1. ரோமாபுரியில் அடிமைத்தனம் 2. இங்கிலாந்தில் நிலப்பிரத்துவம் 3. யூதர்களும் அடிமைத்தனமும் 4. நீக்ரோக்களும் அடிமைத்தனமும்

சமூகச் சமத்துவமின்மை என்பது இந்துக்களிடையே மட்டுந்தான் உள்ளது என்பதன்று. இந்த வழக்கம் ஏனைய நாடுகளிலும் வழக்கில் இருந்தது என்பதோடல்லாமல், சமூகத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர், சுதந்திரமுள்ளவர்கள், சுதந்திரமில்லாதவர்கள், மதிப்பிற்குரியவர்கள், வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பொறுப்பாக இருந்தது.

ambedkar 243பண்டையக் காலத்திலும், தற்காலத்திலும் இந்தியாவிலுள்ள தீண்டப்படாதோரின் நிலை மற்றும் சமூக அந்தஸ்தையும், ஏனைய நாடுகளில் நிலவிய சுதந்திரமற்றோர் மற்றும் வெறுத்து ஒதுக்கப்பட்டோரின் நிலை மற்றும் சமூக அந்தஸ்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையானதாகும். இந்த இரு பிரிவினருக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை நுணுக்கமாகப் புரிந்து கொள்வதற்காக, ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன் இந்த இரு பிரிவினரையும் பற்றிய வரலாற்று வழக்காறுகளை அறிந்து கொள்வது அவசியமாகும். எனினும் உலகிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய மக்கள் அனைவரையும் ஆய்ந்துரைப்பது இயலாதது மட்டுமல்ல, தேவையற்றதுமாகும். சுட்டிக்காட்டுவதற்காக ஒரு சில குறிப்பான வழக்குகளை மட்டுமே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும்போது, மூன்று வினாக்கள் நம் நினைவுக்கு வருகின்றன. தீண்டாமை என்பது ஏன் மறைந்து ஒழியவில்லை? தீண்டப்படாதவருக்கு எதிராக இந்துக்கள் பின்பற்றும் சட்ட விரோதமான செயல்களை ஏன் அவர்கள் சட்ட பூர்வமானவை என்று கருதுகின்றனர்? தீண்டப்படாதவர்கள் சம்பந்தமான விவகாரங்களில், ஓர் இந்து எனப்படுவோர் மனச்சான்று என்பதில்லாமல் நடந்து கொள்வதேன்?

தீண்டப்படாதவர்களைப் போன்று கீழான மற்றும் வெறுக்கப்பட்ட நிலைகளில் இருந்த பிரிவினரான மக்கள், பிற சமூக மக்களிடையேயும் ஒரு காலத்தில் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, அத்தகைய மக்கள் ஒரு காலத்தில் ரோமானிய நாட்டில் இருந்துள்ளனர். ரோமானிய மக்கள் பின்வரும் ஐந்து வகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். 1. உயர் குடியுரிமையாளர்கள் (பேட்ரிசியன்ஸ்) 2. பொதுமக்களைச் சார்ந்த இழி பிறப்பினர் (பிளிபியன்) 3. பிறரைச் சார்ந்திருப்போர் (கிளியன்ட்ஸ்) 4. அடிமைகள் 5. சுதந்திரமானவர்கள்.

பேட்ரிசியன்கள் ஆளும் வர்க்கத்தினர். எல்லா வகைகளிலும் இவர்கள் மிகுந்த உரிமை படைத்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் இவர்களின் அடியொற்றி வாழ்ந்த நிலையினர். பிலிபியன் மற்றும் கிளியன்டுகள் என்போர் போர்களிலே அழிக்கப்பட்டவர்கள். ஆளும் வர்க்கத்தினரான பேட்ரிசியன் குடும்பத்தலைவர்களின் பாதுகாப்பைப் பெற்று, அவர்களின் அடிவருடிகளாகப் பணிபுரிய உடன்பட்ட, வெளியிடங்களிலிருந்து வந்தேறியவர்கள் ‘கிளியன்ட்ஸ்’ எனப்பட்டனர். தனிப்பட்ட எவருக்கும் அடிபணியாதவர்களாக ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்களிடம் தங்களை ஒப்படைத்துக் கொண்டு, அவர்களின் நிலக் குத்தகைக் காரர்களாக இருந்தவர்கள் பிளிபியன்ஸ் எனப்பட்டனர். இந்தப் பிளிபியன்கள், அசையும் மற்றும் அசியாச் சொத்துக்களை வைத்திருக்கவும், அவற்றை ரோம அரசு முத்திரையிட்ட தாள்கள் மூலம் விற்கவும், அவற்றிற்குத் தீர்ப்பாயங்களின் பாதுகாப்பு பெறவும் உரிமை பெற்றிருந்தனர்.

ஆனால், இவர்களுக்கு நகர நிர்வாகத்தில் பங்கு பெறும் உரிமை எதுவும் இல்லை. இவர்கள் அரைக் குடியுரிமை பெற்ற குடிமக்கள். நகரத்தின் மத விவகாரங்களில் பிளிபியன்கள் பங்கு பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பேட்ரிசியன்களுக்கும் பிளிபியன்களுக்கும் இடையே திருமண உறவுகள் என்ற கேள்விக்கே இடமில்லை என்ற நிலை இருந்தது. கிளியன்ட்கள் தங்களுடைய ஆதரவுக்கும் ஜீவனத்திற்கும் பேட்ரிசியக் காப்பாளர்களையே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. இந்தப் பேட்ரிசியக்காப்பாளர்கள், கிளியன்ட்கள் அவர்களின் மனைவி, மக்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தேவைக்கான அனைத்தையும் தரவேண்டியிருந்தது. இந்த உறவு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்தது.

அதாவது ஒரு கிளியண்ட்க் கவனித்து வந்த பேட்ரிசியன் இறந்து விட்டால், அந்தப் பொறுப்பை இறந்துவிட்ட பேட்ரிசியனின் மகன் ஏற்று வந்தான். கிளியன்டைட் தன்னுடைய ஜீவனத்திற்காக மட்டுமின்றிச், சட்டப் பாதுகாப்புக்கும் பேட்ரிசியக்காப்பாளரையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. குடியுரிமையுடையவராக இல்லாத காரணத்தால், கிளியண்ட்கள், பேட்ரிசியப் பாதுகாப்பாளரையே சார்ந்துருக்க வேண்டியதாயிற்று. அதோடு, குடியுரிமை இல்லாததால் கிளியன்ட் எவர்மீதும் வழக்கு தொடர முடியாது. பேட்ரிசியக் காப்பாளர் தான், தன் பொறுப்பில் உள்ள கிளியண்ட்டுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நியாயம் பெறுவதற்காக அவர் சார்பில் தீர்ப்பாயங்களில் வழக்கு தொடுத்து நியாயம் பெறவேண்டும்.

1) அடிமைகளைப் பார்த்தோமானால், அவர்கள் இலட்சக்கணக்கில் இருந்தனர். நிலவுடைமையாளர், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கிலும் கூட அடிமைகளை வைத்திருந்தார். ஏழைகளாக இருப்பவர்கள் தான், நிறைய அடிமைகளை வைத்துக் கொள்ள முடியாதவர்களாக, இருந்தனர். மற்ற பொருள்களை வைத்திருப்பது போலவே அடிமைகளைப் பெற்றிருப்பதும் உரிமைப் பொருளாகமட்டும் இருந்தது. சட்டத்தின் கண்களில் அவர்கள் மனிதர்களாகவே கருதப்படவில்லையாதலால், அவர்களுக்கு எவ்வித உரிமையும் தரப்படவில்லை. ஒரு சில மனிதாபிமானம் கொண்ட எஜமானர்கள் மட்டுமே இவர்களை அன்பாக நடத்தினர். மற்றவகையில், பொதுவாக இந்த அடிமைகள், மிகுந்த கொடூரமாக நடத்தப்பட்டனர்.

“உணவு உண்ணும்போது ஓர் அடிமை தும்மினாலோ. இருமினாலோ அல்லது தன் கையிலிருந்து ஒரு சாவிக் கொத்தைக் கீழே தவறவிட்டு அதனால் சத்தம் ஏற்பட்டாலோ எங்களுக்குக் கடும்கோபம் ஏற்படும்...... அவ்வப்போது, நாங்கள் அவனைக் கடுமையாகத் தாக்கிக் கை, கால்களையோ பற்களையோ உடைத்து விடுவதுண்டு.” என்று செனக்கா சொன்னார்.

பணக்கார ரோமானியர், தம்முடைய அடிமை கவனக்குறைவாக ஏதாவது செய்தால், அந்த அடிமையைக் குளத்தில் வீசி எறிந்து லாம்பிரே என்னும் மீனுக்கு இரையாக்கிவிடுவதும் வழக்கம். எஜமானர்களின் அதிருப்திக்கு ஆளாகும் அடிமைகள் நிலத்தடியிலிருந்த சிறைவைக்கப்படுவது சர்வ சாதாரணமாகும். பகல் வேளைகளில் அவர்கள், கனமான இரும்புச் சங்கிலிகளால் பிணிக்கப்பட்ட நிலையில் வேலை செய்ய வேண்டும். பல அடிமைகள் பழுக்கக்காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் சூடு போடப்பட்டனர். அடிமைகள் வேலை செய்த ஆலையொன்றின் நிலையைப் பற்றி ரோமானிய நூலாசிரியர் ஒருவர் பின்வருமாறு எழுதுகிறார்: “ஐயோ கடவுளே, எத்தகைய பாவப்பட்ட, குறுகிப்போன மனிதர்கள் இவர்கள்! கட்டையால் அடிக்கப்பட்டு வரிவரியாகத் தழும்பேறிய வெள்ளைத் தோல்கள்…… அவர்கள் கிழிந்த உள்ளாடையின் தொங்கும் இழைகள்… கூன் விழுந்தது போல முன்பக்கம் வளைந்து, மழுங்கச் சிரைத்த தலையினராய், கால்கள் சங்கிலியால் பிணிக்கப்பட்டு, நெருப்பால் சிதைவுற்ற உடம்புடன் தீக் கொழுந்துகளால் இமைகள் கருகிப்போய் தூசிதும்புகளால் மூடப்பட்டவர்களாய் இருந்தனர்.”(சைய்ன்போஸ், பண்டைய நாகரிக வரலாறு)

ஆங்கிலேயர் சமூகத்திலும் ஒரு காலத்தில் இத்தகைய அடிமைகள் இருந்தனர். நார்மானியர்கள் இங்கிலாந்தை வெற்றி கொண்டபோது எழுதப்பட்ட டோம்ஸ்டே புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பினோமானால் இங்கிலாந்து நாட்டின் அப்போதைய சமூக நிலையை அறியலாம்.

 இந்த டோம்ஸ்டே புத்தகம், இங்கிலாந்து நாட்டின் சமூக ஆய்வுப் புத்தகமாக, 1086-இல் வில்லியம் இங்கிலாந்தை வெற்றி கொண்டபோது பல்வேறு வகையாக நிலவிய நிலக்குத்தகையாளர்கள் பற்றிய குறிப்புகளுடன் எழுதப்பட்டதாகும். அந்த நூல், மக்கள் பின்வரும் வகையினராகப் பிரிக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகின்றது:

 1) பிரபுகளுக்கு அடுத்த நிலையில் இருந்த இடைநிலை மக்கள் (ஜெண்ட்ரி) மற்றும் மதகுருமார்கள் (கிளர்ஜி) உள்ளிட்ட உயர்நிலைக் குத்தகைக்காரர்கள் – 1,400 இவர்களுக்கு உட்பட்ட குத்தகைக்காரர்கள் 7,900

9300

 2) பெருநிலக்கிழார்கள் குறு நிலக்கிழார்கள் உள்ளிட்ட சுதந்திரமனிதர்கள் 12,000 குடியானவர்கள் 32,000 44,000
 3) அரை சுதந்திரமுள்ளவர்கள் சுதந்திரமில்லாதவர்கள் உள்ளிட்ட அடிமைகளாக இல்லாமல் அடிமைநிலையிலுள்ள குடியானவர் 1,69,000 பண்னைக் கூலிக் குடியாட்கள் 90,000

2,59,000

 4) அடிமைகள் உள்ளிட்ட   25,000

2) சைய்ன்போஸ், பண்டைய நாகரிக வரலாறு மொத்தமிருந்த இந்த 3,37,000 பேர்களில், 2,84,000 பேர்கள் சுதந்திரமில்லாதவர்கள் அல்லது அடிமைகளாவர். இவை, மதம் அல்லது இனம் தொடர்பில்லாத அடிமைத்தனத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். இனம் அல்லது மதம் காரணமாக அமைந்த அடிமைத்தனத்திற்கும் வரலாற்றில் எடுத்துக்காட்டுகள் இல்லாமலில்லை. யூதர்கள் இதற்கு முதன்மை எடுத்துக்காட்டாக உள்ளனர். இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று கருதப்பட்டதால் யூதர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.

மத்திய காலத்தில் பெரும்பான்மை ஐரோப்பிய நகரங்களில், யூதர்கள் நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நகரின் ஒதுக்குப்புறமான தனியிடங்களில் வாழும்படி வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் வாழ்ந்த இடம் “கெட்டோ” எனப்படும் சேரிப்பகுதியாகும். 1050-இல் ஆஸ்தி ரேலியாவில் கொயான்ஸா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில், “கிறித்தவர் எவரும் யூதர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கவோ சேர்ந்து உணவு உண்ணவோ கூடாது. இதை மீறி நடந்து கொண்டால், அவ்வாறு நடந்து கொண்டவர்கள் ஏழு நாள்களுக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்; தவறினால் அந்தஸ்துள்ள குடிமக்களாயின் ஒரு ஆண்டுக்குச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்: கீழ் நிலையில் உள்ளவர்களாயின் நூறு கசையடிகள் தண்டனை பெறவேண்டும்” என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

1388-இல் பாலன்சிலா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில், “யூதர்களுக்கும், மூர்களுக்கும் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் கிறித்தவர்கள் குடியிருக்கக்கூடாது. அவ்வாறு குடியிருப்பவர்கள் இந்தத் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் வெறியேறி வந்துவிட வேண்டும்; தவறினால் சபையின் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும்” என்று தீர்மானிக்கப்பட்டது. மத்திய காலங்களில் யூதர்கள் பொதுவான சமுதாயக் குளியலறைகளையே பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

கிறித்தவர்கள் குளிப்பதற்குரிய நதிகளில், யூதர்கள் குளிக்க அனுமதிக்கப்படாததால் மேற்குறித்த பொதுக் குளியலறைகளை யூதர் எவரும் வேண்டாம் என்று தவிர்க்க முடியாததானது. பதினான்காம் நூற்றாண்டில் ஆகர்ஸ் நகரிலிருந்த யூதர்கள், பல்வேறு கடினமான நிபந்தனைகளின் பேரில் நகரில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவற்றில் ஒன்று, அவர்கள், கிறித்தவர்கள் குளிப்பதற்குரிய மெய்ன் நதியில் குளிக்கக் கூடாது என்பதாகும். யூதர்களுக்கென்று அரசு சில வகை வரிகளையும் விதித்தது. அவை மூன்று வகைப்பட்டவை. தனிப்பட்ட யூதர்கள் மீது சில உரிமைகள், சலுகைகளுக்காக விதிக்கப்பட்ட வரி, தண்டம், தீர்வை முதலியன. இந்த வரியைச் செலுத்த வேண்டிய வயது யூத ஆண், பெண்களுக்கு இடத்திற்கு இடம் வேறுபட்டது. எப்படியும் இளைய வயதிலேயே இந்த வரி விதிக்கப்பட்டது. 1273-இல் இங்கிலாந்தில் இருந்தது போலவே ஸ்பெயின் நாட்டில் பத்து வயதுக்கு மேற்பட்ட யூதர்கள் யாவரும் வரி செலுத்த வேண்டும். அமைதிக் காலங்களில் படைவீரர்கள் தங்குவதற்காக யூதர் விடுதிகளைப் பயன்படுத்த எடுத்துக் கொள்வது அடிக்கடி நிகழும் சுரண்டலாக இருந்தது.

மத்திய காலங்களில் யூதர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பலவகையான தீர்வையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டுவது இயலாததாகும். இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல், 1215-இல் மூன்றாம் போப் இன்னொசெண்ட், தம் காலத்தில் ஆங்கிலேயர்களிடமிருந்து யூதர்களை வேறுபடுத்திக் காட்ட ஏதுவாக, யூதர்கள் தங்களுடைய மேலங்கியில் நன்றாகத் தெரியும்படி அடையாள அட்டை பதிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். யூதர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அடையாள அட்டைகளின் அளவு, நிறம், தன்மை ஆகியவற்றை வரையறுத்துச் சொல்வதை லேட்டனன் கவுன்சில் தவிர்த்து, மாநில மற்றும் உள்ளூர் ஆளுநர்களிடம் விட்டுவிட்டது. ஆளுநர்களும், மாநில அரசுகளும் தாங்கள் விரும்புகிற மாதிரியில் இந்த அடையாள அட்டைகளை அமைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டது. இதனால் ஏற்பட்ட பலவகையான மாற்றங்கள் காரணமாகச் சில போது இந்த அடையாள அட்டைகளின் அளவும், வடிவமும் அடையாளங்காண முடியாதவாறு வழக்கற்றுப்போனதால், யூதர்கள் இவற்றை அணியாமலேயே சமாளித்துக் கொண்டனர். இந்த அடையாள அட்டைகள் ஆடைகளுக்குள் மறைந்து போக நேர்ந்ததால், 1525-இல் ஏழாவது போப் கிளமெண்ட், அடையாள அட்டைகளுக்குப் பதில் தலையில் மெல்லிய மஞ்சள்நிறக் குல்லாய் அணிய ஆணையிட்டார்.

தீண்டப்படாதோரின் நிலையை நினைக்கும் போது, இங்கிலாந்தில் கத்தோலிக்கருக்கு இருந்த நிலையே நினைவுக்கு வருகிறது. கத்தோலிக்கர்கள் பல வழிகளிலும் துன்பத்திற்கு ஆளானார்கள். அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

3) கத்தோலிக்கத் திருமணங்கள் அப்போது வழக்கத்திலிருந்த சட்டங்களின்படிச் செல்லத் தக்கவையல்ல என்று விளம்பப்பட்டமையால், கத்தோலிக்கப் பாதிரிமார்களால் நடத்தி வைக்கப்பட்ட கத்தோலிக்கத் திருமணங்கள் அல்லது கத்தோலிக்கர் திருமணங்கள் சட்டப்படி செல்லாதவை என்பதோடு, ஏதேனும் ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொண்ட இருவரில் ஒருவர், மற்றவரைப் பிரிந்து கைவிடப்பட்ட நிலையில் சபையினரிடமிருந்தோ அல்லது மணமகன் அல்லது மணமகள் நாட்டு சட்டத்தினாலோ அவர்களுக்குப் பரிகாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதோடு, இந்தத் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரி நாடு கடத்தப்படலாம் அல்லது சிறைப்படுத்தல்படலாம் என்றிருந்தது.

4) கத்தோலிக்கப் பாதிரிமார்களின் ஜீவனத்திற்காக நிறுவப்பட்ட நிதிகள், பணம் முதலியவையும் கத்தோலிக்க வழிபாட்டுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு ஆகியவையும் மூட நம்பிக்கைகளுக்காகச் செய்யப்பட்டவை என்ற கணக்கில் கொள்ளப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்படலாம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் சட்ட வழிகளின் மூலம் மீண்டும் திரும்பப் பெற முடியாதவை. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்குப் பல உதாரணங்கள் உண்டு.

5) இங்கிலாந்தின் மேன்மைதங்கிய மன்னரின் ராணுவம் மற்றும் கடற்படையில் பணிபுரியும் கத்தோலிக்கர்கள் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஏனைய விழாநாள்களிலும் அவர்களுக்குரிய தேவாலயங்களுக்குச் செல்லாமல் புரோடெஸ்டேண்ட் தேவாலயங்களுக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்படலாம். ஏனென்றால், இங்கிலாந்து முழுவதும் ஒன்றுபட்டிருந்து எதிரியைத் தோற்கடிக்க வேண்டிய தருணத்தில் இவ்வாறு கத்தோலிக்கர்கள் அவர்களுக்கென்று உள்ள ஆலயத்திற்குச் செல்வது, விசுவாசமும் வீரமும் நிறைந்த மக்களுக்கு மனவருத்ததை உண்டாக்கி அதனால் குறைபட்டுக் கொள்ள நேரும்.

6) பதின்மூன்றாவது இரண்டாம் சார்லஸ் என்னும் மன்னன் கொண்டுவந்த ‘கார்ப்பரேஷன் சட்டத்தின் படி’ நகர மற்றும் மாநகர அலுவலகங்களினின்றும் கத்தோலிக்கர்கள் விலக்கி வைக்கப்பட்டனர்.

7) இருபத்தைந்தாவது இரண்டாம் சார்லஸ் கொண்டுவந்த ‘டெஸ்ட்’ சட்டத்தின்படி யூதர்கள் ஆட்சி மற்றும் இராணுவப் பணிகளிலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர்.

8) ஏழாவது மற்றும் எட்டாவது மூன்றாம் வில்லியம் கொண்டு வந்த சட்டப்படி, ரோமன் கத்தோலிக்கர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

9) முப்பதாவது இரண்டாம் சார்லஸ் கொண்டுவந்த சட்டப்படி, ரோமன் கத்தோலிக்கப் பெருங்குடியினர், நாடாளுமன்றத்தில் பல தலைமுறைகளாக இருந்து வந்த இடங்களில் நிரப்பப்படாமல் தடுக்கப்பட்டனர்.

10) இதே சட்டத்தின்படி, கத்தோலிக்கர்கள் ‘காமன்ஸ்’ சபையில் அமர்வது தடை செய்யப்பட்டது.

11) பல்வேறு சட்டங்களின்படி, ரோமன் கத்தோலிக்கர்கள் திருச் சபைகளுக்கு நன்கொடை அளிப்பது தடுக்கப்பட்டது. சொத்துரிமையின் பாற்பட்ட இந்த உரிமை யூதர்களுக்குக்கூட அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், கத்தோலிக்கர்களுக்கு மறுக்கப்பட்டது.

12) மாட்சிமை தங்கிய மன்னரின் கடற்படை மற்றும் தரைப்படையில் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் இருந்தாலும், அவர்களுக்கு மத சம்பந்தப்பட்ட வசதிகள் அளிக்கப்படாதது மட்டுமின்றி அவர்களுக்குக் கடுந்தண்டனையும் தண்டமும், இங்கிலாந்து நாட்டின் அதிகார பூர்வமான திருச்சபையின் சடங்குகளில் கலந்து கொள்ள மறுத்ததற்காக வழங்கப்பட்டது. போர் விதிகளின் 1-ஆவது பிரிவின்படி தெய்வீக ஆராதனை மற்றும் பிரசங்கங்களில் கலந்து கொள்ளாத ஒரு போர் வீரனுக்கு, அது முதலாவது முறையாக இருப்பின் ஒரு ஷில்லிங் அபராதமும் இரண்டாவது அதற்கு மேல் குற்றமாக இருப்பின் ‘ஒரு ஷில்லிங் அபராதத்துடன் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. அதே சட்டத்தின் 2-ஆவது பிரிவு உட்பிரிவு 5-இன் கீழ் தன்னுடைய மேலதிகாரியின் சட்டப்படியான உத்திரவுக்கு ஒரு படைவீரன் கீழ்ப்படிய மறுப்பானாகில் (அதாவது தெய்வீக ஆராதனை மற்றும் பிரசங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள மேலதிகாரி சட்டப்படி இடும் உத்திரவு) அவன் மரண தண்டனை அல்லது ராணுவ நீதிமன்றம் அளிக்கும் தண்டனைக்கு ஆட்பட வேண்டும்.

13) பொதுவில் மாட்சிமை தங்கிய மன்னரின் ரோமன் கத்தோலிக்கக் குடிமக்கள் அதிகாரபூர்வ திருச்சபைக்குக் காணிக்கை அளிப்பதோடு தங்களுடைய திருச்சபைகளுக்கும் அவர்கள் காணிக்கை அளிக்க வேண்டும்; அதாவது அவர்கள் இரண்டு முறை மத சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்காக செலவிட வேண்டும். உண்மைதான், எவ்வாறிருப்பினும் அவர்கள் இது குறித்துப் புகார் ஏதும் செய்வதில்லை. எனினும் அவர்களுக்குள்ள கடுமையான மனக்குறைவு யாதெனில் அவர்களுடைய மத நிறுவனங்கள் அவர்களினின்றும் மாறுபட்ட புரொடஸ்டென்டுகள் (சீர்திருத்த) அதிருப்தியாளர்களைப் போல அங்கீகரிக்கப்படவில்லையே என்பதுதான்.

14) மருத்துவமனைகள், பணியிடங்கள், மற்றும் உள்ள பொது நிறுவனங்களில் குழுக் கூட்டங்களில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு அவர்களுடைய பாதிரி அல்லது பிரசங்கிகள் கலந்து கொள்ளுவது கூட மறுக்கப்பட்டது என்பதோடு ரோமன் கத்தோலிக்கப் பெற்றோரது கண்ணெதிரிலேயே புரொடஸ்டெண்டுகள் பள்ளிகளில் பலவந்தமாகத் தள்ளப்பட்டார்கள்’

 கத்தோலிக்கர்களைப் போலவே தீண்டப்படாதோர் என்று ஒதுக்கப்பட்ட மக்களும் பலவிதத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

II

(கீழ்க்கண்ட கட்டுரை எஸ்.எஸ். ரேகையிடமிருந்து பெறப்பட்டது. நீக்ரோக்களும் அடிமைத்தனமும், இந்த இயலுக்குரிய திட்டத்தின்படியான பொருள் மேலே கண்ட விவாதத்தில் ஆய்வு செய்யப்படாததால் இங்கே இணைக்கப்படுகிறது - பதிப்பாசிரியர்).

விதி, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுதந்திரமான, நாகரிமான ஆசிய மற்றும் ஐரோப்பாக் கண்ட மக்களுக்கு வேண்டிய அடிமைகளை உற்பத்தி செய்யும் நாற்றங்காலாக என்றென்றைக்கும் இருக்க வேண்டும் என்று சபித்து விட்டிருக்கிறது போலும். அமெரிக்கா நாட்டிற்கு அடிமையாக நீக்ரோவை அறிமுகப்படுத்துவதற்கு வெகு காலத்துக்கு முன்பே, அரபு நாட்டார் அவனை அடிமையாக ஆசியாக் கண்டத்திற்கு இறக்குமதி செய்தார்கள். இது எவ்வாறிருந்தபோதிலும், அமெரிக்காவிலும் ஐரோப்பிய காலனிகளிலும் நீக்ரோக்களின் அடிமைத்தனம் என்பது ஒரு துக்ககரமான வரலாறு ஆனதால் அரபு நாட்டிற்கு அவர்கள் அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்டதையே மக்கள் மறக்கும் படியாகிவிட்டது. ஏனென்றால், அமெரிக்காவில் ஐரோப்பியர்களால் செய்யப்பட்ட நீக்ரோ அடிமைத்தனம் என்பது மிகவும் மோசமான ஒன்றாக இருந்தது. இந்த வியாபாரம் 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொடர்ந்து நடந்தது.

1492-இல் கொலம்பஸ், முதன் முதலாக பஹாமா தீவில் கால் வைத்த பின் ஐம்பது ஆண்டுகளுக்குள் ஸ்பெயின் நாட்டவர் மெக்சிகோ முதல் பெரு வழியாக உருகுவே வரை மேற்கு இந்தியத் தீவுகள் உள்பட ஒரு பெரிய பகுதியைப்பிடித்து ஆக்ரமித்தார்கள். 1531-இல் போர்த்துக் கீசியர்கள் பிரேசிலைக் காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தினார்கள். புதிதாக வந்த ஸ்பானியர்களும் போர்த்துக் கீசியர்களும் தாங்கள் ஆக்ரமித்த பகுதிகளின் பெரும் இயற்கை வளங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதாவது முக்கிய பகுதிகளில் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்களையும், புகையிலை, இண்டிகோ மற்றும் சர்க்கரைத் தோட்டங்களைப் பிற பகுதிகளிலும் அமைத்தார்கள், ஆனால், இந்த வேலைகளைச் செய்வதற்கு வேண்டிய தொழிலாளர்கள் அவர்களுக்குக் கிடைப்பது வெகு விரைவில் மிகவும் சிரமமாயிற்று, தொழிலாளர்கள் பெருமளவு தேவைப்பட்ட நிலையில் வெள்ளைக்காரர்களுக்குத் தரவேண்டிய அதிகப்படியான கூலியும் அங்கு இருந்த கடுமையான வெயிலும் தங்களுடைய தொழிலாளர்களையே அவர்கள் பயன்படுத்திக்கொள்ள இயலாமல் செய்துவிட்டது.

உள்ளூர் இந்தியர்கள் மட்டுமே அவர்களுக்கு அப்போது அந்தப்பகுதியில் கிடைத்தார்கள். போரின்போது ஸ்பானியர்களும் போர்த்துக் கீசிர்களும் இந்தியர்களைப் பெருமளவு கொன்று குவித்து விட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஸ்பானியர் மற்றும் போர்த்துக்கீசியரின் கொடுங் தாக்குதல்களிலிருந்து தப்பித்து மலைப்பகுதுகளுக்கும் காடுகளுக்கும் ஓடிவிட்டார்கள். எஞ்சியிருந்தவர்களை அடிமைகளாக்கிச் சுரங்கங்களில் வேலைக்குப் பயன்படுத்தினார்கள், ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்களின் கடுமையானக் கசையடிகளாலும் தொடர்ந்து ஓய்வின்றி அவர்களிடம் சுரங்கங்களில் வேலை வாங்கியதாலும் இந்தியர்களில் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்கள்.

“காண்குவெஸ்டிடார்கள்” என்று தென் அமெரிக்காவில் அழைக்கப்பட்ட ஸ்பானியர்கள், நிக்கோலஸ் தே ஓவான்டா என்பவரின் தலைமையில், அவர் கொலம்பஸின் வழியைப் பின்பற்றி பேட்ரோலோம் தேலாஸ் காசாஸ் என்ற பக்திக்காக பெரிதும் அறியப்பட்ட பாதிரியாரை அழைத்து வந்தனர். லாஸ்காசாவிற்குப், புனிதக் கிறித்துவ மதத்தைப் பற்றிய அறிவை இந்தியர்களுக்கு அன்புடன் போதிக்க ஸ்பெயின் கோர்ட் அறிவுறுத்தியது.

லாஸ்காசா தான், மெக்சிகோவின் முதல் பேராயர் ஆவார். லாஸ்காசா தமக்களிக்கப்பட்ட பணியைச் செய்துவரும்போது இந்தியர்களுக்கு, வெற்றி கொண்ட ஸ்பானியர்கள் இழைத்த கொடுமைகளைக் கண்டார். மீதமிருந்த கரிபியர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தியர்களைத், தவிர்க்க இயலாத ஸ்பானிய எஜமானர்களின் அழிவிலிருந்து காப்பாற்றத் தம் வாழ்நாளின் இறுதிவரை பாடுபட்டார். கரிபியர்கள் யாருக்கும் துன்பம் தராத, மிகுந்த பெருந்தன்மை கொண்ட அன்பான இனத்தவர்கள். முதன் முதலாகக் கொலம்பஸ் அவர்களைக் கண்டபோது அவர்கள் சுமார் 10 லட்சம் பேர்களுக்குக் குறையாத மக்கள் தொகையுடன் தங்கள் பகுதிகளைச் சிறு சிறு ராஜ்ஜியங்களாகப் பிரித்து, ஒவ்வொரு தலைவரைக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். வெற்றி கொண்ட ஸ்பானியர்களின் சீரான குரூரமான நடவடிக்கைகளுன் விளைவாக அவர்களின் எண்ணிக்கை 60000த்திற்கு வந்துவிட்டது. அவர்களின் கொடுமைகளிலிருந்தும்

சித்ரவதைகளிலிருந்தும் தப்பிக்கக் கிராமம் கிராமமாக அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். மற்றவர்களையும் இதே வழியைப் பின்பற்ற அழைத்தார்கள் இதுபோன்ற பல தற்கொலைகளை லாஸ்காசா நேரில் பார்க்க நேர்ந்தது. அவர் இந்தக் கொடுமையை நியாய உணர்வுடன் எதிர்த்தார். ஆனால், அவர் எதிர்ப்பிற்கு ஒரு பலனும் ஏற்படவில்லை. ஏற்படவும் வாய்ப்பில்லை. காடுகளைத் திருத்தும் பணிகள், நிலத்தை பண்படுத்தும் பணிகள். சுரங்கப்பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற வேண்டியிருந்தது. இப்பணிகள் நடைபெறவில்லை எனில் கடவுளால் அளிக்கப்பட்ட ராஜ்ஜியம் மனிதர்களின் சொர்க்கமாக மாற வழிகிடையாது என்பதை லாஸ்காசா உணர்ந்தார். ஆனால் இந்தப்பணிகள் நடக்க வேண்டுமானால் இந்தியர்கள் எத்தகைய துன்பங்களுக்கு ஆளாக வேண்டும் என்பதை அவர் நினைத்த போது துன்பம் அவர் மனதை அழுத்தியது. அவருடைய சீரிய உணர்வுகள் அவரை ஸ்பானிய மன்னருக்கு நீக்ரோக்களை எளிதாக இறக்குமதி செய்ய அனுமதிக்க மனு அளிக்கத் தூண்டியது. 1511-இல் ஸ்பானிய அரசு, புதிய உலகிற்குப் பெருமளவு நீக்ரோக்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. இத்தீர்மானத்தின் விளைவாக ஆப்பிரிக்க நீக்ரோக்கள் என்ற சரக்கை ஏற்றிக்கொண்டு புதிய உலகைச் சொர்க்கமாக்கக் கப்பல்கள் விரைந்தன.

இந்தியர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் நீக்ரோக்களின் வலிவு எத்தகையது என்பது விரைவில் புரிந்தது. ஒரு ஸ்பானியர், நீக்ரோக்களின் வலிமைக்குச் சான்றுரைக்கையில் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் சமூத்திரத்திற்குச் செல்லும் குறுகிய இடைவழியாக மரங்களைத் தம்முடைய 4 சிறிய கப்பல்களில் அனுப்பத் தாம் 500 இந்தியர்களையும் 30 நீக்ரோக்களையும் ஈடுபடுத்தியபோது மேற்கண்ட பணியை முடிப்பதற்குள் 500 இந்தியர்களும் இறந்துவிட்டார்கள். ஆனால், 30 நீக்ரோக்கள் பணியை முடித்துப் பிழைத்திருந்தார்கள் என்று கூறினார். நீக்ரோக்கள் பிழைத்திருந்தது மாத்திரமல்ல, அவர்கள் மிகவும் செழிப்பான முன்னேற்றமும் கண்டார்கள் என்பது கீழ்க்கண்ட பொதுவான அபிப்பிராயத்திலிருந்து தெரிகிறது.

“ஒரு நீக்ரோவைத் தூக்கிலிட்டாலொழிய இறக்கமாட்டான். ஏனெனில், இதுவரை அவர்களில் எவனும் உடல்நலக்குரைவால் இறந்ததாகத் தெரியவில்லை” நீக்ரோ தன்னுடைய நடவடிக்கை மற்றும் நடத்தையினால் தான், இந்தியனை விடத் திறமையான கருவி என்பதை நிரூபித்தான். இதனால் கடவுளால் வலிவு குறைவாகப் படைக்கப்பட்ட இந்தியர்கள் பணியினின்றும் விடுவிக்கப்பட்டனர்; வலிமை மிகுந்தவராகப் படைக்கப்பட்ட நீக்ரோக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். விளைவு, இந்தியர்கள் அடிமைத் தனையிலிருந்து தம்பினர்; அவர்களுடைய இடத்தை நீக்ரோக்கள் எடுத்துக்கொண்டார்கள், நீக்ரோக்கள் தங்களுடைய தகுதிகளின் காரணமாகவும் பக்தியும் பெருந்தன்மையும் மிக்க லாஸ்காசா வின் அழைப்பின் காரணமாகவும் அடிமைகளாக ஆனார்கள்.

‘ஒரு நீக்ரோ நான்கு இந்தியர்களுக்குச் சமமான வேலையைச் செய்கிறான்’ என்ற விவரம் தெரிந்துவிட்டதால், உடனடியாக நீக்ரோக்களின் இறக்குமதிக்கு ஒருநிரந்தரச் சந்தை திறக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையில் போர்த்துக்கீசியர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அடிமை வாணிகம் உடனடியாக வரும் லாபத்தைக் காட்ட ஆரம்பித்தது. ஏனெனில், புதிய உலகின் இயற்கை வளங்களை நீக்ரோ இல்லாவிட்டால் பயன்படுத்த முடியாது என்பதால், மக்கள் இந்தப் புதிய மனித வாணிகத்தில் முழுவதுமாகச் சூழ்ந்து விட்டனர்; இதனால் கிழக்கு நாடுகளுக்கும் புதிய வழி கண்டுபிடிக்கும் வேலையையே முற்றிலுமாகத் துறந்து விட்டார்கள்.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிடையே இந்தப் புதிய வாணிகத்தில் பங்கு பெறுவதற்காகப் பெரும் போட்டி ஏற்பட்டது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கீசிய நாடுகளுக்குப் புதிய உலகின் வளங்களைத் தாமே ஏகபோகமாக அனுபவிக்கும் வண்ணம் போப் ஆண்டவரின் ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. ஆங்கில மற்றும் டச்சுக்காரர்கள் இந்த உத்திரவால் அமெரிக்க வளங்களை ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கீசியர் மட்டும் ஏகபோகமாக அனுபவிப்பார்கள் என்பதால் ஐரோப்பா முழுமைக்குமே ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி இதை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தார்கள்.

 தங்களுடைய நாட்டுக்கு இந்த வாணிகத்தினால் பெரும் பயன் ஏற்பட இங்கிலாந்து பெரும் முயற்சி எடுத்துக்கொண்டது. 1553-இல் 24 நீக்ரோக்களை ஆப்பிரிக்கக் கரையிலிருந்து இங்கிலாந்து சந்தையில் சத்தமின்றி விற்றதுதான் முதல் வியாபாரம் ஆகும். இந்த மனித வியாபாரத்தில் வரலாற்றில் குறிப்பிடப்படுபவர் மிகத்துணிவானவர், இதயமற்றவர் என்று பெயர் பெற்ற ஜான் ஹாக்கின்ஸ் ஆவார். எலிசபெத்தின் கீழ் ‘ஜீசஸ்’ என்னும் கப்பலில் புறப்பட்டு ஆப்பிரிக்கா சென்று நீக்ரோக்களைக்கொண்டு வந்து ஸ்பானியக் காலனிகளில் விற்றார். ஸ்பானிய ஏகபோகத்தை ஒடுக்கும் முயற்சியில் ஹாக்கின்ஸைத் தொடர்ந்து, சர் பிரான்ஸ் டிரேக் என்பவர் இவ்வாணிகத்தில் ஈடுபட்டார். இந்தக் கள்ள நீக்ரோ வாணிகத்தின் காரணமாக சர்வதேச அளவில் தகராறுகள் முற்றி, மோதல் ஏற்பட்டு “ஸ்பானிஷ் ஆர்மடா” வை அழிப்பதில் அது முனைந்தது, இந்தச் சச்சரவுகளில் எல்லா நாடுகளும் தத்தம் நாட்டு மக்கள் செய்த நீக்ரோ அடிமைத் திருட்டு வாணிபத்தைத் “தனிப்பட்ட செய்கைகளாகக் கொள்ளாமல் பொதுவானது” என்று சொல்லி ஆதரவு அளித்தன.

“ஜீசஸ்” என்ற கப்பலைப் பயன்படுத்தி நீக்ரோக்களை அடிமைகளாக ஏற்றுமதி செய்த வேதனையான வேடிக்கை போதாதென்று, இன்னொரு முழுக்க வேதனையான வேடிக்கை நிறைந்த சம்பவமும் நடந்தது. பிளமைத் ராக்கில் மேபிளவர் என்ற இடத்தில் ‘பில்கிரிம் பாதர்ஸ்’ எனப்பட்ட ஆங்கிலேய மூத்த புனிதயாத்திரிகர்களும் 20 அடிமை நீக்ரோக்களும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்ததுதான் அந்தச் சம்பவம். முதன் முதலாக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலக் காலனியான வர்ஜீனியாவில் இந்தக் கனவான்களுக்காகப் பணி செய்ய இந்த அடிமைகள் ஏற்படுத்தப்பட்டார்கள்.

இவ்வாறு அமெரிக்காவில் நீக்ரோக்களும் வயோதிகப் பாதிரிகளும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். வயோதிகப் பாதிரிகள் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டவும், நீக்ரோக்கள் தங்களுடைய சுதந்திரத்தைப் பறிகொடுக்கவும் நேர்ந்தது. அமெரிக்க மக்கள் தொகையைப்பொறுத்த மட்டில் நீக்ரோக்கள் பெருந்தொகையினராக நெடுங்காலம் ஆதிக்கம் செலுத்தினார்கள். உண்மையில் சொல்லப்போனால் அமெரிக்கா மற்றும் இதனைச் சார்ந்த தீவுகளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நீக்ரோக்கள் தான் பிரதானமாக குடியேறி இருந்தார்கள்.

1800 க்கு முன் அமெரிக்காவில் இருந்த நீக்ரோக்களின் எண்ணிக்கை, மொத்த ஐரோப்பியர்களின் எண்ணிக்கையை விட இருபது மடங்கு அதிகமாக இருந்தது. இது தவிர்க்க இயலாதது, ஐரோப்பாவில் நடைபெற்ற தொடர்ச்சியான போர்களாலும் ஐரோப்பாவின் பின் தங்கியிருந்த நாகரிகத்திலிருந்து அப்போதுதான் முன்னேற துவங்கியிருந்ததாலும், ஐரோப்பாவின் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தது. நீண்ட காலமாக இறக்குமதி செய்யப்பட்ட நீக்ரோக்களின் அந்தஸ்து நிர்ணயிக்கப்படாமலேயே இருந்தது. டச்சுக்காரர்களால் கூட்டி வரப்பட்டு ஜேம்ஸ் டவுனில் விடப்பட்ட 20 நீக்ரோக்கள் நீண்ட காலம் அடிமைகள் என்ற முத்திரை குத்தப்படாமலேயே இருந்தனர். அவர்கள் கூலித்தொழிலாளர்கள் என்றே கருதப்பட்டனர்.

வர்ஜீனியா காலனியிலிருந்த பணியாளர்கள் பட்டியலில், 1624 மற்றும் 1625 ஆண்டுகளில் 23 நீக்ரோக்கள் பணியாட்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். இதே தகுதியிலிருந்த வெள்ளையர்களைப் போலவே, 20 நீக்ரோக்கள் வர்ஜீனியா வந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜான்கேஸ்டர் என்னும் நீக்ரோவின் நிரந்தரப்பணி குறித்து, அந்தோணி ஜான்சன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் பதிவாகி உள்ளது. அடிமைத்தனத்தின் அந்தஸ்து 50 ஆண்டுகளாகியும் உறுதியாகவில்லை. மிக மெதுவாகவும், படிப்படியாகவுமே இது உறுதிபெற்றது.

நீக்ரோக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் பொதுவாக இயற்றப்பட்ட கொத்தடிமைச் சட்டத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் வெள்ளையர்களுக்கு வேற்று மனிதர்கள் (கிறித்தவரல்லாத) பால் ஏற்பட்ட அச்சம் மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக நீக்ரோக்களும் வெள்ளையர்களும் வெவ்வேறு விதமாக நடத்தப்பட்டு ஆப்பிரிக்க மக்களின் அந்தஸ்து மாறுபட்டு, “நீக்ரோ கொத்தடிமை” முழு அடிமைத்தனமாக மாறியது. அமெரிக்கக் காலனிகளில் இருந்த நீக்ரோ சட்டம் மற்றும் சம்பிரதாயங்களின் மாற்றங்கள் மூலமாகச் சிறிது சிறிதாகப் பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக, நீக்ரோ அடிமைத்தனம் உருவானது. இவ்வாறு மாறியதில் இரண்டு முக்கியமாக கட்டங்கள் உள்ளன.

முதல்படியான நீக்ரோக்களை ஆயுட்காலப் பணியாட்களாக வைத்துக்கொள்ளும் சம்பிரதாயம் அங்கீகரிக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு அரசியல் மற்றும் குடியுரிமை இழப்பு தன்னாலேயோ, பிறராலேயோ ஏற்படுவது மட்டும் அடிமைத்தனமாகாது. அதைவிட இந்த இழப்பு முழுமையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருந்ததில்தான் அடிமைத்தனம் இருக்கிறது. மற்ற அடிமைத்தனங்களிலிருந்து அது மாறுபட்டது. குடியாள் நிலை, பண்ணையாள் முறை, கொத்தடிமை முறை எனப் பல பெயர்களில் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு வழங்கிய அடிமைத்தனத்திலிருந்து இது வேறுபட்டது. அடிமைகளின் பணிக்காலத்தை நீட்டிக்கும் கோட்ட உரிமையாளரின் முயற்சி, வெள்ளைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை பலிக்காதது நீக்ரோக்களைப் பொறுத்தவரை பலித்தது.

பொதுமக்களின் கருத்தும் இந்த மாற்றத்திற்கு ஆதரவாகவே இருந்தது. ஏனெனில், நீக்ரோக்கள் கட்டுப்படுத்தப்படாமல் விடப்படுவது ஆபத்து என்று கருதப்பட்டதால் இரண்டாவது படியாகத் தாயின் பணி நிபந்தனைகள் மற்றும் அந்தஸ்து, பிறக்கும் குழந்தைக்கும் விரிவுபடுத்தப்பட்டவுடன் அடிமைத்தனத்தின் இரண்டாவது படியும் முழுமைபெற்றது. அடிமைத்தனத்தின் சின்னங்கள் தாயிடமிருந்து குழந்தைக்கும் விஸ்தரிப்பது ஒன்றும் கடினமானதாக இருக்க வில்லை. ஏனென்றால், தாயைக் கட்டுப்படுத்திய எஜமானருக்குக் குழந்தையைக் கட்டுப்படுத்துவதும் கடினமானதாக இராது. ஆயுட்காலத்துக்கு ஒருவரிடம் பணிபுரியும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஜீவியத்திற்கு ஏதும் செய்ய இயலாது என்பதும் அதற்கும் அவர்கள் தங்கள் எஜமானர்களையே சார்ந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவு. சட்டத்தின் மூலமாக அங்கீகரிக்கப்படும் பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்நிலைமை சம்பிரதாயம் பழக்க வழக்கத்தின் மூலமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இதற்கெனச் சட்டங்கள் 1662 முதல் 1741 வரை அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டது.

இப்படித்தான் முதலில் பணியாளாக இருந்த நீக்ரோ, அடிமையானான். ஆனால், இந்த அடிமைத்தனம் என்பது நீக்ரோக்களின் தாயகமான ஆப்பிரிக்காவில் மிகப் பழங்காலத்திலிருந்ரே ஒரு நிறுவனமாக இருந்தது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கீழ்க்கண்ட முறைகள் தான் அடிமைகள் ஆக சாதாரணமாக இருந்து வந்தது.

1) பிறப்பினாலேயே அடிமை

2) கடனுக்காக விற்கப்பட்டு அடிமையாவது

3) போரிலே சிறை பிடிக்கப்படுவதன் மூலமாக அடிமையாவது

4) பழிவாங்கவோ, பேராசையுடனோ, லாபத்திற்காகவோ தனி மனிதர்களைக் கடத்திப்போய் விற்பதனால் அடிமையாவது. நீக்ரோக்களுக்கு உண்மையில் அடிமைத்தனம் பழக்கமானது என்பதும், அடிமைகளின் முதலாளியாக இருப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அவர்கள் அனுவத்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆகவே, ஒரு நீக்ரோ, தான் அடிமைகளின் முதலாளயாக இருந்து இன்னோரிடத்தில் அடிமையாக ஆனால் அவர் மீது அனுதாபம் உண்டாகாது என்பது உண்மை. இருந்தபோதிலும், இவ்வாறு, அடிமை, முதலாளியாக இருந்ததற்கு அது தண்டனை என்று கருதப்பட்டாலும் கூடப் புதிய உலகில் வேற்று முதலாளிகளிடம் இவர்கள் பட்ட துன்பங்களை, அனுபவித்த கொடுமைகளை நியாய உணர்ச்சி உள்ள எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது.

புதிய உலகத்தில் அடிமை முறைக்கு ஆட்பட்ட நீக்ரோக்களின் துன்பங்கள் எவ்வளவு பெரியது என்பதை ஐரோப்பா மற்றும் ஆசியாவின் குடிமக்களால் கற்பனை செய்ய இயலாது. அவைகள் மூன்று தலைப்புகளின் கீழ்வரும்.

அவனைச் சிறையெடுக்கும்போது, அவனைப் பிரயாணமாகப் போகும்போது, அவன் உழைக்கும்போது ஏற்படும் துன்பங்கள், என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது, அடிமைப்படுத்த நீக்ரோக்களைச் சிறையெடுப்பது குறித்துப் பார்ப்போம். ஆரம்பத்தில் கடற்கரையோரங்களில் தீடீரென்று கப்பலில் வந்து கரையிறங்கி அங்குள்ளவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றார்கள். ஆனால், காலப்போக்கில் கடலில் கப்பல் வந்துகொண்டிருக்கும்போதே பார்த்து உஷாரான நீக்ரோக்கள் காடுகளில் போய் ஒளிந்து கொண்டார்கள். துணிவுள்ள சிலர், காடுகளுக்குள்ளும் அவர்களைத் துரத்திச் செல்லுவது உண்டு எனினும், அவர்கள் வழக்கமான நடைமுறை என்னவென்றால், வியாபாரம் செய்யும் உள்நாட்டவர்களுடன் பேசி, ஐரோப்பாவிலிருந்து அவர்கள் கொண்டு வந்துள்ள குறைந்த விலையுள்ள துணிகள், மணிகள், இரும்பு, வாசனைப்பொருட்கள், பவுடர் மற்றும் போதைப்பொருடகள் ஆகியவற்றை உள்ளூர் தலைவர்களிடமுள்ள அடிமைகளுக்குப் பண்டமாற்று முறையில் கொடுத்துவிட்டு அடிமைகளைப் பெற்றுக்கொள்வார்கள். மற்றவர்களைக் காட்டிலும் வலிமை படைத்த உள்ளூர் இனங்களின் தலைவர்கள், இந்தப் பொருட்களை வேண்டாம் என்று மறுத்தலித்தாகவோ அல்லது மறுலிக்க விரும்பியதாகவோ எவ்வித ஆதாரமுமில்லை.

குறிப்பாகத் துப்பாக்கிகள் மற்றம் சாராயத்திற்கு இது மிகவும் பொருந்தும். இந்த வாணிகத்தினால் ஒரே இனத்திற்குள்ளேயே மிகச் சிறு குற்றங்களுக்குக் கூட அடிமைப்படுத்துவது அதிகமாகக் கொண்டே போனது. இரண்டு உள்ளூர்க் குருக்களிடையே பெண்களையும் குழந்தைகளையும் சிறைப்படுத்திக்கொண்டு போவதற்காக சமாதான காலங்களிலேயே சண்டை ஏற்படுவது என்பது ஆப்பிரிக்கர் வாழ்வின் நிரந்தரமான ஒரு நிகழ்ச்சியாகியதோடு, ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இப்பழக்கம் அடிமை வாணிகம் அதிகமாகப் பரவிக் கொண்டே போனது.

இரண்டாவது, அடிமைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அடிமைகளை வாங்கிய வணிகர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு நீண்ட ஊர்வலமாக, சில சமயம் மிக நீண்ட ஊர்வலமாக கடற்கரையை நோக்கி அழைத்துச் செல்வார்கள். வழக்கமாக அடிமைகள் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அவர்களுக்கு விலங்கு போட்டு “அடிமைக் குச்சி” எனப்பட்டும் குச்சியால் – இது ஒரு நீளமான குச்சி : அதன் இரு முனைகளிலும் கழுத்தைச் சுற்ற கயிறு இருக்கும்’- பிணைத்து அழைத்துச் செல்வார்கள். அவர்கள் தங்கள் தலையில் தங்களுக்கு வேண்டிய உணவு வகைகள் மற்றும் துணிமணிகளையும், உள்ளூரில் அடிமை வியாபாரி வாங்கிய தங்கம் மற்றும் உள்ளூர்ச் சரக்குகளையும் தூக்கிச் செல்வார்கள். ஊர்வலத்தில் செல்லும் பலவீனமான அடிமைகளுக்கு ஊர்வலத்தின் கடுமை தாங்க இயலாமல் போவதுண்டு. இவ்வாறு நோயுற்ற அடிமைகள் கொல்லப்படுவதுண்டு அல்லது சாக விட்டு விடப்படுவதுண்டு. அடிக்கடி அடிமைகள் கொண்டு செல்லப்படும் பாதைகளில் எலும்புத் துண்டுகள் சிதறிக் கிடக்கும். கடற்கரைக்கு அவர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர்களுக்கென்று உள்ள கப்பல்களுக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

நடுவில் 3 அடி இடைவெளி விட்டு கப்பல்கள் நீளவாக்கில் பிரிக்கப்பட்டு இருக்கும். அடிமைகளில் ஆண்கள், பெண்கள், தனித்தனியாக இரண்டிரண்டு பேர்களாக கைவிலங்கிடப்பட்டு அறைக்குள் விடப்படுவார்கள். சரக்கு அதிகமாக இருந்தால் லாபம் அதிகமாக இருக்கும் என்பதால், சில சமயங்களில் அளவுக்கதிகமாக அடைக்கப்பட்டு அவர்கள் திரும்புவது கூட கடினமானதாயிருக்கும்.

150 டன் எடையுள்ள கப்பலில் சுமார் 600 அடிமைகள் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். பிரேசிலுக்கு நேரடியாகச் செல்லும் பாதை ஒரளவு குறைந்த தூரம்தான் எனினும், அடிமைகள் வியாபாரத்திற்கு முக்கிய பகுதியாக விளங்கிய மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் செல்லும் “மத்திய பாதைப்” பயணம் வேகமாகக் காற்று வீசுவதாலும் நீண்ட நாட்களாகளாம். கடல் அமைதியாக இருக்கும் காலங்களில் அடிமைகள் கப்பலின் மேல் தளத்திற்குக் கொண்டு போகப்பட்டு அங்குப் பயிற்சி நிமித்தம் நடனம் ஆடக் கட்டாயப் படுத்துவதுண்டு. கடுமையான தட்ப வெப்ப காலங்களில் அடிமைகள் நிலையைக் கற்பனை செய்து கொள்ளலாம். கப்பலில் வியாதிகள் மலிந்து இருக்கும். கப்பலில் உணவு உண்ண மறுக்கும் அடிமைகளுக்கு கட்டாயமாக உணவு புகட்டக் கருவிகள் வழங்கப்பட்டாலும் “18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட அடிமைகளில் ஆறில் ஒரு பகுதியினர் பிரயாணத்தின் போதே இறந்து விட்டார்கள் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. பயணம் முடியும் தறுவாயில் அடிமைகள் பரிசோதிக்கப்பட்டு விற்பனைக்குத் தயார் செய்யப்படுவார்கள்.

புயலினாலோ தவறாகக் கையாளப்பட்டதாலோ ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுக் கூடுமான வரை மறைக்கப்படுவதுண்டு. ஆனால், துறைமுகங்களிலுள்ள ஏஜெண்டுகள் “நீக்ரோக்கள், பொட்டலங்கள்”, மிக மோசமானவை என்றோ, ‘மிகவும் மட்டமானவை’ என்றோ ‘தவறாகக் கையாளப்பட்டவை’ என்றோ அடிக்கடி புகார் செய்வதுண்டு. இறுதியாகக் கப்பலின் “தளத்திலோ அல்லது அடிமைகள் சந்தைகளிலோ” கூவியும் ஏலம் விட்டும் விற்கப்படுவார்கள். 18-ஆம் நூற்றாண்டில் நல்ல உடல் நிலை உடைய அடிமைகள் (ஆண்) 60 பவுண்டுகள் விலை வரை போவதுண்டு. நோயுற்ற அல்லது காயம்பட்ட அடிமைகளும் பெண்களும் குழந்தைகளுடன் “கும்பலாக அழிக்கப்பட்ட சரக்கு” என்று கூறி மலிவான விலைக்கு விற்கப்படுவதுண்டு. தோட்டங்களுக்குக் கடைசியாகக் கொண்டு செல்லப்படும் நிலையில் கூட அவர்கள் கடைசியாக இன்னொரு கஷ்டத்தையும் சந்தித்து விட்டுத்தான் தங்கள் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்கப் போகும் இடத்தில் துவக்க வேண்டும். வேலையின் ஆரம்ப மாதங்களைப் “பதப்படுத்தும்” காலங்கள் என்று கூறப்படும்.

ஆரம்ப மாதங்களில் குறைந்தது 3-இல் ஒரு பகுதிப் புதியவர்கள், புதிய தட்ப வெப்பங்கள், உணவுப் பணி ஆகியவற்றின் காரணமாகவோ, உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ தயார் ஆக முடியாமல் இறந்து போவார்கள். மொத்ததில் இறப்புகளைக் கணக்கிட்டால் அடிமைகளைப் பிடிக்கும் “சண்டைகள்”, கடலுக்குச் செல்லும் வேளைகள், மத்தியப் பாதை, பதப்படுத்துதல் ஆகிய காலங்கலில் குறைந்த பட்சம் தயாராக ஒவ்வொரு அடிமைக்கு ஒரு அடிமை வீதம் இறந்து போவதுண்டு.”

மூன்றாவதாகப், பதப்படுத்தப்பட்ட நீக்ரோ அடிமையின் வாழ்வின் நீக்ரோ அடிமைத்தளம் முதலாளிக்கு அடிமையை ஆளும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகிய இரு உரிமைகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி அளித்தது.

நீக்ரோவைச் சொந்தமாக வைத்துக் கொள்ளும் உரிமைக்கும் பரவலான அர்த்தம் கொடுக்கப்பட்டது. இவ்வுரிமை, ஒரு எஜமானருக்கு நீக்ரோ வேலை வாங்கும் உரிமை மட்டுமல்ல நீக்ரோவின் பணியைப் பிறருக்கு விற்க, வாரிசு உரிமையின்படி சந்ததிகளுக்கு அளிக்க, அவர்களை விரும்பும் வகையில் விற்க என்று பல உரிமைகள் அவர்களுக்கு உண்டு. இந்த உரிமைக் கோட்பாட்டின் படி ஒரு அடிமையின் உடல், பொருளுக்குச் சமமானதாகக் கருதப்பட்டது. நீக்ரோ, அடிமையாக இவ்வாறு சொத்தாகப் பாவிக்கப்பட்டதால் எஜமாளரின் கடனுக்காக அடிமைகளைக் கைப்பற்றிக் கொள்ளுவதுண்டு. இப்படி கைப்பற்றப்பட்ட அடிமைகள் விடுவிக்கப்பட்டால் கூட, அதற்கு முன்னால் எஜமானர் பட்ட கடனுக்காக மீண்டும் சிறை பிடிக்கப்படுவது உண்டு. அடிமையை, மனிதனாக அல்லாமல் ஒரு சொத்தாக பாவிக்கும் இந்தக் கோட்பாட்டின் காரணமாக, அவனுடைய சட்ட மற்றும் நாகரிக உரிமை மேலும் பாதிக்கப்பட்டது.

அவன் சொந்தமாகச் சொத்தை வாங்கவும் முடியாது; அனுபவிக்கவும் முடியாது. இது ரோமானிய சட்டத்திற்கு மாறுப்பட்டது. ஏனெனில், அங்கே அடிமைகள் பெக்கூலியம் என்று சொத்தை வாங்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். அது மிகவும் குறுகிய வரம்புள்ள உரிமை. எனினும், அங்கு அடிமை ஒரு சொத்தாக இருப்பினும் இந்த உரிமை அவனை ஒருமனிதனாக மதிக்கும் நிலையைக் காட்டுகிறது. நீக்ரோவை ஒரு மனிதனாக மதிக்கும் நிலையை இது காட்டுகிறது. நீக்ரோ ஒரு மனிதனாகக் கருதப்படாததால் அவன் வாணிகம் செய்ய முடியாது. திருமணமும் செய்ய முடியாது. ஒரு எஜமானர் தன் அடிமையைக் கண்டிக்கலாம் என்ற உரிமைக்கு மிகவும் குரூரமான விளக்கம் நீக்ரோவைப் பொறுத்தவரை அளிக்கப்பட்டது. 1829-இல் வட கரோலினா மாநிலத்தில் தன்னுடைய அடிமையை அடித்த எஜமானர் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஜமானரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கையில் கீழ் கண்டவாறு கூறுகிறார்:

“ஒரு எஜமானருக்கும் அடிமைக்கும் உள்ள உறவைப், பெற்றவருக்கும் பிள்ளைக்குமிடையே உள்ள அளவுடன் ஒப்பிடுவது தவறு. ஒரு பெற்றவன் தன்னுடைய பிள்ளைக்குப் பயிற்சி அளிப்பதன் நோக்கம் வாழ்க்கையில் சுதந்திரமான மனிதனாக அவன் வாழத் தகுதியுள்ளவனாக்குவதுதான். இந்த நோக்கத்தில், அவள் தன் பிள்ளைக்கு ஒழுக்கம் மற்றும் அறிவுப் பயிற்சியை அளித்தான். ஆனால், அடிமையைப் பொறுத்தவரை இது அத்தகையதன்று. அடிமையின் விஷயத்தில் ஒழுக்க நெறி விஷயங்களையெல்லாம் பொருத்திப் பார்ப்பது அறிவுப் பொருத்தமற்றது. அடிமை முறையின் நோக்கம் அவனுடைய எஜமானரின் லாபத்தை, பாதுகாப்பை, பொது பாதுகாப்பை உறுதி செய்வதுதான். ஓர் அடிமை, தானும் தன் சந்ததியும் அறிவை வளர்க்காமலும், சொந்தமாகச் சொத்து சேர்க்காமலும் வாழும் வாழ்க்கையில் தன்னை ஒப்புவித்து அழிந்து விடுபவன்.

அறிவையும் சொத்தையும் தேட அவன் முயற்சிப்பது பயன் தராது. இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு என்ன நெறியைப் பொருத்திப் பார்க்க இயலும்? அது ஒருக்காலும் முடியாது என்பது மட்டுமல்ல: ஒரு முழு முட்டாள் கூட இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருக்க முடியாது என்பதை உணர முடியும். ஆகவே, அவன் இயற்கை, கடமையைச் செய்யவும் மகிழ்ச்சியோடு செய்யவும் வேண்டும். ஏனெனில், தன்னுடைய உரிமையை, மற்றொருவனுக்குத் தெரிந்தே ஒப்புவித்தி விட்டவன். ஒரு மனிதனின் உடம்பிள் மீது மற்றொருவறுக்கு உள்ள வரையற்ற கட்டுப்பாட்டின் காரணமாகத்தான் இந்த உரிமை ஏற்படுகிறது. வேறெதுவும் இப்படிப்பட்ட நிலையைத் தோற்றுவிக்க இயலாது. ஒரு எஜமானனுக்கு தன்னுடைய அடிமையை முழுமையாக அடக்க இந்த அதிகாரம் முழுமையாக இருக்க வேண்டும்.”

எஜமானரின் உரிமைக்கு இப்படிப்பட்ட விளக்கத்தை அளித்ததன் விளைவாக, வெகு காலத்திற்கு, அமெரிக்காவில், இவ்வாறு தண்டிக்கப்படுகையில் ஒரு நீக்ரோ அடிமையாக எதிர்பாராமல் இறந்துவிட்டால் அது வருத்தத்துக்குரிய ஒரு விபத்தாகத்தான் கருதப்பட்டது. இந்த உரிமை எந்த அளவுக்கு ஈவு இரக்கமின்றி பயன்படுத்தப்பட்டது என்பது 1787-இல் ஆண்டிக்ளா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதங்களைப் பார்வையிடுகையில் தெரியவரும். எழுதியவர் கூறுகிறார்:

”நீக்ரோக்கள், அதிகாலையில் சூரியோதயத்தில் எழுப்பப்பட்டு 20 முதல் 60 பேர் கொண்ட குழுக்களாய் வெள்ளைக்காரக் கண்காணியின் கீழ் வேலை செய்ய அனுப்பப்படுவார்கள். இவர்கள் தங்கள் உழைப்பு மற்றும் திறமையினால் தோட்டங்களுக்கு உரிமையாளர்களாகவே ஆகிவிடுவார்கள். இவர்கள் வேலையாட்களாகச் சேர்ந்தவர்கள். இவர்களின் கீழ், கறுப்பர்கள் அல்லது சுறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் பிறந்த முலாட்டோக்கள் இருப்பார்கள். இவர்கள் மிகவும் மோசமானவர்களாயிருப்பார்கள். இவர்களுடைய வேலையே சற்றே நேரம் ஓய்வு எடுக்கும் முதியவர் அல்லது பெண்கள் யாராயினும் அவர்களைத் தங்கள் கையிலுள்ள சாட்டையால் விளாசிவிடுவதுதான். அவர்கள் சோம்பலின் காரணமாகச் சும்மாயிருக்கிறார்கள்: உடல்நலமின்றி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. மதிய உச்சி வேளை 12 மணிக்கு அவர்கள் பணியிளின்றும் 1.5 மணி நேரம் ஓய்வுக்கு அனுப்பினார்கள் 1.5 மணி நேரத்தில் மீண்டும் அவர்கள் பணிக்குத் திரும்பிச் சூரியன் மறையும் வரை வேலை செய்ய வேண்டும்.”

அடிமைகளுக்குத் தீவில் அளிக்கப்பட்ட தண்டனைகள் பல வகைப்பட்டவை, மிகவும் கொடுரமானவை, அவற்றில் ஒன்றுதான் “தம்பாக்குரு” எனப்படும் தண்டனை. இதில், கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்படும். அப்போது உயிரே போகும் அளவுக்கு வலி ஏற்படும். இன்னொன்று ”இரும்பு கழுத்துப் பட்டை” ஆகும். இதில் கழுத்தைச் சுற்றி ஒரு இரும்பு வளையத்தை இரண்டு காலர்களுடன் போடுவார்கள். இந்த இரும்பு கழுத்துப் பட்டை அணிந்த அடிமைகள் கொஞ்சம் கூட வசதியாகக் குனிந்துபார்க்கவே முடியாது. “காலணிகள்” எனப்படுபவை கெட்டியான இரும்பு வளையங்கள், சுற்றளவில் நான்கு அங்குலங்கள் இருக்கும் கணுக்காலுக்கு சற்று மேலாக மூடப்பட்டிருக்கும், இவற்றுடன் சில முதலாளிகள் சங்கிலியையும் பிணிப்பார்கள். இவற்றைப் பரிதாபத்திற்குரிய அடிமைகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமாளிக்க வேண்டும். மதிய வேளைகளில் அவ்வப்போது நீக்ரோக்கள் மேற்கண்டவைகளை அணிந்து கொண்டு நடமாடுவது அரிதான காட்சியல்ல.

நீண்ட காலணிகளை ஒத்த நீண்ட சங்கிலிகள் “ஸ்பர்” என்ற பெயருடையது. நீண்ட “பெட்லாக்”களுடன் இணைத்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு இந்தப் பாவப்பட்ட நீக்ரோக்கள் செல்வது அடிக்கடி காணப்படும் காட்சியாகும்.

தனி மனிதர்கள் இழைக்கும் கொடுமைகளை வைத்து எல்லா அடிமை முதலாளிகளையும் கணக்கிடுவது பெருந் தவறாகும். பல சந்தர்ப்பங்களில் அடிமைகள் தங்களை எஜமானர்களிடம் நட்போடு இருப்பதும், அவர்கள் பதிலுக்கு அடிமைகளிடம் கனிவுடன் இருப்பதும் உண்டு. ஆயினும் இந்த உறவு வெறும் பொருளாதார லாபத்தின் அடிப்படையில், மனிதர்களைப் பொருள் குவிக்கும் கருவிகளாக மனிதாபிமானமே இன்றிப் பயன்படுத்தும் முறையாகும்.

இந்தியாவைத் தவிர பிற நாடுகளிலும் கீழ் நிலையில், சுதந்திரமற்ற, சலுகைகளற்ற வர்க்கங்கள் இருந்தன என்பதற்கு மேலும்சான்றுகள் தேவையில்லை. ஆனால், மிக முக்கியமானது என்னவென்றால் இந்தச் சுதந்திரமற்ற சலுகைகளற்ற வர்க்கங்கள் தனி வர்க்கமாக இல்லாமல், சமூகத்தின் அங்கமாக அங்கேயெல்லாம் மாறிப் போயின. கேள்வி என்னவென்றால் ஏன் தீண்டாமை அவ்வாறு மறையவில்லை? இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பின்வரும் இயல்களில் ஆராயப்படும்.

 (டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 8)

Pin It