விக்கி: வெயில் கொளுத்துகிறது. நிழலில் ஒதுங்க நம்மூர் தூங்குமூஞ்சி மரம் ஒன்றும் காணவில்லை.

வீரன்: நமக்கு நன்கு அறிமுகமான ஆனால் விசித்திரமான தூங்கு மூஞ்சி மரம் எனும் சீமைவாகை மரம் நம் மரமல்ல. மிமோசியீ என்ற தொட்டாற்சிணுங்கி குடும்பத்தின் என்டிரோலோபியம் சாமன் என்ற அந்த மழை மரத்தின் தாயகம் அமெரிக்கா. ஆனால் நம்மூர் சாலை ஓரங்களில் பூங்காக்களில் அழகாக வளர்ந்து அருமையான நிழல் தருகிறது. இரவில் இதன் சிற்றிலைகள் கை கூப்புவது போல் இணை இணையாக மடிந்து கொண்டு தொங்கும். உறக்க இயக்கம் அதன் சிறப்பு. இருட்டும் போது இந்த இயக்கம் தொடங்கும். அதனால் தூங்குமூஞ்சி மரம் என்றனர். சிகாடா சிள்வண்டுகள் இம் மரத்தின் இளந் திசுக்களைத் துளைத்து சாறு உறிஞ்சும்போது சாறு சிறு துளிகளாகச் சிதறும். பார்ப்பதற்கு மழைச்சாரல் போல் இருப்பதால் ஆங்கிலத்தில் ரெயின் ட்ரீ (Rain Tree) மழை மரம் என்றனர். பூங்கொத்துகள் வாகைப்பூ போல, ஜிமிக்கி காதணி போல தோன்றும். கனியின் உள்ளே திரட்சியான இனிப்பான சதை இருக்கும். ஆடு, மாடு, குதிரை விரும்பி உண்ணும். வெனிலா, காபி, கோக்கோ ஆகியவற்றை பயிரிட நிழல் மரமாக இம் மரத்தை வளர்ப்பர். இலை, கனிகளும் கால்நடைகளுக்கு தீனியாகும். கனி, குடல் போன்று தோற்றம் தரும். மரம் விறகுக்கு ஏற்றதல்ல. அதிகம் வெட்டப்படுவதில்லை. அமெரிக்காவில் இம் மரத்தை பித்தக்கொலோபியம் அதாவது செல்லமாக குரங்குக் குண்டலம் என்பர்.plants 700விக்கி: நம்மூர் மரம் என்று நினைத்தால் அமெரிக்க நாட்டு மரம் என்கிறாய். அயல்நாட்டிலிருந்து வந்தாலும் தீமை செய்யாமல் நன்மை செய்கிறது. இதுபோல வேறு ஏதும் உள்ளதா?

வீரன்: மரமல்ல. செடி உள்ளது. உனக்குப் பிடித்த துவரை.

விக்கி: என்ன? சாம்பார் துவரையா? நம் செடி இல்லையா?

வீரன்: எகிப்தியர் பிரமிடுகளில் கல்லறைகளில் ஆராய்ச்சி செய்த போது அங்கு துவரம் பருப்புகள் காணப்பட்டதாம். பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே துவரை பயிர் செய்யப்பட்டது. நம்மூருக்கு மூவாயிரம் ஆண்டுக்கு முன் வந்தது. ஊர்ப்பெயர், நிலப் பெயரில் பலவகைகள் துவரையில் உள்ளன. சாம்பார்ப் பருப்பு எனும் துவரை புரத உணவு. துவரைப் பொட்டு தழையுரம். துவரைப் பயிர் காற்றுத் தடுப்பான். துவரைக்காயை நீரில் ஊறவைத்து குவித்து கோணி மூடி முளைகட்டி மறுநாள் உலர்த்தி திரிகை இட்டு உடைப்பார்கள். துவரை மாறு தண்டு விறகாக, கூரை வேய ஓலையாக உதவியது. துவரை இலையை மருந்துக்கு பயன்படுத்தியதாக கூறுகின்றனர். மற்றொரு சிறந்த பருப்பு தேங்காய்ப் பருப்பு. தேங்காயும் எப்போது நம் நாட்டுக்கு வந்தது என்று உறுதியாக கூறமுடியாத வெளிநாட்டு மரம்தான். சரித்திர காலத்துக்கு முன்பே வந்து இந்தியத் தாவரமாக இன்று நிலைத்து விட்டது. தெங்கு எனும் கோக்கோஸ் நியூசிபெரா தென்னை மரம், பாமேசியீ எனும் பனைக் குடும்பத் தாவரங்களில் மிகவும் பயன்தரும் உலகப்புகழ்பெற்ற மரம். உலகம் விரும்பும் நம் தேங்காயின் உள் பருப்பு உலர்ந்தால் கொப்பரை. கொப்பரையும் அதிலிருந்து பிழிந்தெடுக்கும் தேங்காய் எண்ணெய்யும் முக்கிய வணிகப் பொருட்கள். செக்கு ஆடுதல், நார் எடுத்தல், கயிறு திரித்தல், கைவினைப் பொருள் செய்தல் என சிறு, குறு, குடிசை ஆலைத் தொழில்களுக்கு மூலப்பொருளாக உள்ளது தென்னை.

விக்கி: எனக்கும் தென்னை பற்றி தெரியும். வாழையடி வாழை என்பது போல தென்னையடி தென்னை எனலாம். தென்னம் பிள்ளையை நம்பியவர் தெருவுக்கு வரமாட்டார் என்பார்கள். பருப்பு உணவு. இளநீர் சுவையான, சத்தான, குளிர்ச்சி தரும் மருந்துக் குளிர்பானம். எண்ணெய் சமையல் பொருள். சோப்பு செய்ய, தலைமுடி பராமரிக்க உதவும். பிண்ணாக்கு கால்நடை விரும்பும் தீவனம். தேங்காய் மட்டை நார் கயிறு, கால்மிதி, பாய் தயாரிக்க உதவும். தேங்காய் ஓடு கொட்டாங்கச்சி அடுப்பெரிக்க, கரியாக்கவும், அகப்பை, கரண்டி செய்யவும் உதவுகிறது. நன்கு வளர்ந்த தென்னை மரத்தண்டு வெட்டு மரமாகும். அக்காலத்தில் கிராமத்தில் தற்காலிக ஆற்றுப் பாலமாக பயன்பட்டது. மட்டைகளைக் கீற்றுகளாக்கி முடைந்து கூரை வேயப் பயன்படுத்தினர். தென்னம் பாளையிலிருந்து வடியும் சாறும் வெல்லம், சர்க்கரை, பதநீராக பயன்பட்டது. வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தரும் கற்பகத் தரு, கற்பக விருட்சம், பூலோகத் தரு, சொர்க்கத் தரு என்றெல்லாம் புகழப்படுகிறது. தென்னங்குருத்து தித்திப்பாக, சுவையாக இருக்கும். அளவோடு சாப்பிட வேண்டும்.

வீரன்: தேங்காய்ப் பால், எண்ணெய், தென்னைப் பதநீர் பற்றி சர்ச்சைகள் பல இருந்தாலும் அறிவியல் பூர்வமாக தென்னைப் பொருள் எதிலும் தீமை ஏதுமில்லை. தென்னை, பனை, மூங்கில், வாழை ஆகியன பூலோகக் கற்பக மரம் என்றும் வானத்து மரங்கள் என்றும் கருதப்படுகின்றன. தென்னையில் நெட்டை, குட்டை என இருவகை உண்டு. நிறம், வடிவம், காய் பருமன் இவற்றில் பல உட்பிரிவுகள் உள்ளன. தற்போது ஈத்தாமொழித் தென்னை என்ற புதிய வகை பிரபலமாகி உள்ளது. குட்டைத் தென்னை மூன்றாண்டுக்குள் காய்க்கும். குறைந்த ஆயுட்காலம். அழகுக்காக, இளநீருக்காக புகழ்பெற்றது. தாவர எண்ணெய்களில் சோப்பாக்கும் தன்மை அதிகமுள்ள எண்ணெய் தேங்காய் எண்ணெய் என்கிறது வேதியியல். அச்சோப்பு கடின நீரில் நன்கு நுரைக்கும். கிருமிகளை அழிக்கும். பச்சைத் தேங்காயில் நல்கொழுப்பு, புரதம், நார்ப்பொருள், பொட்டாசியம், தாதுப்பு உள்ளன.

விக்கி: ஆயினும் வீடு கட்டுவதற்கு தென்னைக் குடும்ப மரங்கள் எதுவும் பயன்படுவதில்லை அல்லவா?

வீரன்: பனையின் பல பாகங்கள் மருந்தாக, உணவாக பயன்படுகின்றன. பனைச்சாரும், நுங்கு, பட்டை, வேர், பச்சை ஓலை, குருத்து வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்து. இளம் பனங்காயின் விதை நுங்கு. வெயிலுக்கு குளிர்ச்சி தரும். பழுத்த பனம்பழத்தை உலர்த்தி உணவாக்குவர். அவித்தோ தீயில் சுட்டோ இனிப்புச் சதையை உண்ணலாம். பனங்கொட்டை முளைக்கும்போது ஒற்றை விதையிலை நீண்டு தரைக்கடியில் பனங்கிழங்காக வளரும். மாவுப் பொருள் ஸ்டார்ச் நிறைந்த பனங்கிழங்கை சுட்டோ அவித்தோ உண்பர். பச்சைக் கிழங்கை துண்டுகளாக்கி உலர்த்தி ஒடியலாக்கி இடித்து மாவாக்கி கூழ் காய்ச்சி உண்டனர். பஞ்ச காலத்தில் பசிக்கு உணவாக இருந்த உணவு அது. பனை இலைகளை மட்டை என்பர். பழங்காலத்தில் பனை ஓலைகள் சுவடிகளாகப் பயன்பட்டன. பனை மட்டைகளை கூரை வேயப் பயன்படுத்தினர். இலைகளைப் பதப்படுத்தி கூடை, பாய், தடுக்கு, பெட்டி, தொப்பி என்று பல கைவினைப் பொருட்கள் செய்து கிராமப் பொருளாதாரம் மேம்படுகிறது. மட்டையிலிருந்து நார் எடுத்து துடைப்பம், தூரிகை செய்வர். பனைமரத்தண்டு கடினம், மென்மை என இருவகை. கடின வகை மரத்தண்டு பஞ்சு போன்ற நடுப்பாகத்தை அகற்றி வெளிப்புறக் கடினமான கருமரத்தை பக்குவப்படுத்தி கட்டுமானப் பணிகளில் தூண், சட்டம், குறுக்குவிட்டம் என்று பயன்படுத்துகின்றனர். இதுவும் கிராமங்களில் தற்காலிக ஆற்றுப் பாலம் தான். நெடுக்குவாக்கில் பிளந்து சுத்தம் செய்துவிட்டு தொட்டி, குழாய், தூம்பு, கைத்தடி பிடி செய்வர். மற்ற பாகங்களை அடுப்பெரிக்க பயன்படுத்துவர். இனிப்பான பனம்பாளைச் சாற்றில் சுக்ரோஸ் உள்ளது. பனைச் சாற்றைக் காய்ச்சுவர். சாறு நன்கு கொதித்து சுண்டிப் பாகாகும். குளிர்ந்ததும் பனைவெல்லம். அதுதான் கருப்பட்டி. பாகை மண் சாடிகளில் ஊற்றி மணலில் புதைத்து அசையாமல் முப்பது நாள் வைத்து எடுத்து வடிகட்டி படிகங்களைப் பிரித்தெடுப்பர். அவை...

விக்கி: பனங்கற்கண்டு. சில நாட்டு மருந்துகளில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவர்.

வீரன்: இனிப்பான மருந்து அது. பனைமர விதை கடினமானது, வலுவானது. வறட்சியான நிலத்திலும் தன்னை மேம்படுத்திக் கொண்டு முளைத்து வளரும், நிலைத்து நிற்கும். பனைமரத்தை பேச்சுவழக்கில் பனமரம் என்பர். உண்மையில் அது பணமரம். இயற்கையின் வரம் வானத்து மரம் பனைமரம்.

விக்கி: புராணக் கதைகளில் வானத்தில் தேவலோகத்தில் சில மரங்கள் இருந்ததாகப் புகழ்வர். அவை வேண்டுவன எல்லாம் தரும். தென்னை, பனை, வாழையும் அப்படித்தான். அறிவியல் பூர்வமாக இதை விளக்க முடியுமா?

வீரன்: பனைமரம் பூமி மண்ணைக் காற்றோ, நீரோ அடித்துப் போய் விடாமல் ஒரே இடத்தில் நிலைத்து இருக்கும் படி மண்ணைக் கட்டி விடும். அதேசமயம் காற்று விரைவாக, வேகமாக வீசிக் கெடுதல் செய்யாமல் தடுக்கும் காற்றுத் தடையாகவும் பனை இருக்கும். மிகத் திறமையான சூழல் நிர்வாகம் இது. பாமேசியீ குடும்பத்தின் பொராசஸ் ஃப்ளாபெல்லிஃபர் எனும் பனைமரத்தின் விசிறி போன்ற இலைகள் அறிவியல் முக்கியத்துவம் உள்ளவை, சிறப்பானவை. பனை ஓலையால் செய்யும் விசிறி வெயில் காலத்தில் நல்ல காற்றைத் தருகின்றன. தமிழகத்தின் கிராம பொருளாதாரத் துறையில் முக்கிய இடம் பெற்றுள்ள பனைமரம் எண்ணூறு விதங்களில் பயன்படுவதாக கும்பகோணம் அருணாசலப் புலவர் 'தாளவிலாசம்' எனும் பாடலில் கூறினார். வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்த சத்தான உணவுப் பொருட்களான பதநீர், பனைவெல்லம் எல்லாம் தற்போது அரிய பொருட்களாகி விட்டன.

உலகம் போற்றும் உன்னத வானத்து மரம் தமிழகத்தின் மாநில மரமாக உள்ளது. வெற்றிலையோடு சுவைக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றுக்கு பனையோடு நெருங்கிய தொடர்புண்டு. பாக்குமரம் பனை குடும்பத்தைச் சார்ந்தது. பனைமரங்களின் தோற்றம் ஆசியாவில் இருந்து வந்தது. பனையோலையில் வைக்கும் பொருள் கெடாது. வெற்றிலையைப் பாதுகாக்க பனையோலையில் பெட்டி செய்யும் வழக்கம் வந்தது. புதுக்கோட்டை சுதர்சனம் பட்டாணி வியாபாரி பனை ஓலைத் தொன்னையில் அவித்த பட்டாணி விற்கிறார். பையில் நறுக்கி வைத்திருக்கும் பனை ஓலைக் கரண்டி ஸ்பூன். பலரும் இதைப் பின்பற்றி பிரபலமாகி வருகிறது. கோடையில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்கும் பனைமரம் இயற்கை தந்த வரம்.

நாம் மறந்து வரும் பாரம்பரியங்களில் பனைமரமும் ஒன்று. நுங்கு, பனம்பழம், பனைவெல்லம் எனும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவண், பனைமட்டை, பனை ஓலை என்று பனையிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நுங்கில் அதிகளவு வைட்டமின் பி, சி, இரும்பு, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. நுங்கிலுள்ள நீர் கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடை குறைக்கும். பசியைத் தூண்டும். உடல் சூட்டால் ஏற்படும் அதிகத் தாகத்தை நுங்கு அடக்கும். நுங்கில் ஆந்த்யூசைன் எனும் வேதிப்பொருள் உள்ளது; அது புற்றுக்கட்டிகள் வருவதைத் தடுக்கும், ரத்தசோகை குணமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி தரும். பதநீர் உடல் வெப்பம் தணிக்கும். கிராமத்தில் சில பெரியவர்கள் பேன் தொல்லை இருந்தால் பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கலாம்.

பதநீரில் இருந்து தயாரிக்கும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றின் செரிமானச் சுரப்புகள் சீராகி நன்கு பசிக்கும். நுங்கை மசித்து வேர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசுவார்கள், விரைவில் சரியாகி தோல் பளபளப்பாகும். அடி முதல் நுனி வரை பயன் தரும் பனை. கதர் கிராமத் தொழில் ஆணையம் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பில் தேசிய அளவில் பத்து கோடிக்கு மேலான பனைமரங்கள் இருப்பதாக தெரிகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் ஐந்து கோடி உள்ளன. இந்த போராசஸ் மரத்தின் ஆயுள் மனிதரின் சராசரி வயதை விட அதிகம். முதிர்ச்சி பெற்று வளர 15 ஆண்டுகள் ஆகும். பனை வளர்க்க இடம் தேட வேண்டியதில்லை, உரம் இட வேண்டிய அவசியமில்லை, பராமரிப்புக் கவலையில்லை. கிளை பரப்பாமல் நேராக உயரமாக தாமாக முப்பது மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. புல்லினத்தைச் சேர்ந்த பனை சார்ந்த தொழில் பரவலாக இருந்துள்ளது. சென்னை மத்திய பனை ஆய்வு மையம் பனைப்பொருள் பற்றிய ஆய்வுகள் செய்து வருகிறது. பனைமரக் குருத்தோலையில் அழகான பூ, பொம்மைகள், பூச்சாடிகள், சிறிய பெட்டிகள், இடியாப்பத் தட்டு, பாய் போன்ற பல பொருட்களை உருவாக்கினர். சந்தைப் படுத்த முடியாமல், நெகிழியுடன் போட்டியிட முடியாமல் பல பொருட்கள் கைவிடப்பட்டன. முற்றிய ஓலைகளை மாடுகளுக்கு உணவாகத் தருகின்றனர். சில இடங்களில் தடுப்புவேலி அமைத்தனர். மக்கிய பிறகு தோட்டங்களுக்கு உரமாக இடலாம். பனை ஓலைகளில் உள்ள தண்டினை மட்டையில் இருந்து உரித்துப் பிரிக்கும் போது பனைநார் கிடைக்கிறது. சற்று கடினத்தன்மை கொண்டது. வண்ணம் தீட்ட பயனாகும் தூரிகை, வீடு பெருக்கும் துடைப்பம் போன்றவை செய்கின்றனர். கயிறு திரிக்கவும் முயல்கின்றனர்.

விக்கி: முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சத்து நிறைந்தது. பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. உலக மக்களால் விரும்பி உண்ணப்படும் முதல் பழம் வாழை. எக்காலமும் எப்போதும் எவ்விடமும் கிடைக்கும் இனிய பழம். இறைவனால் விரும்பி படைக்கப்பட்டதென்று உலகோர் மதிக்கும் வானத்து மரம் வாழை சுப காரியம் எதிலும் முதலிடம் பெறுகிறது. குழந்தை முதல் கிழவர் வரை விரும்பி உண்ணும் பழுத்த வாழைப்பழத்தின் நார்ச்சத்து மிகுந்த உணவு. பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. நன்கு பழுத்த வாழைப்பழத்தில் டிஎன்எஃப் (TNF) எனும் டியூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர் (Tumor Necrosis Factor) எனும் வேதிப்பொருள் புற்றுச் செல்களை எதிர்த்துப் போராடும். மூட்டுப் பிரச்சினை, ருமடாய்டு ஆர்த்ரைடிஸ், மனஅழுத்தம், இதயநோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும். வாழைப்பழம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். குமரி மாவட்டத்தில் பயிரிடும் ஏத்தன் பழம் எனும் கடுக்கரை நேந்திரம் வாழை உலகத்தரமானது. மட்டி வாழை குமரியில் மட்டும் விளையும் சத்தான பழம். வாழைக்காய் சிறந்த காய்கறி, சமையல் பொருள். வாழைப்பூ மஞ்சரி எனும் கூட்டுப்பூ உணவாகும். வாழைத்தண்டும் உணவுதான். வாழை இலை உணவுத்தட்டு. பட்டையிலிருந்து நார் எடுத்து வாழைநார் சேலை, வேட்டி நெய்து விற்பது பரவலாகி வருகிறது. வாழைமரம் தனக்கருகில் வாழைக்கன்றை உருவாக்கி விட்டு அழியும். அதாவது...

வீரன்: ஒருமுறை காய்த்த பின் தண்டு வெட்டப்பட்டு கிழங்கிலிருந்து புதிய கன்றுகள் வளரும். அதுதான் வாழையடி வாழை. ஆசியாவில் தோன்றி அமெரிக்காவுக்கு போன வாழை உலகம் முழுதும் பரவியது. அலெக்சாண்டர் இந்தியா வந்தபோது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டு கிரேக்கத்தில் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அரேபிய மொழியில் 'பனானா' என்றால் விரல் என்று பொருள். அன்று விரல் நீளம் இருந்ததால் அப்பெயர் சூட்டினர். மூசேசியே குடும்பத்தின் மூசா சேபியன்டம் வெப்பமண்டலப் பகுதியில் வளரும் பூண்டுவகைத் தாவரம். உண்மை மரக்கட்டை தண்டு இல்லாத, இலை உறைகளால் ஆன போலித் தண்டு (Pseudostem) கொண்டது. அதாவது வாழை மரமல்ல, செடி. உண்மையான தண்டு பூமிக்கடியில் இருக்கும் வேர்க்கிழங்கு. நிலத்தடிக் கிழங்கு ரைசோமில் இருந்து ஆறு மீட்டர் வரை வளரக்கூடியது. பெரிய நீள்வட்ட பசிய இலைகள் மற்ற மரங்களை விட வித்தியாசமானவை. வாழையில் ஆண், பெண் பூக்கள் இரண்டும் இருப்பினும் இதில் சேர்க்கை நிகழ்வதில்லை. பெண் பூவில் கருத்தரிப்பதில்லை. மகரந்தச் சேர்க்கை இல்லாமல் வாழைக்காய்கள் உற்பத்தியாகின்றன. இதைப் பார்த்தினோகார்பி (Parthenocarpy) என்கிறது அறிவியல். அதிக சூரிய ஒளி மற்றும் நீர் தேவை. உலகில் அதிகளவில் வாழையை மதித்து உற்பத்தி செய்து பயன்படுத்தும் இந்தியாவில் அதை கடவுளின் மரம் என்று கருதுவர். இறைவனுக்குப் பிடித்த பழம் என்பர். பழம் நடுவே விதைகள் காணப்படும். விதைகள் முதிர்ச்சி அடையாது, பெரிதாகத் தெரியாது.

விக்கி: இதுவும் வானத்து மரம் தானே? பாக்கும் தேக்கும் உயரமாக தென்னை, பனை போன்று வளர்ந்து பயனாகின்றன. அவற்றையும் வானம் தொடும் வானத்து மரங்கள் என்று கூறலாம் அல்லவா?

வீரன்: கோடை வந்தால் தன் அகலமான இலைகளை உதிர்த்து விட்டு பல மாதம் இலைகளின்றி நிற்கும் உயரமான இலையுதிர் மரம் தேக்கு. ஆனைமலை உலந்தைப் பகுதியில் கூட்டமாக உள்ளன. அதிக சூரிய ஒளியை விரும்பும். உச்சியில் மட்டுமன்றி பக்கங்களிலும் வெயில் படவேண்டும். நெருப்பு எளிதில் எரிக்காது. கரையான் எளிதில் அரிக்க முடியாது. காளான் பற்றாது. மரவேலைக்கு வேண்டிய எல்லாப் பண்புகளும் காணப்படும் தேக்கு தரமானது. நடுத்தர கனமும் கடினமுமான நார் அமைப்பு கொண்டது. பலமானது, கையாள எளிதானது. அழகான பழுப்பு நிறம், உறுதியானது, நீண்ட நாள் உழைக்கும். மழை, வெயில் தாங்கும். நன்கு ஆறும். நீரிலும் நிலத்திலும் கெடாமல் இருக்கும். கப்பல் கட்டவும் தொடர்வண்டியின் மர வேலைகளுக்கும் அதிகம் விரும்பப்படுகிறது.

கொட்டைப் பாக்கு, களிப் பாக்கு, சீவல் என பயன்படும் காய்களும், உணவுக்கலமாகப் பயன்படும் மட்டைகளும் தரும் பாக்கு அல்லது கமுகு மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுத்தப்படுகிறது. அடிமரம் தூண்களாக உதவுகிறது. மட்டை தொன்னை, வாளி, தொப்பி செய்யவும் குடிசைக் கூரையாகவும் பயன்படுகிறது. பாக்குப் பூங்கொத்து மணமுள்ளவை, சில இடங்களில் தலையில் அணிகின்றனர். காயின் மேல்தோல் அட்டைகள் செய்ய பயன்படும். பழங்காலத்தில் இருந்து விரும்பப்பட்டு, பயிரிடப்பட்டு, பயன்பட்டு வரும் பாக்குமரம் அறுபது அடி உயரம் வளரக்கூடிய, கன்னட மக்களால் தேவ மரம் என புகழப்படும் பாக்குமரம் பனைக் குடும்பம். கிளைகள் இல்லை. பத்து பெரிய இலைகள் அல்லது மட்டை ஓலைகள் வரை இருக்கும். வானுயர்ந்த மரங்கள். இப்படி சில மரங்கள் வளர்ச்சியும் பயனும் கருதி தேவலோக மரங்கள், வானத்து மரங்கள் என்று புகழப்படுகின்றன. வையகம் தழைக்கப் பயன்படும் அவற்றை வானத்து மரங்கள் என்பதில் மிகையில்லை. அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் தரவேண்டும் என்பதே அறிவுடைமை.

- புழல் தி.பாலகுமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.