பவன முக்தாசனம்:
அடிவயிற்றில் சேரும் வாயுக்களை வெளியேற்றி உடலுக்கு விடுதலை அளிப்பதால் அந்த பெயர்.
பலன்கள் : வயிற்றில் சுரக்கும் அதிக அமில சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் அல்சர், வயிற்று புற்று நோய் ஆகியவை வராமல் தடுக்கும். வாயு கோளாறுகளை போக்குவதால் புத்துணர்ச்சியை நாள் முழுவதும் அளிக்கிறது. மலச்சிக்கல் செரியாமை, வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. உடல்., எடை, அதிக வயிற்று தசை ஆகியவற்றை குறைக்கிறது. மாரடைப்பு நோய், இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயல்பாட்டினை அதிகரிக்கிறது. மூல வியாதி கோளாறுகள், இரத்தக் குடல் வால்வுக் கோளாறுகள், மூட்டுவலி, வயிற்றுவலி பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஆகியவற்றை போக்குகிறது. பிரசவித்த பெண்களின் அடிவயிற்று பெருக்கத்தை குறைப்பதற்கு அர்த்த ஹலாசனம் செய்தவுடன் இந்த ஆசனத்தை செய்து வந்தால் அதிக பலன் கிடைக்கும்.
செய்முறை : 1.
1. இந்த ஆசனத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து செய்ய வேண்டும்.
2. சவாசனத்திலிருந்து கால்களை ஒன்று சேர்க்கவும். வலது காலை உயர்த்தி மடித்து கால் முட்டியை வயிற்றை நோக்கிக் கொண்டு வரவேண்டும்.
3. கை விரல்களை ஒன்று சேர்த்து முட்டியை பிடித்து வயிற்றை நோக்கி அழுத்த வேண்டும்.
4. இடது காலை மடிக்காமல் தலையை உயர்த்தி எழுந்து முகவாய் கட்டையை வலது கால் முட்டியை நோக்கி கொண்டு வந்து சேர்க்கவும்.
5. சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்து விட்டு தலை, கால்களை பிரித்து விரிப்பின் மீது படுக்கவும்.
6. மாற்று ஆசனமாக இடது காலை மடித்து முன்பு போல் செய்யவும்.
7. வலது இடது என மாற்றி மாற்றி மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்திடல் ஓய்வு எடுக்கவும்.
எண் : 2.
1. இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீது கொண்டு வரவும்.
2. கைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால்முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடுத்து தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும்.
3. சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்துவிட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்கவேண்டும்.
4. மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்திற்கு வரவேண்டும்.
குறிப்புகள் :
1. சாதாரண மூச்சில் பழக வேண்டும். அப்படி முடியாதவர்கள் வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுத்து செய்யவும்.
2. கழுத்துவலி உள்ளவர்கள் தலையை உயர்த் தாது தரையின் மீது வைத்து கால்களை மட்டும் மடித்து அழுத்தம் கொடுத்து செய்யவேண்டும்.
அப்படி செய்து வந்தால் நாற்பது வயதிற்கு மேல் வரும் ‘லும்போ சேக்ரல்ஸ்பாண்டி லைடிஸ்’ மற்றும் ‘லும்போ எவர்டிலரே” எனும் அடிமுதுகு வலி (இடுப்பும் முதுகுத்தண்டும் சேரும் இடம்) குணமாகும் (கடைசி ஐந்து முதுகுத்தண்டு வட எலும்புகளின் இறுதியில் சேக்ரம் என்ற பெரிய எலும்பு உள்ளது. அந்த சேக்ரத்தின் மேல் கடைசி எலும்பு அழுத்தி விட்டால் வலி மிகக் கொடுமையாக இருக்கும்)
படகு ஆசனம்
நவ்காசனம்:
குடல் ஏற்றம் தெரியாமல் கோடி வைத்தியம் பார்த்தானாம் - பழமொழி.
வயிற்றின் நடுப்பகுதி தொப்புள் ஸ்தானம் ‘ஸோலார் பிளக்ஸ்’ என்று கூறுவர். தமிழில் வயிற்று மூளை என்று பெயர். காரணம் நமது மனநிலைக்கு ஏற்ப இப்பகுதி மேல் நோக்கி நகர்வதை குடல் ஏற்றம் என்று கூறுவர். இதை எந்த மருத்துவ சிகிச்சையாலும் குணம் செய்ய முடியாது. நகர்ப்புறங்களில் இன்றும் உச்சி முடி எடுத்தல் அல்லது சொருகு எடுத்தல் என்ற முறையில் இதை குணம் செய்வர்.
அப்படி மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி குடல் நகர்வதால் நமக்கு ஏற்படும் விளைவுகள்.
1. வயிற்றில் எரிச்சல்
2. தொப்புளை சுற்றி வலி
3. அதிக வாயு பிரிதல்
4. செரியாமை
5. மலச்சிக்கல்
6. வயிற்று போக்கு
7. வாந்தி எடுத்தல் அல்லது
வாந்தி வருவது போல் இருத்தல்.
8. கண்பார்வை குறைதல்.
9. இதய படபடப்பு
10. தூக்கத்தில் விந்து வெளியேறுதல் அல்லது சிறுநீர்போதல்.
11. பெண்களுக்கு வெள்ளை படுதல்.
12. மாதவிடாய் கோளாறுகள்.
13. குழந்தை இன்மை.
14. இளநரை ஏற்படுதல்
15. பல் கோளாறுகள்
16. தலையில் வழுக்கை ஏற்படல்
போன்ற கோளாறுகள் தோன்றலாம். இவைகள் வராமல் இருக்க இவ்வாசன பயிற்சிகள் மிகவும் உதவுகின்றன.
பலன்கள் :
1. வயிற்று தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் கணையம் நன்கு இயக்குகிறது. அதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
2. நரம்பு தளர்ச்சியை போக்குகிறது.
3. வயிற்றில் தோன்றும் புழுக்களையும், பூச்சிகளையும் எளிதில் மலத்தின் மூலம் வெளியேற்றுகிறது.
4. நுரையீரல், கல்லீரல், கிட்னி மலக்குடல் ஆகியவற்றில் வேலைகளை துரிதப்படுத்துகிறது.
5. ஆண், பெண்களின் போக சக்தியை அதிகப்படுத்துகிறது.
6. உந்திக்கமலம் (தொப்புள் மணிப்பூரக சக்கரம்) இடம் பெயராதவாறு காப்பாற்றுவதோடு ஏற்கனவே இடம் பெயர்ந்திருந்தாலும் சரி செய்கிறது.
7. நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.
8. இளமையைக் காப்பதில் இவ்வாசனம் பெரும் பங்கு வகிக்கிறது.
செய்முறை :
1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்து மல்லாந்து படுக்கவும்.
2. இரண்டு கால்களையும் 90 டிகிரிக்கு உயர்த்தவும்.
3. கால் மூட்டுப் பகுதிகளை இரண்டு கைகளால் சிறுகப் பிடிக்கவும்.
4. கால்களை மடிக்காமல் வேகமாக பூமியை நோக்கிக் கொண்டு வரவும், அதே நேரத்தில் உடம்பை பூமியிலிருந்து உயர்த்தி இடுப்பு புட்டபகுதி மட்டும் தரையின் மீது இருக்கும்படி வைத்து சமநிலைப்படுத்தவும்.
5. சமநிலைக்கு உடம்பும் கால்களும் வந்ததும் கைகளை பிரித்து உள்ளங்கைகளை கால் முட்டியின்போது சற்று உயர்த்தி நிறுத்தவும். இது ஒரு படகு நீரில் மிதக்கும் அமைப்பு போன்று இருக்கும்.
15 எண்ணிக்கைகள் அப்படியே சாதாரண மூச்சில் இருந்து விட்டு முதலில் தலையை தரை மீது கொண்டு வந்து படுக்கவும், பிறகு கால்களை தரை மீது வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும். இதுபோல் இவ்வாசனத்தை 3 தடவைகள் செய்ய வேண்டும்.
குறிப்புகள் :
1. உடம்பை பூமியிலிருந்து உயர்த்த முடியாதவர்கள் ஒரு பெஞ்ச் மீது முதலில் கால்களை வைத்துவிட்டு பிறகு கைகளை ஊன்றி எழுந்து இவ்வாசனத்தை பழகலாம்.
2. அடி முதுகு வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக் கூடாது.
3. முதல் மூன்றுநாட்கள் அடி வயிற்றில் சிறிது வலி தோன்றும் 4ம் நாள் வலி குறைந்து வலி போய்விடும். அவசரம்வேண்டாம்.
4. காலை கண்விழித்து எழுந்ததும் படுக்கையிலேயே இவ்வாசனத்தை செய்து வந்தால் உடலில் சுறுசுறுப்பு தோன்றி மலம் இலகுவாக வெளியேறும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.
(நன்றி : மாற்று மருத்துவம் ஏப்ரல் 2009)