தீண்டாதோருக்கு எதிராக இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்ட பிரச்சினைகள் எல்லாமே அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்பதற்கான கோரிக்கையினால் ஏற்பட்டதுதான். தீண்டாதோர் ஊர்வலமாகச் செல்ல விரும்பும்போது, அவர்களுக்கு இந்துக்களும் ஊர்வலம் செல்வது குறித்து எந்த ஆட்சேபணையுமில்லை. தீண்டாதோர் தங்க, வெள்ளி நகைகளை அணியும்போது அவர்கள், இந்துக்களும் தங்க, வெள்ளி நகைகளை அணிந்து கொண்டால் ஆட்சேபணை செய்ததில்லை.

ambedkar 241தீண்டாதோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பும்போது அவர்கள், இந்துக்கள் கல்வி பயில முழு உரிமை உண்டு என்பதற்கு எதிராக இல்லை. தீண்டாதோர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க விழைந்தால் இந்துக்களும் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, தண்ணீர் எடுப்பதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. இது போன்ற பல விவகாரங்களைச் சொல்லாம். அதற்கு முடிவே இல்லை. ஆனால், அது தேவையற்றது. விஷயம் மிக எளிமையானது; எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது.

தீண்டாதோர் எந்த உரிமையைக் கோரினாலும் அது அவர்களுக்கே மட்டும் உரியதல்ல என்பதோடு, அது, இந்துக்களின் சமத்துவத்திற்கான உரிமைக்கு மாறானதல்ல. அப்படியானால், ஏன் இந்துக்கள் இந்த சாதாரணமான சட்டபூர்வமான கோரிக்கையினை, வன்முறையைப் பயன்படுத்தித் தீண்டாதோருக்கு மறுக்க வேண்டும்? அவர்கள் ஏன் தங்கள் சட்ட விரோதமான செயலை சட்டப்பூர்வமானதாகக் கருத வேண்டும்? இந்துக்கள் தீண்டாதோருக்கு எதிராக இவ்விவகாரங்களில் செய்யும் அல்லது செய்யத் தவறும் செயல்களை சமூகக் கொடுமைகள் என்ற பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரில் அழைக்க இயலும்? இந்துக்களுடைய செயல்கள் அல்லது செய்யத் தவறியவை வெறும் சமத்துவமின்மை மட்டுமல்ல; வெறும் அவமரியாதை மட்டுமல்ல; அவை மனிதனுக்கு மனிதன் இழைத்த மிகவும் கொடிய மனிதாபிமானமற்ற செயல்களாகும்.

தீண்டாதோர் என்ற ஒரே காரணத்துக்காக, ஒரு மருத்துவர் ஒரு மனிதனுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது, தீண்டாதோர் வீடுகளை இந்துக்கள் கும்பலாகக் கூடி எரிப்பது, கிணறுகளிலே மனிதக் கழிவுகளைப் போடுவது போன்ற செயல்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் அல்ல என்றால், வேறு எந்தச் செயல்களை அவ்வாறு கூறுவது என்பது எனக்குள்ள வியப்பு. கேள்வியே இந்துக்களுக்கு ஏன் மனசாட்சியில்லை என்பதுதான்.

இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்தான் உள்ளது. மற்ற நாடுகளிலுள்ள வர்க்கங்கள், பொருளாதார மற்றும் சமூகக் காரணங்கள் அடிப்படையில் எழுந்தவை. அடிமைத் தனத்திற்கு மதத்தில் அடிப்படையில்லை. தீண்டாமை, இந்துக்களுக்குப் பொருளாதாரத் தன்மைகளைத் தரமுடியும்: தருகிறது என்றாலும், அது முக்கியமாக மதத்தினால் ஏற்பட்டதுதான். பொருளாதார, சமூக நன்மைகளைப் பொருத்தவரை, புனிதமானது என்று சொல்ல ஏதுமில்லை. அவை, காலம் மற்றும் சூழ்நிலைகளுக்கு இடம் தருகின்றன. இதுதான் அடிமை முறை மற்றும் நிலப் பிரபுத்துவம் அழிந்து போனதற்கும் தீண்டாமை அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும்.

மற்ற இரண்டும் கேள்விகளுக்கும் கூட இதுவேதான் பதில். ஒரு இந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான் எனில் அவனுடைய மதம் அவனுக்கு அவ்வாறு கட்டளையிட்டு இருப்பதால்தான். நிலைபெற்றுள்ள சமுதாயக் கட்டுக்கோப்பினை எதிர்த்து தீண்டாதோர் புரட்சி செய்யாத வண்ணம் இந்துக்கள் கொஞ்சமும் ஈவிரக்கமின்றியும் சட்ட விரோதமாகவும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் இந்து மதம். மதக்கட்டுப்பாடு தெய்வீகமானது; அதனால் புனிதமானது என்று சொல்வதோடு மட்டுமல்ல – இந்தக் கட்டுப்பாட்டினை எல்லா இயன்ற வழிகளிலும் பேணிக் காப்பது கடமை என்றும் விதித்திருப்பது தான்.

அவர்கள் மனிதாபிமானத்தின் குரலுக்குச் செவிசாய்ப்பதில்லை என்றால், அதற்குக் காரணம், அவர்கள் தீண்டாதோரை மனிதர்களாகவே கருதக் கூடாது என்று இந்து மதம் கட்டளை விடுத்திருப்பதுதான். தீண்டாதோரை அடிப்பது, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையிடுவது, தீயிட்டுக் கொளுத்துவது மற்றும் பல்வேறு கொடுமைகளை அவர்களுக்கு இழைப்பது ஆகிய செயல்களை அவர்கள் மனசாட்சியின் உறுத்தல் கொஞ்சமுமின்றி செய்வதற்குக் காரணம், இந்து மதம் அவர்களுக்கு இந்தச் சமூகக் கட்டுக்கோப்பினை கட்டிக் காக்க எவ்விதப் பாவத்தையும் செய்வது தவறல்ல என்று போதிப்பதுதான்.

பல இந்துக்கள், இவ்வாறு கூறுவதை, அவர்கள் மதத்திற்கு வேண்டுமென்றே இல்லாததைக் கூறுவது போல எண்ணக்கூடும். அவர்களுடைய இந்த எண்ணத்தைத் தவறானது என்று நிரூபிக்க சிறந்த வழி, இந்து சமூக விதிகளை நிறுவியவர் என்று அறியப்பட்டுள்ள மனுவின் சாஸ்திரத்திலுள்ள அத்தியாயம் மற்றும் வாசகங்களை எடுத்துக் காட்டுவதுதான். நான் கூறுவதை மறுக்கும் எவராயினும், மனு, தீண்டாமை, தீண்டாதோர், இந்துக்களின் கடமைகள் ஆகியவற்றைக் குறித்து வெளியிட்டுள்ள கீழ்க்கண்ட விதிகளை படித்தும் பார்க்கட்டும்:

  1. (பிரம்மத்தின்) வாய், தோள்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து தோன்றியவர்கள் சமுதாயத்திற்கு வெளியில் உள்ள எல்லா இனக்குழுக்களும், அவர்கள் மிலேச்சர்களின் (நாகரிக மற்றவர்களின்) மொழியை அல்லது ஆரியர்களின் மொழியைப் பேசினாலும், தஸ்யூக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மனு X,45;
  2. நன்கு அறியப்பட்ட மரங்களுக்கும், சுடுகாட்டிற்கும் அருகிலும் மலைகளின் மேலும் இந்த (இனக்குழுக்கள்), (சில குறிகளால் அறியப்பட்டனவாக) தங்களுக்கே உரியவையான தொழில்களைச் செய்துகொண்டு வசிக்கட்டும். மேற்படி X,50
  3. ஆனால், சண்டாளர்களும் ஷ்வாபகர்களும் வசிக்குமிடம் கிராமத்தில் வெளியே இருக்க வேண்டும். அவர்கள் அபபத்திரர்கள் ஆக்கப்படவேண்டும். அவர்களுடைய செல்வம் நாய்களும் கழுதைகளும் ஆகும். மேற்படி X,51
  4. அவர்களின் உடை, இறந்தவர்களின் துணிகளே(ஆகும்); தங்கள் உணவை உடைந்த தட்டுக்களிலிருந்து (அவர்கள் உண்பார்கள்); கரும் இரும்பே அவர்களின் அணிகலன் (ஆகும்); அவர்கள் எப்போதும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் திரிந்து கொண்டேயிருக்க வேண்டும். மேற்படி ,52
  5. சமயக் கடமைகளை நிறைவேற்றுபவன் அவர்களுடன் உடலுறவை நாடக்கூடாது; அவர்களுடைய தொடர்புகள் அவர்களுக்கிடையிலேயே இருக்கும்; அவர்களின் திருமணங்கள் அவர்களுக்குச் சமமானவர்களுடனேயே இருக்கும். மேற்படி X,53
  6. அவர்களின் உணவு அவர்களுக்கு (ஆரியர் தவிர) மற்றவர்களால், உடைந்த தட்டில் கொடுக்கப்படும்; இரவில் அவர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் நடந்து செல்லக்கூடாது. மேற்படி X,54
  7. பகலில் அவர்கள், மன்னனின் கட்டளைப்படி அடையாளக் குறிகளுடன் தங்கள் வேலைகளைச் செய்யச் செல்ல வேண்டும்; உறவினர் இல்லாத (மனிதர்களின்) சவங்களை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்; இது முடிவான விதியாகும். 10:65
  8. மன்னனின் உத்தரவுப்படி, அவர்கள் குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள்; அந்தக் குற்றவாளிகளின் துணிகள். படுக்கைகள், அணிகலன்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். 12:56
  9. மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டவன் கொல்லப்படுவான். விஷ்ணு புராணம் 5:43
  10. (ஒரு சண்டாளன் அல்லது வேறு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த) தீண்டத்தகாதவன், வேண்டுமென்றே, இருபிறப்பாளர்களாலேயே தீண்டத் தகுந்த (இருபிறப்புச் சாதியைச் சேர்ந்த) ஒருவணைத் தொட்டுத் தீட்டாக்கினால் அப்படி செய்தவன் கொல்லப்படுவான். விஷ்ணு 5:104


மனுவின் இந்த விதிகளைப் படிப்பவர்கள் எவரேனும், இந்து மதம் தான் தீண்டாமையை நிரந்தரமாக்கியது என்பதையும், தீண்டாதோரைப் பொருத்த அளவில் இந்துக்களின் மனசாட்சியற்ற தன்மைக்கும், சட்ட விரோத மனப்பான்மைக்கும் பொறுப்பு என்பதை மறுக்க இயலுமா? ஏற்கனவே முன் கண்ட இயல்களில் விவரித்துள்ள இந்துக்களின் செயல் அல்லது செயலின்மை மனுவின் இந்த 10 விதிகளுடன் ஒப்பிட்டு நோக்கினால், இந்துக்கள் மேற்கண்ட செயல்களை, இந்த விதிகளைப் பின்பற்றித்தான் செய்து வந்துள்ளார்கள் என்பது விளங்கும். ஒரு இந்து, தீண்டாதானைத் தீண்டாமல் இருப்பதற்கும், தீண்டாதோர் தீண்டினால் குற்றம் என்று கருதுவதும் மேற்கண்ட விதிகளில் 5 மற்றும் 10 விதிகளின் படிதான். இந்துக்கள் தீண்டாதோரை ஒதுக்கியே வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவது 3 ஆவது கட்டளையினால்தான். இந்துக்கள் தீண்டாதோரை, ஆடை அணிகலன்களை அணியக் கூடாது என்று கூறக் காரணம் 8 ஆவது கட்டளையைப் பின்பற்றித்தான். தீண்டாதோர் சொத்து, செல்வம் சேர்ப்பதை இந்துக்கள் சகிக்காது இருப்பதற்குக் காரணம் 3 ஆவது கட்டளைதான்.

உண்மையில் இதற்கும் மேல் இந்த விஷயத்தைக் கஷ்டப்பட்டு அலசத் தேவையில்லை. தீண்டாதோரின் இந்த துரதிர்ஷ்டத்திற்குக் காரணம், இந்து மதமும் அதன் போதனைகளும்தான் தலையாய பொறுப்பு என்பதற்கு மறுப்புக்கு இடமில்லை. அடிமை முறையைப் பொருத்து, புறச் சமயத்தையும் (பாகனிசம்) கிறித்துவ மதத்தையும், தீண்டாமையைப் பொருத்து இந்துத்துவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கிறித்துவ மதத்திற்கும் இந்து மதத்திற்குமிடையே உள்ள வித்தியாசம்; அதாவது மேற்கண்ட மதங்களால் இந்த நிறுவனங்கள் மீது ஏற்பட்ட தாக்கம், அதாவது கிறித்துவ மதம் எந்த அளவுக்கு அடிமைகளை உயர்த்த உதவியது என்பதும், இந்து மதம் எந்த அளவுக்கு தீண்டாதோரைத் தாழ்த்தியது என்பதும் விளங்கும். அடிமை முறையையும் தீண்டாமையையும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பும் எவரும் அவர்கள் ஒரு பெரிய வேடிக்கையான முரண்பாட்டை உணர்வதில்லை. சட்டப்படி ஒரு அடிமை சுதந்திரமானவனல்ல. ஆனால், சமூக ரீதியாக அவன் தன்னுடைய ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ள முடியும். சட்டப்படி ஒரு தீண்டாதான் சுதந்திர மனிதன். ஆனால் சமூக ரீதியாக அவன் தன்னுடைய ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ள உரிமையில்லாதவன்.

இது, மிகவும் கண்கூடான விந்தையான முரண்பாடு. இந்த முரண்பாட்டுக்கு என்ன விளக்கம்? இதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் உள்ளது. அதாவது, அடிமைகள் விஷயத்தில் மதம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. தீண்டாதோரைப் பொருத்த அளவில், மதம் அவர்களுக்கு எதிராக உள்ளது. ரோமானிய சட்டம் ஒரு அடிமையை, மனிதன் அல்ல என்று விளம்பியது. ஆனால், ரோமின் மதம் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்தது; எக்காரணம் கொண்டும் இந்தக் கோட்பாட்டிமைச் சமூக வாழ்வுக்கு இது விரிவுபடுத்துவதை மறுத்தது. அது, அடிமை, தோழமை கொள்ளத் தகுந்த ஒரு மனிதனாகக் கருதியது. இந்து மதம், தீண்டாதோனை ஒரு மனிதன் அல்ல என்று விளம்பியது. பாகனிசத்திற்கு மாறாக இந்து மதம், தீண்டாமைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமின்றி இதைச் சமூக வாழ்வுக்கும் விரிவுபடுத்தியது. இந்து மதம் தீண்டாதாரை மனிதன் என்றே ஏற்றுக் கொள்ளாததால் அவனை தோழமை கொள்ளத் தக்கவனாக அது கருத மறுத்தது.

ரோம மதம் அடிமையைச் சட்ட இழிவின் விளைவாக சமூக இழிவையும் அவன் அடைவதைத் தடுத்தது என்பது கேள்விக்கே இடமில்லாத விஷயம். அது அடிமையை இழிவுபடுத்துவதை 3 வித்தியாசமான வழிகளில் தடுத்தது. ஒரு வழி என்னவென்றால், அது ரோம அடிமை மிகவும் புனிதம் என்று கருதப்பட்ட இடத்தை அவன் பெறுவதற்கு அனுமதித்தது. அதாவது:

“உரோம மதம் அடிமையிடம் எதிர்ப்புணர்ச்சி காட்டியதில்லை. அது ஆலயங்களில் கதவுகளை அவனுக்கு மூடி விடவில்லை; அது தன் விழாக்களில் அவன் கலந்து கொள்ளாமல் ஒதுக்கி வைக்கவில்லை. அடிமைகள் சில விழாக்களில் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தால் அதே போல் மற்றவர்களும் விடுதலையான பெண்கள், ஆண்கள் ஆகியோர் போனாத்யா, வெஸ்டா, சேரஸ் போன்ற விழாக்களிலும் பெண்கள் “ஆரா மேக்சிமா”வில் நடைபெற்ற ஹெர்குலிஸ் விழா ஆகியவற்றிலும் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.

பண்டைய காலங்களில் ரோம தெய்வங்கள் எதற்காவது, அடிமைகளும் அதில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு மேற்கண்ட தெய்வங்களின் பாதுகாப்பு உள்ளது என்று கருதிக் கொள்ளலாம். அகஸ்டஸ், வெஸ்டா விழாவில் விடுவிக்கப்பட்ட பெண்கள் பூசாரிகளாக இருக்கலாம் என்று அனுமதித்தான். ரோமானியச் சட்டம், ஒரு அடிமையின் கல்லறையையும் புனிதமானதாகவே கருதியது. அவன் ஆத்மாவுக்கென்று ஒரு தனியான குறிப்பிட்ட சொர்க்கமோ, நரகமோ இருந்ததாக புராணங்கள் கூறவில்லை. ஜுவனல் கூட அடிமையின் ஆத்மாவும் உடலும் அவனுடைய எஜமானருடையது போன்றதுதான் என்று ஒப்புக் கொண்டது.”

இரண்டாவது வழி யாதெனில், ரோம மதம், ஒரு அடிமை நகரத் தலைவரிடம் தனக்குத் தன் எஜமான் இழைக்கும் கொடுமை குறித்துப் புகார் கூற அனுமதித்ததுடன் அந்தப் புகாரை விசாரிப்பது அவர் கடமை என்று கூறியது. ஆனால் ரோமானிய மதம் மேலும் ஒரு நல்ல நிவாரணத்தையும் அளித்தது. அதன்படி அவன் பீடத்தில் விழுந்து, தன்னை வேறு கருணையுள்ள எஜமானனிடம் விற்று விடக் கோரும் உரிமையே அது.

மூன்றாவது வழியாக ரோமானிய மதம், ரோமானிய சட்டம் ஒரு அடிமையின் ‘மனிதன் என்ற வகையில் புனிதமான ஆளுமைத் தன்மையை’ அழிப்பதைத் தடை செய்தது. அவனை மனிதர்களோடு உறவாடவும், நட்பு கொள்ளவும் தகுதியற்றவனாக அது ஆக்கவில்லை. ரோமானிய அடிமைக்கு இதுதான், அவனைக் காத்த மிகப் பெரிய கருணையாகும். ரோமானிய சமுதாயத்திற்கு ஒரு அடிமையிடமிருந்து காய்கறிகள் பால், வெண்ணெய் அல்லது தண்ணீர் அல்லது பழரசம் வாங்குவதற்கோ, அவர்களைத் தொடுவதற்கோ, அவர்களை வீடுகளுக்குள் செல்வதற்கோ, அவர்களுடன் பிரயாணம் செய்வதற்கோ ஆட்சேபணை இருந்திருக்குமானால் அவனுடைய எஜமானர்களால் அவனை அரைக் காட்டு மிராண்டித் தனத்திலிருந்து நாகரிக மனிதனாக மாற்றுவது இயன்றிருக்குமா? நிச்சயமாக முடியாது.

ஏனென்றால் ஒரு ரோமானிய அடிமை தீண்டப்படத் தகாதவனாக கருதப்படாததால் தான், அவனுடைய எஜமானனால் அவனுக்கு வேண்டிய பயிற்சி அளித்து உயர்த்த முடிந்தது. நாம் மீண்டும் அதே முடிவுக்கு வருவோம். அதாவது, ஒரு அடிமையைக் காப்பாற்றியது என்னவென்றால் அவனுடைய ஆளுமைத் தன்மை அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இங்கே ஒரு தீண்டாதானின் ஆளுமைத் தன்மையை இந்து சமூகம் அங்கீகரிக்கவில்லை. தீண்டாதவனைத் தூய்மையற்றவனாகக் கருதி அவனை மனிதர்களோடு உறவு கொள்ளவும், பொதுவான தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளவும் தகுதியற்றவனாகவும் அது பாவித்தது.

ஒரு அடிமையைச் சமூகத்தினிடமிருந்து பிரிக்கக் கூடிய சமூக அல்லது மத ரீதியான பெரிய இடைவெளி ஏதுமில்லை. வெளித் தோற்றத்திற்கு அவனுக்கும் சுதந்திரமான மனிதனுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. அவனுடைய நிறமோ உடையோ இதைக் காட்டும் வகையில் இல்லை; பிற சுதந்திர மனிதன் கண்டு களித்த அதே விளையாட்டுகளை அவனும் கண்டு களித்தான்: அவன் நகர வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். அரசுப் பணிகளிலும் அவன் பணியிடம் பெற்றான்; அவன் பிறரைப் போலவே வியாபாரம் மற்றும் வாணிபங்களைச் செய்யும் வாய்ப்பைப் பெற்றான். சட்டத்தின் கண்களில் உள்ள உரிமைகளை விடத் தனி மனிதனுக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயங்கள் பெரிதாகத் தெரிகிறது.

ஒரு அடிமைக்கும் ஒரு சுதந்திர மனிதனுக்கும் இடையில் சமூகத்தில் தடைச் சுவர் சிறிதும் இல்லை. ஒரு அடிமைக்கும் சுதந்திரமான பெண்ணுக்கும், ஒரு சுதந்திரமான மனிதனுக்கும் அடிமைப் பெண்ணுக்கும் திருமணம் என்பது சர்வ சாதாரணமாக நடந்தது. அடிமை என்ற அந்தஸ்து அந்த அடிமைக்குள் இருந்த மனிதனைப் பாதிக்கவில்லை. அவன் தீண்டத்தக்கவன். ஏன், மதிக்கத் தக்கவனாகக் கூட இருந்தான். இவை எல்லாம் ரோமானிய மதம் அடிமையிடம் காட்டிய அணுகுமுறையின் காரணமாக இருந்தவை.

கிறித்தவ மதம் அடிமைகளிடம் காட்டிய அணுகுமுறையை முழுமையாக விவரிக்க இங்கு இடமில்லை. ஆனால், பாகனிசத்திற்கு மாறுபட்டது. அமெரிக்காவில் அடிமை முறை இருந்தபோது, அங்கிருந்த கிறித்துவப் பாதிரியார்கள் அடிமைகளை அவர்கள் அடிமைகளாக இருக்கும்போது கிறித்துவ மதத்திற்கு மாற்றினால் அது கிறித்துவ மதத்திற்கு இழிவானது என்று கருதியதால் அவர்கள் அடிமைகளை கிறித்தவர்களாக்கவில்லை என்பது பலருக்குத் தெரியாது. அவர்களுடைய கருத்துப்படி, ஒரு கிறித்தவர் இன்னொரு கிறித்தவனை அடிமையாக வைத்திருக்க இயலாது. ஒரு கிறித்தவன் மற்றொரு கிறித்தவனிடம் நட்பு பாராட்டியாக வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சட்டமும் மதமும் தான் மனிதர்களின் நடத்தையை நிர்ணயிக்கும் இரண்டு சக்திகள் ஆகும். சில சமயங்களில் அவை, ஒன்றுக்கொன்று உதவிகரமாக இயங்குகின்றன. சில நேரங்களில் அவை ஒன்றுக்கொன்று எல்லையை மீறாத வண்ணம் பார்த்துக் கொண்டு சமநிலைப்படுத்துகின்றன. இந்த இரண்டு ஆற்றல்களில் சட்டம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டது. ஆனால் மதம் அவ்வாறல்ல. சட்டம், நியாயம் மற்றும் சமத்துவத்திற்கு விரோதமாக இருக்கக்கூடும்.

ஆனால், மதம் ஒரு சட்டத்தால் உருவாக்கப்படும் அநீதியை அது களையலாம். இது ரோம் நாட்டில் அடிமைகளைப் பொருத்த விஷயத்தில் நடந்தது. ஆகவே மதம் மனிதனை மேம்படுத்தக் கூடியது, அவனைக் கீழ்நிலைப்படுத்தாது என்று நம்பப்படுகிறது. இதற்கு இந்துமதம் விதிவிலக்கானது. அது தீண்டாதோரை மனித நிலைக்குக் கீழாக வைத்தது. அது இந்துவை மனிதாபிமானம் அற்றவனாக்கியது. இவ்வாறு நிலைபெற்றுவிட்ட, மனித நிலைக்குக் கீழான, மனிதாபிமானமற்ற நிலையிலிருந்து இரு பிரிவினருமே தப்பிக்க இயலாது.

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9)

Pin It