மேதகு திருவாங்கூர் மகாராஜா சமஸ்தானத்திலுள்ள கோவில்களைத் தீண்டப்படாதவர்களுக்குத் திறந்து விட்டு 1936 நவம்பர் 12ஆம் தேதி ஒரு பிரகடனம் வெளியிட்டார். அது கூறுவதாவது:
“நமது சமயத்தின் மெய்ம்மையிலும் வாய்மையிலும் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டும், அது தெய்வீக வழிகாட்டுதலையும் அனைத்து மடங்கிய சகிப்புத் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டது என்ற அசைக்க முடியாத உண்மையை ஏற்றுக் கொண்டும், மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப நடைமுறையில் அது நூற்றாண்டுக் கால மாகத் தன்னை தகவமைத்துக் கொண்டு வந்திருக்கிறது என்பதை ஐயமற உணர்ந்தும், நமது இந்துப் பிரஜைகளில் எவருக்கும் அவர் களது பிறப்பு, சாதி அல்லது சமூகம் இவற்றின் காரணமாக இந்து தர்மத்தின் ஆதரவும் அரவணைப்பும் எவ்வகையிலும் மறுக்கப் படலாகாது என்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டும், உகந்த சூழ் நிலைமைகளைப் பராமரிப்பதற்காகவும் சமய வினை முறைகளும் பழக்க வழக்கங்களும் முறையே கடைப்பிடிக்கப்படுவதற்காகவும் எம்மால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கும் விதிமறைகளுக்கும் உட்பட்டு, எங்களதும் அரசாங்கத்தினதும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கோவில்களில் பிரவேசிக்கவோ, வழிபடவோ பிறப்பு அல்லது மதம் காரணமாக எந்த இந்துவுக்கும் இப்போது முதல் எத்தகைய தடையும் இருக்காது என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம், ஆணையிடுகிறோம்.”
இந்தப் பிரகடனம் எத்தகைய ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது?
இந்தப் பிரகடனம் திருவாங்கூர் மகாராஜாவால் அவரது பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் திரைமறைவில் இதன் இயக்கு சக்தியாக இருந்தவர் திருவாங்கூர் பிரதமர் சர். சி.பி. ராமசாமி அய்யரே ஆவார். இந்தப் பிரகடனத்திற்குப் பின்னாலுள்ள அவரது செயல் நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1933லும் சர். சி.பி. ராமசாமி அய்யர் திருவாங்கூரின் பிரதமராக இருந்துவந்தார். இதே 1933ல் தான் குருவாயூர் கோவிலை அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் திறந்துவிடச் செய்வதற்கு திரு. காந்தி பாடுபட்டு வந்தார்.
ஆலயப் பிரவேசப் பிரச்சினை சம்பந்தப்பட்ட சர்ச்சையில் பங்கு கொண்ட பலரில் சர். சி.பி. ராமசாமி அய்யரும் ஒருவர். இந்த உண்மையை இப்போதும் யாரும் நினைவு கூர்வதாகத் தெரியவில்லை. ஆனால் இதனை இங்கு நினைவு கூர்வது முக்கியம்; ஏனென்றால் இந்தப் பிரகடனத்தை வெளியிடும்படி அவர் மகாராஜாவைத் தூண்டி யதற்கான நோக்கங்களைப் புரிந்துகொள்ள இது உதவும். இந்தப் பிரச்சினையில் 1933ல் அவர் எத்தனைய போக்கினை கடைப்பிடித் தார்? அச்சமயம் அவர் பத்திரிகைகளுக்கு விடுத்த பின்கண்ட அறிக்கையிலிருந்து இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் ( “காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்திருப்பது என்ன” என்ற டாக்டர் அம்பேத்கரின் நூலிலிருந்து இந்த அறிக்கை இங்கு தரப்பட்டிருக்கிறது).
“என்னைப் பொறுத்த வரையில் சாதி விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பதில்லை. எனினும், இப்போதைய ஆலய வழிபாட்டு முறையும் அதன் விவரங்களும் தெய்வீகக் கட்டளைகளை ஆதார அடிப்படையாகக் கொண்டவை என்று நம்புவோர்மனத்தில் இந்த விஷயம் வலுவான, ஆனால் அத்தனை தெளிவற்ற உணர்வுகளைக் கிளர்த்தி விட்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். சம்பந்தப்பட்ட தரப்பினர் பரஸ்பரம் அனுசரித்துச் செல்வதன் மூலமும், இன்றைய நிலைமையின் எதார்த்தங்களையும் இந்து சமூகத்தின் ஒற்றுமையை யும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த சமயத் தலைவர்களையும் சமூகத் தலைவர்களையும் உணரச் செய்வதன் மூலமும் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணமுடியும்.
“அதிரடி முறைகள் இந்த நோக்கத்துக்குப் பயன்பட மாட்டா, உதவ மாட்டா; வேறு எந்த நேரடி நடவடிக்கையும் அரசியல் துறையைவிட இத்துறையில் மிகுந்த தீமையையே விளைவிக்கும். ஆலயப் பிரவேசப் பிரச்சினையை சமபந்தி விருந்து போன்ற பிரச் சினைகளிலிருந்து ஒதுக்கிவிட்டுப் பார்க்கலாம் என்று திரு. காந்தி கூறும் கருத்திலிருந்து மாறுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டள்ளது. ஆனால் அதேசமயம், தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடும் முன்னேற்றமும் நமது உடனடி யான, அவசரமான வேலைத் திட்டமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறுவது எனக்கு உடன்பாடானதாக இருக்கிறது.”
1933ல் ஆன்மீக நோக்கங்கள் சர். சி.பி. ராமசாமி அய்யரின் மனத்தைத் தொடவில்லை என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. 1933க்குப் பிறகுதான் ஆன்மீக நோக்கங்கள் முன்னணிக்கு வருகின்றன. இந்த ஆன்மீக நோக்கங்கள் 1936ல் அவரது சிந்தனையில் இடம் பெறுவதற்கு ஏதேனும் பிரத்தியேகக் காரணம் உண்டா? 1936ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை மனத்திற் கொண்டால் தான் இக்கேள்விக்குப் பதிலளிக்க முடியும். அந்த ஆண்டில் ஈழவ சமூகத்தினரின் மாநாடு ஒன்று திருவாங்கூரில் நடைபெற்றது. 1935ல் இயோலாவில் நான் எழுப்பிய மதமாற்றப் பிரச்சினை குறித்துப் பரிசீலிப்பதற்காகவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ஈழவர் கள் என்பவர்கள் மலபார் எங்கும் பரவியிருக்கும் தீண்டப்படாத சமூகத்தினர்.
அவர்கள் நன்கு படித்த சமூகத்தினர்; பொருளாதார ரீதி யில் வலுவான நிலையில் இருப்பவர்கள். அத்தோடு அவர்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கும் சமூகத்தினரும் ஆவர். தங்களது சமூக, மத, அரசியல் உரிமைக்காக அவர்கள் மலபாரில் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். ஈழவர்கள் ஒரு மிகப்பெரிய சமூகமாக அமைந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய சமூகத்தினர் இந்துக்களின் அரவணைப்பிலிருந்து பிரிந்து சென்றால் அது இந்து சமூகத்திற்குச் சாவுமணி அடிப்பதற்கு ஒப்பாகும். இத்தகைய நிலைமையில், இந்த மாநாடு இந்த அபாயத்தை உடனடியாக எதார்த்தமாக்கும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இதுதான் சர். சி. பி. ராமசாமி அய்யரின் மனப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆன்மீக நோக்கங்கள் என்பதெல்லாம் வெறும் சாக்குப் போக்கு, சப்பைக் கட்டு. அவை செயல் புரியத் தூண்டும் சக்திகளாக அமைந்திருக்க வில்லை.
இந்தப் பிரகடனம் எந்த அளவுக்கு மெய்ந்நிகழ்வுகளை மாற்றி யுள்ளது? அது எந்த அளவுக்கு ஒரு பகட்டாரவார நடவடிக்கையாக நீட்டித்தது? திருவாங்கூரில் அப்போது நிலவிய உண்மை நிலவரங் களை அறிந்து கொள்வது சாத்தியமில்லையா? சென்னை சட்டமன் றத்தில் மலபார் ஆலயப் பிரவேச மசோதா பற்றி நடைபெற்ற விவாதத்தின்போது, திருவாங்கூர் சம்பந்தப்பட்ட சில உண்மை விவரங்களை சர். டி. பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவை உண்மை யாயின், இவை எல்லாம் ஒரு நாடகம் என்பதையே காட்டும்.
சர். டி. பன்னீர் செல்வம் கூறியதாவது:
“இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகப் பிரதமர் முன்வைத்த வாதங்களில் ஒன்று திருவாங்கூரில் ஆலயங்கள் யாவும் ‘தீண்டப் படாதோருக்கு’ திறந்துவிடப்பட்டு விட்டன என்பதாகும். எதையும் தன் விருப்பப்படிச் செய்யும் யதேச்சாதிகாரம் கொண்ட மகாராஜா ஓர் உத்தரவின் மூலம் இதனைச் செய்துள்ளார். ஆனால் இந்த உத்தரவு அங்கு எந்த லட்சணத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது? எனக்கு வந்த தகவல்களின்படி, ஆரம்பத்தில் கரைபுரண்டோடிய உற்சாகத் திற்குப் பிறகு இப்போது ஹரிஜனங்ள் கோவில்களுக்குப் போவதை நிறுத்திவிட்டார்கள்; இதேபோல், கோவில்களுக்குள் ஹரிஜனங்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் வழக்கமாக வழிபாடு செய்து வந்த மக்கள் இப்போது கோவில்களுக்கு வந்து வழிபடுவதையே அடி யோடு நிறுத்தி விட்டார்கள். ஆலயப் பிரவேச நடவடிக்கை திருவாங் கூரில் உண்மையிலேயே வெற்றி பெற்றுள்ளதா என்பதை அர சாங்கம்தான் தெரிவிக்க வேண்டும்.”
சட்டமன்ற ஒப்புதலுக்காக மசோதா மூன்றாவது முறை கொண்டுவரப்பட்டபோது பலரையும் திடுக்கிட வைக்கும் ஓர் அறிக்கையை சர். டி. பன்னீர் செல்வம் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
“மூத்த மகாராணிக்குத் தனிப்பட்ட முறையில் சொந்தமான கோவில்கள் இந்தப் பிரகடனத்திலிருந்து விலக்கப்பட்டன என்பது உண்மையா என அறிய விரும்புகிறேன். அவ்வாறு செய்யப்பட் டிருந்தால் அதற்குக் காரணம் என்ன? மேலும், மூத்த மகாராணி யின் மகளது திருமணத்தின் போது கோவிலைத் தூய்மைப்படுத்தும் சடங்கை நடத்துவது அவசியமாயிற்று என்று என்னிடம் கூறப் பட்டது. கோவில்களைத் தூய்மைப்படுத்தும் இத்தகைய சடங்கு கள் நடந்திருந்தால் ஆலயப் பிரவேசப் பிரகடனத்தின் கதி என்ன வாயிற்று?”
இந்த விவரங்களை எல்லாம் பிரதமர் மறுக்கவில்லை; மறுக் கவும் முடியாது என்பது தெளிவு. இவை சர்ச்சைக்கிடமற்றவை என்றால், மலபார் ஆலயப் பிரவேசப் பிரகடனத்தை ஒரு மகத்தான ஆன்மீக சாசனம் என்று வீண்பெருமையடித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
இந்த ஆலயப் பிரவேச இயக்கம் பற்றித் தாழ்த்தப்பட்ட இன மக்கள் சிலர் கொண்டுள்ள அச்சத்தைப் பற்றி இங்கு குறிப்பிடாமல் இந்த விவாதத்தை முடித்துக் கொள்வது முறையாக இருக்காது. இது முற்றிலும் ஒரு சமூக சீர்திருத்த இயக்கமா அல்லது ஏதேனும் நடை முறைத் தந்திரமா?
அரசியல் துறையிலும், கல்வித் துறையிலும், ஊதியத் துறை யிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுவரும் விசேட சலுகைகள் அவர் கள் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதன் காரணமாக வழங்கப்படுபவையாகும். அவர்கள் தீண்டப்படாதோராக இல்லாது போனால் இந்த விசேட சலுகைகள் சம்பந்தமாக அவர்கள் முன்வைக்கும் உரிமைக் கோரிக்கை உடனே மறுதலிக்கப்படும். தீண்டாமை ஒழிந் தாலும் அவர்கள் எப்போதும் ஏழைகளாகவும் பிற்பட்டவர்களாக வுமே இருப்பர்.
ஆனால் தீண்டப்படாதோர் என்ற முறையில் அவர் களுக்குள்ள விசேட சலுகைகளை ஏழைகள், பின்தங்கியவர்கள் என்ற முறையில் அவர்கள் பெற முடியாது. அப்படியானால் இந்த ஆலயப் பிரவேசஆர்வலர்களின், ஆதரவாளர்களின் திட்டம்தான் என்ன? இது கோவில்களைத் திறந்துவிடும் திட்டம் மட்டும் தானா அல்லது முடிவாக இந்தச் சலுகைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்ட திட்டமா?
தாழ்த்தப்பட்டோர்களில் சிந்திக்கும் ஆற்றல் படைத்த பலரது மனத்தில் இந்த அச்சம் வேர்கொண்டிருக்கிறது. இந்த அச்சம் உண்மையான அச்சம் என்பதை திருவாங்கூரிலேயே நடைபெற்றுவரும் சம்பவங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அகில திருவாங்கூர் புலையர் சேரமர் ஐக்கிய மகாசங்கத்தின் தலை வர்களில் ஒருவர் 1938 நவம்பர் 24ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் எனக்குப் பின்வருமாறு எழுதுகிறார். அவர் எனக்கு எழுதிய கடிதத் தின் முழு வாசகத்தையும் கீழே தந்திருக்கிறேன்:
முகாம்மைய நாடு, 24.11.1938
கொல்லம்
பெறுநர்
டாக்டர் அம்பேத்கர்
பம்பாய்
மதிப்பிற்குரிய ஐயா,
உங்களது மேலான ஆலோசனையைப் பெறுவதற்காகப் பின் கண்டவிவரங்களை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சமஸ்தானத்தைச் சேர்ந்த ஹரிஜன மக்கள் ஏற்றுவரும் எல்லாத் தன்ப துயரங்களையும் திட்டவட்ட மான முறையில் தங்களிடம் தெரிவிப்பது எனது தலையாயக் கடமையாகக் கருதுகிறேன்.
1. மாட்சிமை தங்கிய மகாராஜா வெளியிட்ட ஆலயப் பிர வேசப் பிரகடனம் ஹரிஜனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த ஆலயப் பிரவேசத்தைத் தவிர்த்து இதர எல்லா சமூகக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் ஹரிஜனங்கள் ஆளாகி வருகிறார்கள். இந்தப் பிரகடனம் எங்களுக்கு மேற்கொண்டு சலுகைகள் அளிக்கப்படுவதற்கு ஒரு தடையாக இருந்து வருகிறது என்றே கூற வேண்டும். ஹரிஜனங்களில் நிலையை மேம்படுத்து வதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வ தில்லை.
2. இங்குள்ள 15 லட்சம் ஹரிஜனங்களில் மிகச் சிலர் பட்ட தாரிகள், அரைடஜன் பேர்பட்ட மேற்படிப்புப் படித்தவர்கள், 50 பேர் பள்ளி இறுதிப் படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள், சுமார் 200 பேர் தாய்மொழிச் சான்று பெற்றவர்கள். அரசாங்கம் பொதுப் பணியாளர் ஆணையத்தை அமைத்திருந்த போதிலும் ஹரிஜனங்கள் நியமிக்கப் படுவது மிகவும் குறைவு. எல்லா நியமனங்களும் சவர்ணர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஒரு ஹரிஜன் ஒன்று அல்லது இரண்டு வாரங் களுக்குத்தான் நியமிக்கப்படுகிறான். பொதுப் பணியாளர் விதிகளின் படி மனுதாரர் மீண்டும் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் விண்ணப் பித்துக் கொள்ள முடியும்.
ஆனால் அதேசமயம் ஒரு சவர்ணர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறான். நியமனங்களின் பட்டியல் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, நியமனங்களின் எண்ணிக்கை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் படி காட்டப்பட்டிருக்கும்; ஆனால் எல்லா ஹரிஜனங்களின் ஒட்டு மொத்தப் பதவிக் காலமும் ஒரு சவர்ணரின் பதவி காலத்துக்கு இணை யாக இருக்கும். இந்த மோசடியில் அதிகாரிகளுக்கும் பெரும் பங் குண்டு. இவ்வாறு பொதுப்பணியாளர்துறை சவர்ணர்களின் பொதுச் சொத்தாகி விட்டது. எந்த ஹரிஜனும் இதனால் பலன் அடைவ தில்லை.
3. ஒவ்வொரு ஹரிஜனுக்கும் மூன்று ஏக்கர் நிலம் தரப்பட வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஜா உத்தரவிட்டார், ஆனால் அதிகாரிகள் சவர்ணர்களாக இருப்பதால் இத்தகைய ஆணைகளை நிறைவேற்ற அவர்கள் எப்போதுமே விரும்புவதில்லை. நகரங்களுக்குப் பக்கத்தில் மேய்ச்சலுக்காக பரந்த அளவில் நிலம் வழங்க அரசு தயாராக இருந்தும் ஹரிஜனங்களுக்கு ஒரு துண்டு நிலம் கூடக் கிடைக்கவில்லை.
ஹரிஜனங்கள் இன்னமும் சவர்ணர்களின் வளாகங்களுக்குள்தான் வசித்து வருகின்றனர்; அங்கு எண்ணற்ற துன்பதுயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஏராள மான நிலம் ‘ரிசர்வ்’ நிலமாக அதாவது தனித்து ஒதுக்கி வைக்கப் பட்டநிலமாக இருந்தும், அவற்றிலிருந்து தங்களுக்கு நிலம் வழங்கக் கோரும் ஹரிஜனங்களின் விண்ணப்பங்களுக்கு எந்த முக்கியத் துவமும் தரப்படுவதில்லை, அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பெரும்பான்மையான நிலங்களை சவர்ணர்களே கவர்ந்து கொள் கின்றனர்.
4. ஒவ்வோர் ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலின் போது, ஒவ்வொரு ஹரிஜன சமூகத்திற்கும் ஓர் உறுப்பினர் வீதம் சட்டமன்றத்திற்கு அரசாங்கம் சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக் கிறது. ஹரிஜனங்களுக்குள்ள தேவைகளையும் குறைகளையும் கோரிக்கைகளையும் ஆர்வ விருப்பங்களையும் முன்வைப்பதற்காக இந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் அரசாங்க இயந்திரத்தோடு இயந்திரமாக, அதாவது சவர்ணர் அதிகாரிகளின் கைப்பொம்மைகளாகி அவர்களுக்குத்தான் ஆதாயம் தேடித் தரு கின்றனர். இவ்வாறு ஹரிஜனங்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு எந்த வழியும் இல்லாமற் போகிறது.
5. திருவாங்கூரிலுள்ள எல்லா ஹரிஜனங்களும் வயல்களிலும் வளாகங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களே ஆவர். அவர்கள் சவர்ணர்களின் ஏவலர்கள், வேலையாட்கள்; அவர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்படுகிறார்கள்; அவர்களை ஆதரிப்பதற்கு, அரவணைத் துக் கொள்வதற்கு, பேணுவதற்கு, பாதுகாப்பதற்கு யாரும் இல்லை. சமஸ்தானத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒவ்வொரு ஹரிஜனுக் கும் நாள் ஒன்றுக்கு ஓரணாதான் கூலியாகத் தரப்படுகிறது. திரு வாங்கூர் சமஸ்தானத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தொழிற்சாலை களில் பணியாற்றும் தொழிலாளர்களும் சரி, அரசு அதிகாரிகளும் சரி எல்போருமே சவணர்கள்தான்; தற்போது அவர்கள் பொறுப் பாட்சிக்காகப் போராடி வருகிறார்கள்.
அரசாங்கத்திலும் ஆலைகளி லும் தங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தற் போது நாடெங்கும் ஹரிஜனங்கள் கோரி வருகிறார்கள். ஆனால் திருவாங்கூரில் நடைபெறும் கிளர்ச்சியே சவர்ணர்களின் கிளர்ச்சி யாக இருக்கிறது; அரசு உத்தியோகங்களிலிருந்தும் தொழிற்சாலை களிலிருந்தும் ஹரிஜனங்களை விரட்டியடிக்க அவர்கள் சதி செய்து வருகிறார்கள். தங்களுக்கு அதிக ஊதியமும் கூடுதல் சலுகைகளும் தரப்பட வேண்டுமென்று வற்புறுத்தி வருகிறார்கள். ஆலைத் தொழிலாளர்களின் கிளர்ச்சியால் திருவாங்கூர் மக்கள் எரிச்சலடைந்திருக் கும்போது, ஹரிஜனத் தொழிலாளர்கள் விஷயத்தில் அவர்கள் அணு வளவும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஹரிஜனத் தொழி லாளிக்கு மிகமிகக் குறைந்த ஊதியமே தரப்படுகிறது; அதேசமயம் ஆலைத் தொழிலாளர்களோ இவர்களைப் போல் மும்மடங்கு அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
6. பசி பட்டினியாலும் போதிய வாழ்க்கை வசதியின்மை யாலும் உடலும் உள்ளமும் மெலிந்து நலிந்து போன ஹரிஜனக் குழந்தைகள் சரிவரப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தேர்வு களில் தோல்வியைத் தழுவ வேண்டிய நிலையில் இருக்கின்றனர். பிரகடனத்திற்கு முன்னர் உயர்நிலைப் பள்ளிகளில் ஹரிஜன மாண வர்களுக்கு ஆறு ஆண்டுக் காலத்துக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன; இது இப்போது மூன்றாண்டுக் காலமாகக் குறைக்கப்பட்டு விட்டது; இதனால் பல மாணவர்கள் தங்கள் படிப்பை இடையிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
7. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென ஒரு தனி இலாகா இருக் கிறது. இதன் தலைவராக திரு. சி. ஒ. தாமோதரன் என்பவர் இருக் கிறார் (பிற்பட்ட வகுப்பினரின் பாதுகாவலர் இவர்). ஆண்டு தோறும் இவ்விலாகாவின் செலவினங்களுக்கென பெரும் தொகை ஒதுக்கப் படுகிறது. ஆனால் ஆண்டு இறுதியில் பார்த்தால் மூன்றில் இரண்டு பங்கு தொகை செலவிடப்படாமல் காலாவதியாகிப் போயிருக்கும். இப்படிப்பட்ட மகா புத்திசாலி இவர்! எனினும் அவ்வப்போது முறைப்படி அரசாங்கத்துக்கு தவறாமல் அறிக்கைகள் சமர்ப்பித்து விடுவார்.
பணத்தைச் செலவிடுவதற்கு வழியில்லை என்று தமது மனச்சான்றை அடகு வைத்து அந்த அறிக்கைகளில் கூறி வைப்பார் இந்தப் புண்ணி யவான்! தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென ஒதுக்கப்படும் தொகையில் 95 சதவிகிதத்தை அதிகாரிகளின் சம்பளம் விழுங்கிவிடும்; எஞ்சிய 5 சதவிகிதம்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கு! அதிலும் இந்த இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் எப்போதும் சவர் னர்களாகவே இருப்பார்கள். திருவாங்கூரில் மூன்று பகுதிகளில் அர சாங்கம் இப்போது தாழ்த்தப்பட்டோருக்காக சில குடியிருப்புகளைக் கட்டப்போகிறது.
இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சவர்ணர்களே. இந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாது என்பது என் அபிப்பிராயம்; ஏனென்றால் இதன் பொருட்டு அதிகம் செலவிடா மல் அரசு கருமித்தனம் செய்கிறது. கொச்சி சமஸ்தானம் ஹரிஜன நலனுக்காக 1 ரூபாய் செலவிடும் போது திருவாங்கூர் அரசாங்கம் ஓரணாதான் செலவிடுகிறது.
திருவாங்கூர் பிரஜைகளில் பெரும்பாலோர் பொறுப்பாட்சிக் காக ‘சமஸ்தான காங்கிரஸ்’ என்ற அமைப்பின் தலைமையில் தற்போது போராடி வருகிறார்கள். இந்த செல்வாக்கு மிக்க அமைப் பின் தலைவர்கள் நாயர்கள், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள், ஈழவர்கள் ஆகிய சமஸ்தானத்தின் நான்கு பிரதான சமூகங்களைச் சேர்ந்த வர்கள், சமஸ்தான காங்கிரசின் தலைவரான திரு. தாணுபிள்ளை விடுத்துள்ள அறிக்கையில், தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கு விசேட சலுகைகள் அளிக்கப்படும் என்று உறுதி கூறினார். சமஸ்தான காங் கிரசின் போக்கு எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் அனை வரும் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தத் தலைவர்களின் வாக்குறுதிகள் எதார்த்தமானவை அல்ல என்பதை இப்போது நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம்.
தாழ்த்தப்பட்ட இனத்தவரின் நலனை இந்தத் தலைவர்கள் புறக்கணித்து விட்டார்கள் என்பதில் எனக்கு இப்போது எந்த ஐயமும் இல்லை. தேசியக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் சமஸ்தான காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது ஒரு வகுப்பு வாத அமைப்பாகி விட்டது. வகுப்புவாத உணர்வே தற்போது இந்தத் தலைவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. ஒவ்வொரு பொது மேடையிலும், அறிக்கையிலும், கட்டுரையிலும் இந்த நான்கு பிரதான சமூகத் தினரைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார்கள். எங்களைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு அடியோடு இல்லை.
திருவாங்கூரில் அரசியல் கிளர்ச்சியைத் தலைமை தாங்கி நடத்திவரும் தலைவர்களின் இந்த விபரீதப் போக்கை வைத்துப் பார்க்கும்போது, பொறுப் பாட்சி ஏற்பட்டால் தாழ்த்தப்பட்ட இனத்தவரின் நிலைமை முன்னென்றையும் விட வருந்தத்தக்கதாக, இரங்கத்தக்கதாக, துயரந்தரத் தக்கதாக ஆகிவிடும் என்றே அஞ்சுகிறேன்; ஏனென்றால் பொறுப் பாட்சி ஏற்படும்போது அரசாங்கத்தின் உடைமை முழுதும் மேலே கூறிய சமூகத்தினரின் பிடிக்குள் வந்துவிடும். அப்போது இந்த சமூகத்தினர் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளையும் சலுகைகளை யும் விழுங்கி ஏப்பமிட்டு விடுவார்கள்.
சமஸ்தான காங்கிரசின் செயற்குழுக் கூட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கு நேரம் ஆலப் புழைகயிறு ஆலை வேலை நிறுத்தம் பற்றிய விவாதத்திற்கு செலவிடப்பட்டது; ஆனால் அதே சமயம் சொல்லொண்ணாத் துன்ப துயரங்களை, இக்கட்டுகளை அனுபவித்துவரும் ஹரிஜனத் தொழி லாளர்களைப்பற்றி இக்கூட்டங்களில் ஒரு வார்த்தை கூடச் சொல்லப் படவில்லை; எல்லோரும் வாயடைத்துப் போய் இருந்திருக்கிறார்கள்.
ஆலைத் தொழிலாளர்கள் சவர்ணர்கள் என்பதும், பொறுப் பாட்சி பெறுவதற்கு நடத்தப்பட்டு வரும் கிளர்ச்சி ஒருவகையான ஹரிஜன – எதிர்ப்பு இயக்கம் என்பதுமே இதற்குக் காரணம். சவர்ணர்களின் நிலைமையை மேம்படுத்துவதே சமஸ்தான காங்கிரசின் ஒவ் வொரு தலைவரது நோக்கமாக இருந்து வருகிறது. தங்கள் முன் னேற்றத்திற்காக தாழ்த்தப்பட்ட இனத்தவரை யார் பலியிடுவது என்பதில் பிரதான சமூகங்களிடையே ஒருவிதப் போட்டி நிலவுவது போல் தோன்றுகிறது.
இத்தகையதுதான் இந்த சமஸ்தானத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் அவலநிலை, துயரநிலை, வேதனை நிலை. இங்கு எங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான வழிவகைகள் என்ன? இந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் மனமுவந்து தங்களது மேலான ஆலோ சனையைக் கூறி உதவ வேண்டுகிறேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் உண்மையான,
ஸ்ரீ நாராயணசுவாமி.
ஆலயப் பிரவேசத் திட்டத்தின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டரீதியாக உள்ள உரிமைகளை முடிவாகப் பறிப்பது தான் என்றால், அப்போது இந்த இயக்கம் ஆன்மீகமானதல்ல என்பது மட்டுமல்ல, மிகவும் விஷமத்தனமானதுமாகும் என்பதும் தெள்ளத் தெளிவு. எனவே, தாழ்த்தப்பட்ட மக்களை பின்வருமாறு எச்சரிப்பது நேர்மை உள்ளம் படைத்த அனைவரது உறுதியான கடமையாகும்: ‘காந்தியைப் பற்றி உஷாராக இருங்கள்!”
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 5)