வீட்டில் சமைத்து உண்ணும் உணவை வீட்டுணவு எனலாம். வீட்டுக்கு வெளியே குளம் குட்டைகளில், தோப்பு துரவுகளில், வயல் வரப்புகளில், காடு கரம்பைகளில் கிடைத்து, சமைக்காமல் உண்ணும் உணவுகளைக் காட்டுணவு எனலாம். காட்டுணவு இயற்கையில் கிடைப்பது. நிலத்தின் தன்மைகளோடும் பருவ காலங்களோடும் தொடர்பு கொண்டது. ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு வகை உணவு கிடைக்கும். இந்த உணவுகள் இங்குக் கூறப்போகும் களம், காலத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால், வயிற்றை நிரப்புவதற்கானவை என்று கூற முடியாது. விளையாட்டில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகமாக விளையாட வைக்க உதவுபவை எனலாம். சில வேளைகளில் வயிற்றை நிரப்பவும் பயன்படும்.

நான் பிறந்து வளர்ந்தது மஞ்சக்கொல்லை என்ற கிராமம். முன்பு தென்னார்க்காடு மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்ததாக இருந்த இந்த ஊர், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்திற்குரியதாக உள்ளது. சிதம்பரத்திலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் புவனகிரியிலிருந்து மேற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது இவ்வூர். நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வடக்கே செல்லும் வழித்தடத்தில் 500 மீ. நடந்தால் கிழக்கு மேற்காக அமைந்திருக்கும் மஞ்சக்கொல்லை கிராமம். சாலையையொட்டி மேற்கு - கிழக்காக ஓடும் பாட்டவாய்க்கால் (அல்லது மானம்பாத்தான் வாய்க்கால்). ஊர் செல்லும் வழித்தடத்தின் இருபுறமும் நொச்சி, ஆடாதொடை, காட்டாமணக்கு வளர்ந்திருக்க, கீழே பள்ளமான நெல் வயல்கள். இன்னும் சற்று நடந்தால் ஊரையொட்டி மணியன்குட்டை வாய்க்கால். ஊரின் அனைத்து வாய்க்கால்களும் கிழக்கு நோக்கி ஓடுபவையே. அதே வழித்தடத்தில் ஊரைத் தாண்டிச் சென்றால் ஒரு கன்னி (சிறு வாய்க்கால்). மேலும் 500 மீ. நடந்தால் முரட்டு வாய்க்கால். இது ஊரின் வடக்கு எல்லை. ஊருக்குக் கிழக்கிலும் மேற்கிலும் இரு குளங்கள். ஊருக்கு மேற்கே 500 மீ. நடந்தால் பட்டியலின மக்கள் குடியிருப்பு - ஒரு குளத்துடன்.

நெடுஞ்சாலைக்கு வடக்கேயும் ஊருக்கு வடக்கேயும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருபோகமும் முப்போகமும் விளையும் நெல் வயல்கள். மாசி, பங்குனி மாதங்களில் பயறும், உளுந்தும் விளையும் நிலங்கள் அவை. நெடுஞ்சாலைக்குத் தெற்கே புஞ்சை நிலங்கள். கம்பு, கேவுரு, சோளம், மல்லாட்டை, கரும்பு, வள்ளிக்கிழங்கு, எள் விளையும் நிலங்கள் அவை. இவை மாறி மாறிப் பயிர் வைக்கப்படும்.boys playing in pondநெடுஞ்சாலைக்குத் தெற்கே 100 மீட்டரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான ஐயனார் கோயில் தோப்பு. அதையொட்டித் தெற்கே பெரிய வாய்க்கால் அல்லது அரியகோஷ்டி வாய்க்கால். வாய்க்காலுக்குத் தெற்கே ஒரு கன்னி. இந்தக் கன்னிதான் ஊரின் தெற்கு எல்லை. மேற்கே மிராளூர் என்ற ஊரும், சீப்பான் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளும்; கிழக்கே சீயப்பாடி என்ற ஊரும், மேற்கு, கிழக்கு எல்லைகளாக உள்ளன. பெரிய வாய்க்காலிலிருந்து பிரிந்து தெற்கு வடக்காக நீளும் சம்போடை என்ற ஓடையும் உண்டு என்பது கூடுதல் செய்தி.

இந்த எல்லைக்குட்பட்ட ஊர்த் தெருக்கள், வீட்டுத் தோட்டங்கள், குளங்கள், அவற்றின் கரைகள், வழித்தடங்கள், வாய்க்கால்கள், அவற்றின் கரைகள், அறுவடையான வயல்கள், நெடுஞ்சாலை ஓரங்கள், ஐயனார் கோயில் தோப்பு போன்ற இடங்கள் எங்களின் விளையாட்டுக் களங்கள். மழைக்காலங்களில் வெளியில் சென்று விளையாடுவது குறைவு. சேறும் சகதியுமான களிமண் பூமி. தண்ணீர் தேங்குமிடங்களில் காகிதக் கப்பல் விடுவதோடு சரி. பள்ளி நாட்களில் வீட்டுக்கருகில் விளையாட்டுக் களம் அமையும். விடுமுறை நாட்களிலும் கோடைக்காலங்களிலும் வீட்டிலிருந்து தூரமான பகுதிகளில் விளையாட்டுக்களம் அமையும். அம்மா, அப்பா உடனே வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடாத தூரத்தில் களம் அமையும். எங்களின் விளையாட்டுகள் பற்றியோ, விளையாட்டுக் களங்கள் பற்றியோ இங்கு விளக்கப் போவதில்லை. காட்டுணவு குறித்த விவரங்களும் அதற்கான களங்களும் மட்டுமே இங்குச் சுருக்கமாகக் கூறப்படுகின்றன.

முதலில் முருகன் கோயில் நந்தவனத்திலிருந்து தொடங்கலாம். எங்கள் வீட்டிற்கு மேற்புறம் (இடையில் வழித்தடம்) முருகன் கோயில் உள்ளது. மேலக்குளத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஊர்ப் பொதுக்கோயில் அது. ஊரிலிருந்து வெளியூருக்கு மணமுடிக்கச் செல்லும் பெண்கள் இந்தக் கோயிலில் வழிபட்ட பின்னரே செல்வர். மணமுடித்து வருபவரும் இந்தக் கோயிலில் வழிபட்டே வீட்டிற்குச் செல்வர். பங்குனி உத்திரத்தன்று காவடி எடுப்பும், அன்னதானமும் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) படையல் சிறப்பாக இருக்கும்.

கோயிலின் தென்புறம் கோயில் நந்தவனம். தெற்குக் கடைசியில் ஒரு கூரைக் குடில். நந்தவனம் சுமார் அரை ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கும். நந்தவனத்தின் மேற்கே - குளத்தையொட்டி - தாழம்புதர்கள் அடர்ந்திருக்கும். அதன் ஒருபக்கம் ஏற்ற மரம் நடப்பட்டிருக்கும். கோடைக்காலங்களில் நந்தவனம் காய்ந்து விடாமல் குளத்திலிருந்து நீரிறைக்க வசதியாக நந்தவனத்தின் நடுவில் மிக உயரமான இரு தென்னை மரங்கள் இருக்கும். வில்வ மரம், நெல்லிமரம், செம்பருத்தி, பவளமல்லி, ஒற்றை நந்தியாவட்டை, இரட்டை நந்தியாவட்டை, திருநீற்றுப்பச்சிலை, வெட்டுக்காயப் பச்சிலை (கட்டிப் போட்டால் குட்டி போடுமே அது), துளசி, இருவாட்சி என்று அடர்ந்திருக்கும் பசுமைச்சோலை அந்த நந்தவனம். அதனை உருவாக்கிப் பராமரிப்பவர் சின்னச்சாமியார்.

சின்னச்சாமியின் உண்மையான பெயர் தெரியாது. பூர்வீகம் தெரியாது. இவர் நந்தவனத்திலுள்ள கூரைக் குடிலில் தங்குவார். அங்கே சில மலையாள நூல்களைப் பார்த்த நினைவு. அதனால் இவர் மலையாளத் தேசத்திலிருந்து தமிழகம் வந்து சாமியாரானவராக இருக்கலாம். இவர் முருகன் கோயிலில் வந்து தங்கியிருந்தபோது ஒருமுறை ஏதோ வருத்தம் காரணமாக ஊரைவிட்டுச் சென்றுவிட்டதாகவும், ஊரார் இவரைத் தேடிப் பிடித்து மீண்டும் அழைத்து வந்ததாகவும் கூறுவர். பின்னர், இவர் ஊர் மக்களோடு ஒன்றிவிட்டார். திட்டமான உயரம். மாநிறம். காவி வேட்டி, துண்டு. கழுத்தில் உருத்திராட்ச மாலை. அமைதி தவழும் முகம். மாலையில் பாத்திரத்துடன் வீடு வீடாகச் சென்று பெயர் சொல்லி அழைப்பார். அவர்களும் உணவு அளிப்பர். தானும் உண்பார். கோயிலில் வந்து தங்கும் பரதேசிகளுக்கும் உணவளிப்பார். காலையிலும் அப்படியே. மதியம் மட்டும் பொங்கி முருகனுக்குப் படைப்பார்.

நானும் என் சேக்காளிகளும் (நண்பர்கள்) கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில், குறிப்பாக நந்தவனத்திற்கும் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் கோலி ஆடுவோம். எங்கள் ஆட்டக்களம் அது. காலை நேரத்தில் சாமிக்கு (சின்னச் சாமியாருக்கு)ப் பூப்பறிக்கவும், மாலை கோர்க்கவும் உதவுவோம். நந்தவனத்தில் பவளமல்லியைப் பறித்து நூலில் கோர்த்து மாலையாக்கல் - செம்பருத்தி, நந்தியாவட்டை போன்ற மலர்களைப் பறித்துக் கொடுத்தல் போன்ற வேலைகளைச் செய்வோம். நந்தவனத்தில் பூத்திருக்கும் செம்பருத்திப்பூ, கருப்பும் சிவப்புமாகப் பழுத்துக் கிடக்கும் சற்றே இனிப்பான மணத்தக்காளி, சீமைத்தக்காளிப் பழம் (வெடித்தக்காளி என்றும் கூறுவர்), மூங்கில் படல் வேலியில் படர்ந்திருக்கும் முசுமுசுக்கைக் கொடியில் காய்த்திருக்கும் (மிளகைவிடச் சற்றுப் பெரிதான) வெள்ளரிக்காய் சுவையை ஒத்த சுவையுடைய முசுமுசுக்கைக் காய், கோவைக் கொடியில் தென்படும் பூவோடு கூடிய சிறு பிஞ்சு மற்றும் செக்கச் சிவந்த கோவைப்பழம், துளசி இலைகள், தரையில் படர்ந்து அரை அடி உயரம் தலையைத் தூக்கி நிற்கும் அம்மான்பச்சரிசியின் துவர்ப்பான சிறிய காய், கீழே விழுந்து கிடக்கும் பெருநெல்லிக்காய், வேலியில் நடப்பட்டுள்ள கிளுவை மரக்கிளையில் துளிர்த்திருக்கும் கிளுவை மர இலைகள் எல்லாம் எங்களின் சிற்றுணவுகள். தாழம்புதரின் நுனிப் பகுதியில் இரண்டு மூன்று மடல்களை ஒன்றாகப் பிடித்து மெதுவாக இழுத்தால் மடல் அறுந்து வெளிவரும். அதன் அடிப்பக்கக் குருத்துப் பகுதி வெண்மையாக இருக்கும். இது தாழைச்சோறு என்று சுட்டப்படும். கடித்து மென்றால் மொறுமொறுவென்று அதுவும் ஒரு சுவைதான்.

கோயிலுக்கு வடபுறம் தொடக்கப் பள்ளியின் கூரைக் கட்டடம். பள்ளிக்கு வடபகுதியில் ஓர் அரச மரமும், அதன்கீழ் குளத்தங்கரைப் பிள்ளையாரும். அரச மரம் பழுக்கும் காலத்தில் மரத்தின் கீழே பாய்விரித்தாற்போலச் சிறுசிறு அரசம் பழங்கள். நல்ல பழங்களாகப் பார்த்து எடுத்து உண்போம். பழுக்கும் காலத்தில் காக்கைகளும், குருவிகளும், கிளிகளும், அணில்களும் ஒரே ஆரவாரமாக இருக்கும். அவற்றோடு நாங்களும் மகிழ்ச்சியாக இருப்போம்.

அரச மரத்தைத் தொடர்ந்து ஆண்கள் குளிக்கும் படித்துறையும், தொடர்ந்து இருபது அடி தள்ளி, பெண்கள் குளிக்கும் படித்துறையும் இருக்கும். முடிவில் குளத்தின் கிழக்குக் கரை முடிந்து வடக்குக் கரை தொடங்குமிடத்தில் ஓர் ஆல மரம். இம்மரம் பழுக்கும் காலத்தில் இதன் கிளைகளெல்லாம் நெருப்புப் பிடித்தாற்போல் சிவப்பாகப் பழுத்திருக்கும். அரச மரத்தைப் போலவே பறவை முதலானவற்றின் கீச்சொலிகள் இடையறாமல் ஒலிக்க, கீழே விழும் பழங்களை நாங்கள் பொறுக்குவோம். பழத்தைப் பிட்டு உள்ளே பூச்சி ஏதேனும் உள்ளதா என்று பார்த்து வாயால் நன்கு ஊதிய பின்னர் வாயிலிட்டு உண்போம். விதைகள் நறநறப்பதால் சில நேரங்களில் விதைகளை நீக்கிச் சதைப்பற்றை மட்டும் உண்போம்.

குளத்தின் வடக்குக் கரையில் மிக உயர்ந்த இரு பனை மரங்கள் உண்டு. நுங்கு பறிக்கக்கூட யாரும் அம்மரங்களில் ஏறுவதில்லை. அடைமழை பெய்யும் காலங்களில் பனை மரத்தின் மேலிருந்து நீர் வழிந்து ஏரிக்கரை வழியே குளத்தில் கலக்கும். அப்போது பனையேறி என்ற ஒருவகைக் கெண்டை மீன் குளத்திலிருந்து கரையேறி அந்தப் பனை மரங்களில் ஏறும் என்பர். நான் அவ்வாறு ஏறுவதைப் பார்த்ததில்லை. ஆனால், மழை விட்டபின் அங்கே செல்லும்போது பனையடியில் பனையேறி கெண்டை மீன்கள் நீரோட்டம் நின்றுபோனதால் திரும்பக் குளத்திற்குச் செல்ல முடியாமல் துள்ளுவதைப் பார்த்துள்ளேன். அந்தப் பனைகள் பழுக்கும் காலத்தில் எங்கள் வேட்டை தொடங்கும். பகலில் பழம் விழும்போது அங்கிருப்பவர் யாரோ, அவர் அதனை எடுத்து விடுவார். ஆனால், இரவில் விழும் பழம் பார்ப்பாரற்று வயல் சேற்றில் கிடக்கும். அதனால் விடியற்காலம் எழுந்து மரத்துக்குக் கீழே தேடி, பழத்தை எடுத்து, நீரில் கழுவி, ஆசைதீர வாசனை நுகர்ந்து மேல்தோலைப் பற்களால் கடித்து உறித்து, உள்ளே உள்ள நாரோடு உள்ள பழத்தைப் பற்களால் கடித்து மென்று, சாற்றை விழுங்கினால் சுவையோ சுவை. பனம்பழம் பித்தம் என்பர். கூடவே ‘பசிக்குப் பனம்பழம் சாப்பிட்டால் பித்தம் போற வழியே போவும்’ என்றும் கூறுவர். இதைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசித்ததில்லை.

குளத்தின் தெற்குக் கரையிலும் மேற்குக் கரையிலும் நடுவில் வண்டிப்பாதை இருக்கும். இருபுறமும் சரிவான பகுதிகள். இங்குத்தான் ‘கோட்டிப்புள்’ விளையாடுவோம். ‘புள்’ளை வேகமாக அடிக்கும்போது யார் மேலாவது பட்டால் காயம் ஏற்படுத்தி விடும். ஆதலால் ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடம் எங்களுக்கு வசதியாக இருக்கும். ஆட்டத்திற்கிடையே களைப்பு ஏற்பட்டால் மேலக்கரையில் உள்ள வன்னிமர நிழலில் ஓய்வெடுப்பதுண்டு. (அறுவடை முடிந்து பயறு, உளுந்து பிடுங்கிய பின் சித்திரை வைகாசி மாதங்களில் ஆட்டக்களம் வயலுக்கு மாறிவிடும்). ஏரிக்கரையில் ஆடும்போது குளத்தில் ஆழமற்ற கரையோரப் பகுதிகளில் கையகலப் பச்சை நிற இலைகளைக் கொண்ட செடிகள் நீரில் செழித்து வளர்ந்திருக்கும். ஒவ்வொரு செடியின் நடுவிலும் கடுகளவு வெள்ளை நிறப் பூக்கள் தெரியும். பூக்கள் இருக்கும் பகுதியைப் பிடித்து இழுத்தால், சிறு தண்டுடன் நுனியில் ஒரு காய் வெளிப்படும். அந்தக்காய் இலை மூடிய, சிறிய நீள் வடிவிலான, இரண்டு அங்குல அளவில் இருக்கும். இலை உறையை அகற்றிக் காயைப் பிளந்தால் உள்ளே உறைந்த நெய்போல் (மணல்போல்) இருக்கும். அதனால் அது ‘நெய்சட்டி’ என்று அழைக்கப்பட்டது. அது வெண்டைக்காயைப் போன்ற சுவையுடன் கொழகொழப்பாக இருக்கும். ஆட்டத்தின் நடுவே அதில் நான்கைந்தைப் பிடுங்கித் தின்பதுண்டு.

குளத்தில் தென்மேற்கு மூலை வழியே மணியன்குட்டை வாய்க்காலிலிருந்து நீர் குளத்திற்கு உள்ளே வரும். அதுபோல வடகிழக்கு மூலை வழியே குளத்திலுள்ள கூடுதல் நீர் வெளியேறி வயல்களில் பாயும். குளத்து நீர் எப்போதும் தெளிந்த நிலையில் பளிங்குபோல் இருக்கும். தரையில் கிடக்கும் கிளிஞ்சல்களும், நீந்திக்கொண்டிருக்கும் வரால், குரவை, கெண்டை போன்ற மீன் வகைகளும் பளிச்சென்று தெரியும். குளத்தில் வெள்ளையும் சிவப்புமாக அல்லியும் தாமரையும் பூத்துக் குலுங்கும். தண்ணீரின் மேல்பகுதி தாமரை இலைகளாலும், அல்லி இலைகளாலும் மூடப்பட்டிருக்கும். அதனால் குளத்து நீர் குளுகுளுவென்று குளிர்ச்சியாக இருக்கும். குடைத்தாமரை இலைகள் மட்டும் தண்ணீருக்கு மேலே தாமரை மலர்களுக்குக் குடை விரித்தாற்போல் இருக்கும். இடையே இலைகள்மீது கொக்கு நின்றுகொண்டு உகந்த மீனுக்காகக் காத்துக்கொண்டிருக்கும். நீர்க்கோழிகள் நீரில் மூழ்கி விளையாடும். இவையெல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்.

அந்தக் குளத்து நீரில்தான் எங்களின் ‘ஓரி’ ஆட்டம் (நீர் விளையாட்டு) நடைபெறும். நீரின்மேல் கவிழ்ந்து படுத்து இரு கால்களாலும் மாறிமாறி நீரிலடித்து முன்னேறும் ‘தம்பட்டமடித்தல்’, நீரின்மேல் அண்ணாந்து படுத்தவாறு கைகளால் துடுப்புப்போட்டுப் பின்னோக்கிச் செல்லும் ‘காக்கா நீச்சல்’ என்றிவ்வாறு பலவாறு பலவகை நீச்சல்கள் அடிப்போம். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திரும்பும் போட்டியும் நடைபெறும். ஒருவர் நீரில் மூழ்கிச்சென்று குழுவில் உள்ள ஒருவரைத் தொடும் விளையாட்டும் உண்டு. நேரம் போவதும் தெரியாது. தாமரைக் கொடிகள் பக்கம் நடந்தால் தரையோடு முளைத்தெழும்பும் தாமரைக் குருத்து காலில் மிதிபடும். நீரில் மூழ்கி குருத்தைப் பிடித்துச் சேற்றைத் தோண்டினால் தாமரைக்கிழங்கு கிடைக்கும். வெண்மையாக இருந்தால் இளங்கிழங்கு. மஞ்சள் நிறத்திற்கு மாறிக்கொண்டிருந்தால் சற்று முற்றிய கிழங்கு. சுவை சற்று மாறுபடும். நீண்ட நேரம் ‘ஓரி’ ஆடிய களைப்புக்குத் தாமரைக்கிழங்கு சுவையாகவே இருக்கும். தாமரை மலரின் நடுவிலுள்ள மஞ்சளான பகுதியும் உண்ணத்தக்கதே. துவர்ப்பு தொண்டையை அடைக்கும். ஒருவாய் தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். இதழ்கள் உதிர்ந்து, காயாகி, நீருக்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் தாமரைக் காயை உடைத்தால், உள்ளே வெண்ணிறப் பருப்பு சற்று இனிப்பாக இருக்கும். அல்லி மலரின் உள்பகுதியும் சற்றுத் துவர்ப்பான சுவையுடன் எங்கள் வாயில் அரைபடும்.

நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழித்தடத்தின் இருபுறமும் வளர்ந்துள்ள காட்டாமணக்குச் செடிகளும் எங்கள் விளையாட்டுக்கு உதவக்கூடியவை. காட்டாமணக்குக் கிளையை ஒடிக்க வெளிவரும் திரவத்தைக் கொட்டாஞ்சியில் (தேங்காய் ஓடு) பிடித்து இருபுறமும் துளையிருக்குமாறு கிள்ளப்பட்ட வைக்கோலின் ஒரு புறத்தை அத்திரவத்தில் தொட்டு மறுபுறத்தில் வாய் வைத்து ஊத முட்டை முட்டையாக வெளியேறும் குமிழ்கள் பெருமகிழ்வளிக்கும். விளையாடிக் கொண்டே தடத்தின் ஓரத்திலிருக்கும் விளாமரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களை நோக்கிக் கற்களை வீச, பழங்களும் காய்களுமாகக் கீழே விழும். செம்பழம், கடும் புளிப்பும் துவர்ப்புமாக இருக்கும். பழம், சற்று இனிப்பும் புளிப்புமாக இருக்கும். எங்களுக்கு அனைத்தும் சுவைதான்.

நெடுஞ்சாலைக்கு வந்தால் சாலையின் இருபுறமும் முதிர்ந்த புளிய மரங்கள் இருக்கும். வெள்ளைக்காரன் காலத்தில் வைக்கப்பட்டவையாக இருக்கலாம். அந்தச் சாலையோரப் புளிய மர நிழல்களும் எங்கள் விளையாட்டுக் களங்கள்தாம். அங்கே உள்ள இலந்தை மரம் காய்த்துக் குலுங்கும்போது அதன் பழங்களும், செங்காய்களும் எங்களுக்கு விருந்தாகும். கொத்துக்கொத்தாக இலந்தை முள் உள்ள மரத்தில் ஏற இயலாது. இலந்தை முள்ளை வெட்டி வீட்டிற்கும் சுவருக்கும் இடையிலுள்ள இடைவெளியை மறைத்துக் கட்டுவதுண்டு. வீட்டினுள் வௌவால் வருவதைத் தடுக்க இந்த ஏற்பாடு. இலந்தை முள் வௌவால் தடுப்பானாகப் பயன்படக்கூடியது. நீண்ட சுரடு வைத்திருப்பவர்கள் சுரடால் இலந்தை மரக் கிளைகளைப் பிடித்து உலுக்கினால்தான் உண்டு. இல்லையெனில் பழத்தைப் பறிக்க, கல்லெறிதல்தான் ஒரே வழி.

நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு பாய் வீடு. வீட்டின் பின்புறம் கொடுக்காப்புளி மரங்கள் வரிசைகட்டி நிற்கும். காய்கள் நன்கு வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கும். (கொடு + காய் = வளைந்த காய்) பழுத்தால் மேல்தோல் சிவப்பாக மாறிவிடும். வெடித்து உள்ளே உள்ள வெள்ளையும் சிவப்புமான சுளைகளும் அவற்றினுள்ளே உள்ள கருநிறக் கொட்டைகளும் தெரியும். கல்லெறிந்து பழங்களை விழச்செய்து இனிப்பும் துவர்ப்புமான சுளைகளைச் சுவைப்போம்.

ஐயனார் கோயில் தோப்பு எங்களின் சொர்க்க பூமி. விடுமுறை நாட்களில் காலையில் சாப்பிட்டு விட்டுச் சென்றால் எப்போது வீடு திரும்புவோம் என்பது தெரியாது. எவ்வித இடையூறுமின்றி ஆட்டங்கள் தொடரும். புளிய மரங்கள், இலுப்பை மரங்கள், ஆல மரங்கள், நாவல் மரம், அத்தி மரம், வேப்ப மரங்கள் அடர்ந்த தோப்பு அது. ஒரு மரத்தின் கிளையிலிருந்து இன்னொரு மரத்தின் கிளைகளுக்குக் குரங்குகள்போல் சில சேக்காளிகள் தாவும் அளவுக்கு மரங்கள் அடர்த்தியாக இருக்கும். ஆங்காங்கே சப்பாத்திக் கள்ளிகளும், காரைச் செடிகளும், களாச் செடிகளும் இருக்கும். ஒரு காலத்தில் ஆடு மாடுகளை உள்ளே விட்டால் மேய்ந்துவிட்டு இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு வரும் என்று பெரியவர்கள் கூறக் கேட்டதாக அப்பா கூறுவதுண்டு. அப்பா கூறியதைப் பார்த்தால் 1900க்கு முற்பட்ட காலமாக இருத்தல் வேண்டும். அப்பாவின் கூற்றுப்படிப் பழைய காட்டின் எச்சம் அந்தத் தோப்பு என்று உணர முடியும்.

தோப்பினுள்ளே நாட்டு ஓடு வேய்ந்த கட்டடத்தில் ஐயனார் இருப்பார். கோயிலுக்குக் கிழக்குப் பக்கம் வீரன் சிலை இருக்கும். முறுக்கிய மீசையுடன் கண்களை விரித்துப் பார்த்தபடி, கையில் நீண்ட வாளுடன் ஒரு காலை மடித்து மற்றொரு காலைத் தொங்க விட்டுக்கொண்டு புலி மீது அமர்ந்திருப்பார் வீரன். வீரனுக்கு முன்னால் இருபுறமும் காவலர்கள் சீருடையுடன் துப்பாக்கி ஏந்தி நிற்பர். கோயிலுக்கு மேற்புறம் மாடம் போன்ற இடத்தில் பிள்ளையார் இருப்பார். மக்கள் வேண்டுதலுக்காக வைத்த சுடுமண் குதிரைகள் வரிசையாக இருக்கும். ஏணி வைத்தாற்போல் கோயிலுக்கு முன்னால் இலவம் பஞ்சு மரங்கள் இருக்கும். அவற்றை ஒட்டிச் செங்கல் சுதையால் உருவாக்கப்பட்ட பத்து அடி உயரமுள்ள நான்கு குதிரைகள் நிற்கும். கோயிலுக்கு நான்கு திசைகளிலும் நான்கு ஆலமரங்கள் விழுது பரப்பி நிற்கும். முன்பு அந்த இடங்களில் பிரம்மாண்டமான ஆலமரங்கள் இருந்ததாகவும், புயலின்போது அவை விழுந்து அந்த இடத்தில் முளைத்த மரங்களே இப்போது உள்ளவை என்றும் அப்பா கூறுவார். தென்கிழக்கு மூலையில் உள்ள ஆலமர நிழலில் கரும்பு பிழிந்து வெல்லம் காய்ச்சுவர். மல்லாட்டை பிடுங்கும் காலத்தில், இன்னொரு ஆலமரத்தின் கீழே மல்லாட்டையைப் பரப்பி விடிகாலை நேரத்தில் வரிசையாக அமர்ந்து தடியால் தட்டித் தட்டி தோலை நீக்கி பயற்றைப் பிரிப்பர். இதுபோன்ற காலங்களில் தோப்பில் ஆள் நடமாட்டம் இருக்கும். ஏனைய காலங்களில் ஆடு மாடுகள் மேய்ப்பவர்கள் தவிர யாரும் தோப்பில் தென்பட மாட்டார்கள். சிறார்களுக்கு அச்சம் தரும் இடமாக இருக்கும் அந்தத் தோப்பு.

தோப்பினுள் நுழையும்போது ஒரு குட்டை இருக்கும். அதன் ஓரம் தழைத்து நிற்கும் நாவல் மரம். பூத்து, காய்த்து, பழுக்கும் வரை எங்கள் கவனம் அதில் இருக்கும். பழுத்து ஒன்றிரண்டு கீழே விழுந்து மண்பூசிக் கிடக்கும். எடுத்து ஊதி மண்ணை நீக்கி உண்போம். ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா’ என்று ஔவையிடம் முருகன் கேட்டதான கதையை வாத்தியார் கூறியது நினைவுக்கு வரும். நிறையப் பழுத்த பின் கூட்டாளிகள் மரத்தில் ஏறி உலுக்குவர். பழமும் செம்பழமும் விழும். வீட்டிற்கு எடுத்துச் சென்று, உப்பிட்டுக் குலுக்கி, சற்று நேரம் கழித்து உண்டால் நன்றாக இருக்கும்தான். அந்தப் பொறுமையெல்லாம் எங்களுக்குக் கிடையாது. தொண்டை கமறும். கவலைப்பட்டதில்லை.

கோடைக்காலத்தில் புளிய மரங்கள் இலைகளை உதிர்த்துவிடும். வயதான சிலர் அந்தப் புளியஞ்சருகுகளைக் கூட்டி மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்வர். உவர் நிலங்களில் கொட்டி நீர் பாய்ச்சினால் நிலத்தின் உவர் தன்மை நீங்கும் என்பர். இலை உதிர்ந்த புளிய மரங்கள் உடனே துளிர்த்துத் தழைக்கவும் தொடங்கும். பூவும் பிஞ்சுமாக மாறும்.

பசுமஞ்சள் நிறத்திலான துளிர்களும், அவற்றோடு மஞ்சள் சிவப்பும் பச்சையுமான பூக்களும், சிறு பிஞ்சுகளும் எங்களைச் சுண்டியிழுக்கும். கைக்கெட்டும் கிளைகளை வளைத்துத் துளிர்கள், பூக்கள், பிஞ்சுகளோடு உருவி வாயிலிட்டு மெல்ல துவர்ப்பும் புளிப்பும் சிறு கசப்புமான சுவை எச்சிலூறச் செய்யும். சிறிது காலத்தில் புளியம் பூக்கள் உதிர்ந்து சிறுசிறு பிஞ்சுகள் இருக்கும். அவற்றைப் பறித்து வாயிலிட்டு மென்றால் சற்றுக் கொழகொழப்பாகவும் புளிப்பாகவும் இருக்கும். மேலும் முற்றிய புளியங்காயோ கடும் புளிப்பாக இருக்கும். வாயிலிட்டு மெல்லும்போது பல்லைக் கூசச்செய்யும். எனவே, காயைப் பறித்து புளியமரத்தின் அடிப்பாகத்தில் பெரிதாக உள்ள சொரசொரப்பான மரப்பட்டையில் தேய்த்து வழித்து வாயிலிட்டுச் சப்பி விழுங்குவோம். அடுத்துச் செம்பழம். ஓடும் பழமும் பிரியாத நிலை. அதுவும் சுவைதான். கடைசியாகப் புளியம்பழம். ஓடும் பழமும் பிரிந்த நிலை. பழுக்கும் காலத்தில் எங்கள் சேக்காளிகளுக்குத் ‘தித்திப்புப் புளியமரம்’ எது என்பது தெரியும். அம்மரத்துப் புளியம்பழம் அதிகப் புளிப்பில்லாமல் இருக்கும். சிறிது இனிப்பாகவும் இருக்கும். இப்படிப் புளிய மரம் துளிர்விட்டுப் பூப்பது தொடங்கி, பழுக்கும் காலம் வரை எங்கள் வேட்டை தொடரும்.

புளிய மரம் பற்றிக் கூறும்போது அம்மரத்தில் எடுத்த தேனடைகள் பற்றிக் கூறாமல் இருக்க இயலுமா? புளி பூத்துக் குலுங்கும் காலத்தில் தேனடைகள் அதிகம் காணப்படும். மரத்தில் துளிர்த்துப் பூத்து அடர்ந்திருக்குமிடத்தை உற்றுநோக்கினால் அடம்புக்குள் தேனடை காணப்படும். கோயில் தோப்பு, நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில் எங்களின் தேடுதல் வேட்டை இருக்கும். எங்கேனும், யாரேனும் ஒருவர் தேனடையைப் பார்த்துவிட்டால் மகிழ்ச்சிக் கூச்சலிடுவார். எல்லோரும் அங்கே ஓடுவர். என்னைத் தவிர ஏனைய அனைவரும் மரம் ஏறுவர் (சேக்காலிகளோடு நானும் மரமேற முயன்றதுண்டு. பத்தடி உயரம் ஏறியபின் கீழே பார்த்தால் தலை சுற்றத் தொடங்கும். அதனால் மரமேறும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன்). சேக்காலிகளுள் ஒருவர் துண்டால் தலை, உடல் பகுதிகளை மறைத்துக் கொண்டு மரமேறி தேனடையைக் காயப்படுத்தாமல் கீழே எடுத்துவருவார். தேனடையின் கீழ்ப்பகுதி புழுவடை. தேனீக்களின் புழுப்பருவம். அதையொட்டி மஞ்சள்பொடி திணித்தாற் போன்ற ஒரு பகுதி. இனிப்பாக இருக்கும். கிளையை ஒட்டி உள்ள பகுதி தேன். அனைவருக்கும் பங்கு பிரித்துக் கொடுக்கும் பணி எனக்கு அளிக்கப்படும். நான் அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுப்பேன். ஆடையுடன் வாயிலிட்டுச் சப்புக்கொட்டி, தேனைச் சுவைப்போம். மறக்கமுடியாத இனிய அனுபவம் அது.

இலுப்பை மரங்கள் தோப்பில் மிகுதியாக இருக்கும். சில நேரங்களில் மரத்தில் ஏராளமான கூடுகள். சிலந்திகளால் கட்டப்பட்டவை போல இருக்கும். அதில் சிவப்பாக வெகுவேகமாக ஓடும் ஒருவகை எறும்பு இருக்கும். அது முசுடு எனப்படும். அதில் யாரும் ஏறப் பயப்படுவர். அதுகுறித்து இங்கு வேண்டாம். மாறாக, இலுப்பைப் பூ, இலுப்பைப் பழம் பற்றிப் பார்க்கலாம். இலுப்பைப் பூ பூத்திருக்கும்போது அந்த இடத்தில் வாசனை அருமையாக இருக்கும். பூக்கள் விழுந்து கிடப்பதைப் பார்ப்பதும் அழகுதான். குண்டு குண்டாக வெண்மையாக இருக்கும். சுவைத்தால் இனிப்பாக இருக்கும். ‘இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பர். அதிகம் உண்ண முடியாது. அதனைப் பொறுக்கிச் சென்று உலர்த்தி மிளகாய், உப்பு எல்லாம் சேர்த்து உரலிலிட்டு இடித்து உருண்டையாக்கி உண்பர். பச்சையாக அதிகம் உண்ண முடியாது. ஆனால், எங்கள் சிற்றுணவுப் பட்டியலில் இலுப்பைப் பூவும் உண்டு. காய்த்துப் பழுக்கும்போது அந்தப் பழத்தின் உட்பகுதியைச் சிறிதளவு உண்பது உண்டு.

நுணா மரம் தெரியும்தானே! தமிழகத்தின் தென்பகுதிகளில் அதனை ‘மஞ்சனத்தி மரம்’ என்பர். அம்மரம் பூத்தால் மல்லிகைப்பூ மணம் வரும். நிறமும் வெண்மைதான். அம்மரத்தில் காய்க்கும் காய்களைப் பறித்துத் தென்னந்துடைப்பக் குச்சிகளைச் செருகித் தேர் தயார் செய்து விளையாடுவதுண்டு. காய்கள் பழுத்தால் பெருநெல்லிக்காய் அளவில் முடிச்சு முடிச்சாகக் கன்னங்கரேல் என்று இருக்கும் - நாவல் பழத்தின் நிறத்தில். பறித்து, வாயிலிட்டுச் சப்பி சதையை விழுங்கிவிட்டுக் கொட்டைகளைத் துப்பி விடுவோம். பழத்தைத் தின்றபின் நாக்கெல்லாம் கருப்பாகிவிடும். சற்று இனிப்பும் உரைப்புமான சுவை. அதிகம் சாப்பிட்டால் நாக்கு எரியும். சில நேரங்களில் வைக்கோல் போரின் அடிப்பகுதியில் வைக்கோலை நீக்கிவிட்டு நுணாக் காய்களை வைத்து வைக்கோலை மூடிப் பழுக்கவைப்போம். பழுத்துவிட்டதா என்று அவ்வப்போது பார்க்கவும் செய்வோம். ஒருவர் அறியாமல் ஒருவர் பார்ப்பதும் உண்டு. இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

ஐயனார் கோயில் முன்புறம் வரிசையாகப் பச்சைப்பசேல் என்ற நிறத்துடன் உயர்ந்து நிற்கும் இலவம்பஞ்சு மரத்தில் சரஞ்சரமாகக் காய்கள் தொங்கும். முற்றவிட்டால் நல்ல இலவம்பஞ்சு கிடைக்கும்தான். நாங்களோ கல்லெறிந்து இளங்காய்களை விழச்செய்து உடைத்து உள்ளிருக்கும் விதைகளை உண்போம். இலவு பழுத்திருக்குமென்று காத்திருக்க நாங்கள் கிளிகள் அல்லவே!

யாரையேனும் அபூர்வமாகப் பார்த்தால் ‘என்ன அத்தி பூத்த மாதிரி இந்தப் பக்கம்?’ என்போம். தோப்பிலும் அப்படித்தான். ஒரேயொரு அத்திமரம்தான். அபூர்வமாக. காய்க்கும் காலத்தில் மரத்தினடியிலிருந்து கிளைகள்தோறும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். பழுத்தபின், பழத்தைப் பறித்து, பிட்டு, பூச்சியுள்ளதா என்று பரிசோதித்துவிட்டுத் தின்போம்.

சப்பாத்திக் கள்ளியின் முள்ளை நினைத்தால் பயம் வரும். மஞ்சள் நிறத்தில் இரும்புபோல் வலுவாக இருக்கும். அதில் பழம் பறிப்பது பெரும் போராட்டம்தான். பழம் பறித்து அடிப்பக்கத்திலிருந்து மேல்தோலைக் கவனமாகக் கிழித்து நுனிப்பகுதியில் சக்கரம்போல இருக்கும் ‘நா(ய்)முள்ளை’ அகற்றி, பழத்தை வாயிலிட்டுச் சுவைப்போம். ‘செக்கச்செவேல்’ என்று இருக்கும் பழத்தைச் சப்பி, கொட்டைகளைத் துப்பிவிடுவோம். லேசான இனிப்புச் சுவை இருக்கும். வாயெல்லாம் சிவப்பாக மாறிவிடும்.

புளிப்பும் துவர்ப்புமான கிளாக்காய். இனிப்பான கருப்பு நிறக் களாப்பழம். நாவல் பழம்போல் கருநிறத்திலான இனிப்பான காரைப்பழம். சிறிய கருநிற ஈச்சம் பழம் எல்லாம் எங்கள் காட்டுணவுப் பட்டியலில் இடம்பெறும்.

கோயில் தோப்பில் சடுகுடு ஆடிக் களைக்கும்போது பெரிய வாய்க்காலில் குளியல் - ஓரி எல்லாம் நடக்கும். வாய்க்காலைத் தாண்டிச் சென்றால் கரும்பு அல்லது கம்பு அல்லது கேவுரு அல்லது சோளம் அல்லது மல்லாட்டை அல்லது வள்ளிக்கிழங்கு அல்லது கரும்பு பயிர் வைக்கும் புஞ்சை வயல்கள். ‘வாழக்கொட்டான்’ என்பது அந்த நிலங்களின் ஒட்டுமொத்தப் பெயர். இப்பகுதியில் மேற்குறித்த பயிர்கள் மாறி மாறிப் பயிரிடப்படும். அறுவடைக்கு முன் அவரவர் வயலில் தேவையானதை எடுத்து உண்பர். வயல் இல்லாதவர்களுக்கு வயல் உள்ளவர்கள் கொடுப்பர். இதில் பெரிய சுவாரசியம் இருக்காது. கம்பு, கேவுரு, சோளம் அறுவடையின்போது கதிர்களை மட்டும் அறுத்துவிட்டுத் தட்டைகளை விட்டுவிடுவர். முற்றாத சில கதிர்களையும் விட்டுவிடுவர். அவை முற்றி, தப்புக் கதிர்களாக இருக்கும். அவற்றைத் தேடி எடுத்து வந்து துண்டை விரித்துக் கதிர்களை உமிட்டி, கொங்கை, தூசு போக ஊதி உண்போம். அதுபோல, கரும்பு வெட்டிய வயல்களில் குவிந்திருக்கும் கருப்பஞ்சோலைகளில் (கருப்புத் தோகைகளில்) மறைந்து கிடக்கும் தப்புக் கரும்பு எங்கள் கண்களுக்குத் தப்பாது. அந்தக் கரும்பு மிக இனிப்பாக இருக்கும். அதேநேரத்தில் வாயின் இருபுறத்தையும் கிழித்துவிடும். கரும்பு சாப்பிட்டபின் வீட்டிற்குச் சென்று காரமாக ஏதேனும் சாப்பிட்டால் நாக்கு எரியும். கண்களில் நீர் வரும். மல்லாட்டை பிடுங்கிய வயல்களில் பிடுங்கப்பட்ட குழிகளைக் குச்சியால் கிளறினால் நிச்சயம் தப்பு மல்லாட்டை கிடைக்கும். முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். வள்ளிக்கிழங்கு தோண்டிய இடங்களில் நிலத்தில் இத்துப்போன அல்லது தங்கிப்போன கிழங்குகள் லேசாகத் துளிர்விடத் தொடங்கி, தம் இருப்பை வெளிப்படுத்தும். குச்சியால் கிளறி, கிழங்கை எடுத்துக் கழுவினால் நிறம் வெளுத்த கிழங்கு அதிக இனிப்புள்ளதாக இருக்கும். இவ்வாறு விளையாட்டாகத் தேடி உண்பதுதான் எங்களுக்கு அதிக மகிழ்வளிக்கும்.

ஊருக்கு வடக்கே உள்ள நஞ்சை நிலப்பகுதி ‘வடக்குவெளி’ என்று சுட்டப்படும். கோடைக்காலத்தில் எங்கள் ஆட்டக்களம் அறுவடையான வடக்குவெளி வயல்கள்தாம். விளையாட்டு இடைவேளையில் பயறு, உளுந்து பிடுங்காத வயல்களில் முற்றிய பயத்தங்காய்களையும், உளுத்தங்காய்களையும் பறித்துக் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொள்வோம். ஒவ்வொன்றாக எடுத்து நுனியைக் கிள்ளி முன்பற்களுக்கிடையே செருகி, பற்களைக் கடித்து லேசாக வெளியே இழுக்க, பயறு, உளுந்து வாயிலும் தோல் கையிலும் இருக்கும். முற்றாத பிஞ்சுக் காயாக இருந்தால் அப்படியே மென்று விழுங்குவோம். எள் வயல்களைக் கடக்கும்போது முற்றிய எள் காய்களும் பிளக்கப்பட்டு முன்பற்களில் செருகி இழுக்க எள் வாய்க்குள் தங்கும்.

இப்படியாக எங்கள் காட்டுணவு அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மேலே குறித்தவை எல்லாம் என் ஐந்து வயது தொடங்கி பதினாறு வயது வரை அதாவது 1955 முதல் 1966 வரை உள்ள காலக்கட்ட அனுபவங்கள்.

இதேபோன்ற அனுபவங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்திருக்கும். நிலவியல் தன்மைகளுக்கேற்ப, காட்டுணவுகளில் மாறுபாடுகள் காணப்படும். அவ்வளவே.

மனித இனம் தோன்றிய தொடக்கக் காலத்தில் மனிதர்கள் காடுகளிலும் மலைக்குகைகளிலும் வாழ்ந்தார்கள். விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்டார்கள். விலங்குகள் கிடைக்காத நிலையில் காய்கனிகளையும், இலை கிழங்குகளையும் தேடி உண்டார்கள். அன்றாட உணவு தேடும் குழுக்களாக (Food gathering groups) வாழ்ந்தார்கள். கால்நடை வளர்க்கவோ, நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழவோ, விவசாயம் செய்யவோ, சமைக்கவோ அறியாதவர்களாக இருந்தனர். பின்னர், படிப்படியாகக் கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகவும், வேளாண் சமுதாயமாகவும், நிலைக்குழுக்களாகவும் வாழத் தொடங்கினர். இந்தப் படிநிலைகளைத் தொல்லியல் சான்றுகள் வழியாகவும், பழங்குடி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து வரலாற்றாய்வாளர்களும், மானிடவியலாளர்களும் விரிவாக ஆராய்ந்து பதிவு செய்துள்ளனர். சமுதாயம் இவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தாலும், தொல்பழங்கால வாழ்க்கை முறையின் மிச்ச சொச்சங்கள் மக்களிடையே காணப்படுகின்றன. காட்டு வாழ்க்கையில் எவற்றை உண்ணலாம்? எவற்றை உண்ணக்கூடாது? என்று அனுபவத்தின் அடிப்படையில் அறிந்த மனிதர்கள் தாம் அறிந்தவற்றைக் காலங்காலமாகத் தலைமுறைகளுக்குக் கடத்தி வந்துள்ளனர். அத்தகைய வாழ்க்கையின் மிச்ச சொச்சமாகவே எங்களுடைய காட்டுணவு அனுபவம் உள்ளது என்பதை உணர முடிகிறது. எங்கள் முன்னோர்கள் எவற்றை உண்ணலாம் என்று எங்களுக்குச் சொல்லித் தந்தார்களோ அவற்றை உண்டுள்ளோம். எங்களுள் விதைக்கப்பட்ட மரபறிவு எங்களுக்கு உதவியுள்ளது.

மேற்குறித்த காட்டுணவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

தாவரங்களின் இலை, பூ, காய், கனி, கொட்டை முதலியன.

கிழங்குகள், தேன், பருப்புகள், தானியங்கள்.

எங்களால் சிறு வயதில் உண்ணப்பட்ட இவையெல்லாம் உடலுக்கு நன்மை செய்யக்கூடியவையா என்ற ஐயம் இப்பொழுது எழுகிறது. தாவரங்களின் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் கூகுளில் தேடியபோது தாழஞ்சோறு, நெய்சட்டி போன்ற ஒருசில தாவரங்கள் பற்றிய விவரங்களை அறிய முடியவில்லை. அவற்றின் தாவரவியல் பெயர்கள் தெரிந்து தேடினால் அவற்றின் பயன்களையும் அறியக்கூடும். அவற்றைத்தவிர ஏனைய அனைத்துத் தாவரங்களும் மருத்துவக் குணங்களுடையவை என்பதை அறிய முடிந்தது. அவற்றுள் பலரால் அறிய முடியாத அருகிய சில தாவரங்கள் குறித்து மட்டும் சுருக்கமாகக் கீழே தரப்படுகிறது.

செம்பருத்திப்பூ - இதயத்திற்கு நன்மை செய்யக் கூடியது.

மணத்தக்காளி - பல்வலி நிவாரணி, காசநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

முசுமுசுக்கை - முசு - குரங்கு; முசுமுசு - இருகுரங்கு - இரு குரங்கின் கை என்று சித்த மருத்துவர்களால் சுட்டப்படும் மூலிகை. நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்து. சளி, இருமலைப் போக்கும்.

கோவைப்பழம் - இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

அம்மான் பச்சரிசி - மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. காய், சிறு பிள்ளைகளின் வயிற்றுப் பூச்சியை அழிக்க உதவும். (இதுகுறித்து மேலும் விவரமறிய என்னுடைய ‘தமிழர் கலை இலக்கிய மரபுகள்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரையைக் காண்க)

அரசம்பழம் - காய்ச்சல், ஆஸ்துமா நோய்களுக்கு மருந்து. வாயிலுள்ள பாக்டீரியாக்களையும் பற்கறைகளையும் நீக்கும். செரிமானத்துக்கு உதவும். இரத்த சர்க்கரையைக் குறைக்கும். மஞ்சள் காமாலைக்கு மருந்து. கருப்பைக் கிருமிகளை அழிக்கும்.

ஆலம்பழம் - இப்பழத்தில் உள்ள செரசானின் என்னும் பொருள் மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும் நீக்கும்.

பனம்பழம் - உடலிலுள்ள கழிவுகளை அகற்றும்.

தாமரைக்கிழங்கு - நெஞ்சில் கபம், காச நோய்களுக்கு மருந்து. தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

தாமரைக்காய் விதை - பொரியாகக் கடைகளில் கிடைக்கும். மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், புரோட்டீன் நிறைந்தது. நார்ச்சத்து அதிகம்.

கொடுக்காப்புளிப்பழம் - கொடு - வளைந்த, கொடுக்காப்புளி - வளைந்த காய்களைக் கொண்டது - எலும்புகளை வலுவாக்கும், உள்காயங்களைக் குணப்படுத்தும். கீழ்வாதம், மூட்டு வலி, மூட்டு தேய்மானம் இவற்றைக் குணப்படுத்தும். கால்சியம் அதிகம்.

இலுப்பைப்பூ, பழம் - பூ, உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பசி உண்டாக்கும். மதுமேகத்தைக் குணமாக்கும். விந்தணுக்களின் அடர்த்தியை அதிகரிக்கும். இலுப்பைப்பூ, பழத்தின் சதைப்பகுதியை நொதிக்கச் செய்து மது தயாரித்தனர் தமிழர். இந்தியப் பழங்குடிகள் இன்றும் மது தயாரித்து வருகின்றனர். ஒரு டன் பூவில் 700 கிலோ சர்க்கரையும், 300 கிலோ எரிசாராயமும் கிடைக்கும்.

நுணாப்பழம் - உடல் வெப்பத்தைக் குறைக்கும். மாந்தம், மண்ணீரல், கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயைக் குணப்படுத்தும். இரும்புச் சத்தை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும். மூட்டு வலியைப் போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

சப்பாத்திக்கள்ளிப் பழம் - தொடர்ந்து சாப்பிட இதயத்துடிப்பு சீராகும். சருமத்தைப் பாதுகாக்கும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

காரைப்பழம் - இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

களாக்காய், பழம் - விட்டமின் ஏ, சி சத்துகள் உள்ள இப்பழங்களில் இரும்பு, தாது சத்துகள் அதிகம். இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். பித்த மயக்கத்தால் அவதிப்படுவோருக்குக் களாக்காய் நல்லது.

இவையெல்லாம் கூகுளில் கண்ட விவரங்களில் சில சுருக்கமான செய்திகள் மட்டுமே. மேலும் அறிய விரும்புவோர் கூகுள் மற்றும் சித்த மருத்துவ நூல்களையும், அகராதிகளையும் பார்த்து அறியலாம்.

தாவரங்கள் தவிர, கிழங்குகள், தேன், பருப்புகள், தானியங்கள் குறித்து ஓரளவு அனைவரும் அறிவோமென்பதால் அவற்றைப் பற்றி இங்கு எதுவும் கூறவில்லை.

அடுத்த ஐயம், இந்தக் கூட்டுணவு பற்றிய மரபறிவு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுமா? மஞ்சக்கொல்லையில் தற்போது உள்ள நிலை என்ன?

ஊரில் கடந்த அரை நூற்றாண்டுகளாக நிலவியல் சூழல் வெகுவாக மாறியுள்ளது. எங்களின் ஆட்டக்களங்கள் பல இப்போது இல்லை. அதுகுறித்துச் சுருக்கமாகக் காணலாம்.

முருகன் கோயில் நந்தவனத்தின் தெற்குக் கடைசியில் குடில் இருந்த இடம் இலவச மனைப் பட்டாவிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எஞ்சிய இடத்தில் மேல்மருவத்தூர் சக்திபீடக் கோயில் ஒன்று சிறிதாகக் கட்டப்பட்டுள்ளது. நந்தவனத்தின் எஞ்சிய பகுதிகள் வேலியின்றிப் புதர்கள் மண்டிய பகுதியாகக் காணப்படுகின்றன. மருந்துக்குக்கூட ஒரு பூச்செடி இல்லை. இன்றைய தலைமுறையினர் நந்தவனம் பற்றி ஏதும் அறிந்திருக்க மாட்டார்கள். சாமியார் யாரும் கோயிலில் இல்லை.

குளத்தங்கரை அரசமரம் காற்றில் விழுந்துவிட்டது. பிள்ளையார் இடம் மாறிவிட்டார். அந்த இடம் இலவச மனைப்பட்டாவிற்கு அளிக்கப்பட்டு வீடாக மாறிவிட்டது.

ஆண்கள், பெண்கள் குளிக்கும் படித்துறைகள் இடிந்து பாழ்பட்டுக் கிடக்கின்றன. ஆலமரம் தன் பொலிவை இழந்து கடைசிக்காலத்தை எதிர்நோக்கி உள்ளது. ஏரிக்கரைப் பனை மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. தெற்கு மற்றும் வடக்குக் கரைகள் முழுதும் இலவச மனைப் பட்டாவாக அளிக்கப்பட்டதால் வீடுகளாகிவிட்டன. வன்னிமரம் அங்கு இல்லை. ஏரிக்கரை விளையாட்டுக் களமும் இல்லை.

குளத்திற்கு நீர் வரும் வழியும், வெளியேறும் வழியும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் நீர் தேங்கி, குளம் குட்டையாகிவிட்டது. தாமரை, அல்லி ஆகியவை அழிந்து விட்டன. தெளிந்த பளிங்கு நீர், பாசி பிடித்த கழிவு நீராகிவிட்டது. உயிரினங்கள் வாழவும், கால் நனைக்கவும் தகுதியற்றதாகக் குளம் சாகடிக்கப்பட்டு விட்டது.

நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழித்தடத்தின் இருபுறமும் தூர்க்கப்பட்டு வயல்கள் வீடுகளாகிவிட்டன. விளா மரம் இல்லை. நொச்சி, காட்டாமணக்கு காணாமல் போய்விட்டன. ஒருபக்கம் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருக்கின்றன.

நெடுஞ்சாலையை அகலப்படுத்த இருபுறமும் இருந்த புளிய மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இலந்தை மரம் வெட்டப்பட்டுவிட்டது. கொடுக்காப்புளி மரங்கள் அங்கு இல்லை.

ஐயனார் கோயில் தோப்பு மேல்நிலைப் பள்ளிக்குத் தரப்பட்டுவிட்டதால் தோப்பில் பல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. நாவல், அத்தி மரங்கள் இல்லை.

கரும்பு பிழிந்து காய்ச்சிய ஆலமரம் இருந்த இடத்தில் மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. ஆல மரங்கள் இல்லை. வீரன் சிலை உருமாறிவிட்டது. இலவம் பஞ்சு மரங்களும், சப்பாத்திக் கள்ளியும், களாச்செடி, காரைச்செடிகளும் இப்போது இல்லை. கோயில் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கம்பு, கேவுரு முதலியவை விளைவிக்கும் புஞ்சை நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு நெல் மட்டுமே பயிரிடப்படுகின்றன. சில நேரங்களில், மிளகாய், வெண்டை, கத்தரி முதலியன பயிரிடப்படுகின்றன. பழைய புஞ்சைப் பயிர்கள் பயிரிடப்படுவதில்லை.

அறுவடை இயந்திரங்களின் பயன்பாடுகள் மிகுதியால் பயறு, உளுந்து பயிரிடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதுபோன்ற நிலவியல் மாற்றங்கள் காரணமாக விளையாட்டுக் களங்களும், விளையாட்டுகளும் மாறிவிட்டன. காட்டுணவு கிடைக்குமிடங்கள் சுருங்கிவிட்டன.

முன்பு ஒவ்வொரு வீட்டிலும் நான்கு, ஐந்து பிள்ளைகள் இருந்தனர். அவர்களை வெளியே சென்று விளையாடப் பெற்றோர் அனுமதித்தனர்.

தற்போது குடும்பக்கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு பிள்ளைகள் மட்டுமே உள்ளனர். அவர்களைச் சுதந்திரமாக வெளியில் சென்று விளையாடப் பெற்றோர் அனுமதிப்பதில்லை.

மண் தெருக்களும், வழித்தடங்களும் தார்ச்சாலைகளாக மாறிவிட்டன. மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் ஓடிக்கொண்டிருந்த சாலைகளில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அதிகமாக ஓடத் தொடங்கி விட்டன. பிள்ளைகளை வெளியே விளையாட அனுப்புவது பாதுகாப்பாக இருக்காது என்று பெற்றோர் கருதுகின்றனர்.

ஆங்கிலக் கல்வி மோகம் அதிகமாக உள்ளது. மேல்நிலைப் பள்ளி வரை அரசுப் பள்ளிகள் இருந்தாலும் வெளியூரில் உள்ள ஆங்கிலப் பள்ளிகளுக்கே தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகின்றனர். எனவே, காலையிலேயே பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர். பிள்ளைகள் வெளியில் சென்று விளையாட வாய்ப்பில்லை.

பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் அதிகம் பயன்படுத்துவதாலும், வயல் நீர் வாய்க்கால்களில் கலப்பதாலும், வயல் வரப்புகளில் உள்ள தாவரங்களை உண்பதும், வாய்க்கால் நீரைக் குடிப்பதும் பாதுகாப்பானதாக இல்லை. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அவற்றை உண்பதைத் தடுக்கவே செய்வர்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் காட்டுணவு குறித்த மரபறிவு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பரவுவது குறைகிறது. விளையாட்டினால் கிடைத்த உடற்பயிற்சியும், காட்டுணவுகளால் கிடைத்த நன்மைகளும் இளந்தலைமுறையினருக்குக் கிடைக்காமல் போய்விட்டன.

தொடக்கக் கல்வியில் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் பற்றியும், அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் சொல்லித் தரப்பட வேண்டும். களத்திற்கு அழைத்துச் சென்று இயற்கைத் தாவரங்கள், தானியப் பயிர்களின் வேளாண்மை குறித்துச் சிறார்களுக்குக் கற்றுத் தருதல் வேண்டும். இளைய தலைமுறை அறிய வேண்டிய செய்திகள் இவை.

- முனைவர் ஆறு. இராமநாதன், ஓய்வு பெற்ற நாட்டுப்புறவியல்துறைப் பேராசிரியர்.

Pin It