புவி வெப்ப உயர்வால் உயரும் கடல்நீர் மட்டம் நிலத்தை மட்டும் அழிப்பதில்லை, மொழிகளையும் அழிக்கிறது என்று கனடா ஆண்டாரியோ கிங்ஸ்ட்டன் குயீன்ஸ் பல்கலைக்கழக ஸ்ட்ரதி (Strathy) மொழி ஆய்வுப்பிரிவின் இயக்குனர் அனெஸ்டேஷியா ரீல் (Anastasia Riehl) கூறுகிறார்.

கடல்நீர் மட்ட உயர்வு ஏற்கனவே டுவாலு (Tuvalu), கிரிபாட்டி (Kiribati), மார்ஷல் தீவுகள் போன்ற பசுபிக் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் தீவுத் திட்டுகளை அச்சுறுத்தி வருகிறது. இங்கு வீடுகள், பயிர்கள் மட்டும் இல்லாமல் சமூக வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் இத்தீவுகளில் பேசப்படும் டுவாலுவன், கிரிபாட்டி மற்றும் ஆர்ஷலீஸ் போன்ற மொழிகளும் அழிகின்றன. இந்த மொழிகள் இங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகள்.

காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் மொழிகளின் மீதான தாக்கம் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் மொழிகளுக்கும் காலநிலைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு வரலாற்றுப் பழமையுடையது.kiribati mother and her daughterமனிதர்கள் பூமியில் வாழத் தொடங்கியபோது காலநிலை மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவை அவர்கள் நிரந்தரமாகக் குடியேறி வாழவும், வளம் பெறவும் முக்கியப் பங்காற்றியுள்ளன. இதமான வெப்பநிலை, கணிக்கக்கூடிய மழைப்பொழிவு, எண்ணற்ற விவசாய வாய்ப்புகள் போன்றவை உள்ள நில நடுக்கோட்டுப் பகுதியில் மனித வாழ்க்கை செழுமை அடைந்தது. மனித இனம் இங்கு வாழத் தொடங்கியது. ஒரு பிரதேசத்தில் இருந்த ஒரு சமவெளி அல்லது ஒரு தீவு போன்ற இடங்களில் மனித வாழ்வு நிலைபெற்றது.

இதன் பலனாக இந்த இடங்களில் ஆயிரக்கணக்கான மனித சமுதாயங்கள் தோன்றின. அவர்களுடன் ஆயிரக்கணக்கான மொழிகளும் பிறந்து வளர்ந்தன. இன்று உலகில் உயரமான பகுதிகளில் பேசப்படுவதை விட அதிக மொழிகள் வெப்பமண்டலப் பகுதிகளிலேயே பேசப்படுகின்றன.

செழுமையான காலநிலையில் மனிதர்கள், மொழிகள் மட்டும் வளம் பெறவில்லை. அனைத்து வகையான உயிரினங்களும் தழைத்து வளர்ந்து வாழ்ந்தன. உயிரினங்களின் பரிணாமத்திற்கும் மொழிகளுக்கும் இடையில் சம அளவிலான தொடர்பு இருப்பதை உயிரி கலாச்சார பன்முகத்தன்மை (Bio cultural diversity) ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. புதிய ஒரு உயிரினம் எங்கு தோன்றி வளமுடன் வாழத் தொடங்குகிறதொ அங்கு ஒரு மொழியும் பிறப்பெடுக்கிறது.

இன்று உலகில் பேசப்படும் சுமார் ஏழாயிரம் மொழிகளில் 70% மொழிகளும் பூமியின் 25% நிலப்பரப்பிலேயே பேசப்படுகின்றன. இந்த இடங்கள் செழுமையான உயிர்ப் பன்மயத் தன்மை உடைய பகுதிகள். துரதிர்ஷ்டவசமாக இனங்கள் மற்றும் மொழிகளின் பிறப்பிலும் இறப்பிலும் சமமாகப் பகிரப்பட்ட செழுமை என்ற இந்த வரமே அவற்றின் அழிவையும் ஏற்படுத்துகிறது. காலநிலை மற்றும் மொழிகளின் வரலாற்றுக் காலம் முதலான நல்லிணக்கக் கதை இன்று காலநிலை மாற்றத்தால் சோகமான திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்பரித்து பொங்கும் கடல் ஒரே அலையில் ஒரு மொழி பேசும் சமூகத்தை திடீரென்று விழுங்கி விடாது. முதலில் மொழி பேசும் மனிதர்கள் வெளியேறுவர். மக்கள், மொழிகள், உயிரினங்கள் செழித்து வாழ உகந்ததாக பூமியில் இருந்த இந்த பகுதிகள் இப்போது வாழத் தகுதியற்ற இடங்களாக மாறி விட்டன. “நல்ல காலநிலை எங்களை இப்பகுதிகளில் முன்பு குடியேறி வாழ அமைத்தது. இப்போது அதே காலநிலையே இந்த இடங்களில் இருந்து எங்களை வெளியேற்றுகிறது” என்று ஆய்வாளர் ரீல் கூறுகிறார்.

கிரிபாட்டியில் உள்ள ஆம்போ (Ambo) என்ற பகுதி உயரும் கடல்நீர் மட்டத்தால் இன்னும் 30 முதல் 60 ஆண்டுகளில் கடலில் மூழ்கப் போகிறது. கிரிபாட்டியில் டராவா (Tarawa) என்ற இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடல்மட்டம் ஒரு செ மீட்டர் உயர்கிறது.

நிலப்பகுதியை கடல் விழுங்குகிறது என்றால் காலநிலை மாற்றம் எவ்வாறு ஒரு மொழியைக் காயப்படுத்த முடியும்? திடீரென்று கடல் நிலத்தின் ஒரு பகுதியை விழுங்குவது போல காலநிலை மாற்றம் ஒரு மொழியை விழுங்கி விடாது. மெல்ல சாகும் மொழியின் சிறு சிறு சொற்கள் முதலில் கடலின் அலைகளுடன் இணைந்து காணாமல் போகும். அதற்கு முன்பே மொழி பேசுபவர்கள் தங்கள் சொந்தத் தீவுகளை விட்டு வெளியேறிச் செல்வர்.

உயரும் கடல், கடுமையான வறட்சி, அழிவை ஏற்படுத்தும் புயல் போன்ற மாறும் காலநிலையின் கெடுதிகள் மட்டும் ஒரு மொழியை சாகடிப்பதில்லை. மாறாக காலநிலை அவசரநிலை மக்கள் மீது திணிக்கப்படும் வலுக்கட்டாயமான இடம்பெயர்வை ஏற்படுத்துகிறது. மக்கள் அனைவரும் அதுவரை வேரூன்றி வாழ்ந்த இடங்களில் இருந்து புதிய பகுதிகளுக்கு சென்று குடியேறத் தொடங்குவர். பெரும்பாலான இடம்பெயர்வுகள் நடக்கும் நகரப் பகுதிகள் பாரம்பரிய மொழிகளை நீடித்து வாழச் செய்வதில்லை. மாறாக அழிக்கவே செய்கிறது.

புவி வெப்ப உயர்வு காலத்திற்கு முன்பே மொழிகள் அழியும் பிரச்சனை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பாதிக்கும் மேற்பட்ட உலக மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. இந்த எண்ணிக்கை 90% என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த நிலைக்கு பல உலக நாடுகளில் திணிக்கப்படும் தேசிய மொழித் திட்டம், மொழிச் சிறுபான்மையினரை அரசுகள் வழக்குகள் மூலம் துன்புறுத்துவது, உலகமயமாக்கல் யுகத்தில் சர்வதேச மொழிகள் என்று ஒரு சில மொழிகள் முன்னிலைப்படுத்தப்படுவது, சிறுபான்மை மொழிகளில் மிரட்டப்படும் ஊடகங்கள், கல்விக்கான குறைவான வாய்ப்புகள் போன்ற பல காரணங்கள் உள்ளன.

மொழிகள் திடீரென்று மரணமடையாது. மெல்ல மெல்ல உதிர்ந்து அழிந்து போய்விடும். ஒரு சமூகம் பல காரணங்களுக்காக பல மொழிகளைப் பயன்படுத்தத் தொடங்கும்போது அந்த சமூகத்தின் தலைமுறை இடைவெளி அதிகரிக்கும். கடைசியில் சொந்த மொழியைப் பேசுபவர் எவரும் இல்லாமல் போவார். மொழிகளின் இழப்பை காலநிலை மாற்றம் துரிதப்படுத்துகிறது.

ஆபத்தான நிலையில் இருக்கும் பூமியில் கடினமான வாழ்க்கைப் போராட்டத்தில் இருக்கும் சிறுபான்மை மொழிச் சமூகங்களுக்கு உண்ண உணவு, குடிக்க நீர், இருக்க இடம், பாதுகாப்பு போன்றவற்றை விட மொழிகள் முக்கியமானவையா என்ற கேள்வி எழுகிறது. மொழிப் பன்மயத் தன்மை என்பது இவற்றுக்கு முன் அற்பமாகவே கருதப்படுகிறது. கலாசாரம் மற்றும் தனிமனித அடையாளத்துடன் மொழிகள் பின்னிப் பிணைந்துள்ளன. அவை வரலாறுகளை பொதிந்து வைத்துள்ளன. தாவரங்களை பட்டியலிட்டு வைத்துள்ளன. நம்பிக்கைகளை உருவாக்குகிறது.

மனித ஒருங்கிணைப்பின் தகவல் பெட்டகமான மொழிகள் இறந்தால் அந்தத் தகவல்கள் அறிவியலுக்கு என்றும் கிடைக்காமல் அழிந்து போய்விடும். நம்மை நாமே கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். இந்தக் கதை இதோடு முடிந்து விடவில்லை. மொழிகளின் மரணம் உலகம் முழுவதும் இருக்கும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் மொழியியலாளர்கள் இணைந்து மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட வைத்துள்ளது. அழியும் ஆபத்தில் இருக்கும் மொழிகள் ஆவணப்படுத்தப்படுகின்றன.

அழிந்து கொண்டிருந்த மொழிகள் புது வாழ்வு பெற்று வருகின்றன. சின்னஞ்சிறிய டுவாலுவன் மொழி நியூசிலாந்தில் புது நம்பிக்கையை எதிர்கொள்கிறது. அங்கு சென்று குடியேறும் டுவாலு மக்கள் தங்கள் இளம் தலைமுறைக்கு மொழி, கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2022 டிசம்பர் முதல் யுனெஸ்கோ பத்தாண்டை ஆதிவாசி மொழிகளைப் பாதுகாக்கும் பத்தாண்டு என்று அறிவித்துள்ளது. 

மனித நலத்தை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் மற்றும் மொழிகளின் அழிவை ஒருங்கிணைந்து எதிர்த்துப் போராடினால் மொழிகளும் காக்கப்படும், காலநிலை ஆபத்தும் குறையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காலநிலைப் பேரிடர் என்பது அழிக்கும் ஒரு பெரும் சக்தி என்பது போலவே மனித இனத்தை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் விளங்குகிறது. மொழிகளும் உயிரினங்களும் ஒன்றாகப் பிறந்து ஒன்றாக இறந்தால் உறுதியாக இவை இரண்டையும் ஒன்று சேர்ந்து காப்பாற்ற முடியும். அழியும் மொழிகள் காப்பாற்றப்பட்டால் மட்டுமே மனித இனமும் காப்பாற்றப்படும்.

https://www.theguardian.com/environment/2023/jun/28/indigenous-languages-climate-crisis-threat-pacific-islands?

சிதம்பரம் இரவிச்சந்திரன்