1959ல் ஆஸ்திரியா டான்யூப் நதிக்கரையில் தன் விடுமுறையைச் செலவிட பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் காணாமல் போனார். எவ்வளவு தேடியும் அவருடைய உடல் கிடைக்கவில்லை. அவருடைய வியாபாரப் பங்காளியான ஒரு நண்பரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது. ஆனால் இறந்தவருடைய உடல் கிடைக்காததால் வழக்கு முன்னோக்கி செல்லவில்லை.
நண்பருடைய அறையில் நடந்த தேடலின்போது போலீசுக்கு மண்ணில் புரண்ட ஒரு ஜோடி ஷூக்கள் கிடைத்தன. வியன்னா பல்கலைக்கழகத்தில் அப்போது இத்துறையில் நிபுணராக இருந்த வியன்னா பல்கலைக்கழக தாவர தொல்லியல் ஆய்வுப் பிரிவு விஞ்ஞானி வில்ஹெம்ம் க்ளவ்ஸ் (Willhelm Klaus) என்பவரை அழைத்து ஷூக்களில் படிந்திருந்த மண்ணைப் பற்றிப் புலனாய்வு நடத்துமாறு போலீஸ் கேட்டுக் கொண்டது.
அந்த ஷூக்களில் ஏராளமான புதிய மகரந்தத் தூள்கள் இருந்தன. அவற்றுடன் புராதனமான புதைபடிவ மகரந்தத்தூளும் கலந்திருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
அத்துகள்கள் பழமையான மியோசின் (Miocene) காலத்தைச் சேர்ந்த காரியா (Carya) என்ற மரத்தில் பூத்த பூக்களில் இருந்த மகரந்தத் தூள்கள் என்பது தெரிய வந்தது. மகரந்தத் தூள் ஆய்வைப் பயன்படுத்தி உலகில் முதல்முறையாக நடந்த இந்த வழக்கு விசாரணை மூலம் மகரந்தத் தூள் ஆய்வு அறிவியலின் ஒரு பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது.இது போன்ற பழையதும் புதியதுமான மகரந்தத் தூள்கள் கலந்து கிடைக்க வாய்ப்பு உள்ள ஒரே இடம் வியன்னாவிற்கு வடக்கில் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய பிரதேசத்தில் மட்டுமே என்று வில்லியம் கூறினார்.
போலீஸ் இதைப் பயன்படுத்தி சந்தேக நபரை விசாரித்தபோது அந்த ஆள் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பிறகு தொடர்ந்த தேடலில் வில்லியம் குறிப்பிட்ட அதே பகுதியில் இருந்து இறந்து போனவருடைய உடல் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
காலம் கடந்து வாழும் தூள்
பார்வைக்கு மிகச் சிறியதாகத் தோன்றும் இந்த மகரந்தத் தூள் வெறும் ஒரு தூள் மட்டுமில்லை. பூந்துருணி என்றும் அழைக்கப்படும் இதற்கு இரண்டு அடுக்குகள் உள்ளன. எக்சைன் (exine) எனப்படும் இதன் வெளி அடுக்கு ஸ்போரோபாலினின் (Sporopollenin) என்ற பாலிமரால் உருவாக்கப்பட்டது. சூடுபடுத்தினாலும் அமிலம் அல்லது காரக் கரைசலைப் பயன்படுத்தினாலும் இந்த அடுக்கை உடைக்க முடியாது. இதை உடைக்க உதவும் வேதிப்பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இதன் வேதியமைப்பு பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதனால் இது எல்லா இடங்களிலும் பாதுகாப்பாக இருக்கிறது. காலங்கள் கடந்தாலும் இது அழியாமல் அப்படியே இருக்கிறது. எக்சைன் வெளியுறை பல அளவு மற்றும் வடிவங்களில் காணப்படுகிறது. செடிகளுக்கு ஏற்ப இதன் வடிவம் வேறுபடுகிறது. இதன் வடிவத்தை வைத்து இது எந்த இனத் தாவரத்தை சேர்ந்தது என்பதை அறியலாம்.
பல வடிவங்களில் உள்ள இவை பலவிதங்களில் பரவல் நடத்துகின்றன. காற்று, நீர், சுற்றுப்புறம், உயிரினங்களின் உடலில் பற்றிப் பிடித்து, தேனீக்கள், வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள் போன்ற பூச்சிகளின் உடல் மற்றும் ஆடு, மாடு போன்ற மேய்ச்சல் விலங்குகளின் மேல் தோலில் ஒட்டிக்கொண்டு இவை பரவுகின்றன. ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு மகரந்தத் தூள் கிடைத்தால் அந்த இடத்தில் காணப்படும் தாவரப் பல்லுயிர்த் தன்மையின் அளவு மற்றும் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு தூள் இருந்தால் போதும்
இரண்டு இனங்களைச் சேர்ந்த தாவரங்களின் மகரந்தத் தூள் எண்ணிக்கையும் பன்மயத் தன்மையும் ஒருபோதும் ஒன்றாக இருப்பது இல்லை. இதுபோலவே இரண்டு இடங்களில் இருக்கும் தாவரங்களின் மகரந்தத் தூள் எண்ணிக்கையும் உயிர்ப்பன்மயத் தன்மையும் ஒருபோல இருப்பதில்லை. இதனால் இதன் ஒரு மாதிரி தூளைக் கொண்டு அது பூமியில் எந்தப் பிரதேசத்தில் இருந்து சேகரிக்கப்பட்டது என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியும்.
காற்றிலும் நீரிலும் சுற்றுப்புறங்களிலும் இவை எல்லா நேரத்திலும் எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்துவதுண்டு.
பாறை ஆய்வுகள்
இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு மண்ணில் ஓடிய நீரில் கலந்திருந்த மகரந்தத் தூள் அன்று இருந்த பாறைகளில் ஒடுங்கி கிடக்கின்றன. இன்று அந்தப் பாறைகளை உடைத்துத் தூளாக்கி அடர் அமிலத்தில் கரைக்கும்போதும் மகரந்தத் தூள் பாதிப்படைவதில்லை. இவற்றைப் பற்றி ஆராய்ந்து நிபுணர்கள் அன்றிருந்த தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். இதுபோல பல காலகட்டங்களில் கடினமடைந்த பாறைகளைச் சேகரித்து அவற்றில் மறைந்திருக்கும் தூள்களை ஆராய்ந்து அந்தந்த காலகட்டங்களில் நிலவிய காலநிலையை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்கின்றனர்.
டைனசோர்களின் உணவு, அன்றிருந்த தாவரங்கள் பற்றி புதைபடிவ நிலையில் இருக்கும் அந்த உயிரினங்களின் கழிவுகளில் இருந்து விவரங்கள் கிடைத்துள்ளன. பாறைகளின் வயதை அளவிட இந்த முறை பயன்படுகிறது. மகரந்தத் தூள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு பாலினாலஜி (Palynology) என்று அழைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி பாறைகளின் வயதைக் கணக்கிட்டு அதன் மூலம் பெட்ரோலியம், நீர் மற்றும் கனிமத் தாதுக்கள் போன்றவை கிடைக்கும் இடங்கள் பற்றி ஆராயப்படுகிறது.
காலநிலை மாற்றங்களை அறிய
காலநிலை மாற்றம், சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அந்த காலத்தில் இருந்த விவசாய முறை, வாழ்க்கை முறை போன்றவை பற்றியும் இதன் மூலம் அறியப்படுகிறது. முன்பு வாழ்ந்த உயிரினங்களின் உணவு முறைகள், அன்று வாழ்ந்த தாவரங்கள் ஆகியவை பற்றித் தெரிந்து அவற்றில் பல உயிரினங்களைப் பாதுகாக்க இந்த ஆய்வுகள் உதவுகின்றன. நல்ல பயிற்சி பெற்ற ஆய்வாளர்கள், சிக்கல்கள் நிறைந்த கருவிகள் மற்றும் ஒப்பீட்டு முறையில் ஆராய உதவும் ஏராளமான மேற்கோள் ஆய்வு முடிவுகள் மகரந்தத்தூள் ஆய்வுகளுக்கு அவசியம்.
குற்றப் புலனாய்வு
குற்றங்களைக் கண்டுபிடிக்க மகரந்தத்தூள் ஆய்வுகள் உதவுகின்றன. குற்றம் நடந்த இடத்தில் உள்ள தாவரங்களின் பன்மயத் தன்மை, சந்தேகம் உள்ள இடத்தில் இருக்கும் பொருட்கள், மற்றவற்றில் காணப்படும் மகரந்தத் தூள் மாதிரிகளைப் பயன்படுத்தி ஒரு கைதேர்ந்த மகரந்தத் தூள் ஆய்வாளரால் நடந்த குற்றத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியும்.
சம்பவ இடத்தில் இருந்து முடி, துணி, மூச்சு விடும்போது மூக்கின் பகுதிகள், வாகன டயர்கள், காலணிகளில் உள்ள மண் துகள்களில் யாருக்கும் தெரியாமல் வந்து ஒட்டிக் கொள்ளும் ஒவ்வொரு மகரந்தத் தூளும் விலைமதிப்புமிக்க விவரங்களைத் தருகின்றன. கள்ளப் பணம், போதைப்பொருட்கள், உணவு, திருடு போன பழங்காலப் பொருட்கள் போன்றவற்றின் பயணப் பாதையை கண்டுபிடிக்க இத்துகள்களின் விரிவான ஆய்வு உதவுகிறது.
பல செடிகள் பூ பூக்கும் காலத்தை வைத்து குற்றம் நடந்த நேரத்தைக்கூட கண்டுபிடிக்க முடியும். என்றாலும் வழக்கு விசாரணையின்போது உதவுபவையாகவே இத்துகள்கள் இன்றும் கருதப்படுகின்றன. ஆதாரங்களாக இவை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எண்ணற்ற சாத்தியங்கள் உள்ள இத்துறை இப்போதும் மிகச் சிறிய ஒரு சில ஆய்வாளர்களால் மட்டுமே கையாளப்படுகிறது.
** ** **
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/all-you-need-to-know-about-pollens-eco-story-column-1.8473065
&
https://en.m.wikipedia.org/wiki/Forensic_palynology#:~:text=Austria%2C%201959,-One%20of%20the&text=A%20search%20of%20the%20suspect's,spruce%2C%20willow%2C%20and%20alder
- சிதம்பரம் இரவிச்சந்திரன்