வடசென்னையின் ஸ்ட்ராகான்ஸ் ரோட்டில் இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் உள்ளது. திரு திருவிக இங்கு இருந்து தான் தன் பணிகளை 1918 ஆண்டிலிருந்து மேற்கொண்டார்.

இந்த கட்டிடத்திற்கு சரியாக 30 அடி தள்ளி இருக்கிறது மஹாலட்சுமி தியேட்டர். அந்த காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரையரங்கம். எம்ஜியார் படங்களுக்கு பெயர் போனது. அப்படி ஒரு பழமையான சுண்ணாம்பு கட்டிடம். இரும்பு கதவு கோட்டை போன்றதொன்று தோற்றத்தைக் கொடுக்கும். சாமி மற்றும் பேய் படங்கள் full ஷோ ஓடும். ஒவ்வொரு முறையும் இந்த வகை படங்கள் போடும்பொழுது அரங்கின் உள்ளே நான்கு மூலைகளிலும் ஆண்கள் தட்டு, கற்பூரம், விபூதி கற்பூரத்தோடு நிற்பார்கள். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜமீன் கோட்டை என்று ஒரு படம், கிளைமாக்ஸ் அம்மன் பாடலுக்கு பெண்கள் சரமாரியாக சாமி ஆட, விபூதி கொட்டி சூடம் காட்டி, கற்பூரம் அவர்களின் வாயில் திணிக்கப்பட்டது.கரகாட்டக்காரன் படத்தில் கடைசியில் வரும் "மாரியம்மா" பாட்டிற்கும் இதே நிலைமைதான். இருட்டு அறையில் பாடல் அலற, பெண்கள் தலைவிரி கோலமாய் ஆட தாறுமாறு த்ரில்லிங் அனுபவம் அது!

சரி விஷயத்திற்கு வருவோம்.

நொறுக்குத்தீனி வியாபாரத்திற்காகத் திரையரங்குகள் படங்கள் ஓட்டி கொண்டிருக்கும் இந்த காலத்தில், படங்களை ரசிப்பதற்காக நொறுக்குத் தீனி விற்கப்பட்டக் காலங்கள் அவை. வீட்டிலிருந்தே பட்டன் முறுக்கும், அதிரசமும் எடுத்து செல்லுவோம். அதற்கும் மேல் இண்டர்வல்களை அதிகமாய் எதிர்பார்த்தது அந்த இரண்டு ரூபாய் பாப்கார்ன் (பாப்கார்ன் என்றால் பாப்கார்ன் தான், இந்த சீஸ், கேரமல் போன்ற அலட்டல் இல்லாத சாதாரண மெல்லிய பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்ட பாப்கார்ன்). பின்பு பிங்க் மற்றும் டிஸ்டெம்பர் பச்சை நிறத்தில் கிடைக்கும் கோன் ஐஸ்கிரீம். இப்பொழுது கிடைக்கும் பற்பசை போல் வழ வழா கொழ கொழா ஐஸ் கிரீம்கள் போல் அல்லாது கொஞ்சம் நறநற என்று ஆனால் மிகுந்த சுவையுடன் இருக்கும். ஐஸ் கிரீமை தாங்கி இருக்கும் அந்த கோன் உருகும் ஐஸ் கிரீமின் ஈரத்தில் நனைந்து குழைந்து விடாமல் அந்த ஏ.சி. இல்லாத திரையரங்கில் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடிப்பதுதான் அந்த காலத்தில் சாகச அனுபவம்.

ஐஸ் கிரீம் சாப்பிட்டு முடித்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்ட வேளையில் வெள்ளை சட்டை வெள்ளை வெட்டி முட்டிக்கு மேல் அணிந்து வெள்ளை தலைப்பாய் கட்டோடு ஒரு தாத்தா வருவார். கையில் பெரிய தகரப்பெட்டி, எண்ணெய் கடைகளில் காணப்படுமே அந்த வகை.அதன் மேல் சதுர சதுரமாக கிழிக்கப்பட்ட தினத்தந்தி மாலைமலர் தினசரி பக்கங்கள்.

சம்சா...

பொதுவாக "சமோசாக்கள்" எங்களுக்கு அறிமுகம் ஆனது பின்புதான். வடசென்னை பகுதிகளில் முதலில் தோன்றியது "சம்சாதான்". இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி அது என்பதால் அவர்கள் வழிவந்த "சம்சாக்கள்தான்" எங்களின் முதல் அறிமுகம்.

அந்த வெள்ளை உடை தலைப்பாக்கட்டி தாத்தாவின் தகரப்பெட்டகத்தில் அந்த சம்சாக்களின் ராஜ்ஜியம்தான். அந்த பெட்டகத்தில் இருந்து எழும் அந்த ஒரு சூடான வாசனைபோல் இன்னுமொரு வாசனையை எந்த ஒரு நட்சத்திர உணவகத்தில் கூட என் நாசி உணர்ந்ததில்லை.அப்படி ஒரு வாசனை. அந்த சம்சாக்களின் மேலே எண்ணெயில் பொறித்த கருவேப்பிலை இலைகளைத் தூவி இருக்கும். ஒரு சம்சா விலை ஒரு ருபாய் என்று நினைக்கிேறன். சம்சாவின் வெளி தோல் கடினமாக இருக்கும் நவீன சமோசாக்களின் மென்தோல் போலில்லாமல்.

உள்ளிருந்து அந்த வதங்கிய நீளமாக வெட்டப்பட்ட வெங்காயத்தின் மணம் ஒரு விதக் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும். அதன் பின்னே அந்த வாசனையை முகர்ந்துகொண்டே வாயில் எச்சில் ஊற அந்த சம்சாவின் கடின தோலை எலும்பு கடிப்பதைப்போல பிடித்து இழுத்து கவ்வினால் உள்ளிருக்கும் அதிகம் வறுக்கப்படாத, சற்றே பச்சையாக இருக்கும் மென்மையான வெங்காயம் சற்றே இனிப்பு சுவையுடன் நம்மை வரவேற்கும். அடுத்த கடி கொஞ்சம் எளிமையாய் இருக்க வாயில் ஒரு பெரும் பகுதி சிக்கி கொள்ள யாரும் பார்க்காத வண்ணம் அந்த சம்சாவை வாயை மூடி கொண்டே மென்று முடிப்பது சுஹானுபவம். உள்ளே வெங்காயத்தை தவிர மசாலா பொருட்கள் ஒன்றும் இருக்காது ஆனாலும் அப்படி ஒரு சுவை எப்படி சாத்தியம் என்று அநேக நாட்கள் யோசித்திருக்கிறேன். அந்த சம்சாவினுள் இருந்த பூரணம் கடவுளுக்கு ஒப்பாயிருந்தது. கடவுளின் இருப்பின் கேள்விக்கான பதில் அந்த சம்சாவில் இருந்தது. அந்த சம்சாவை உண்ணுவது என்னைப் பொறுத்தவரையில் ஒரு தீவிரஆன்மீக அனுபவமாக இருந்தது.

இதே போன்ற ஒரு ஆன்மீக அனுபவம் இன்றும் பெற ஒரு வழி உள்ளது. உருது மொழியில் 'ஜன்னத்' என்று ஒரு சொல் இருக்கிறது. அச்சொல்லின் அர்த்தம் "சொர்க்கம்" என்பதாகும். சரியாக சாயங்காலம் 4 மணிக்கு ஒரு தூக்கு எடுத்து கொண்டு மவுண்ட் ரோடு தர்கா எதிரே இருக்கும் புஹாரி ஹோட்டலுக்கு சென்றால் மட்டன் சமோசா என்கிற ஒரு அதிசய பண்டம் கிடைக்கும். மொறுமொறுவென உள்ளே கொந்திய ஆட்டுகரியின் ருசி இருக்கும் ஆனால் கண்ணுக்கு கறி தெரியாது.

அந்த சமோசாவில் ஒரு நான்கைத் தின்றுவிட்டு அங்கேயே பிரசித்திபெற்ற புஹாரியின் ஏலக்காய் டீயை சுர்ர்ர்... என்று உரிஞ்சினால். அங்கே வாய்க்கும் ஆன்மீக அனுபவத்திற்குப் பெயர் "ஜன்னத்".

தள்ளுவண்டி

பஜ்ஜி சாயங்காலங்களுக்கு பெயர் போன சென்னைக்கு பம்பாய் ஹீரோயின்களின் வரவு போல் 90களின் துவக்கத்தில் எங்கு பார்த்தாலும் முளைத்தன தள்ளுவண்டி சமோசா கடைகள். வடசென்னையைப் பொறுத்தவரை 90களின் துவக்கத்தில் சௌகார்ப்பேட்டையைத் தாண்டி வட இந்தியர்கள் குறிப்பாகச் சேட்டுகள் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. குட்டி குட்டியாய் பழைய எண்ணெயில் முக்கி பொரித்த சமோசாக்கள். மெல்லிய தோல், உள்ளே வெங்காயம், பச்சை மிளகாய் சில சமயம் பட்டாணி ஓமம் என்று பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியன கவர்ச்சி சமோசாக்கள். அவைகளை ஊறவைத்து சாப்பிட ஒரு பக்கம் சுட சுட பட்டாணி குழம்பு என்று வட இந்தியர்களும், தமிழர்களும் ரோட்டோர சம பந்தியில் அளவளாவிக் கொண்டார்கள். தொழில் பேசினார்கள், வீடுகளை வாடகைக்கு விட்டுக்் கொண்டார்கள், ஜமிக்கி வைத்த புடவையை விற்க ஆரம்பித்தார்கள்.

1998 The year of the onion (வெங்காயத்தின் வருடம்)

உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம், 90 சதவிகிதம் நீரை மட்டுமே அடிப்படை பொருளாக கொண்ட வெங்காயம் இந்தியாவை ஆட்டிவைத்த வருடம் அது.

வெங்காய விலையேற்றத்தால் பாஜக படு தோல்வியைச் சந்தித்த வருடம் அது.

அந்த வருடம் காங்கிரசோடு கூட்டணி வைத்தது வெங்காயம்தான்.

இப்படிப் பட்ட விலையேற்றம் தமிழ்நாட்டில் சமோசாக்களின் வரலாற்றை திருப்பிப் போட்டது. முதல் முறையாக சமோசாக்களின் உள்ளே வெங்காயத்திற்குப் பதிலாக முட்டைக்கோஸ் திணிக்கப்படும் அவல நிலை உருவானது. சமோசா பிரியர்கள் இதனால் இடிந்து போனார்கள். உணர்வு மிக்க வெங்காயத்திற்கு பதிலாக முட்டைக்கோஸைப் பயன்படுத்திய மஹா மோச செயல் அன்பே வா படத்தில் எம்ஜியாருக்கு பதிலாக ஏவிஎம் ராஜனை நடிக்கவைத்ததற்கு ஒப்பாயிருந்தது..

never... என்று தெய்வமகன் சிவாஜி போல் அலறி ஓடினார்கள் சமோசா வெறியர்கள் ...

அன்று சமோசா சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டேன்.ஆனால் இன்றுவரை வெங்காய விலை குறைந்தாலும் அக்கிரமக்காரர்கள் வெங்காயத்தோடு முட்டைக்கோஸை எப்படியாவது கலந்து விடுகிறார்கள். சென்னை வாசிகளிடையே கலந்த வட இந்தியர்களைப் போல.

மாரடைப்பு சமோசா

90களின் கடைசியில் சமோசாக்களின் ராஜ்யத்தை படையெடுத்து வெற்றிகொண்டது. தில்லி ஸ்டைல் என்று அழைக்கப்பட்ட குண்டு சமோசாதான் அது.

அந்த சமோசா ஒரு நேர்முகக் குறியீடு.

அதை உண்டால் நாம் எப்படி ஆகித் தொலைப்போம் என்கிற ஒரு முன்னெச்சரிக்கை தோற்றத்தைக் கொண்டது அவைகள். அந்த ஒரு ரூபாய் சம்சாக்களை போல் இல்லாமல் கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவை இந்த சமோசாக்கள்.

கொழு கொழு தேகம், உருளைக் கிழங்கு, பட்டாணி, சற்றே வசதி இருந்தால் வேர்கடலையோ இல்லை முந்திரி பருப்போ அடக்கிய edible (உண்ணக்கூடிய) சிரிக்கும் புத்தர்கள் அவை.

இன்று வரை ஆசைப்பட்டு அவைகளைத் தின்று தொலைத்தால்... இரவில் கனவில் ஒரு ராட்சச சமோசா துரத்திவருவதுபோல் கனவு வந்து பயமுறுத்துகிறது.

ஒரே நேரத்தில் கடவுளாகவும், சைத்தனாகவும் இருக்க பெற்ற சமோசாக்கள் பற்றி ஏதேனும் அரேபிய கதை இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முக்கோண வடிவில் இருக்கும் அவை இலுமிநாட்டி பண்டமாக கூட இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது.

சமோசாக்களை முப்பாட்டன் உணவு என்று சொல்லி கூட ஒரு பகுதியினர் கொண்டாடலாம்.

மொத்தத்தில் சமோசா - கடவுள்.