புத்தாண்டு பிறந்தாலே அனைவரும் புதியதொரு உறுதிமொழியை எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்ற முயல்வது வழக்கம். அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர்கள் இந்த ஆண்டு எடுத்துள்ள உறுதிமொழி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரும் பரிசுப்பொருள்களை இனி வாங்காமல் இருப்பது என்பதாகும்.

அப்படி வாங்குவதால் என்ன தீமை வந்துவிடும், வாங்காவிட்டால் என்ன நன்மை ஏற்படும் என்று பார்த்தால் மிகப்பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இருப்பினும் இதை வெறும் அடையாளமான சம்பிரதாயமாகக் கருதாமல், அதன் பின்னே உள்ள உணர்வுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

மருந்துக் கம்பெனிகள் டாக்டர்களுக்கு தேவைப்படும் ஸ்டெதாஸ்கோப், மேஜை காலண்டர், கடிகாரம், தோல் பை, பேனா, லெட்டர்பேடு, டி ஷர்ட்டுகள், காபி கோப்பைகள், தெர்மா மீட்டர் போன்றவற்றை பரிசுப் பொருள்களாகத் தருவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் கையூட்டு என்று கூறிவிட முடியாது என்றாலும், தங்கள் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைக்கத் தூண்டும் சாதனங்கள் என்பதாக டாக்டர்கள் சங்கம் கருதியதால் சுயமாக இந்தத் தடையை விதித்துக் கொள்ள அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.

மருத்துவம் என்பது சேவையாக மட்டும் இல்லாமல் பெருந்தொழிலாகவும் மாறி வருகிறது. மருத்துவத்துறையைச் சார்ந்து இன்சூரன்ஸ் தொழிலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், மருத்துவச் சாதன தயாரிப்பு நிறுவனங்களும், பெரிய மருத்துவமனை நிறுவனங்களும் செழித்து வளர்கின்றன என்றால் மிகையில்லை. கோடிக்கணக்கான ரூபாய் இதில் புரள்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் கூட தங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெறுவதே உயிருக்கு உத்தரவாதமானது என்று கருதுகிறார்கள். அப்படிப்பட்ட உன்னத நிலையில் உள்ள அமெரிக்க டாக்டர்கள் எடுத்துள்ள இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் பின்னணியில், மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக இந்திய டாக்டர்களுக்கு சில கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம் என்று கருதுகிறோம். நம் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள் என்பதால் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் நோய் வாய்ப்படுகிறார்கள். வசதியான குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட நல்ல ஆகாரம் எது. தீமையானது எது என்பதை முழுக்க உணராமல் சோகை உள்ளிட்டவற்றால் அவதிப்படுகிறார்கள்.

மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, குடும்பத் தலைவரின் வேலை, தொழில் போன்றவற்றைப் பற்றியே சிந்தனைகளைச் செலுத்தி உள்ளத்தையும் உடலையும் வருத்திக்கொண்டு மன அழுத்தம் காரணமாகவே நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக வரும்போது டாக்டர்கள் செய்யக்கூடிய முதல் சேவை, அவர்களைப் பீதியில் ஆழ்த்தி, மனோரீதியாக பயப்படுத்தாமல் இருப்பதேயாகும்.

முதுகில் கட்டி எழும்பியிருக்கிறது. ஒரு மாதமாக பழுக்கவும் இல்லை, ஆறவும் இல்லை என்று நோயாளி கூறினால், எதற்கும் பயாப்ஸி உள்ளிட்ட சோதனைகளைச் செய்து பார்த்துவிடுவோம், இது கேன்சராகவும் இருக்கலாம் என்ற டாக்டரின் எச்சரிக்கை உணர்வோடு கூடிய கருத்து, அந்த நொடி முதல் நோயாளியின் மனத்தில் இடியாக இறங்கி அச்சுறுத்துகிறது.

நரம்புத் தளர்ச்சி காரணமாக, கையில் குடைச்சல் என்று டாக்டரைச் சந்தித்த நடுத்தர வயதுக்காரர் ஒருவரிடம், இது மாரடைப்புக்கு முன்னோடியாக இருக்கலாம், எதற்கும் ஈ.சி.ஜி. எடுத்துவிடுங்கள், தேவைப்பட்டால் ஆஞ்சியோ செய்து பார்க்கலாம் என்று ஒரு மருத்துவமனைத் தரப்பில் கூறினால் அந்த நோயாளியின் மனம் என்ன பாடுபடும்? மருத்துவர்கள் தங்களுடைய சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக இப்படிச் சொல்வதில் தவறு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை அவர் சொல்லும் விதம்தான் நோயாளிக்கு மரண பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ஹோமியோ மருத்துவத்தின் சிறப்பு அது உடலுக்கு மட்டும் அல்ல, உள்ளத்துக்கும் சேர்த்தே மருந்து தருகிறது என்று சொல்வார்கள்.

இனி அனாவசியமாக பீதியை ஏற்படுத்துவதில்லை, தேவைப்பட்டால் ஒழிய டெஸ்டுகளுக்குப் பரிந்துரைப்பதில்லை என்று நம் நாட்டு டாக்டர்கள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு டாக்டர்கள் உறுதி எடுத்துக் கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

(நன்றி: மாற்று மருத்துவம் ஜனவரி 2009)

Pin It