வரலாற்றில் மக்களே நாயகர்கள்!

நாள் குறித்து போராடுவது ஒரு போராட்டமாகாது, கிட்டத்தட்ட 19 வருடங்களாக கூடங்குளத்திற்கு எதிராக அந்தப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் பொதுவான ஒரு கருத்து ஒன்று திட்டமிட்டே எதிரிகளால் பரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அணு உலை தொடங்கும்போது போராடாத மக்கள் எல்லாம் முடிந்த பின்பு போராடுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி கேட்கிறார்கள். அவர்களிடம் நாங்களும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.
 
கேள்விகள்
 
1. 19 வருடங்களுக்கு முன்பு இருந்த தொலைத்தொடர்பு வளர்ச்சி என்பது இன்றைய காலத்தோடு ஒப்பிடமுடியாது என்பதனை நீங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும், தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லாமல் இது போன்ற மர்மமான தொழில்நுட்பங்களை அறிவது என்பது சாத்தியமற்றதே?
 
2. 19 ஆண்டுகள் இந்த உலக சமுதாயம் அடைந்த வளர்ச்சிப் பாதையிலேதான் இந்த மக்கள் போராட்டமும் வளர்ச்சியுற்றுள்ளது என்பதனை யாராவது மறுக்க முடியுமா?
 
3. கடந்த 19 ஆண்டுகளில் தான் உலகில் பல இடங்களில் அணு விபத்து நடந்துள்ளது என்பதனை யாரும் மறைக்க முடியாது? (கல்பாக்கம் உள்பட)
 
4. 13000 கோடி பணம் வீணாகிவிடும் என வருத்தப்படும் இந்தியர்கள், அந்தப் பகுதியை சுற்றி வாழும் 1 ½ கோடி தமிழ் மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாதது ஏன்?
 
5. 13000 கோடி பணம் முக்கியமா? 1 ½ கோடி தமிழ் மக்களின் உயிர் முக்கியமா?
 
6. அணு உலை வேண்டும் என சொல்லும் இந்தியர்கள் கூடங்குளத்திலும், கல்பாக்கத்திலும் அவர்களது குடும்பங்களுடன் வந்து வாழ்வார்களா? (மன்மோகன், சோனியா மற்றும் அப்துல் கலாம் உட்பட)
 
7. இந்த அணு உலைகளில் இருந்து வரும் மின்சாரம் உண்மையிலே தமிழ்நாட்டு மக்களுக்கா? அல்லது தமிழ்த்தேசிய வளங்களை சுரண்டிக்கொண்டிருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கா?
 
8. அணு உலைகளிலிருந்து வெளியேரும் கழிவுகளைப் பாதுகாப்பது எளிதான காரியம் என்றால் ஏன் டில்லியில் அணு மின் நிலையம் கட்டக்கூடாது?
 
9. 70% அணு மின்சாரத்தை பயன்படுத்திய பிரான்ஸ் அணு உலைக்கு ஆப்பு வைக்கும்போது, 4% அணு மின்சாரத்தை பயன்படுத்தும் இந்தியா அணு உலையை பாதுகாப்பது சரியா?
 
10. இயற்கையை நாம் நாசமாக்கும் பணியில் ஈடுபட்டால், இயற்கை மனித குலத்தை நாசப்படுத்திவிடும் என்பதனை ஒப்புக்கொள்கிறீர்களா?
 
கூடங்குளம், இடிந்தகரை மக்கள் நாசகர அணு உலைகளுக்கு எதிரான தங்களது போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மக்களைக் கொல்லும், வாழ்வாதாரங்களை நாசாமாக்கும் அணு உலைகளை எதிர்த்து உறுதியுடன் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் இந்தியா முழுவதும் ஏன், உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.
 
அணுசக்தி அணுகுண்டுகள் வடிவில் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியில் இரண்டு லட்சத்திற்கும், பின் விளைவாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றழித்திருக்கிறது. கதிரியக்க பாதிப்புகளால் பாதிப்படைந்தவர்கள் பத்து லட்சத்திற்கும் மேல்.
 
அணு சக்தி, அணு உலைகள் வடிவில் செர்னோபில்(ரஷ்யா), மூன்று மைல் தீவு(அமெரிக்கா), புகுஷிமா(ஜப்பான்) போன்ற இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர், பாதிக்கப்பட்டுள்ளனர். அணு கதிரியக்கத்தின் பாதிப்புகள் இன்றளவும் அனைத்து இடங்களிலும் இருந்து வருகின்றது.
 
இந்த அளவுக்கு நாசகர சக்தியான அணு சக்தியினை மக்களிடையே இந்திய அரசு திணிக்கும் காரணம் என்ன? உலக ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடுகின்றன. மூடிய அணு உலைகளை இந்தியா போன்ற வளர்ச்சியடையாத நாடுகளுக்கு விற்று பெரும் லாபம் ஈட்டுகின்றன. இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அதில் கிடைக்கும் தரகு பணத்திற்காக இந்திய நாசாகர திட்டத்தினை அனுமதித்து வருகின்றது.
 
பொதுமக்களுக்கு உழைக்கும் மக்களுக்கு பயன் தராத இந்த அணு மின்சக்தி ஒரு சில பெரும் முதலாளிகளுக்கு பயன் தருவதற்காகவே இந்த மன்மோகன்சிங் அரசு இந்த திட்டத்தினை நிறைவேற்ற உறுதியாக இருக்கின்றது.

இந்த கொலைக்கார அரசினை அதன் நாசகர திட்டங்களை நாம் எதிர்க்க வேண்டாமா? போராடும் நமது மக்களுடன் உடன் நிற்க வேண்டாமா?

வரலாற்றில் தருணங்கள் எப்போதும் வருவதில்லை. இப்போது வந்திருக்கிறது. தமிழன் என்ற முறையில் உணராவிட்டால் கூட மனிதன் என்ற முறையில் இந்த போராட்டம் வெல்ல நமது பங்களிப்பினை செலுத்துவோம்.
 
போராட்டதில் இணையுங்கள்!
 
போராட்டத்தில் இணையுங்கள்!
 
போராட்டத்தினை வெற்றி பெறச் செய்யுங்கள்!
 
போராட்டத்தினை வெற்றி பெறச் செய்யுங்கள்!
 
இல்லையேல் இந்த அணு உலைகள் கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் அழிக்காது; தமிழ்நாடு முழுவதும் அழிக்கும். ஹிரோஷிமா, நாகாசாகி, செர்னோபில்(ரஷ்யா), மூன்று மைல் தீவு(அமெரிக்கா), புகுஷிமா(ஜப்பான்) இன்னும் எத்தனை அழிவுகளை நாம் பார்த்து கொண்டு இருக்கப் போகிறோம் இந்த அணு சக்தியின் பெயராலே!

அடக்குமுறை அதிகார அரசு மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இது போன்ற மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற முயல்வதை எதிர்ப்போம். கொஞ்சம் கூட தயங்காமல் எதிர்ப்போம். மக்கள் வலிமையை இந்த மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துவோம்.
 
2011 மார்ச் 11 ஆம் தேதி ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு உலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததை பார்த்த பிறகு, நமது வீட்டருகே இப்படி ஒரு ஆபத்தான திட்டத்தை வரவிடுவது நம் குழந்தைகளுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் பெரும் துரோகமாகவே இருக்கும்.
 
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த தொழில் வளம் மிக்க ஜெர்மனி 2022க்குள் அனைத்து அணு உலைகளையும் மூடவிருக்கிறது. இத்தாலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 95 சத மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிஸ்ர்லாந்து, மெக்சிக்கோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கிறார்கள். புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பத்து அணு உலைகளை நிறுத்திவிட்டனர். 28 பழைய உலைகளை மூடி விட்டனர். மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவிலும், செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு ரஷ்யாவிலும் புதிய அணு உலைகள் தொடங்கப்படவே இல்லை. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா அரசு அரிபுரியில் ரஷ்யா நாட்டு உதவியுடன் தொடங்கப்பட இருந்த அணு உலை திட்டத்தை நிராகரித்து விட்டது. மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்தது. கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன‌. மகாராஸ்ட்ரத்தில் அனைத்து கட்சிகளும் அணு உலைக்கு எதிராக போராடி வருகின்றன‌.
 
போராடுவோம்! போராடுவோம்!
 
இறுதிவரை போராடுவோம்!
 
போராடுவோம்! போராடுவோம்!
 
வெற்றியீட்டும் வரை போராடுவோம்! 

- கு.கண்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)