கடந்த 23 ஆம் தேதி பட்டாக் கத்திகள் சகிதம் ரெளடிகளை போல மாணவர்கள் தங்களுடைய சக மாணவர்களை துரத்தி துரத்தி தாக்கும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல கடந்த மாதம் பேருந்து தினம் கொண்டாடுவதாக கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். இந்த வீடியோவும் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரியை சார்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது. சம்மந்தபட்ட மாணவர்கள் மீது பச்சையப்பன் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்திருந்தாலும் மாணவர்கள் பொறுக்கிகளை போல நடந்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை நாம்மால் பார்க்க முடிகின்றது.

chennai students clashபள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் யாரும் தங்களை இயல்பான மனிதர்களாக உணர்வதை விட அதிதமானவர்களாக, அடுத்தவர்கள் மீது ஆதிக்கம் செய்ய சிறப்புரிமை பெற்றவர்களாகவே தங்களை உணர்கின்றார்கள். அந்த உணர்வுதான் பல்வேறு வகையான போக்கிரித்தனமான செயல்களில் ஈடுபட அவர்களை தூண்டுகின்றது. அப்படியான உணர்வுகள் அவர்களிடம் கடத்தப்படுவதற்கு முக்கியமான ஊடகமாக திரைப்படங்களே உள்ளது என்றால் அது மிகையில்லை. இப்படியான பொறுக்கித்தனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களிடம் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் யார் என்று கேட்டால் ஒவ்வொரு மாணவரும் ஒரு சினிமா கதாநாயகர்கள் பெயரை சொல்வார்கள். இன்றைக்கு பல இளைஞர்களின் வழிபாட்டுக்குரிய கடவுள்களாக சினிமா கதாநாயகர்களே இருக்கின்றார்கள். இவர்கள் சினிமாவில் செய்யும் காலித்தனத்தையும், கருங்காலித்தனத்தையும்தான் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் சொந்த வாழ்க்கையில் செய்து பார்க்க முற்படுகின்றார்கள்.

பல நூறு கோடிகளை சொத்துசேர்த்து வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் காலூன்ற துடித்துக் கொண்டிருக்கும் பல சினிமா பிம்பங்களை இன்றைய தினம் காணுவது என்பது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. பொது மேடைகளில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பது போல பாவலா செய்யும் இதே நபர்கள்தான் திரைப்படங்களில் இளைஞர்களை சீரழிக்கும் வேசித்தனமான பாடல்களிலும், வன்முறையை தூண்டும் காட்சிகளிலும் நடித்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்று அதே நபர்கள்தான் ஊருக்கு உத்தமன் வேடம் போடும் கபடதாரிகளாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். திரைப்படங்களில் விபச்சாரத்தனத்தை போதித்து இளைஞர்களையும், மாணவர்களையும் சிந்தனை ரீதியாக சீரழித்த இந்தக் கயவர்கள் சொந்த வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அரசியல் அரிப்பை தீர்த்துக் கொள்வதற்காக தன்னிடம் குவிந்து கிடக்கும் பணத்தில் சிறு தொகையை முதலீடு செய்து மக்கள் மத்தியில் ‘தர்மபிரபு’ பட்டம் வாங்கி அரசியலில் காலூன்ற காத்துக் கிடக்கின்றார்கள்.

ஒரு வளரும் தலைமுறையே சிந்தனை ரீதியாக நாசம் செய்துவிட்டு அதைப் பற்றி எந்தக் குற்ற உணர்வும் இன்றி அவர்களால் மிக இயல்பாக இன்று மக்கள் மத்தியில் சென்று அரசியல் பேச முடிகின்றது. தன்னால் சிந்தனை ரீதியாக காயடிக்கப்பட்டு, தன்னுடைய பிம்பத்திற்கு அடிமையாக மாற்றப்பட்ட இளைஞர்களை நம்பித்தான் இது போன்ற சினிமா கழிசடைகள் இன்று அரசியல் பிரவேசத்திற்கு நல்ல நாள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இன்றைய இளைஞர்களை சீரழித்ததில் சினிமா கழிசடைகளுக்கு முக்கிய பங்குண்டு என்றால் அதில் இருந்து அவர்களை மீட்க எந்தவித கருத்தியல் பிம்புலமும் இல்லாமல் தக்கை மனிதர்களாக, பிழைப்புவாதிகளாக, அற்ப மனிதர்களாக, குறுகியமனம் படைத்தவர்களாக வளர்த்தெடுத்ததில் பெற்றோர்களுக்கும் அதற்கு அடுத்த படியாக ஆசிரியர்களுக்கும் பெரும் பங்குள்ளது. தன்னுடைய குழந்தைகளுக்குக் கடவுள் பக்தியை ஊற்றெடுக்க பெற்றோர்கள் செய்யும் முயற்சியில் ஒரு சிறு துளி அளவு கூட அவர்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக முயற்சி செய்வதில்லை. குறைந்த பட்சம் பெற்றோர்களுக்கே ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் எது என்பது இன்றும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கின்றது. சாதி சார்ந்து, மதம் சார்ந்து, வர்க்கம் சார்ந்து, தன்னுடைய நண்பர்களையும், உறவுகளையும் கட்டமைத்துக்கொள்வதையும், பிழைப்புவாதியாக வாழ்வது ஒன்றுதான் வாழ்க்கையில் உயர்வடைய ஒரே வழி என்றும் தன் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கும் பெற்றோர்களும் ஒருவகையில் இது போன்ற பொறுக்கிப் பிள்ளைகள் சமூகத்தில் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றார்கள்.

அடுத்த படியாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களும் மாணவர்கள் சீரழிந்து போவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றார்கள். ஒழுக்கமான நடத்தை எது என்பதையும், சமூக மனிதர்களாக வாழ்வது எப்படி என்பதையும் ஒரு மாணவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உள்ளது. ஆனால் இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு பள்ளி பாட புத்தகத்தை தாண்டிய எந்த அறிவும் இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும் போது அவர்களால் எப்படி தன்னுடைய மாணவர்களுக்கு பல்வேறு சமூக கருத்துக்களை அறிமுகப்படுத்த முடியும்? அவர்கள் ஒழுக்கமாக வளர அறிவு ரீதியான புத்தக வாசிப்புக்கு வழிகாட்ட முடியும்? ஆசிரியர்கள் தங்களை ஒரு தனி இனமாகவே மாற்றிக் கொண்டுவிட்டார்கள். வரும் வருமானத்தை எப்படி கந்துவட்டிக்கு விடுவது, பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என்று பணத்தை பெருக்குவதில்தான் பெரும்பாலான ஆசிரியர்களின் சிந்தனை சென்றுகொண்டிருக்கின்றதே ஒழிய மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், அவர்களை அரசியல் ரீதியாக பயிற்றுவிக்க வேண்டும், சினிமா கழிசடைகளின் அயோக்கியத்தனத்தை மாணவர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மாணவர்கள் உண்மையில் தங்களின் வழிகாட்டியாக யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும், தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடம் எப்படி சாதி, மத, வர்க்க வேறுபாடு இன்றி பழக வேண்டும் என்பதை எல்லாம் அவர்கள் ஒரு போதும் சொல்லித்தருவது கிடையாது. அப்படி செய்திருந்தால் இன்று சக மாணவனை பட்டாக் கத்தியை தூக்கிக்கொண்டு ஓட ஓட வெட்டி சாய்க்கும் வன்மம் அந்த மாணவர்களுக்கு வந்திருக்காது.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடனும் உரையாடுவது என்பதே மிகப் பெரிய அளவிற்கு குறைந்திருக்கின்றது. உரையாடும் போது மட்டுமே அவர்கள் சிந்தனை எந்த திசையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நிச்சயம் மதிப்பிட முடியும். ஒரு மாணவன் தான் விஜய் ரசிகன், அஜித் ரசிகன், சூர்யா ரசிகன், சிம்பு ரசிகன் என்று சொல்லிக்கொண்டு நான்காம் தர பொறுக்கிகள் போல ஆடை அணிந்து கொள்வதையும், தலை முடியை தாறுமாறாக கீரிக்கொள்வதையும், கை கால்களில் கண்ட கருமாந்திரங்களை சுற்றிக் கொள்வதையும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். அப்படி செய்வது என்பது நாளை அவர்கள் பற்றிய சமூக மதிப்பீடுகளை வீழ்ச்சியடைய செய்துவிடும் என்பதை புரியவைக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவர்கள் விரும்பம்படி நடந்துகொள்ள விட்டுவிட்டால் அந்தப் பிள்ளைகள் பொறுக்கிகளாக, ரெளடிகளாக, சமூகத்திற்கே பெரும் பாரமாக மாறுவதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்.

ஒரு ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் இளைஞர்கள் சீரழிந்த சிந்தனையில் மூழ்கிக்கிடக்கின்றார்கள் என்றால் அவர்களிடம் சென்று ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்த முயற்சி செய்யுங்கள். இப்படி வாழ்வதால் அவர்கள் எதை இழக்கப் போகின்றார்கள், அவர்களைப் பற்றிய சமூக மதிப்பீடுகள் எப்படி வீழ்ச்சி அடைகின்றன என்பதை சொல்லி புரிய வைத்து அவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்குங்கள். இதை எல்லாம் செய்வதற்கு முதலில் நாம் சாதி கடந்தவர்களாகவும், மதம் கடந்தவர்களாகவும், வர்க்கம் கடந்தவர்களாகவும் இருக்க வேண்டும். நம் மனதிற்குள்ளாகவே ஆயிரம் அழுக்குகளை வைத்துக் கொண்டு நம்மால் ஒருபோதும் ஒரு ஆரோக்கியமான, ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை நாமும் கொஞ்சம் உணர வேண்டும்.

- செ.கார்கி

Pin It