வணிக நோக்கங்களுக்காக சங்கம் அமைக்கலாம் என்பது, எல்லோராலும் ஏற்கப்பட்ட உண்மை. ஆனால் அது போதாது. அரசியல் நோக்கங்களுக்காகவும் சங்கம் தேவை. தங்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு உதவ தொழிற்சங்க இயக்கம் மட்டுமே போதுமானதாக இல்லை. தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபடலாமா என்பது கேள்வி. இதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. தொழிற்சங்கங்கள் அரசியலுக்கு வரவேண்டும்; அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்க நலன்களைப் பாதுகாக்க முடியாது. குறைந்த அளவு ஊதியம், வேலை நாட்கள், பொது விதிகள், சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் ஆகிய சீர்திருத்தங்களுக்கான அரசியல் அதிகாரம் அவசியம். சட்டத்தின் அங்கீகாரம் இருந்தால்தான் தொழிற்சங்கங்களின் ஆற்றல் வலுப்படும். சங்கமாகத் திரள்வதுடன் நாட்டின் அரசியலிலும் பங்கேற்றால்தான் இவையெல்லாம் கைகூடும்.

தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபடுவது அவற்றின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல. மேலும் தொழிற்சங்கத்தின் மீது மட்டுமே முழுக்கவனம் செலுத்தினால், நமது இறுதி இலக்கை எட்டாமல் போய் விடுவோம். மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதே நமது ‘தலையெழுத்து' என்னும் நிலையிலிருந்து உழைக்கும் வர்க்கம் மீள முடியாமல் போய்விடும். மாறாக, நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்திலிருந்து விடுபட்டு, விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்க வேண்டும். அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழி நடத்த வேண்டும். சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். இந்தப் புனர்நிர்மாணமே தொழிலாளர் வர்க்கத்தின் முதல் கடமையாகும். இந்த லட்சியத்தை அடைவது எப்படி?

இதற்கான ஒரு வழி, அரசியல் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்துவது. எனவே, அதிகாரத்தை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும் அல்லவா? வெறும் அரசியல் நடத்துவது கூடாது. தொழிலாளர்கள் தனிமனிதர்கள் என்னும் அடிப்படையில் அரசியல் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதையும் மீறி அரசியல் கூட்டங்களுக்குப் போவது, தேர்தலில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஓட்டுப்போடுவது, ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து விடுவது என்றே பலர் காலத்தைக் கழிக்கிறார்கள். இதுவும் சரியில்லை. தொழிலாளர்களுக்கு அரசியல் வேண்டாம் என்றால், ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கொள்கையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அர்த்தமில்லை. ‘அரசியல் வேண்டாம்' என்னும் எச்சரிக்கை அமைப்பு ரீதியான அரசியல் வடிவங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது கட்சி அரசியலுக்கு மட்டுமே பொருந்தும்.

எனவே, ஒவ்வொரு தொழிலாளியும் தனிப்பட்ட முறையில் தன் விருப்பப்படி அரசியலில் இடம் பெறலாம். ஆனால், சக தொழிலாளியுடன் அமைப்பு ரீதியாகத் திரளும்போது, அவன் சொந்த அரசியலை விட்டுவிட வேண்டும். இவ்வாறு தன் வர்க்க நலன்களை அரசியல் காரணங்களுக்காக கைவிடும் போக்கிலிருந்து அவன் தன்னைக் காத்துக் கொள்வது இயக்கத்திற்கு வலிமையைச் சேர்க்கும். இல்லை எனில், திரண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு முதலாளித்துவக் கட்சி பலிகொண்டு விடும். உங்கள் எல்லோருக்கும் தெரியும், ‘நாங்கள்தான் தொழிலாளி வர்க்கத்துக்காக வாதாடுபவர்கள்' என்று இரண்டு போட்டி அமைப்புகள் கூறி வருகின்றன. ஒன்று தொழிற்சங்கக் காங்கிரஸ், இன்னொன்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு. இரண்டும் ஒன்று சேர முடிவு செய்துள்ளன. இந்த ஒருமைப்பாட்டுப் பாதையில் ஒவ்வொரு அமைப்பும் பாதி தூரம் கடந்திருக்கின்றன... உருவாகப் போகும் புதிய அமைப்பு தூய்மையான தொழிற்சங்க அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம். இதில் அரசியல் இருக்கக் கூடாது என்பது கட்டாயம்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் சரியான புரிதலில்தான் இவர்கள் செயல்படுகிறார்களா என்று நான் வியந்தேன். அரசியல் அதிகாரம் என்பது ஒரு கருவி. அதன் மூலம்தான் அவர்கள் தங்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளை நீக்க முடியும். இதைத் தொழிலாளர்கள் உணராமல் இருப்பதுதான் மிகப் பெரிய சோகம். ஒன்றுபட்ட அரசியல் நடவடிக்கையால் அல்லாமல், இந்தத் தொழிற்சங்க ஒற்றுமை எதற்காக உருவாக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. சிறு சிறு கருத்து வேறுபாடுகளை இனி லட்சியம் செய்வதில்லை என்று முடிவு செய்தால்தான் ஒட்டுமொத்தமான ஒப்பந்தம் ஏற்படும் என்று நினைப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால், கருத்து வேறுபாடுகளுக்கான அடித்தளம் அல்லது மய்யப் பிரச்சினை மிகப் பெரியதாக இருந்தால், அந்தப் பின்னணியில் ஒற்றுமை காண்பதில் பொருளே இல்லை.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:185)

Pin It