இன்றைய வேகமாக வளர்ந்து வரும் நீலப் பொருளாதார சூழலில், மீன்வளம் உலகளாவிய அளவில் மிகுந்த வேலைவாய்ப்புகளையும் தொழில்முனைவு வாய்ப்புகளையும் வழங்கும் முக்கியமான கல்வித் துறையாக உருவெடுத்துள்ளது. மீன்வளம் என்பது வெறும் மீன்பிடித்தொழில் மட்டுமே என்ற பொதுவான எண்ணம் இன்னும் பலரிடத்தில் நிலவுகிறது. ஆனால், நவீன மீன்வளக் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், உயிரித் தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்தல், சுற்றுச்சூழல் மேலாண்மை, வணிகம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய விரிவான கல்வி மற்றும் தொழில்முறை வாய்ப்புகளை வழங்குகிறது.Aquaculture 700உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளராகவும், கடலுணவு ஏற்றுமதியில் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா திகழ்கிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் ஆகியவற்றில் மீன்வளத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. நிலையான நீருயிரிவளர்ப்பு, கடல்சார் நீருயிரி வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, கடலுணவு பதப்படுத்தல், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் நீர்வாழ் உயிரின சுகாதார மேலாண்மை போன்ற துறைகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், திறமையான மீன்வளப் பட்டதாரிகளுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மீன்வள அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளைப் பயிலும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மீன்வளத்துறைகள், மீன்வளப் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB), கடலுணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA), ஏற்றுமதி ஆய்வு முகமை (EIA), உணவுப் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள், பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), வங்கித் தேர்வுகள், வேளாண் கள அலுவலர் (Agricultural Field Officer) உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலமாகவும் அரசு பணிகளில் சேர முடியும்.

தனியார் துறைகளிலும் மீன்வளப் பட்டதாரிகளுக்கு மிகுந்த வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இறால் குஞ்சு பொரிப்பகங்கள், மீன் மற்றும் இறால் பண்ணைகள், அலங்கார மீன் உற்பத்தி மையங்கள், கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், மீன் மற்றும் இறால் தீவன உற்பத்தி நிறுவனங்கள், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள், நீர்வாழ் உயிரின நோய் கண்டறியும் ஆய்வகங்கள், தரக் கட்டுப்பாடு மற்றும் தர உறுதி பிரிவுகள், ஏற்றுமதி நிறுவனங்கள், மீன்பிடி உபகரண உற்பத்தி நிறுவனங்கள், தீவன மூலப்பொருள் விநியோக நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், புதிய தயாரிப்பு உருவாக்கப் பிரிவுகள் மற்றும் பன்னாட்டு நீர்வள நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மறுசுழற்சி நீருயிரி வளர்ப்பு அமைப்புகள் (RAS), உயிர் கூழ்ம (Biofloc) தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), துல்லிய நீருயிரி வளர்ப்பு (Precision Aquaculture), கடல்சார் உயிரித் தொழில்நுட்பம் (Marine Biotechnology) மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, இளைஞர்களுக்கு புதுமையான மற்றும் உயர்ந்த தரத்திலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்தியாவைத் தாண்டி தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் தகுதியான மீன்வளப் பட்டதாரிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. நீருயிரி வளர்ப்பு, நீர்வாழ் உயிரின சுகாதார மேலாண்மை, கடலுணவு தர மேலாண்மை, ஆராய்ச்சி, ஆலோசனை சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை போன்ற துறைகளில் பணியாற்றுவதுடன், உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

தொழில்முனைவோராக உருவாக விரும்பும் இளைஞர்களுக்கும் மீன்வளத்துறை மிகுந்த வாய்ப்புகளை வழங்குகிறது. மீன் மற்றும் இறால் குஞ்சு உற்பத்தி, மீன் குஞ்சு விநியோகம், அலங்கார மீன் வளர்ப்பு, பயோஃப்ளாக் பண்ணைகள், கூண்டு முறையில் மீன் வளர்ப்பு (Cage Culture), கடற்பாசி வளர்ப்பு, மீன் மற்றும் இறால் தீவன உற்பத்தி, நீர்வாழ் உயிரின நோய் கண்டறிதல் சேவைகள், ஆலோசனை மையங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் தொழில் தொடங்கி, தங்களுக்கும் பிறருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இந்தத் துறையின் பரந்த வாய்ப்புகளை மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல கல்வி நிறுவனங்களும் தொழில்முறை அமைப்புகளும் தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகள் மற்றும் இணையவழி தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் மூலம் கல்வி, அரசு, தொழில், வங்கி, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களுடன் மாணவர்கள் நேரடியாக கலந்துரையாடி, தங்களின் எதிர்காலத் தொழில் பாதையைத் திட்டமிடும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அறிவியல், தொழில்நுட்பம், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவு ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மீன்வள அறிவியல் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் கல்வித் துறையாகும். வளர்ந்து வரும் நீலப் பொருளாதாரத்தில், நிலையான உணவு உற்பத்தி, இயற்கை வள பாதுகாப்பு, தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீன்வள வல்லுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மீன்வளம் என்பது கடலில் மீன்பிடிப்பதோடு முடிவடையும் துறை அல்ல. ஆய்வகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், நிதி நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தொழில்முனைவுத் துறைகள் எனப் பல்வேறு வாய்ப்புகளை உள்ளடக்கிய உலகளாவிய தொழில்முறைத் துறையாகும். மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கட்டுரையின் மூலம் தெளிவாகப் புரிந்து கொண்டு, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இன்றைய இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவும், உலகளாவிய அளவில் சாதிக்கவும் மீன்வளக் கல்வி சிறந்த பாதையாக அமையும்.

மீன்வளக் கல்வி மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறக்கச் செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும்!

- இரா.தினேஷ், உதவிப் பேராசிரியர், நீருயிரி வளர்ப்புத் துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி - 601 204, திருவள்ளூர் மாவட்டம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.