அணுமின்சாரம் மூலமே நாட்டின் மின் தேவையை நிறைவு செய்ய முடியும் என அப்பட்டமாகப் பொய் கூறி, நாட்டை அமெரிக்கா, இரசியா, பிரான்சு வல்லாளுமைகளுக்குக் கூவிக்கூவி விற்றுக் கொண்டுள்ள ஆளும் இந்திய அரசின் அரசப் பொய்களை அம்பலப்படுத்தி நாடெங்கும் வடக்குத் தெற்காக, கிழக்கு மேற்காகத் தொடர்வண்டி மூலம் மக்களிடையே பரப்புரை செய்வது என கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு முடிவு செய்தது. கடந்த 2014, நவம்பர் மாதத்தில் குமரி முதல் ஜம்மு காசுமீர் வரை முதல் கட்ட பரப்புரைப் பயணத்தை நடத்தியது போராட்டக் குழு.

koodankulam to assam 3
கடந்த பெப்ரவரியில் 19 தொடங்கி மார்ச்-1 வரை குமரி முதல் அசாம் திப்ரூகர் வரை இரண்டாம் கட்ட பரப்புரைப் பயணம் தொடங்கியது. முதல்கட்ட ஜம்மு காஷ்மீர் பயணத்திற்கான பயணச்சீட்டு முதல் பல்வேறு ஏற்பாடுகளையும் செய்தவன் நான். ஆனால், பயணம் தொடங்கிய காலத்தில் கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய சகாயம் இ.ஆ.ப. அவர்களைச் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததால் சகாயம் ஆய்வுக்குழுக்கு உதவுவதற்காக மக்களிடையே பல்வேறு வழிகளில் மக்களிடையே பரப்புரைப் பயணம் மேற்கொண்டு இருந்ததால் என்னால் அப்பயணத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே இரண்டாம் கட்டப் பயணத்தில் இந்திய அரசு அணுமின்சாரத்தைப் பற்றிக் கூறிவரும் பொய்களை அம்பலப்படுத்தி ”அணுமின்சாரம் மலிவானது அன்று; அணு மின்சாரம் தூய்மையானது அன்று; அணு மின்சாரம் பாதுகாப்பானது அன்று; அணு மின்சாரம் உடல்நலனுக்கு உகந்தது அன்று; அணுமின்சாரம் அறநெறிப்பட்டது அன்று; எரிசக்தி சிக்கலுக்கு அணுமின்சாரம் தீர்வே அன்று” எனும் வகையில் பரப்புரைப் பயண நோக்கத்தை அறிவித்து எங்களது பயணத்தைத் தொடங்கினோம்.

கன்னியாகுமரியில் பெப்ரவரி 19, இரவு 11.00 மணிக்குத் தொடர் வண்டி புறப்படும் நேரம். இரவு 9.00 மணிக்கு அனைவரும் கூடி தொடர் வண்டி நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து எங்களின் பயண நோக்கங்களை விளக்கினோம். எங்களின் பயணக் குழுவை இ.பொ.க. (மா.லெ) விடுதலை அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், வழக்கறிஞர் இரமேசு, தோழர்.அந்தோணிமுத்து ஆகியோர் அவர்களது அமைப்பு தோழர்களுடன் உடன் வந்து எங்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

ஐந்து பெண்கள் உட்பட 20 பேர் பயணக் குழுவில் இடம் பெற்று இருந்தோம். அசாமில் இருந்து திரும்புவதற்கு அனைவருக்கும் முன் பதிவு பயணச்சீட்டு கிடைத்து விட்டது. ஆனால், குமரியில் இருந்து அசாம் செல்ல பயணம் தொடங்கும் போது 14 பேருக்கு முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்கவில்லை. பயணமோ மிக நீண்டது. 4 இரவு 5 பகல் பொழுதைக் கடக்க வேண்டும். தொடங்கும் நாள் இரவு 7.30 மணிக்கு "பயணத்தை நிறுத்தி விடலாமா" என எங்களது ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயகுமார் அவர்கள் என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் கேட்டார். நான் 'பயணத்தை நிறுத்தம் செய்வதோ அல்லது சில கிழமை ஒத்திவைத்துப் புறப்படுவதோ என்பது வேண்டாம். எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் சந்திப்போம். முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டியில் பயணிப்போம், நமது பரப்புரையை மேற் கொள்வோம்" என உறுதிபடக் கூறினேன். பொதுப் பெட்டியில் பயணம் மேற்கொள்வது என இறுதி முடிவானது.

எங்களைக் கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திக்கும்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இந்திய, தமிழக அரசுகளின் உளவுத்துறையினர் (IB, CPCID, Q பிராஞ்ச், SPCID...) எங்களைச் சுற்றி நின்று கொண்டு இருந்தனர். செய்தியாளர்கள் எங்களை நேர்காணல் எடுத்து புறப்பட்டவுடன் உளவுத்துறையினர் தனது கைவரிசையைக் நைசாக காட்டத் தொடங்கினர்.

உளவுத்துறையினர், தனித்து நின்று கொண்டிருந்த எங்கள் பயணக் குழுவில் உள்ள சில பெண்களிடம் சென்று இயல்பாக பேச்சுக்கொடுத்து, அவர்களின் பெயர், முகவரி, உடன் செல்பவர்கள் பெயர் எனக் கேட்கத் தொடங்கினர். இவர்கள் எதற்கு இதைக் கேட்கின்றனர் எனப் பெண்கள் சந்தேகப்பட்டு விடை சொல்லாமல் இருக்கும் போதே, நாங்கள் அங்கே சென்று விட்டோம். நாங்கள் உங்களுக்கு எந்தச் செய்தி வேண்டுமானாலும் பொறுப்பாளர்களான எங்களிடம் கேளுங்கள். எதற்காக அவர்களிடம் உசாவுகிறீர்கள் என கோபத்துடன் கூறினோம். உடனே உளவுத் துறையினர் உங்கள் பாதுகாப்புக்காகவும், நன்மைக்காகவும்தாம் இதைக் கேட்கிறோம் என்றனர்.

நான் உளவுத் துறையினரைப் பார்த்து 'உங்களின் கருணை எங்களைப் புல்லரிக்கச் செய்கிறது. இதே நாகர்கோவில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2014-இல் மட்டும் பா.ச.க., இந்து முன்னணியினர் பல்வேறு காரணங்களைக் கூறி 5 முறை சுமார் 300 அரசு பேருந்துகளை அடித்து உடைத்துள்ளனர். யாரையும் இதுவரை தளை செய்யவில்லை. வழக்கு எதுவும் இல்லை. அரசின் பொதுச்சொத்தைச் சிதைவு செய்ததற்கு இழப்பீடு எதுவும் இதுவரை பெறவில்லை. ஆனால் எங்கள் போராட்டக்குழு அறிவிப்பின்படி, பெற்றோர்கள் ஒப்புதலுடன் போராட்டக்குழு பெண்கள் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று அணு உலை அமைக்கக் கூடாது எனக் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர்.

போராட்டக் குழு பெண்களின் முகவரியைப் பெற்ற நீங்கள், அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களைச் சுற்றுலா செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று மனு கொடுக்க வைத்ததாகக் கூறி பொய்வழக்குப் பதிந்து இன்றுவரை அவர்களைத் தொல்லை செய்து வருகிறீர்கள். இப்படிப்பட்ட காட்டிக்கொடுப்பு வேலை செய்யும் நீங்கள் எங்களுக்குப் பாதுகாப்பு எனப் பசப்பாதீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அது தவறாக இருக்குமே அன்றி, எங்களுக்கு மக்களுக்கு நன்மையாக இருக்காது எனக் கூறி விரட்டினோம்.

கன்னியாகுமரி முதல் அசாம் வரை செல்லும் 'விவேக் விரைவு வண்டி' தான் இந்திய நாட்டின் மிக நீண்டதொலைவு 4273 கி.மீட்டர் பயணம் செல்லும் தொடர்வண்டி. இது உலகத்தில் நீண்டதொலைவு பயணம் செல்லும் 7ஆவது தொடர்வண்டி. இந்தத் தொடர் வண்டியில் வண்டியின் முன்புறம், பின்புறம் மட்டுமல்லாது நடுவிலும் 3 பொதுப்பெட்டிகள் இருந்தன. நடுவில் உள்ள பொதுப் பெட்டியை ஒட்டித்தான் எங்களது குழுவில் முன்பதிவு பயணச்சீட்டு கிடைத்தவர்கள் பெட்டி இருந்தது. எனவே ஒவ்வொரு ஊரிலும் தொடர்வண்டி நிலையங்களில் இறங்கி இணைந்து பரப்புரை செய்ய ஏதுவாக இருக்கும் வகையில், எங்களின் பொதுப் பயணப் பெட்டி அமைந்தது.

எங்களது பயணக் குழுவில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயகுமார், நான்(முகிலன்), போராட்டக்குழு பெண்கள் தோழர் சுந்தரி, தோழர் மில்ரெட், தோழர் செல்வி, தோழர் லிட்வின், உட்பட ஐவர், இடிந்தகரையை சேர்ந்த தோழர்.சுதர்சன், தோழர்.சந்தியாகு உட்பட இளைஞர்கள், எழுத்தாளர் முத்துக்கிருட்டிணன், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராசேந்திரன், ஆவணப் புகைப்படக் கலைஞர் மாவீரன், தோழர் போஸ், தோழர் குணசீலன் உட்பட 20 பேர் பயணமானோம்.

இரவு 11.00 மணிக்குக் கன்னியாகுமரியில் புறப்பட்ட தொடர்வண்டி கேரளா வழியாக காலை 9.35 மணிக்குக் கோவை வந்தடைந்தது. வழியில் இருந்த அனைத்து நிறுத்தங்களிலும் இறங்கி துண்டறிக்கை கொடுத்து நள்ளிரவிலும் பரப்புரை செய்தோம். இரவில் பொதுப் பெட்டியில் நாங்கள் இருந்த உட்பகுதியில் பரப்புரை பதாகைகளை கட்டி வைத்து விட்டோம். அதைப் பார்த்த கேரள மக்கள் யாரும் பொதுப்பெட்டியில் வந்த எங்களுக்கு எவ்வித சிறு இடையூறும் கூட செய்யாமல், பரப்புரைக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், சோலார்பேட்டை, காட்பாடி என அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களிலும் எஸ்.டி.பி.ஐ., சி.பி.ஐ(எம்-எல்)விடுதலை, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், தமிழ் மீட்சி இயக்கம், பெரியாரிக்கத் தொண்டர்கள், அம்பேத்கார் மக்கள் இயக்கம், ஆம் ஆத்மி, NAPM, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, இசுலாமிய சனநாயக முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தமிழக பசுமை இயக்கம் எனப் பல்வேறு இயக்கத் தோழர்கள், தலைவர்கள் பரப்புரைக் குழுவினரைச் சந்தித்து தங்களது வாழ்த்துகளையும், பயணம் வெற்றி பெற ஆதரவையும் தெரிவித்தனர்.

எழுத்தாளர் முத்துகிருட்டிணன் தொடர் முயற்சியால், தமிழ்நாடு எல்லையை கடப்பதற்குள் அனைவருக்கும் பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டது. கேரளா, தமிழகம், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய நாடுகளின் வழியாக 4 இரவு, 5 பகல் பயணம் அமைந்தது. மேற்கண்ட நாடுகள் வழியாகப் பயணம் செய்யும்போது அவர்கள் மொழியில் அச்சிட்ட துண்டறிக்கையும், இது தவிர இந்தி, ஆங்கில மொழிகளில் அச்சிட்ட துண்டறிக்கைகளை 8 மொழிகளில் 40,000 வழங்கினோம். ஒவ்வொரு பகுதியிலும் அவர்களின் மொழியில் அச்சிட்ட துண்டறிக்கையை வழங்கும்போது ஆர்வத்துடன் மக்கள் வாங்கிப் படித்தனர். ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்திலும் இறங்கி அங்குப் பேசக்கூடிய மொழியிலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் முழக்கங்கள் போட்டு மக்கள் கவனத்தை ஈர்த்து துண்டறிக்கை கொடுத்தோம். தொடர் வண்டியில் உடன் பயணம் செய்பவர்களிடம் அந்தந்தப் பகுதி மொழியில் முழக்கங்களை கேட்டு எழுதிக் கொண்டோம்.

முன்பதிவு பயணப் பெட்டியில் 72 இருக்கைகள் இருந்தாலும் அதில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 300 பேர் இருப்பார்கள். கைகழுவும் இடம், கழிப்பறை வாயில், இரண்டு பெட்டி இணைக்கும் இடம் என எங்கும் மக்கள் கூட்டம். பகலில் கடுமையான அனல் காற்று, பெட்டியில் மின்விசிறி இயங்காத நிலை. கழிப்பறையில் தண்ணீர் இல்லை. இந்தத் தண்ணீர் இல்லா கழிப்பறையைத் தான் 300 பேர் பயன்படுத்த வேண்டிய நிலைமை. எவ்வளவு கொடுமையான நிலைமை இருந்திருக்கும் என்பதைப் படிப்பவர்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறோம்.

எந்த அடிப்படை ஏந்தும் செய்து கொடுக்காமல், ஊருக்காகத் தனது குருதியை வேர்வையாகச் சிந்தி உழைக்கும் மக்களைச் சேரி என சமூகத்தில் ஆதிக்கசக்திகள் ஒதுக்கி வைத்திருப்பது போல்; இந்த இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணப் பெட்டி பயணம் அமைந்தது. ஆண்கள் நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொண்டு பயணம் செய்தோம். ஆனால் எங்களோடு உடன் வந்த போராட்டக்குழு பெண்கள், தொடர்வண்டியில் பயணம் செய்த பெண்கள் பட்ட துன்பத்தைப் பார்த்த எங்களின் கண்களில் குருதி வராத நிலை மட்டும்தான். முன்பதிவு பெட்டியே இப்படி என்றால், பொதுப் பெட்டிப் பயணம் எப்படி இருந்திருக்கும்?

இந்திய அரசின் அறிவியல் வளர்ச்சியைப் பேசுபவர்களை இந்தப் பெட்டியில் ஏற்றி பயணிக்கச் செய்ய வேண்டும். பலமுறை தொடர்வண்டி பொறுப்பாளராக இருக்கும் காப்பாளரிடம் சென்று முறையீடு செய்துதான் ஓடாத மின்விசிறிகளை இயங்க வைத்தோம். தொடர்வண்டியில் தண்ணீரை நிறைக்க வைத்தோம். தொடர்வண்டி நிலையத்தில் மறித்துப் போராடுவது மட்டும்தான் நாங்கள் செய்யவில்லை. மற்ற அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்தோம்.

இந்த வடகிழக்கு நாடுகளில் பரப்புரைப் பயணம் செய்வது என முடிவு செய்தவுடன் அது எனக்கு மனதளவில் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. காரணம், வடகிழக்குப் பகுதிகள் அனைத்தும் தனது தேசிய இன உரிமைக்காகப் பல்வேறு வகையில் பல ஆண்டுகளாகப் போராடி வருபவை. ஆயுதப் போராட்டம் வரை கடுமையாகப் போராடியவர்கள். இப்போதும் போராடிக் கொண்டு இருப்பவர்கள். தன்மீது இந்திய அரசு செலுத்தும் ஆளுமையை, அடக்குமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என உறுதியாக இருப்பவர்கள். அதற்க்காக எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள்.

ஏழு உடன் பிறப்புகள் என அழைக்கப்படும் அசாம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், அருணாசலபிரதேசம், மிசோரம் என அனைத்தும் வலுக்கட்டாய நாட்டு இணைப்பால், தமிழகம் போல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டவர்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, தனது எதிர்ப்பை இன்றுவரை ஏதாவது ஒருவழியில் இந்திய அரசுக்குத் தெரிவித்து போராடி வருபவர்கள்.

இந்த வடகிழக்கு பகுதி தேசிய இன மக்கள் மஞ்சள் நிறமுடைய மங்கோலிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரசு தனது படையை அங்கே நிறுத்தி, படைக்கு எண்ணற்ற ஆளுமைகளைக் கொடுத்து பல்வேறு அடக்குமுறை செய்தே ஏழு உடன்பிறப்புகள் என அழைக்கப்படும் இப்பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் இன்றுவரை வைத்துள்ளது. அதன் வளங்களை டாட்டா போன்ற எண்ணற்ற இந்திய நிறுவனங்கள், மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொடுத்து வருகிறது.

koodankulam to assam 1
இந்தப் படைச் சட்டங்களை அகற்றி, ஆயுதப்படையை வெளியேற்றக் கோரித்தான் மணிப்பூரில் ஐரோம் சர்மிளா அவர்கள் தொடர்ந்து 13 ஆண்டுகளாக உண்ணாநிலை போராட்டம் நடத்துவதும், அரச படைகளின் அட்டூழியத்தை அம்பலப்படுத்த மணிப்பூர் பெண்கள் தனது உடைகளைக் களைந்து நின்று நிர்வாணத்தையே ஆயுதமாக்கிப் போராடி உலகத்தின் கவனத்தை தனது பக்கம் திரும்ப வைத்ததும் ஆகும்.

நாகலாந்தில் போராடும் போராளிக் குழுவான தோழர். ஐசக் முய்வா மற்றும் தோழர். கப்லாங்க் ஆகியோர் தலைமையில் இயங்கும் NSCN, NNC என அழைக்கப்படும் நாகலாந்து விடுதலைப் படையை கொண்டுள்ள அமைப்புகளோடு, இந்திய அரசு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டது. இந்தியாவில் உள்ள ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட அமைப்போடு இந்திய அரசு போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்தது என்பது இதுதான் முதல்முறையாகும். இன்றுவரை போர் நிறுத்த ஒப்பந்தம் இரு ஆண்டுக்கு ஒரு முறை என (விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு தடையைப் போல்) பல முறை நீடிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா விடுதலைப் படையைச் சேர்ந்தவர்களை அடைத்து வைப்பதற்கு என்றே கோவை நடுவண் சிறையில் 1990களில் 10ஆது பிரிவில்(பிளாக்) கழிப்பறையுடன் கூடிய அறை கட்டப்பட்டு அதில் அவர்கள் 1990களில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அப்போது கோவை சிறையில் இரவு நேரத்தில் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க மண் சட்டிதான் கொடுப்பார்கள். கழிப்பறை வசதி எதுவும் சிறை அறைகளில் கிடையாது. முதன்முதலில் திரிபுரா போராளிகளுக்காகத்தான் கழிப்பறையுடன் கூடிய சிறை கோவையில் கட்டப்பட்டது. 1991 ஆம் ஆண்டு “அகதிகளை வெளியேற்றாதே! போராளிகளை இழிவுபடுத்தாதே!! ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்து!!!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் இயக்கம் மேற்கொண்டதற்காக எங்களை தேசதுரோக வழக்கில் தமிழக அரசு தளை செய்து கோவை சிறையில் 10ஆவது பிரிவில் திரிபுரா விடுதலைப் படை போராளிகளுக்கு கட்டப்பட்ட அறைகளில் அடைத்தது.

அஸ்ஸாம் நுழையும் முன் மேற்கு வங்கத்தில் கடைசி பகுதியில் உள்ள நியூஜல்பைகுரி ஊர் வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதி. இப்பகுதியை ஒட்டித்தான் சிலிகுரி மாவட்டத்தின் நக்சல்பாரி, காரிபாரி, பான்சிதேவா போன்ற ஊர்கள் உள்ளன. இப்பகுதியின்தான் 1967 ஆம் ஆண்டு உழவர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ”உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மரபு சார்ந்த ஆயுதங்களை வைத்துப் போராடி, 300 ஊர்களில் நில உடைமையாளர்களிடம் இருந்து நிலங்களைப் கைப்பற்றினார்கள். உழவர்கள், தொழிலாளர்கள் தங்களது மரபு சார்ந்த ஆயுதங்களை வைத்து, தனது ஆளுமையை நிறுவி அரச படையை எதிர்கொண்டார்கள். இன்றுவரை நக்சல்பாரி என்ற பெயரைக் கேட்டாலே ஆளும் கும்பல்கள் நடுங்கும் வரலாற்றைப் படைத்த பகுதி இது .

இப்படி பல்வேறு வகையில் இந்திய அரசின் அடக்குமுறையை எதிர்த்து உரிமைக்காகப் போராடும் மக்களை உள்ளடக்கிய வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளும் பயணம் நான் மிகவும் விரும்பிய ஒன்று. இந்திய அரசின் அடக்குமுறை எப்படி இருக்கும் என்பதைத் தொடர்வண்டியை விட்டு அசாம் திப்ரூகரில் இறங்கும் போதே நாங்கள் அறிய வேண்டி வந்தது. திப்ரூகர் ஒரு மாவட்ட தலைநகரமாகும்.

தொடர்வண்டியிலேயே குளிக்கும் கலையைக் கற்றுக்கொண்டு பலர் காக்காய் குளியல் போட்டு, காலைக் கடன்களை கூட சரிவர செய்யாமல் இருந்தனர். கிடைக்கும் உணவைச் சாப்பிட்டு, வயிறார சாப்பிட்டால் கழிப்பறையை பயன்படுத்த வேண்டி வருமே என அஞ்சி பட்டினியாகப் பலர் கிடந்தனர். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி, ஏறி பரப்புரை செய்து கடைசியாக அசாம் திப்ரூகர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி திப்ரூகர் பெயர் பலகை இருக்கும் இடத்தில் அனைவரும் சேர்ந்து நின்று ஒளிப்படம் எடுத்தோம்.

அப்போது தொடர்வண்டி நடைமேடையில் ஒரு ஈருளி(பைக்) சீறி வந்து, அதில் வந்த காவலர் ஒளிப்படம் எடுத்த தோழர் மாவீரனை தொடர்வண்டி நிலையத்தில் ஒளிப்படம் எடுத்தது குற்றம் எனக் கூறி தனது ஈருளி வண்டியில் கூட்டிச் சென்றார். ஒரு பெண் காவல்துறை அதிகாரி எங்களை எல்லாம் பல்வேறு வினாக்கள் கேட்டு உசாவல் செய்தார். இணையத்தில் திப்ரூகர் தொடர்வண்டி நிலையம் என அடித்தாலே எண்ணற்ற ஒளிப்படம் வருகிறது எனப் பயண நோக்கத்தைக் கூறி காவல்துறையிடம் இருந்து தோழர் மாவீரனை விடுவித்து, திப்ரூகர் நகரில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி குளித்து இயல்பு நிலைக்கு வந்தோம்.

நாங்கள் வந்த தொடர்வண்டியிலேயே எண்ணற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்தனர். அசாமில் எங்கே திரும்பினாலும் படை வீரர்கள் கூடாரம். தடுக்கி விழுந்தால் தொடர்வண்டி நிலையப் பகுதிகளில் அவர்கள்தாம். இவர்களில் கணிசமானவர்கள் தமிழகம், கேரளா பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களை வைத்துத்தான் இந்திய அரசு துப்பாக்கி முனையில் தனது ஒடுக்கு முறையை நிகழ்த்தி வடகிழக்கு மாநிலங்களின் வளங்களைக் கொள்ளையடித்து வருகிறது.

அஸ்ஸாம் திப்ரூகரில் எங்களுக்கு அறை ஒதுக்கும்போதே விடுதியைச் சேர்ந்தவர் ஓர் அறைக்கு அடுத்த அறை காலியாக விட்டு ஒதுக்கினார்கள். அறைக்கு வந்து அனைவரும் குளித்து, சிலர் துணிகளை அலசிப் போட்டு காய வைத்து அருகில் இருந்த உணவகங்களில் உணவருந்தினர். பின்பு உள்ளூரில் அசாம் மொழியில் அச்சிடப்பட்ட துண்டறிக்கையைக் கொடுத்தோம். பலர் அசாம் மொழி வேண்டாம் எனறு இந்தி மொழி துண்டறிக்கையை வாங்கினர். மூஉருளி (சைக்கிள் ரிக்க்ஷா) எண்ணற்றவை உள்ளன. தானி உள்ளது. பொதுப் போக்குவரத்து (பேருந்து) என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. திப்ரூகர் கடைவீதி முழுக்க சுற்றினோம்.

அசாம் திப்ரூகரில் கடை வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வங்காளிகள், சைக்கிள் ரிக்சா, ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகள் பலரும் பீகாரிகள். திப்ரூகர் நகரின் வணிகம், போக்குவரத்து எதுவும் உள்ளூர் மக்களான அசாமிகள் கையில் இல்லை. எனவேதான் அவர்கள் அங்குக் கல்வி மொழியாக உள்ள இந்தி துண்டறிக்கையைக் கேட்டார்கள். அசாம் நாட்டில் உள்ளவர்கள் அசாம் மொழி படிக்காமலேயே இந்தி படிக்கலாம் என்ற நிலையை இந்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சிக்கல்களே உல்பா, அல்பா போன்ற அமைப்புகள் தோன்றி அசாமியர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக ஆயுதம் தாங்கிக் கூட போராடினர். அசாமில் வங்காள தேசத்தில் இருந்து குடியேறியவர்கள் பல்வேறு ஆதிக்கம் பெற்றதை எதிர்த்து .அசாம் மாணவர்கள் அணிதிரண்டு போராடினர். அசாம் கனபரிசத் போன்ற அமைப்புகள் அசாமில் ஆளுமைக்குக் கூட வந்தன.

அசாமில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், எண்ணெய் வளங்கள், கனிம வளங்கள் பலவற்றையும் டாட்டா போன்ற நிறுவனங்கள், பன்னாட்டு நிருவனங்கள் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அசாமில்தான் பிரம்மபுத்திரா என்ற மிகப் பெரிய ஆறு வருகிறது. ஆனால் வடகிழக்குப் பகுதியில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு தமிழகம், கேரளா, கர்நாடகத்திற்கு வந்து குவிகின்றனர். அன்றாடம் பல தொடர்வண்டிகள் வடகிழக்குப் பகுதியில் இருந்து இங்கு வருகிறது. இங்கு வருபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் தங்கள் ஊருக்குச் செல்கிறார்கள். அசாம் உட்பட வடகிழக்குப் பகுதிகளில் நமது தமிழகத்தை போலவே சோறு, இட்லி, தோசை அனைத்தும் தமிழகத்தை விட விலை குறைவாகவே கிடைக்கிறது. அசாமியர்களின் வளங்கள் அவர்கள் கையில் இல்லை என்பதுதான் அங்கு நிலவும் அடிப்படைச் சமூக சிக்கலாக உள்ளது.

சாலையில் நாங்கள் துண்டறிக்கை கொடுக்கும் போது அதைப் படமெடுக்கும் போது பல மூஉருளி (சைக்கிள் ரிக்சா), தானி ஓட்டுபவர்கள் ஒளிப்படம் எடுக்காதீர்கள். உங்களைக் காவல்துறை, படையினர் பிடித்துக் கொள்ளுவர் என அக்கறையோடு சொன்னார்கள். மக்களிடம் எப்போதும் ஆயுதப்படை, காவல்துறை பற்றி அச்சம் இருந்து கொண்டே உள்ளது.

koodankulam to assam 2

அசாமின் பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம் அனைத்து வாயில்களுமே ஆயுதப்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அங்கு ஏகே 47 துமுக்கி தாங்கிய படையினர் உள்ளனர். அதிலும் அனைத்து இடங்களிலும் படையினர் பாதுகாப்பாக மறைந்து இருந்து சுடுவதற்குச் சுவர்கள் கட்டி வைத்துள்ளனர். அவர்களைச் சுற்றி வெடிகுண்டு வீசினால் படாமல் இருக்க வலைகளைக் கட்டி வைத்துள்ளனர். பல இடங்களில் கண்காணிப்புக் கோபுரம் கட்டி அதன்மேல் உள்ளனர். படையை வைத்தே வடகிழக்கு மாநில மக்களின் உரிமையைப் பறித்து, வளங்களைக் கொள்ளையடித்து, மக்களை அச்சுறுத்தி வருகின்றது இந்தியா அரசு.

மாலையில் அனைவரும் திப்ரூகர் நகரின் வழியாகச் செல்லும் பிரம்மபுத்திரா ஆற்றுக்குச் சென்றோம். அசாம் தலைநகர் கௌகாத்தி வழியாகச் செல்லும் பிரம்மபுத்திரா ஆற்றில் மிகுதியாக நீர் சென்று கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்து குறைந்தது500 கிலோ மீட்டர். தொலைவில்உள்ள திப்ரூகர் பிரம்மபுத்திரா ஆற்றில் நாங்கள் சென்ற போது ஒரு சொட்டு நீர் கூடச் செல்லவில்லை. கரணியம் உசாவினோம். திப்ரூகர் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு மேலாக சீனா அணைகட்டி தண்ணீர் தேக்கியுள்ளது. கௌகாத்தி செல்வதற்குள் 500 கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் பல்வேறு துணை ஆறுகள் அதில் கலப்பதால் அங்குப் பிரம்மபுத்திராவில் தண்ணீர் பெருவெள்ளமாய் செல்கிறது என தெரிவித்தார்கள்.

பிரம்மபுத்திரா ஆற்று மணலில் அமர்ந்து சிலமணி நேரம் பயண பட்டறிவுகளையும், அடுத்த கட்டமாகச் செய்ய வேண்டிய சில வேலைகளையும் தீர்மானித்து அங்கிருந்து அறைக்குத் திரும்பினோம். எங்களது அறைகளுக்கு நடுவிலுள்ள அறைகளில் படை வீரர்களும், காவல்துறையினரும் அதற்க்குள் வந்து தங்கி இருந்தனர். இரவில் எது நடந்தாலும் சரி எதிர்கொள்வோம் என முடிவெடுத்து தங்கினோம். இரவில் படையினர் விடுதிக்குள் தொடர் நடமாட்டம் செய்து குடித்து கும்மாளமிட்டும், சத்தமிட்டு அரம்பத்தனம் செய்து, அச்சுறுத்திக் கொண்டே இருந்தனர்.

எப்போதும் படையினர் கட்டுப்பாட்டில் சிக்கல் மிகுந்த வடகிழக்குப் பகுதி. அங்கு நிலவும் பாதுகாப்பற்ற நிலை, அங்கு நமக்கு எவ்வகை ஆதரவும் அங்கு இல்லாத சூழல் என நிலைமை கடுமையான நெருக்கடியாக இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு நின்று தொடர்ந்து பரப்புரை பயணத்தை தொடர்ந்தோம். அஸ்ஸாம் காவல்துறையும் தொடர்ந்து எங்களைப் பின் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்தனர்.

இடிந்தகரைப் பெண்களின் வீரமும், துணிவும் எல்லோரையும் எழுச்சி பெறச் செய்யும் என்பது உலகம் அறிந்த செய்தி. வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் போராட்டத்தின் மூலமும் ஈகத்தின் மூலமும் பெற்ற இடிந்தகரை வீராங்கனைகளின் வீரம் பயணக்குழுவினர் அனைவரையும் எதையும் எதிர்கொள்ளும் வீரத்தோடு வழிநடத்தியது.

திப்ரூகர் அருகில் சுமார் 40 கி.மீ. தூரத்தில் "திப்ரூ-சைக்கோவா தேசியப் பூங்கா" இருந்தும் கூட யாரும் அங்குச் சென்று பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை. காலையில் எழுந்து திப்ரூகர் கடைவீதியில் துண்டறிக்கை பரப்புரை செய்துவிட்டு, மதியம் அங்கிருந்து 50 கி.மீ. தூரம் உள்ள டின்சுகிலா என்ற தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தடைந்து அங்குப் பரப்புரை செய்தோம். இரவு தொடர்வண்டியில் ஏறி 450 கி.மீ. தூரம் கடந்து காலையில் அசாம் தலைநகர் கௌகாத்தி வந்தடைந்தோம்.

இரவுதான் அங்கிருந்து திருவனந்தபுரம் கொச்சுவேலி செல்லும் சிறப்புத் தொடர்வண்டி. எனவே பகலில் கௌகாத்தியில் தொடர்வண்டி நிலையம் அருகே ஒரு விடுதியில் இரு அறை எடுத்து ஆண்கள் ஓர் அறையிலும் பெண்கள் ஓர் அறையிலும் தங்கினோம்.

பகலில் கௌகாத்தியைச் சேர்ந்த 'டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் ஸ்டடீஸ்" கல்லூரியில் MSW படிக்கும் 20 கல்லூரி மாணவ, மாணவிகள் எங்களோடு இணைந்து கௌகாத்தி நகரெங்கும் நடந்து சென்று துண்டறிக்கை கொடுத்தனர். பல கல்லூரி வாயில்கள், உயர்நீதிமன்ற வாயில்கள் என கௌகாத்தி நகரெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்தோம்.

எங்களோடு உடன் வந்த மாணவ, மாணவிகள் பலரும் மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், மேற்குவங்கம், மிசோரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் அவர்கள் பகுதியில் சமூக, பொருளியல், அரசியல் நிலைமைகளைக் கேட்டுப் பல்வேறு புதிய செய்திகள் அறிய வாய்ப்பாக இருந்தது.

எங்களோடு உடன் வந்த மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரியில் எங்களை அழைத்துச் சென்று அணுஉலைப் போராட்டம் பற்றிப் பேச வைத்தனர். அனைவரும் பேசினோம். ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயகுமார் அவர்கள் மிக விரிவாகப் பேசினார். இறுதியில் வினா - விடை என்ற முறையில் நடைபெற்றது. இதில் ஏறக்குறைய 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அங்கிருந்த பயிற்றுநர்களும், மாணாக்கர்களும் அணு ஆற்றலுக்கு எதிரான வடகிழக்குப் பகுதியில் ஆதரவு இயக்கம் அமைத்து செயல்படுவோம் என உறுதி அளித்தனர்.

இது தமிழகத்தில் எங்கும் இல்லா நிலை. தமிழகத்தில் மாணவ, மாணவிகள் பொதுவெளியில் வந்து அரசுக்கு எதிரான நிலை உள்ள 'அணுஆற்றல் சிக்கலை' பரப்புரை செய்வது என்பது பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். கோவையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணாக்கர்கள் இணைந்தும், மதுரை சட்ட கல்லூரி மாணாக்கர்கள், கேம்ப்ஸ் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற மாணவ அமைப்புகளும்தாம் தைரியமாக இது போன்று பொதுவெளியில் தொடர்ந்து பரப்புரை செய்தவர்கள்.

மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்லூரியில், பல்கலைக் கழகங்களில் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துப் பேச வைப்பது என்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட மக்களாட்சி நிலைமை தமிழகத்தில் இல்லை. ஆனால் படை அடக்குமுறைக்குள் இருக்கும் அஸ்ஸாம் மாணவர்கள் இதை நிகழ்த்திக் காட்டினர். பொதுவாக கேரளா, தில்லி போன்ற இடங்களில் இப்படிப்பட்ட நிலை உண்டு. தமிழகத்திலும் இப்படிப்பட்ட நிலையை மாணாக்கர்கள் எதிர்காலத்தில் தனது கல்வி நிறுவனத்தில் ஏற்படுத்தும் நிலை வர வேண்டும்.

மாணவ, மாணவிகளோடு இணைந்து நின்று பரப்புரை நிகழ்வுகள் முடித்து மாலை அறைக்குத் திரும்பினால் நாங்கள் செல்ல வேண்டிய சிறப்புத் தொடர் வண்டி (கௌகாத்தி - கொச்சுவேலி தொடர்வண்டி) ஏறக்குறைய 15 மணி நேரம் காலத்தாழ்வாக வருகிறது என்று நிலையத்தில் அறிவிப்பு செய்தனர். இரவு 10 மணிக்கு அறையை காலி செய்வதாகக் கூறி தங்கியிருந்தோம். விடுதி மேலாளரிடம் எங்களின் நிலையை நயமாகக் கூறி அதிகாலை 4.00 மணி வரை தங்கியிருக்க இசைவு வாங்கினோம்.

நாங்கள் அறைக்குள் செல்லும் போது அறை முழுவதும் மூட்டைப் பூச்சியின் ஓட்டமாக இருந்தது. இதுவரை இந்திய ஒன்றிய அரசு அமெரிக்கா, செர்மன் எனப் பல நாடுகளைக் குறிப்பிட்டு அங்கிருந்து எல்லா போராட்டக்காரர்களும் பணம் மூட்டை மூட்டையாக வருகிறது எனத் தலைமையமைச்சர் முதல் உள்ளூர்க்காரர் வரை பரப்புரை செய்தனர். ஆனால் இந்த அறையில் தங்குவதன் மூலம் அசாம் மூட்டைப்பூச்சியைத் தமிழ்நாட்டிற்கும், வீட்டிற்கும் கொண்டு செல்லப் போகிறோமோ என்று அச்சமாக இருந்தது.

இடிந்தகரை அணுஉலைப் போராட்டத்தில் கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என முப்படையையும் ஒரே நேரத்தில் சந்தித்து எதிர்கொண்டு போராடிய எங்களுக்கு இந்த மூட்டைப்பூச்சி படையை எதிர்கொள்ளும் வழிமுறை தெரியவில்லை. விடிய விடிய மூட்டைப்பூச்சியை விரட்டிக் கொண்டு அதிகாலையில் தப்பித்தால் போதும் என அறையை காலி செய்து விட்டு, ஓடிவந்து சிறப்புத் தொடர்வண்டியைப் பிடிக்க வந்தோம். சிறப்புத் தொடர்வண்டி இப்போது வரும், அப்போது வரும் எனத் தொடர்வண்டி நிர்வாகம் பலமுறை கூறிக்கூறி ஒத்தி வைத்து ஒரு வழியாக காலை 8.00 மணிக்கு வந்து புறப்பட்டது.

திரும்பவும் தொடர்வண்டியில் மின்விசிறி சிக்கல், தண்ணீர்ச் சிக்கல், நான்கு இரவு, பகல் அந்தத் தொடர்வண்டிச் சிறைக்குள் அடைந்து கிடந்து பயணச்சீட்டு ஆய்வாளர், தொடர்வண்டிப் பொறுப்பாளர், தொடர்வண்டி நிலைய மேலாளர் என பலரிடமும் நேரிலும், விண்ணப்பமாகவும் கொடுத்து, பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தியே ஊர் திரும்பினோம்.

அசாமில் கௌகாத்தியில் இருந்து வரும்போது தொடர்வண்டியில் துண்டறிக்கைகள் மொழிவாரியாக ஒழுங்குபடுத்தி அடுக்கிக் கொண்டு இருந்தோம். அப்போது அதில் கிழிந்து போய் பயன்படுத்த முடியாத துண்டறிக்கைகள் சிலவற்றைச் சாளரத்தின் வழியாக வெளியே எறிந்தார் ஒளிப்படக் கலைஞர் மாவீரன் அவர்கள். அதைப் பார்த்த அந்தத் தொடர்வண்டியில் உடன் பயணம் செய்த ஒரு தொடர்வண்டிக் காவலர் தொடர்வண்டியில் இருந்து ஆறு காவலர்களை தன்னுடன் அழைத்து வந்து விட்டார். அதில் சிலர் நல்ல போதையில் இருந்தனர். எங்களின் முன்பே தொடர்வண்டியில் பொருள்கள், தின்பண்டங்கள் விற்பவர்களிடம் காசு கொடுக்காமல் பிடிங்கித் தின்ற அந்தக் காவலர்கள் கூட்டம் தோழர் மாவீரனைத் துண்டறிக்கையை வெளியே வீசியதற்காக தளை செய்கிறோம் என கூறி சத்தம் போட்டு அழிச்சாட்டியமும் செய்தார். பின்பு காவல்துறை அதிகாரி என்னையும் தோழர் உதயகுமார் அவர்களையும் தனியாக அழைத்து பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் எனப் பேரம் பேசினார்.

koodankulam to assam 4

நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று, இதற்காக தளை செய்வதாக இருந்தால் அனைவரையும் தளை செய்யுங்கள் எனச் சத்தமிட்டவுடன் தொடர்வண்டிக் காவலர்கள் அனைவரும் ஓடிச்சென்று, பெட்டிக்கு வராமலேயே அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வேறு வண்டியேறி சென்று விட்டனர். நாங்கள் தொடர்வண்டி பாதுகாப்பாளரிடம் காவலர்களின் செயல்பாட்டைப் பற்றி குற்ற அறிக்கை(புகார்) கொடுத்து விட்டு வந்தோம்.

நாங்கள் தமிழகத்தில் பயணம் செய்த போதும், அசாமில் இருந்த போதும் அனைத்து தொடர்வண்டி நிலையத்திலும் அழையாத விருந்தாளியாக வந்து நின்றவர்கள் உளவுத் துறையினர்தான். எந்த வடிவமான அடிப்படை ஏந்துகள் இன்றி தொடர்வண்டியில் செல்வதை ஒழுங்குபடுத்த உதவாத இந்த அரசு, மக்களின் சிக்கல்களை மக்களிடம் பரப்புரையாக கொண்டு செல்பவர்களை, போராளிகளை இடையறாது கண்காணித்து அச்சுறுத்தி மிரட்டி, அவர்களின் செயல்பாட்டை முடக்க, தடுக்க வரிந்து கட்டி வேலை செய்கிறது. மக்களின் உழைப்பில் பெறும் வரிப்பணத்தை இப்படி நாசமாக்குகின்றது அரசு.

ஆண்டின் பெரும்பகுதி நாட்கள் எங்கே செல்வதானாலும் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்பவன் நான். இயல்பாக தொடர்வண்டிப் பயணத்தை எவ்வளவு சிக்கல் இருந்தாலும் அதை உளரீதியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை, பக்குவம் எனக்குண்டு என கருதுபவன் நான். ஆனால் குமரி முதல் அசாம் வரை சென்ற பயணம் மிகுந்த வேதனைக்குரியதாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல, தனது உறவுகளை எல்லாம் பிரிந்து பல்லாயிரம் மைல் கடந்து பணிக்கு வந்துள்ள வடகிழக்கு பகுதி தொழிலாளிகளின் இழிநிலை, அவர்கள் மீதான இந்திய அரசின் சுரண்டல், ஊரை விட்டு வெளியே வந்து வாழவேண்டிய அவலநிலை, நாம் செய்ய தயங்கும் கடினமான, மரியாதையற்ற வேலைகளை செய்ய வேண்டிய நிலை, எவ்வகை பணிப்பாதுகாப்பும் அற்ற வேலை நிலை (இராணிப்பேட்டை தோல் ஆலையில் இறந்த வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த 9 பேர் யார் என்றே தெரியாத நிலை) என என் மனத்தை மிகவும் பாதித்த பயணம் இது.

ஒரு பக்கம் தொடர்வண்டித் துறையைப் படிப்படியாகத் தனியார் நிலையாக்கும் கொடுமை, இன்னொரு பக்கம் ஏதாவது தொற்றுநோய் வந்தால் (பன்றி, பறவை, சிக்கன்குனியா, போன்ற...) இந்தத் தொடர்வண்டிப் பயணமே நாடு முழுக்க அதை எடுத்துச் சென்று விடும். பன்றிக் காய்ச்சல் பரவும் இக்காலத்தில் தொடர் வண்டியை விட்டு இறங்கியவுடன் எனக்குக் காய்ச்சல் வந்தது. பன்றிக் காய்ச்சலோ என நான் அஞ்சியே ஒரு வாரம் என் அருகில் யாரையும் வர இசைவளிக்கவில்லை.

இப்பயணம் முழுக்க நாங்கள் யாரும் நெகிழிக் குடுவை நீர் வாங்கி அருந்தவில்லை. புட்டி நீர் பயன்படுத்துவது இல்லை என முடிவோடு இருந்தோம். தொடர்வண்டி நிலைய பொதுக்குழாய் நீரைப் பிடித்துதான் பயன்படுத்தினோம். பறவைக் காய்ச்சலோ, பன்றிக் காய்ச்சலோ வேறு நோயோ இல்லாமல் அனைவரும் திரும்பியது என்பது உலக வியப்பில் ஒன்று.

கிடைக்கும் இடத்தில் படுத்து, கிடைக்கும் உணவை உண்டு. கிடைத்த தண்ணீரைக் குடித்து, குப்பைகள் நிறைந்து எப்போதும் கழிப்பறை நாற்றத்துடன் செய்த இந்தத் தொடர்வண்டிப் பயணம்; அரசு நிர்வாகம் எப்போதும் எளிய மக்கள் நலனில் அக்கறைப்படாது என்பதை அனைவருக்கும் ஆழமாக உணர்த்தியது. மோடி அரசின் வளர்ச்சி என்ற சொல் இந்திய முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும், ஊழல் அரசியலாளர்களுக்கும், மக்களுக்கு தீங்கிழைக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே என்பதை இப்பயணம் எங்களுக்கு படம் பிடித்துக் காட்டியது.

தமிழகம் மட்டும் அன்று. இந்திய அரசுக் கட்டமைப்பில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் தனது வளங்களை, தனது செல்வத்தை, தனது மொழியை தனது பண்பாட்டை அன்னியரிடம் இழந்து வருவதை, இப்பயணத்தில் நேரில் உணர முடிந்தது.

அணு ஆற்றலை எதிர்த்து மட்டுமன்று, இந்திய அரசின் அனைத்து அழிப்புத் திட்டங்களை முறியடிக்க ஒவ்வொருவரும் எழுச்சிபெறவேண்டும் மற்றவர்களையும் எழுச்சி பெற வைக்கவேண்டும். ஒவ்வொரு தேசிய இனமும் தனது பாதிப்பையும், தனக்கு உண்மையில் பாதிப்பு ஏற்படுத்துபவர்களையும் (தனது எதிரிகளை) உணர வேண்டும். உணர்ந்தவர்கள் யாரும் வாய்மூடி மவுனியாக இல்லாமல் மற்றவர்களையும் எழுச்சி பெற வைக்கவேண்டும். என்பதை உணர்த்திய, உணர்தலை ஆழப்படுத்திய பயணம் இது.

ஒவ்வொரு மொழி பேசும் இன மக்களும் தனக்கென வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ளும் தற்சார்புள்ள அரசை அமைக்காமல், அவர்களது வாழ்வில் எவ்வித மாற்றமும் வராது என்பதை ஆழமாக எனக்கு உணர்த்திய பயணம் இது.

- முகிலன்

Pin It