‘‘அரசியல், எதார்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை எனில், அதனால் பயனில்லை. எந்த ஓர் அரசியல் ஏற்பாட்டையும் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு, அதன் ஆதார அடிப்படையைப் பரிசீலிப்பது அவசியம். ‘ஆதார அடிப்படை' என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று சிலர் கேட்கக் கூடும். அரசியல் திட்டத்தை எந்த ஒரு சமுதாயத்திற்குப் பயன்படுத்துகிறோமோ, அதன் சமூக அமைப்பையே நான் குறிப்பிடுகின்றேன். அரசியல் அமைப்பு, சமூக அமைப்பின் மீதுதான் அமைந்திருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு எந்த வாதங்களும் தேவையில்லை. அரசியல் அமைப்பு மீது சமூக அமைப்பு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் அய்யமில்லை. சமூக அமைப்பு - அரசியல் அமைப்பின் செயல்பாட்டை மாற்றலாம்; அதைச் செயலற்றதாக்கலாம்; இன்னும் சொல்லப் போனால், அதைக் கேலிக்கூத்தானதாகவும் ஆக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக அமைப்பு சாதி அமைப்பின் மீதே கட்டப்பட்டுள்ளது.'' - டாக்டர் அம்பேத்கர்

இந்திய அரசியல் அரங்கில், தலித் அரசியலுக்கு மாண்பும் மரியாதையும் ஏற்பட்டதற்கு, மேதகு கான்ஷிராம் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது. அவருடைய மறைவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அவருடைய நோய் காரணமாக தலித் எழுச்சிக்கு மிகப்பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இன்று அவருடைய மறைவு, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. இருப்பினும், சாதி அரசியலின் தலைநகரமாகக் கருதப்படும் உத்திரப்பிரதேசத்தில், அதற்கு எதிராகப் போராடி, கான்ஷிராம் ஈட்டிய வெற்றியை வரலாற்றிலிருந்து எளிதில் அகற்றிவிட முடியாது. பஞ்சாபில் பிறந்து சீக்கிய மதம் மாறிய அவர், தாம் பணியாற்றிய அரசு அலுவலகத்தில் (1965) அம்பேத்கர் பிறந்த நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தது, அவர் பின்னாளில் தலைவராவதற்கு முன்னோடி நிகழ்வாக அமைந்தது.

அண்ணல் அம்பேத்கர் எழுதிய ‘சாதியை ஒழிக்க வழி என்ன?' என்ற நூலை, ஒரே இரவில் அவர் மூன்று முறை படித்துள்ளார். அவர் ஒரு சமூகப் போராளியாகத் திகழ்வதற்கு இக்கருத்தியல் அடித்தளமிட்டதை, அவர் பெருமிதத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் (ஆனால், இன்று சாதி ஒழிப்பு பேசும் நம்மில் எத்தனை பேர் இந்நூலைப் படித்து, இன்றைய சமூக - அரசியல் சூழலோடு அதைப் பொருத்திப் பார்க்கிறோம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்). அதன் தொடர்ச்சியாக, 1973 இல் டி.கே. கபார்டே துணையுடன் ‘பாம்செப்'அய் தொடங்கியும், 1981 இல் ‘தலித் சோஷிட் சமாஜ் சங்கர்ஷ் சமிதி' (டி.எஸ்.4) என்ற அமைப்பைத் தொடங்கியும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நாடெங்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1984 இல் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்க, இத்தகைய களப்பணிகளே உரமாகவும் ஆதாரமாகவும் அமைந்தன. பின்னாளில் இக்கட்சி, உத்திரப்பிரதேசம் மட்டுமின்றி, அரியானா மற்றும் பஞ்சாபிலும் அதிகளவு செல்வாக்குப் பெற்றது.
தொடக்க காலங்களில் கான்ஷிராம் சைக்கிளில் தெருத்தெருவாகச் சென்று, தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார். தொண்டர்களின் இல்லங்களில் தரையில் படுத்துறங்குவதையே விரும்பினார். பகட்டான வாழ்க்கைக்கு என்றுமே ஆட்படாத அவர், பார்ப்பனப் பத்திரிகைகளை மதிக்காத பண்பாளர். அவர் சிறந்த பேச்சாளர் அல்ல. அவர் ஒரு கருத்தாளர்; கொள்கையாளர். அவர் பொதுக் கூட்டங்களில், சாதிய அமைப்பை விளக்க, தமது சட்டைப் பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து செங்குத்தாக நிறுத்தி, இந்த செங்குத்தான சாதிய அமைப்பை நாம் சமமானதாக நீளவாட்டில் ஆக்க வேண்டும் என்று எளிய முறையில், தமது உரையை அமைத்துக் கொண்டவர். தான் எடுத்துக் கொண்ட கொள்கைகளை, எத்தகைய எதிர்ப்பு வரினும் - அதை நிறைவேற்றுவதில் சற்றும் பின் வாங்காத நெஞ்சுரம் மிக்கவர். உத்திரப் பிரதேசத்தில் அவர் நடத்திய ‘பெரியார் மேளா' இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தனக்கென எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தன்னல மறுப்பாளராகவே திகழ்ந்த கான்ஷிராம், ஒரு சமூக மனிதராகவே இறுதிவரை வாழ்ந்தார்.

தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, பல்வேறு மாநிலங்களிலும் கான்ஷிராமின் அரசியல் வெற்றி சிலாகிக்கப்படுகிறது. அவரது அரசியல் மாதிரி பின்பற்றப்பட வேண்டும் என்று பரவலாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அவருடைய அரசியல் அதிகார வெற்றியைப் போற்றும் பலரும், அவருடைய அரசியல் வியூகம் குறித்துப் பேச மறுக்கின்றனர். அவருடைய ‘பகுஜன்' (பெரும்பான்மை மக்கள்) தத்துவம்தான் அவருடைய வெற்றிக்கான அடித்தளம். கான்ஷிராம் ஒருபோதும் தலித் அரசியலைக் குறுக்க முனைந்ததில்லை. அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட - பட்டியல் சாதியின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களை ஓரணியில் திரட்டி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே அவருடைய அரசியல் வியூகம். சுருங்கச் சொன்னால், தலித் தலைமையில், இச்சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது. எதிர்மறையான பார்ப்பனிய சமூகத்தை நேர்மறையாக்குவது. ஆறாயிரம் சாதிகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள தொல்குடி மக்களை - மகாத்மா புலே, சாகுமகராஜ், நாராயண குரு, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிந்தனைகளின் மூலம் - சாதியற்ற மக்களாக ஒன்றிணைப்பது. ஆம், கான்ஷிராமின் அந்த அரசியல்தான் உண்மையான தலித் அரசியல்!

ஆனால், எதார்த்த நிலைமை என்ன? கான்ஷிராமின் அரசியல் வெற்றியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள், தலித் அரசியலை விரிவுபடுத்த மறுக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தலித் அரசியல் மேலும் சுருங்கி உட்சாதி உணர்வுகளை முன்னிறுத்துவதாக மாறி நெடுநாட்களாகிறது. பிறகு அதிகாரம் எப்படி வரும்? கான்ஷிராமை நினைவு கூர்வது என்பது, அவரது செயல்திட்டத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது; பகுதிபகுதியாக அல்ல. இந்த நாட்டின் 85 சதவிகித மக்கள், 15 சதவிகித மக்களால் ஆளப்படுகின்றனர். 15 சதவிகித மக்களால் பாதிப்பிற்குள்ளாகும் 85 சதவிகித மக்கள், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, அதன் மூலம் தங்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை, நோக்கம், செயல்திட்டம். அவருடைய அரசியல் வாரிசான மாயாவதி தற்பொழுது அணி அமைத்துள்ளது போல, ‘மனுவாதிகள்' என்று கான்ஷிராமால் அடையாளப்படுத்தப்பட்ட பார்ப்பனர்களுடன் கூட்டு சேர்ந்து ஒடுக்குகிறவனும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றவனும் ‘சிறுபான்மை'யினரே என்று திரித்து, சாதி அமைப்புக்கு மூலகாரணமானவனிடமே ஒப்பந்தம் போடுவது அல்ல; அல்லவே அல்ல.

இன்றைய தலித் இயக்கங்களின் போக்கு எப்படி இருக்கிறது? சாதியை ஒழிக்க முதலில் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று கூறி, பிறகு ஆட்சியைப் பிடிப்பதையே லட்சியமாக அறிவித்து, அதற்காகவே கொள்கையையும் இழந்து, சமரசம் செய்தால்தான் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று கூறி, இந்துத்துவவாதிகளுடனும் கைகோர்த்து, இறுதியில் முழுமையான ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற முடியாமல், சமூகப் பிரச்சினைகளையும் பேச முடியாமல் திண்டாடும் திசையற்ற போக்கே நீடிக்கிறது. அம்பேத்கர் சொன்ன ‘ஆதார அடிப்படை'யும் போய், அரசியலும் போய் - எஞ்சியதெல்லாம் ஊழலும், வன்கொடுமைகளுமே! இழப்பதற்கு எதுவுமில்லாத மக்களின் நேரத்தையும் உழைப்பையும் சுரண்டுவதில்தான் இன்றைய அரசியல் உயிர் வாழ்கிறது. ‘சாதியை ஒழிக்க வழி என்ன?' என்ற நூலை கான்ஷிராம் மும்முறை படித்து அரசியலுக்கு வந்திருந்தாலும், சமூக மாற்றத்திற்கானப் பண்பாட்டுப் புரட்சிக்கு, அவர் முன்னுரிமை அளிக்காததை மாபெரும் குறைபாடு என்றே சொல்ல வேண்டும்.

‘அரசியல் அதிகாரம் வேண்டும்' என்று அம்பேத்கர் குறிப்பிட்ட முழுப் பொருளில் இருந்து துண்டித்து, அரசியல் அதிகாரத்திற்கு இன்று தங்கள் அளவில் விளக்கம் சொல்கிறார்கள். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னால் சமூகப் புரட்சி நடத்தப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். ஆனால், இதற்கான செயல்திட்டம் ஏதுமின்றி, அரசியல் அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றுவோம் என்பது, அந்தரத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பானது. ஒடுக்கப்பட்ட மக்கள், ஓர் ஆளும் வர்க்கமாக மாற வேண்டும் என்பதே அம்பேத்கர் முன்வைத்த அரசியல் அதிகாரத்தின் விரிந்த பொருள். அது, ஓர் அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்ற அளவுக்கு இன்று சுருக்கப்பட்டு விட்டது. அரசியல் கட்சியின் மூலம் ஆளும் வர்க்கத்தை உருவாக்கிவிட முடியாது. ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை, ஆளும் வர்க்கத்தைப் பிறப்பே தீர்மானிக்கிறது; தேர்தல்கள் அல்ல. அது, சாதியையே அளவுகோலாகக் கொண்டிருக்கிறது. சாதி நிர்மூலமாக்கப்படாத வரை, நாம் ஆளும் வர்க்கமாக மாறவே முடியாது. அரசியல் கட்சியே தேவையற்றது என்பது இதன் பொருள் அல்ல. அரசியல் அதிகாரத் தேடலுடன் அதற்கு இணையாக, சமூகப் புரட்சிக்கான சிந்தனையும் செயல்திட்டமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

அம்பேத்கரின் அரசியல் நோக்கத்தை அரைகுறையாகப் புரிந்துகொண்ட தலித் அமைப்புகள், அதை முற்றாகப் பற்றிக் கொண்டன. ஆனால், முழு விடுதலைக்கு அவர் வித்திட்ட முன்னோடித் திட்டமான மதமாற்றத் தீர்வை மட்டும் அவை வசதியாக மறந்து விடுகின்றன. இது, அம்பேத்கருக்குச் செய்யும் துரோகம் அல்லவா? பார்ப்பனிய சமூக அமைப்புக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டமே - உண்மையான அரசியல் எழுச்சிக்கு வழிவகுக்கும். அத்தகையதொரு அரசியல் திரட்சி, இந்நாட்டின் மதத்தை, புனிதம் என்று சொல்லப்படுகின்றவற்றை, ஏன் கடவுளையே கூட கேள்வி கேட்டு - அவற்றைத் தகர்த்தெறிவதாக இருக்க வேண்டும். கான்ஷிராமின் வழிகாட்டுதல் நமக்கு இத்தகைய புரிதலைத் தரும்போதுதான், அவர் கொள்கைகள் என்றென்றும் உயிர்ப்புடன் வினையாற்றும்.
Pin It