இந்த ஆய்வுக்கட்டுரையின் முந்தைய பகுதியில் கூறப்பட்டிருக்கும் தீர்மானம் IV தானே விளக்கும் தன்மையுடையது; அதன் மூலக் கருத்தை எடுத்துரைப்பதற்கு விரிவான விளக்கம் ஏதும் தேவையில்லை. இந்தக் குறுகிய ஆய்வுரையின் கட்டுக்கோட்டிற்குள் அதனை பொதுப்படையான முறையில் எடுத்துரைப்பதற்கும் அதிகமாக வேறு எதுவும் செய்வது சாத்தியமுமில்லை.

ambedkar 243புதிய குடியேற்றங்கள் தேவை என்ற கோரிக்கை தீண்டப்படாதவர்களிடையே தோன்றியுள்ள “புதிய வாழ்வு இயக்கம்” என்பதன் விளைவாக உருவானதென்றே கூறலாம்.

இந்துக்களின் இரக்கமற்ற அரக்கத்தனமான கோரப்பிடியிலிருந்து தீண்டப்படாதோரை விடுவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். இன்றைய அமைப்பு முறை தொடரும் வரை தீண்டப்படாதோர், இந்துக்களின் நுகத்தடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதோ அல்லது தமது தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதோ சாத்தியமல்ல.

அதே கிராமங்களில் தீண்டப்படாதோர் இந்துக்களுடன் சேர்ந்து வாழ்வதுதான் அவர்களைத் தீண்டப்படாதோராக எடுத்துக் காட்டுகிறது; இந்துக்கள் அவர்களைத் தீண்டப் படாதவர்களாக இனங் காணுவதையும் சாத்தியமாக்குகிறது. இந்தியாவை கிராமங்கள் நிறைந்த நாடு எனக் கூறலாம்.

தீண்டப்படாதவர்களைத் தனியே பிரித்துக் காட்டக்கூடிய, இனம் காட்டக்கூடிய ஓர் எளிய வழியை கிராம அமைப்பு முறை வழங்கும் வரை தீண்டப்படாதோர் தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கு, தப்புவதற்கு மார்க்கம் ஏதுமில்லை. கிராம அமைப்பு முறைதான் தீண்டாமையை நீடித்திருக்கச் செய்கிறது, நிலைத்திருக்கச் செய்கிறது; எனவே, இந்த அமைப்பு முறையை உடைத்தெறிய வேண்டும் என்று தீண்டபடாதவர்கள் கோருகின்றனர்; சமூகரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாங்கள் பூகோள ரீதியிலும், பிரதேச ரீதியிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், தீண்டப்படாதோருக்கென உருவாக்கப்படும் தனிக் கிராமங்களில் தாங்கள் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்; இத்தகைய கிராமங்கள் அமைக்கப்பட்டால் அவற்றில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள், தீண்டத்தக்கவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்ற பேதம் ஏதும் இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தனிக் குடியேற்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கு இரண்டாவது காரணம், கிராமத்தில் தீண்டப்படாதோருக்குள்ள பொருளாதார நிலையாகும். அவர்களது நிலை மிகவும் இரங்கத்தக்கது, பரிதாபகரமானது என்பதை எவரும் மறுக்க முடியாது. அவர்கள் நிலமற்ற தொழிலாளிகள், இந்துக்கள் விரும்பி அளிக்கும் வேலையையும், கூலியையும் முற்றிலும் சார்ந்திருப்பவர்கள், தாங்கள் வசிக்கும் கிராமங்களில் அவர்கள் வேறு எந்தத் தொழிலிலும் வியாபாரத்திலும் ஈடுபட முடியாது; தீண்டாமை காரணமாக எந்த இந்துவும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டான்.

எனவே, இந்து கிராமத்தைச் சார்ந்துள்ள ஒரு பகுதியினராக தீண்டப்படாதவர்கள் வாழ்ந்துவரும் வரை அவர்களது ஜீவனத்துக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை. இந்தப் பொருளாதார சார்பு நிலையிலிருந்து வறுமையும் வெறுமையும் இழிவும் மட்டுமின்றி வேறு பல தீய விளைவுகளும் உருவாகின்றன. இந்துவுக்கென்று ஒரு வாழ்க்கை நியதி இருக்கிறது; அது அவனது சமயத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக அமைந்திருக்கிறது. இந்த வாழ்க்கை நியதி அவனுக்கு எத்தனை எத்தனையோ சலுகைகளையும் வசதிகளையும் வாரி வழங்குகிறது; அதேசமயம் தீண்டப்படாதவர்கள் மீது வாழ்வின் புனிதத்துக்கு ஒவ்வாத எண்ணற்ற அவமதிப்புகளையும், இழிவுகளையும், ஏளனங்களையும் சுமத்துகிறது.

தீண்டப்படாதவர்களை இப்போது ஆட் கொண்டுள்ள புதிய வாழ்வு இயக்கத்தைப் பின்பற்றி, அவர்கள் மாபெரும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்; மதத்தின் பேரால் இந்துக்கள் தங்கள்மீது திணித்துள்ள அவமதிப்புகளையும், அநீதிகளையும் எதிர்த்து அவர்கள் இந்தியாவெங்கணும் ஒரு புனிதமான அறப்போரில் குதித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திலும் இந்துக்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் இடையே ஒரு நிரந்தர யுத்தம் நடைபெற்று வருகிறது. அது வெளியே தெரிவதில்லை. அதனை விளம்பரப்படுத்த இந்துக்களின் பத்திரிகைகள் தயாராக இல்லை; உலகக் கண்ணோக்கில் தங்களது சுதந்திர லட்சியத்துக்கு அது ஊறு விளைவித்து விடுமோ என்று அவற்றுக்கு அச்சம், ஆனால் ஒரு மெளனப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது மட்டும் உண்மை. கிராம அமைப்பு முறையில் சுதந்திரமான, கெளரவமான வாழ்க்கைக்கான போராட்டத்தில் தீண்டப்படாதவன் தன் கைகள் பெரிதும் கட்டப்பட்டிருப்பதைக் காண்கிறான்.

பொருளாதாரரீதியிலும், சமூக ரீதியிலும் வலுமிக்க இந்துக்களுக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் கீழ்ப்பட்டவர்களாகவும், சமூகரீதியில் ஒதுக்கிப் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உள்ள தீண்டப்படாதவர்களுக்கும் இடையே நடைபெறும் ஒரு கடுமையான போட்டி என்றே இதனைக் கூற வேண்டும். தீண்டப்படாதவர்களைக் காலை வாரிவிடுவதில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்கள் வெற்றி பெறுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. காவல்துறையும், குற்றவியல் நடுவர் துறையும் இந்துவின் பக்கமே இருக்கின்றன. தீண்டப்படாதோருக்கும், இந்துக்களுக்கும் இடையே நடைபெறும் சச்சரவில் தீண்டப்படாதோர் காவல்துறையிடமிருந்து பாதுகாப்பையோ நீதித் துறையிலிருந்து நீதியையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. காவல்துறையினரும் நீதித்துறையினரும் இந்துக்கள், அவர்கள் தங்கள் உடமையைவிட தங்கள் இனத்தையே பெரிதும் நேசிக்கின்றனர். இவற்றை எல்லாம்விட இந்துக்களின் படைக்கலக் கொட்டிலிலுள்ள பிரதான ஆயுதம் கிராமத்தில் வசிக்கும் ஏழைத் தீண்டப்படாதவர்கள்மீது அவர்கள் பெற்றுள்ள பொருளாதார ஆதிக்கமேயாகும்.

சமத்துவ உரிமைகளுக்காகத் தீண்டப்படாதவர்கள் நடத்தும் போராட்டத்தில் இந்துக்கள் தமது பொருளாதார வலிமையைக் கொண்டு அவர்களை எவ்வாறு ஒடுக்குகிறார்கள் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ள (1935 ஆம் வருட அரசாங்கச் சட்டம் பிறப்பிக்கப்படும் முன்னர் தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றே பொதுவாக அழைக்கப்பட்டனர். 1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டம் அவர்களை ஷெட்யூல்டு வகுப்பினர் என்று குறிப்பிடுகிறது) குறைகளை விசாரிப்பதற்கு 1928ல் பம்பாய் அரசு நியமித்த குழுவின் அறிக்கையில் தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலிருந்து பின்வரும் பகுதிகள் கீழே தரப்படுகின்றன. இந்துக்கள் ஈவு இரக்கமின்றி எவ்வளவு கொடூரமாக தீண்டப்படாதவர்களை நடத்துகிறார்கள் என்பதை இந்து சமூக அமைப்பின் புதிர்கள் பற்றி அறியாத அயல் நாட்டினர்கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது. அந்தக் குழு கூறியிருப்பதாவது;

"சகல பொதுவசதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிட்டும்படி செய்வதற்கு நாங்கள் பல்வேறு பரிகாரங்களைப் பரிந்துரைத்திருந்த போதிலும், அவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் நீண்டகாலம் அவர்களுக்குச் சிரமங்கள் இருக்கும் என்று அஞ்சுகிறோம். முதலாவது சிரமம் சாதி இந்துக்கள் அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடக்கூடும் என்ற அச்சமாகும். ஒவ்வொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகச் சிறு எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு எதிராக சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடமிருந்து தங்களது நலன்களையும் கெளரவத்தையும் எவ்விதத்திலும் பாதுகாக்க அவர்கள் உறுதி பூண்டிருக்கிறார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். காவல் இந்துக்களின் வன்முறையை ஒராளவுக்குக் கட்டுப்படுத்தியுள்ளது; இதன் விளைவாக இத்தகைய சம்பவங்கள் அரிதாகிவிட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இன்று எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டாவது சிரமமாகும். மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பொருளாதார சுதந்திரம் இல்லை. சிலர் சாதி இந்துக்களின் நிலங்களை அவர்களது குத்தகைகாரர்களாக உழுது சாகுபடி செய்து வருகின்றனர். சிலர் சாதி இந்துக்களால் வேலைக்கமர்த்திக் கொள்ளப்படும் விவசாயத் தொழிலாளிகளாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதர சிலர் கிராமத் தலையாரிகளாகப் பணியாற்றுவதற்காக சாதி இந்துக்கள் வழங்கும் உணவையோ, தானியத்தையோ கொண்டு பிழைப்பி நடத்தி வருகின்றனர். கிராமங்களில் சாதிஇந்துகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தங்களது பொருளாதார ஆதிக்கத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் பல நிகழ்ச்சிகள் குறித்து நாங்கள் கேள்விப்படுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தத் துணிந்தால், சாதி இந்துக்கள் அவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றி விடுகிறார்கள்; வேலையிலிருந்து நீக்கி விடுகிறார்கள்; தலையாரிகள் என்ற முறையில் அவர்கள் பெறும் ஊதியத்தை நிறுத்தி விடுகிறார்கள். இந்தப் பகிஷ்காரம் பல சந்தர்ப்பங்களில் திட்டமிட்ட முறையில் மிகப் பரந்த அளவில் நடைபெறுகிறது; தாழ்த்தப்பட்ட மக்கள் பொது சாலைகளைப் பயன்படுத்தாதபடி தடுக்கப்படுகிறார்கள்; அவர்களுக்கு கிராம கடைக்காரர்கள் அத்தியாவசியமான பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்று தடை செய்துவிடுகிறார்கள். சில சமயங்களில் சின்னஞ்சிறு விஷயங்களுக்குக்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சமூகப் பகிஷ்காரம் பிரகடனம் செய்யப்படுவதாக சான்றுகள் பகர்கின்றன.

பொதுக் கிணறைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தங்களுக்குள்ள உரிமையைச் செயல்படுத்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் முற்படும்போதும் இதுபோன்றே அடிக்கடி நடைபெறுகின்றன. இதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் பூணூல் அணிந்து கொணடாலோ, துண்டுதுக்காணி நிலத்தை வாங்கிவிட்டாலோ, நல்ல உடைகளையோ நகைகளையோ அணிந்து கொண்டாலோ, மணமகனை குதிரை மீது உட்கார வைத்து பொதுத் தெருவில் திருமண ஊர்வலம் நடத்தினாலோ கடுமையான சமூகப் பகிஷ்காரம் கைக் கொள்ளப்படுகிறது.”

தனிக் குடியேற்றங்கள் வேண்டும் என்ற இந்தக் கோரிக்கை புதிய கோரிக்கை; தீண்டப்படாதவர்கள் முதல் தடவையாக இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இக்கோரிக்கை விஷயத்தில் இந்துக்களின் மனப்போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் இது தீண்டப்படாதோர் முன் வைத்துள்ள மிக முக்கியமான கோரிக்கை என்பதில் ஐயமில்லை; இதர கோரிக்கைகளுக்கு என்ன நேர்ந்தாலும் இந்தக் கோரிக்கைகள் விஷயத்தில் அவர்கள் அணுவளவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது உறுதி. தாங்களும் தீண்டப்படாதவர்களும் ஆண்டவன் அருளால் பைபிள் கூறுவது போன்று கணவன் மனைவியுடன் இணைவது போன்று இணையலாம் என்று இந்துக்கள் நினைக்கக் கூடும். ஆனால் இந்துக்களுடன் தங்களுக்குள்ள உறவுகள் குறித்து இத்தகைய கண்ணோட்டம் எதையும் தீண்டப்படாதோர் மறுதலிக்கிறார்கள். இந்த இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும் என்றும், இந்துக்களுடனான பிணைப்பு இனியும் தாமதியாமல் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டுமென்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

இதற்காகும் செலவும் நேரமும்தான் இதிலுள்ள பிரச்சினை. செலவைப் பொருத்தவரையில் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று தீண்டப்படாதவர்கள் கூறுகிறார்கள். இதில் பெரும்பகுதியை இந்துக்கள் ஏற்க வேண்டி வரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்துக்கள் இதனை ஏற்காமலிப்பதற்குக் காரணம் இல்லை. இந்துக்களுக்கு எல்லாமே சொந்தமாக இருக்கின்றன. இந்த நாட்டிலுள்ள நிலம் அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது. வணிகத்துறையில் அவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அரசும் அவர்கள் வசம் இருக்கிறது.

வருவாய், ஆதாயம் இவற்றின் மூலஊற்று அவர்களிடமே உள்ளது. இதர வகுப்பினர் அதிலும் குறிப்பாக தீண்டப்படாதவர்கள் வெறும் விறகு வெட்டிகளாகவும், தண்ணீர் வண்டி ஒட்டுபவர்களாகவுமே இருந்து வருகின்றன. சமூக அமைப்பானது எதிலும் எல்லாவற்றிலும் இந்துக்கள் ஏகபோகம் செலுத்துவதற்குத் துணை செய்கிறது. அநேகமாக இந்த் நாடே இந்துக்களுக்குச் சொந்தமாக இருக்கும்போது இந்தத் திட்டத்திற்கான செலவை அவர்கள் ஏற்க வேண்டுமென்று கோருவதில் இல்லாமல் இல்லை.

அடுத்து, அவகாசத்தை எடுத்துக் கொண்டால், தீண்டப்படாதவர்களைப் புதிய குடியேற்றங்களில் குடியமர்த்துவதற்கு 20 ஆண்டுகள் பிடிக்கும் என்றால்கூடப் பரவாயில்லை. ஆயிரம் ஆண்டுகாலம் இந்துக்களின் அடிமைகளாக இருந்தவர்கள் 20 ஆண்டுகளின் முடிவில் தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும்போது அதனை அவர்கள் வரவேற்கவே செய்வர்.

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 8)

Pin It