிர் அணுகுமுறையின் வழிச் சில வகையான சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிந்து கட்டுரையில் விளக்கமளிக்கிறார். அவற்றுள் முக்கியமானதாக ‘மீன்’ குறியீடுகளை அவர் பொருள் கொள்ளும் முறையைக் கட்டுரையின் மையப் புள்ளியாகச் சுட்டலாம். குறியீடுகளின் முழுத்தொகுப்பில் ஏறத்தாழப் பத்துச் சதவீத அளவில் ‘மீன்’ வடிவக் குறியீடுகள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இந்த வகையிலேயே ‘மீன்’ வடிவக் குறியீட்டுக்கு முதன்மை தந்து பர்போலா விளக்கமளிப்பதாகக் கருதலாம்.  

symbol_1                                                                     

சிந்துவெளி எழுத்து ஏறத்தாழ நானூறு குறியீடுகளைக் கொண்டுள்ளது. சித்திர வடிவத்தில் உள்ள இந்தக் குறியீடுகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறியீடுகளை இணைப்பதன் மூலம் கூட்டுக் குறியீடுகளை உருவாக்குவது ஆகிய முக்கியச் சிறப்பம்சங்களைச் சிந்துவெளி எழுத்துகள் கொண்டுள்ளன (2009 : 38). இந்த நானூறு குறியீடுகளில் ஏறத்தாழ பாதிக் குறியீடுகள் அடிப்படைக் குறியீடுகள், மறுபாதிக் குறியீடுகள் கூட்டுக் குறியீடுகள் எனப் பர்போலா மதிப்பிடுகிறார் (2009 : 38).

மேற்குறிப்பிட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறியீடுகளை இணைப்பதன் மூலம் கூட்டுக் குறியீடுகளை உருவாக்கும் முறையிலேயே ‘மீன்’ வடிவ குறியீட்டைப் பர்போலா வாசிக்க முற்படுகிறார். பொதுவாக இந்த அணுகுமுறையிலேயே சிந்துவெளிக் குறியீடுகளின் வாசிப்புக் கோட்பாட்டை அவர் முன்வைக்கிறார்.

கூட்டுக் குறியீடுகளை வடிவமைப்பதற்காக, அடிப்படையான ‘மீன்’ குறியீட்டோடு பொருள் வேறுபாட்டைச் சுட்டுவதற்கான குறியீடுகளில் ஒன்று ‘மீன்’ குறியீட்டுக்கு மேல்புறம் இடம்பெறுகிறது. நீலகிரியைச் சேர்ந்த பழங்குடிகளான தோடர்களின் புல்வேய்ந்த குடிசைகளின் கூரையைப் போலவும், அதற்கிணையான, தொடக்ககால இந்தியக் கட்டுமான அமைப்புகளைப் போலவும் இது காணப்படுகிறது. திராவிட மொழிகளில் கூரை என்பதைக் குறிப்பதற்கான சொற்களின் பரந்துவிரிந்த வேரானது வே/வேய்/மேய் (வீட்டுக்கூரை வேய்/மேய்) என்பதாகும்  (2009 : 15).

வே/வேய்/மேய் என்னும் வேர்ச்சொற்களினுள் இடம்பெறும் ‘வ்/ம்’ மற்றும் ‘ஐ/ஏ’ ஆகிய இந்த மாற்றீடுகள் மூலத் திராவிட மொழியில் ‘வேய்/மேய் (கூரையிடு) என்பது அதன் வேரான மை ‘கறுப்பு’ என்பதோடு ஓரளவுக்கு ஒலியில் ஒத்திசைந்து இருப்பதாகச் சுட்டுகிறார். இதனடிப்படையில் கூரை, மீன் ஆகிய இரண்டு சித்திரங்களையும் கொண்டு சிந்துவெளிக் குறியீட்டை(கீழே காண்க) அதாவது மேய் + மீன் என்பதை மை + மீன் = கரு மீன் (அதாவது) ‘மைம்மீன்’(சனிக்கோள்) ‘கறுப்பு நட்சத்திரம்’ என்ற பொருளில் வாசிக்கிறார்.symbol_2

இவ்வாறு தனிக்குறியீடுகளைக் கூட்டுக் குறியீடுகளாக இணைப்பதன் மூலம் சிந்துவெளிக் குறியீட்டின் வாசிப்புக் கோட்பாட்டைப் பர்போலா உருவாக்குகிறார்.

மை-மீன் என்பது சனிக்கோளின் பெயராகப் பழந்தமிழர்களால் சுட்டப்பட்டு வந்ததை புறநானூற்றுப் பாடல் (117), சமஸ்கிருத வழக்கு முதலானவற்றைச் சான்று காட்டியும் தனது வாசிப்புக் கோட்பாட்டிற்கு மொழி வழக்குச் சான்றுகளையும் தருகிறார். மேலும்,

பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் சிற்பச் சித்திர முறைகளில் சனிக்கோள், மெதுவாகச் செல்வதில் பெயர்பெற்ற ஆமையின் மீது அமர்ந்து ஊர்ந்து வருகிறது. சனிக்கோளின் வாகனமான ஆமை என்கிற நீர்வாழ் பிராணி (அதாவது ஒரு வகையான ‘மீன்’) ஓட்டால் மூடப்பட்டிருக்கிறது (அதாவது ஒருவகையான ‘கூரை’). மீனுடன் கூரையைச் சித்தரிக்கும் சித்திரம் ஒலியியல் ரீதியாக மட்டுமின்றி சித்திரம் என்கிற அளவிலும் சனிக்கோளைச் சுட்டுவதால் இந்தத் தொடர்பு ஹரப்பக் காலம் வரை பின்னோக்கிச் செல்வதாக இருக்க முடியும் (2009 : 16).

மேற்சொன்ன ஆதாரத்தை முன்வைத்தும் சிந்துவெளி மீன் குறியீட்டின் வாசிப்பு முயற்சியைப் பர்போலா மேற்கொள்கிறார்.

பர்போலாவின் வாசிப்பு அணுகுமுறையில் மற்றொன்று வேறுபடுத்திக் காட்டுகின்ற சில அடையாளக் குறியீடுகளை மாற்றியமைத்து வாசித்தறிவதாகும். இதனடிப்படையில் சிந்துவெளிக் குறியீட்டில் பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ள ‘மீன்’ குறியீட்டை ‘விண்மீன்’ அல்லது கோள் எனப் பர்போலா வாசிக்கிறார்.

பொதுவாகப் பர்போலாவின் மாற்றியமைக்கப்பட்ட ‘மீன்’ குறியீட்டு வாசிப்பு அணுகுமுறை நம்பகத்தன்மையற்று இருப்பதாக மகாதேவன் மதிப்பிடுகிறார்.

வேறுபடுத்திக்காட்டுகின்ற சில அடையாளக் குறிகளால் மாற்றியமைக்கப்பட்ட ‘மீன்’ குறியீடுகள் பற்றிய பர்போலாவின் வாசிப்புகளும் விளக்கங்களும் மரபார்ந்த முறையிலான வேறுபடுத்திக் காட்டும் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட தன்னிச்சையான அர்த்தங்களையே பெரும்பாலும் சார்ந்திருக்கின்றன. ஆனால், இந்த அடையாளக் குறிகளை எந்தவொரு உறுதிப்பாட்டுடனும் சித்திர ரீதியாக அடையாளப்படுத்த, அவற்றின் இயல்பு இடம் தருவதில்லை. எனவே, பர்ப்போலாவின் வாசிப்புகளும் விளக்கங்களும் நம்பகத்தன் மையற்றவையாக இருக்கின்றன (2009, ப. 43).

பர்போலாவின் ‘மீன்’ குறியீட்டு வாசிப்பு அணுகுமுறை நம்பகத்தன்மையற்றது என்று மதிப்பிடும் மகாதேவன், இதற்கு மாறுபட்ட விளக்கங்களை முன்வைப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அத்தகைய விளக்கங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

 பொதுவாகப் பர்போலாவின் சிந்துவெளி எழுத்தைப் படித்தறியும் அணுகுமுறை குறித்து இவ்வாறு மகாதேவன் மதிப்பிடுகிறார்.

  • சித்திரக் குறியீடுகளுக்கு நம்பகத்தன்மையற்ற அடையாளத்தை வழங்குதல்
  • சித்திரமல்லாத குறியீடுகளுக்கு தன்னிச்சையாக மதிப்புகளை வழங்குதல்
  • குறியீடுகளைச் சந்தேகத்திற்குரிய வகையில் வகைப்படுத்தல்
  • குறியீடுகள் வரும் இடங்களை நிர்ணயிப்பதில் நிச்சயமற்ற தன்மை
  • குறியீட்டு விளக்கத்திற்குத் துணை செய்யும் ஆதாரங்களுக்காக இந்துமத நூல்களிலும் மரபுகளிலும் உள்ள மூலதாரங்களைத் தேடுவதன் மூலம் படித்தறிதல் என்பதைக் காட்டிலும் ஹரப்ப மதம் குறித்த ஆய்வுக் கட்டுரையாக இருத்தல் (2009 : 45).

பர்போலா உரையின் முற்பகுதி சிந்துவெளி எழுத்தின் மொழிக் குடும்பம் பற்றியதாகும். இந்த முதற்பகுதியில், சிந்துவெளி எழுத்து திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததற்கான அதிக வாய்ப்பிருப்பதாக முடிவு செய்த பின்னர் குறியீடுகள் குறித்த வாசிப்பு முயற்சிக்கான அடுத்த பகுதிக்குச் செல்கிறார்.

சீன-திபெத்திய மொழிகள், புருசாஸ்கி மொழி, ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிகள், இந்தோ – ஆரிய மொழிகள் முதலான தென்னாசிய மொழிகள், அண்டைக் கிழக்கு மொழிகளுக்கு மாற்றாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறும் பர்போலா, அதற்கு மாற்றாக இருந்த மொழி ஹரப்ப மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தபின்னரே வாசிப்பு முயற்சிக்குச் செல்வதைப் பார்க்கமுடிகிறது.

II

சுமார் நாற்பது ஆண்டுகாலமாகத் தொல்லியல்துறைசார்ந்த ஆய்வுலகில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் முனைவர் ஐராவதம் மகாதேவன். இவர் தமிழின் தொன்மைக்கு ஆதாரமான பல கல்வெட்டுக்களைச் சேகரித்து வெளியிட்டவர். 1960-இல் சிந்துவெளி ஆய்வைத் தொடங்கிய இவர் அத்துறை சார்ந்த பல்வேறு முடிவுகாணாப் புதிர்களுக்குத் தனக்கேயுரிய நடையில் முடிவு சொல்லியிருக்கிறார். சிந்துவெளி ஆய்வுலகில் முன்னோடியாக அறியப்பட்ட இவர் திருச்சிராப்பள்ளியில் 2009 இல் – தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையில் ‘Vestiges of Indus Civilization in Old Tamil’ என்னும் பொருளில் உரைநிகழ்த்தினார். இந்த உரை ‘சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்’ எனும் தலைப்பில் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இம் மொழிபெயர்ப்பைச் சிறுநூல்வடிவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது (இலவச வெளியீடு). சிந்துவெளி நாகரிகம் மற்றும் எழுத்து வடிவம் குறித்த மதிப்பீட்டை எவ்வகையில் மகாதேவன் முன்வைக்கிறார் என்பதை இந்தச் சிறுநூலின்வழி நின்று அறிமுகப்படுத்தலாம்.

சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு என்பதும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டைக் காட்டக் கூடியது என்பதும் ஐராவதம் மகாதேவனின் கருதுகோளாகும். இந்த அடிப்படையைக் கொண்டே சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு சிந்துவெளிக் குறியீடுகளை ஒப்புநோக்கி விளக்க முற்படுகிறார். இந்த விளக்கத்திற்குப் புறநானூற்றின் 2, 201 ஆம் பாடல்களில் பதிவாகியுள்ள தொன்மக் கதையை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார். மேற்குறித்த இரு பாடல்களின்வழிப் பெறப்படும் தொன்மக் கதைகளைச் சிந்துவெளிக் குறியீட்டுடன் ஒப்பிட்டு விளக்குவதன்வழி அப்பாடல்களுக்கான பழைய உரையை மறுவாசிப்புக்கு உட்படுத்தி மீள்கட்டமைப்பையும் மகாதேவன் செய்கிறார்.

பொதுவாகச் சிந்துவெளிக் குறியீடுகள் குறித்த மகாதேவனின் அணுகுமுறை பர்போலாவின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறானதாக உள்ளது. பர்போலா குறியீடுகளைப் படிக்க முற்படுகிறார் மகாதேவன் விளக்க முற்படுகிறார். இது இவர்களின் அணுகுமுறையில் உள்ள அடிப்படையான வேறுபாடு.

சிந்துவெளி வரிவடிவங்களின் பொருளை விளக்கிக் காட்டுவதுதான் என் ஆய்வின் இன்றியமையாத அம்சம். அவற்றைப் படித்தறிவது அல்ல. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மிகவும் அடிப்படையானது. படித்தறிய முயல்வோர் ஒவ்வொரு குறியீட்டின் சரியான ஒலியையும் கண்டுகொள்ள வேண்டும். அந்தக் குறியீடு படக்கருத்து எழுத்தா அல்லது ஒலியசையா என்பதைப் பொறுத்து அதற்கு ஒரு ஒலிப்பு, அதிகமாகப் போனால் இரு ஒலிப்பு இருக்கலாம். ஏற்கனவே கூறியதுபோல், இரு மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் இல்லாத நிலையில் அல்லது நீண்ட தொடர் வாசகங்கள் இல்லாத நிலையில், முழுமையாக ஒலிப்பு முறையில் படிப்பது என்பது இன்றளவும் இயலாத ஒன்று (2010 :14, 15).

சிந்துவெளிக் குறியீடுகளை மேற்கூறியவாறு, படித்தறிதல் என்பது முடியாத ஒன்றாக மகாதேவன் கருதுகிறார்.

திராவிட, இந்திய–ஆரிய மொழிகள் மற்றும் பண்பாட்டு ஆதாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இருமொழி ஒப்புமைகளின் உதவியால் சிந்துவெளி எழுத்துக்களுக்குப் பொருள் விளக்கும் ஒரு மாற்று முறையை உருவாக்கியிருக்கிறேன் (2010 : 15).

படித்தறிதல் இயலாத ஒன்று எனக் கருதினாலும் அக்குறியீடுகளை விளக்க முடியும் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். இந்தவகையில் சிந்துவெளிக் குறியீடுகளைப் படிக்கும் முயற்சியை விடுத்து அவற்றை விளக்கிக்காட்டும் முயற்சியை அவர் மேற்கொள்கிறார்.

பின்னால் வந்த திராவிட–ஆரிய நாகரிகங்கள் சிந்துவெளிப் பாரம்பரியத்தைத் தமதாக்கிக் கொண்டன என்று கூறி, திராவிடத்தில் அது மொழிவாரியாகத் தெரியவருகிறது என்றும் இந்திய–ஆரியத்தில் கடன் வாங்கிய சொற்களாலும் நேர்மொழிபெயர்ப்பாலும் தொன்மக் கதைகளாலும் தெரியவருகிறது என்றும் கூறுகிறார் (2010 : 31).

சிந்துவெளியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவர்கள் வெளியிலிருந்து வந்தவர்களின் மேலாதிக்கத்தின்கீழ் வந்தபோது இருமொழிகளும் தம்மிடையே கொண்ட உறவால் நேரடியான மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் மிகுதி. இந்த நேரடி மொழிபெயர்ப்புக்களை இருமொழிகளிலும் காணமுடியும். அதாவது திராவிட மொழிகளிலிருந்து ரிக்வேத காலத்து வடமொழியிலும், வடமொழியிலிருந்து திராவிட மொழிகளிலும் அவை நிகழ்ந்துள்ளன. இந்த நேரடி மொழிபெயர்ப்புகளை மொழியியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் கண்டு கவனத்துடன் கணித்து, சிந்துவெளி ஆய்வில் பயன்படுத்தியிருப்பது மகாதேவன் காட்டும் புதிய பாதை ஆகும் (பா.ரா.சுப்பிரமணியன், 2010 : 6).

சமூகவியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தொன்மக் கதைகளையும் மொழியியல் கூறுகளையும் இணைத்த அடிப்படையான ஆய்வு அணுகுமுறையை வகுத்துக் கொண்ட பின்னரே சிந்துவெளிக் குறியீட்டின் விளக்கத்திற்கு மகாதேவன் செல்கிறார்.

மேற்கண்ட அணுகுமுறையிலான “சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்” என்னும் சிறுநூல் அடிப்படையில் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. நூலின் முதற்பகுதியில் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்திற்கு நெருக்கமாக உள்ள சான்றுகளையும், சிந்துவெளி வரிவடிவம், தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளி எச்சங்கள் முதலானவை குறித்த தனது மதிப்பீட்டையும் மகாதேவன் முன்வைக்கிறார்.

பகுதி இரண்டில், சங்க இலக்கியங்களிலும், தொன்மக் கதைகளிலும் சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் பதிவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சிந்துவெளி வரிவடிவங்களுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறார். மேற்சொன்ன அணுகுமுறையில் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு சிந்துவெளிக் குறியீடுகளை ஒப்புநோக்கி விளக்கும் பகுதி முக்கியம் வாய்ந்தவையாகும்.

சிந்துவெளிக் குறியீட்டின் விளக்கத்தில் ‘காவுவோன்’ (குறியீடு) (அதாவது மனித உருவத்தில் உள்ள குறியீட்டின் தோளின் இருபுறமும் கலங்கள் தொங்கும் காவடித் தண்டை வைத்தபடி உள்ள குறியீடு) குறியீட்டையும், சாடி, அம்பு போன்ற வடிவத்தில் உள்ள குறியீட்டையும் (கீழே காட்டப்பட்டுள்ள குறியீடுகள்) மிக விரிவான அளவில் அவர் விளக்குகிறார். முன்சொன்ன புறநானூற்றின் இரு பாடல்களில் வரும் தொன்மக் கதைகளை இவ்விரு குறியீட்டின் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்கிறார். இவ்விரு குறியீடுகளின் விளக்கத்தை மகாதேவன் உரையின் மையமாகச் சுட்டலாம்.                           

symbol_3பாரதப் போர் நடந்த காலத்து, உணவளித்த சேர அரசனைக் குறித்துப் பாடப்பட்டது என்ற தகவலுடன் அடையாளப்படுத்தப்பட்டு வரும் புறநானூற்றின் இரண்டாம் பாடலைக் காவுவோன் குறியீட்டின் விளக்கத்திற்கு அடிப்படை ஆதாரமாக மகாதேவன் எடுத்துக்கொள்கிறார்.

symbol_4இந்தப் பாடலில் வரும் (பாரதப் போரில் சேர அரசன் உணவிட்ட) தொன்மச் செய்தி முற்றிலும் உண்மையானதாகவும் புனைகதை எனப் புறந்தள்ளாமலும் மாறுபட்ட மதிப்பீட்டுடன் அணுகி சிந்துவெளிக் குறியீட்டின் விளக்கத்திற்கு அந்தத் தொன்மச் செய்தியை மகாதேவன் பயன்படுத்திக்கொள்கிறார். இந்தவகையில் இந்தத் தொன்மக் கதையை மிகத் தொன்மையான காலத்தின் ஓர் மங்கிய நினைவு என அவர் மதிப்பிடுகிறார் (2010 : 24).

சேரன் என்பதற்குப் பொறை அல்லது பொறையன் என வேறு பெயர்களும் உண்டு (2010 : 25). ‘பொறு’ என்னும் வினைச் சொல்லிலிருந்து வரும் ‘பொறை’ அல்லது ‘பொறையர்’ (பன்மை) என்ற சொற்கள் ‘காவுவோர், காவாளர்’ (<காவு-தல் ‘கடத்தல்’) என்னும் பொருள் உடையன என்றும் ஆனால், சொற்களுக்கான இந்தப் பொருள் சங்க நூல்களில் இல்லை என்பதால் இந்தப் பட்டம் மிகப் பழைமையானதாகும் என்றும் முடிவு செய்கிறார்.                                                            

symbol_5சிந்துவெளி வரிவடிவத்தில் காவடித் தண்டு / காவடி எடுத்தல் என்னும் குறியீட்டைப் ‘பொறை’ எனச் சுட்டிக்காட்டி “இரு சுமைதாங்குபவன்/பொறுப்பவன்” என்பது இரும்பொறையைச் சுட்டுவதாக மகாதேவன் விளக்குகிறார்.

மேலும், ஒரு காவடித் தண்டின் இரு முனைகளிலும் தொங்கவிடப்படும் சுமைகள் சமநிலையைக் காட்டவேண்டுமானால் எடையில் சமமாக இருக்க வேண்டும். புறநானூற்று இரண்டாம் பாடலுக்கு உரை எழுதுகையில் பாரதப் போரில் இரு பிரிவினருக்கும் சமமாக உணவு அளித்தான் எனும் கருத்து பழைய உரைகாரர் மனதில் எழுந்ததா இல்லையா என்பதை அறிய முடியவில்லை (2010 : 28). ஆனால், அவ்வாறான கருத்து அப்பாடலில் இருப்பதாக மகாதேவன் எண்ணுகிறார்.

இதன் அடிப்படையில் சிந்துவெளிக் குறியீடான காவுவோன்/பொறையன் என்னும் குறியீட்டை ‘பட்டப் பெயர்’ என மகாதேவன் விளக்குகிறார். இதன்வழி புறநானூற்று இரண்டாம் பாடல் பழந்தமிழிலிருந்து சிந்துவெளி நாகரிகத்திற்கு மகாபாரதம் வழியாக இட்டுச் செல்வதாக (2010 : 29) மேற்குறித்த குறியீட்டைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். தமிழகச் சமயச் சடங்கு மரபிலும், வடஇந்திய மரபிலும் ‘காவுவோர்’ (பொறையர்) குறியீட்டை ஒப்புநோக்கி பண்பாட்டு ஆதாரங்களுடன் தனது விளக்கத்தை முன்வைக்கிறார்.

தோளில் இருபுறமும் கலங்கள் தொங்கும் காவடித்தண்டை வைத்திருக்கும் ‘காவுவோன்’ குறியீட்டின் தலைப் பகுதியில் சாடி, அம்பு குறியீடுகள்(கீழே காட்டப்பட்டுள்ள குறியீட்டைக் காண்க) இணைக்கப்பட்ட இரு கூட்டுக்குறியீடுகள் உள்ளதை மகாதேவன் சுட்டிக்காட்டுகிறார். அவை, சிந்துவெளி வாசங்களில் வந்துள்ள எண்ணிக்கையாலும் அமைந்துள்ள இடத்தாலும் முக்கியமான பட்டங்களாக இருக்க வேண்டும் என அவர் மதிப்பிடுகிறார்.  இந்தக் குறியீட்டைக் கீழ்வருமாறு அவர் விளக்க முற்படுகிறார்.                                      

symbol_6சாடி காவுவோன்   அம்பு காவுவோன்

 ‘சுமையைத் தாங்கிக்செல்லும் கூலியாள்’ ‘நீர்க் கலங்களை ஏந்திச் செல்பவன்’ போன்ற விளக்கங்களை நாம் புறக்கணித்து விடலாம். ‘சமயச் சடங்குப் பொருள்களைக் காவடியில் எடுத்துச்செல்பவன்’ (Parpola 1981) என்னும் விளக்கம் ஓரளவு ஏற்கக்கூடியதே. ஆயினும், நான் சிந்துவெளிக் குறியீட்டில் காவடித் தண்டு/காவடியை மட்டும் தனியாகப் பார்க்காமல், காவடி எடுத்துச்செல்வோர் (காவுவோர், பொறையர்) என்ற முழுமையான குறியீட்டுடன் தொடர்புபடுத்தி வரலாற்றுச் சான்றுகளுடன் இணைத்துப் பயன்தரும் முறையில் கொண்டுசெல்கிறேன்(2101: 26).

மேற்சொன்னதன் அடிப்படையில் அந்த இரு குறியீடுகளைச் சாடியை(உணவுப் பொருள் உள்ள வேள்விப் பாத்திரத்தைச் சுமக்கும்) ‘காவுவோன்’ என்றும், அம்பு அல்லது ஈட்டி (படைக்கருவி) ‘காவுவோன்’ எனவும் விளக்குகிறார். மேலும், காவுவோர் (பொறையர்) என்பவர்களிடையே இரு உட்பிரிவினர் இருந்ததற்கான சான்றாகவும் இந்தக் குறியீட்டைக் கொண்டு மகாதேவன் அடையாளப்படுத்துகிறார்.

பொதுவாக இதே அடிப்படையில் பல்வேறு சிந்துவெளிக் குறியீடுகளுக்கான விளக்கத்தை இந்த உரையில் முன்வைக்கிறார். சிந்துவெளிக் குறியீட்டின் விளக்கத்திற்குச் சங்கப்பாடல்களையும், தொன்மக் கதைகளையும் வடமொழி மரபையும் ஆதாரமாகக் கொண்ட புதிய அணுகுமுறையைச் சிந்துவெளி ஆய்வு உலகத்திற்கு மகாதேவன் இந்த உரையின்வழி அறிமுகப்படுத்துகிறார்.

III

மேற்கண்ட இரு அறிஞர்களின் ஆய்வுகள் சிந்துவெளிக் குறியீட்டில் உள்ள புதிர்களை விடுவிக்கும் முயற்சியில் தனித்து அடையாளங்காணவேண்டிய ஒன்றாகும். இந்தவகையில் சிந்துவெளிப் பண்பாட்டின் கட்டமைப்பு, குறியீட்டு விளக்க முறையில், இவ்விரு கட்டுரைகள் இருவேறு புதிய அணுகுமுறைகளைச் சிந்துவெளி ஆய்வுலகிற்கு வழங்குகின்றன. இவை சிந்துவெளி ஆய்வு வரலாற்றில் மிக முக்கியப் பதிவாகும்.

இவ்விரு கட்டுரைகளின் வாசிப்பு அனுபவத்தின் வழியாகக் கீழ்வரும் சில புரிதல்கள் நமக்கு ஏற்படுகின்றன.

  • சிந்துவெளிப் பண்பாடு, ஆரிய பண்பாட்டிற்கு முந்தையது; திராவிடப் பண்பாட்டிற்கு நெருக்கமானது எனும் அதன் பண்பாட்டுக் கட்டமைப்பில் இருவரும் ஒத்த நிலையைக் கொண்டிருக்கின்றனர்.
  • சிந்துவெளிப் பகுதியில் பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவத்தைத் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாக அடையாளப்படுத்தும் முயற்சியிலும் பர்போலாவும் மகாதேவனும் ஒத்த கருத்தினராக உள்ளனர்.
  • சிந்துவெளிக் குறியீடுகளை அணுகும் முறையில் இருவருக்கும் உள்ள வேறுபாடு முக்கியமானதாகும். எழுத்து வடிவங்களாகக் கருதப்படும் சிந்துவெளிக் குறியீடுகளைப் பர்போலா படிக்க முற்படுகிறார். மகாதேவன் விளக்க முற்படுகிறார். குறியீட்டின் அணுகுமுறையில் இருவருக்குமான அடிப்படையான, முக்கியமான வேறுபாடு இது.
  • பொதுவாக உலகில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய எழுத்துக்களுக்கு வாசித்தறிவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்துள்ள நிலையில், சிந்துவெளிக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு காலமாகியும் அதன் புதிர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இருவேறு அணுகுமுறையுடன் முன்வைத்துள்ளனர். சிந்துவெளிக் குறியீட்டுப் புதிர்களைப் விடுவிப்பதற்கான ஒருமித்த கருத்தியலுடனான ஆய்வை முன்னெடுக்க வேண்டிய தேவையை இந்த இரு கட்டுரைகளும் உணர்த்துகின்றன.
  • எகிப்தியச் சித்திர எழுத்தின் புதிர்களை விடுவிப்பதற்கு ஹிரோடோடஸின் எழுத்துக்களும் பைபிளிலிருக்கும் பாரசீக மன்னர்களின் பெயர்களும் முன்னோர்களின் பெயர்களும் உதவின. இந்நிலையில், சிந்துவெளி நாகரிகம் வரலாற்றை ஆவணப்படுத்திய காலத்திற்கு முன்னமே அழிந்துபோனதால் அவ்வாறான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதாகப் பர்போலா மதிப்பிடுகிறார். ஆனால், சங்க இலக்கியங்களிலும் தமிழகத் தொன்மக் கதைகளிலும் மன்னர்களின் பெயர்கள்/ வழக்குகள் பதிவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி அதனடிப்படையில் சிந்துவெளிக் குறியீடுகளை மகாதேவன் விளக்க முற்படுகிறார். இவ்வணுகுமுறை இருவருக்குமிடையே காணப்படும் அடிப்படையான வேறுபாடாகும்.
  • குறியீட்டிற்குத் துணைசெய்யும் ஆதாரங்களுக்காக (படிக்க/விளக்க) இந்துமத நூல்களில் உள்ள மூல ஆதாரங்களைப் பர்போலா தேடுவதும் தமிழக, வட இந்திய சடங்கு முறைகளில் உள்ள மூல ஆதாரங்களை மகாதேவன் தேடுவதும் முக்கியமானவையாகும். சமயம் சார்ந்த இத்தேடலை, இருவருக்குமிடையேயான ஒற்றுமையாகச் சுட்டலாம்.

கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்த இரு நூல்கள்

  1. சிந்திவெளி எழுத்து , அஸ்கோ பர்போலா, தமிழில்: வி. நடராஜ், தமிழோசை பதிப்பகம், கோயம்புத்தூர் - 012, முதல் பதிப்பு, டிசம்பர் 2009.
  2. சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும், முனைவர் ஐராவதம் மகாதேவன், மொழிபெயர்ப்பு: பா.ரா. சுப்பிரமணியன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை-05, வெளியீடு ஜனவரி 2010.

(சிந்துவெளிப் பண்பாடு, சிந்துவெளி நாகரிக எழுத்துமுறை குறித்துப் பல்வேறு கருத்துநிலைகள் உள்ளன. அவற்றுள் பேராசிரியர் அஸ்கோ பர்போலா, முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆகிய இரு ஆய்வாளர்களின் கருத்துநிலைகள் மட்டுமே இங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விருவரின் கருத்துநிலைகளிலிருந்து முற்றிலும் மாற்றான தன்மையைக்கொண்ட பேராசிரியர் மதிவாணன் போன்ற ஆய்வாளர்களின் கருத்துக்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிந்துவெளி ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் பர்ப்போலா, மகாதேவன் இருவரின் உரைகளை என்னை வாசிக்கச் சொல்லியும் இந்த கட்டுரையை எழுதவதற்கு உற்சாகமூட்டி அதைச் செம்மையுற திருத்தியும் தந்தவர் பேராசிரியர்      பா.ரா. சுப்பிரமணியன்)

இரா. வெங்கடேசன்,  ஆய்வாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)