valparai balaji templeவால்பாறையே சுற்றுலாத்தளம் என்ற போதிலும்.. அது சுற்றுலாத்தளம் என்று தெரியாத ஒரு கால கட்டம் இருந்தது.

அப்படி இருந்த காலகட்டத்தில்... 'பாலாஜி கோயில்' என்றொரு சுற்றி பார்க்கும் இடம் பற்றிய பேச்சு வந்து.... பக்கத்து வீட்டு பிரேமாக்கா வீட்டுக்காரர் தலைமையில்... ஒரு சிறு கும்பலாக கிளம்பினோம். அதுவரை நான் பாலாஜி கோயில் பார்த்து இல்லை. அது எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. அத்தனை அருகில் இருந்தாலும்.... அப்போது அது எங்களுக்கு தூரமாகத்தான் இருந்தது.

மனதுக்குள் விடுமுறை நாள் சுழல...கண்களில் பாலாஜி கோயில் காட்டுக்குள் ஒரு மரத்தடியில் இருக்கும் கோயில் என்ற கற்பனையோடு பஸ்ஸில் ஜன்னலாய் சிரித்தேன்.

பொதுவாகவே அப்போது உருளிக்கல்லில் (வால்பாறையில் ஒரு எஸ்டேட்) இருந்து வால்பாறைக்கு போவதென்பதே எப்போதாவது நடக்கும் நிகழ்வு தான். உடம்பு சரி இல்லை என்றால்.... முனுசாமி டாக்டரிடம்.. தம்புரான் டாக்டரிடம் (நோ மோர்) செல்ல... கிஸ்துமஸ் தீபாவளிக்கு பொங்கலுக்கு துணி எடுக்க..... எப்போதாவது ஞாயிறுகளில் வீட்டு சாமான் வாங்க போகும் போது அடம் பிடித்து பெரியவர்களோடு செல்வது.... இப்படி.... எப்போதாவது தான் வால்பாறை பயணம் வாய்க்கும். இந்த மாதிரி சுற்றுலா என்று வருகையில் அதன் வசீகரம்... அது குறித்தான முன் யோசனைகள்... அது பற்றிய பிரமிப்புகள்.. மலையளவு உயர்ந்து கொண்டே போகும் தானே. போனது. முகம் முழுக்க பூரிப்பு தான். பேருந்தே சக்கர வண்டியாய் மாறி நானே ஓட்டுவது போல கூட இருந்தது.

வால்பாறை சென்று அக்காமலை பஸ்க்காக காத்திருந்தது. வால்பாறையை வட்டமிடும் அற்புத கழுகின் ஆசுவாசமற்ற மூச்சிரைப்பு போல என் காதுகளில் இன்னும் அந்த காலத்தின் இசை தகிக்கிறது.

அப்போதெல்லாம் வால்பாறை பேருந்து நிலையம் கீழே வாழைத்தோட்டம் (ஒரு ஏரியா) பக்கம் இல்லை. மேலே... இப்போது நூலகம் இருக்கும் இடத்துக்கு எதிரே தான் இருந்தது. ஒரே நேரத்தில் 5 பஸ்கள் மட்டுமே ( நினைவு சரியாக இருந்தால்) நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். மூன்று பக்கமும் மறைக்கப்பட்டு முகப்பக்கம் மட்டும் ரெவெர்ஸில் உள் நுழைந்து வெளியே வர முடிகிற மாதிரியான வடிவமைப்பு. பேருந்துகள் பெட்டி பெட்டியாக உள்ளே சென்று ஓய்வெடுத்து அடுத்த ட்ரிப்க்கு தன்னை தயார் செய்து கொள்ளும். குகைக்குள் இருந்து உறுமிக் கொண்டு வெளியே வரும் சிங்கத்தை போல தான் அன்றைய அந்த பேருந்துகள் என் கண்களில் தெரிகின்றன. அதுவும் மழைக் காலங்களில் அந்த செட்டுக்குள் நிற்கும் பேருந்தில் ஏறி அமர்ந்திருப்பது....நிஜமாகவே ஒரு குகைக்குள்.... அமர்ந்திருப்பது போன்று தோன்றும். கொஞ்சம் சத்தம் போட்டு அழைத்தால் எக்கோ கூட கேட்கும் என்று நினைக்கிறேன்.

குரங்குமுடி.... சேக்கல் முடி.... ஈட்டியார்..... பொள்ளாச்சி... அக்காமலை என்று வரிசையாய் பேருந்துகள் நிற்கும். அநேகமாக முதலில் நிற்கும் பேருந்துகள் பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளாகத்தான் இருந்தது என்று நினைக்கிறேன். ஒரு பேருந்து வெளியே செல்ல எஸ்டேட்டுகளில் இருந்து வரும் மற்ற பேருந்துகள் அதற்கு பதிலியாக உள்ளே சென்று நிற்கும். அந்த கணக்கு எப்படி அவ்ளோ கச்சிதமாக இருந்தது என்று தெரியவில்லை. சில பேருந்துகள்.... சாலை ஓரத்திலும்... முன்னும் பின்னும் இடைவெளி விட்டு வலது இடது மாறி மாறி நிற்கும்.

அப்படி நின்று.....காத்திருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தான் அக்காமலை பேருந்து வந்தது. ஓடி சென்று வழக்கம் போல சீட் போட்டு... அடித்து பிடித்து ஏறி அமர்கையில்... மலை பெருந்தின் வாசத்தில் ஆலாபனையோ தாலாட்டோ குமட்டலோ எதுவோ நெஞ்சுக்குள் பிராண்டியதை நினைவு கூர்கிறேன். சுப்பிரமணி கோயில் சாலையில் அதாவது போலீஸ் ஸ்டேஷன்க்கு இடது புறம் கீழே செல்லும் சாலையில் வண்டி பயணிக்க.... கீழே ஒரு ஆறு வரும். அந்த வழியாக... குறுகிய சாலை தான்... ஆனால் அது குதூகல சாலை. பேருந்துக்குள் நிலை கொள்ளாத சிரிப்பு. அடர்த்தியாக ஒட்டி ஒட்டி நிற்கையில்... ஒரு வித சூடு வண்டிக்குள் பரவ.... அது ஒரு வித சந்தோசத்தை ஏற்படுத்துக் கொண்டேயிருந்தது. ஜன்னல் வழியே எட்டி பிடிக்கும் தூரத்தில் ஏன்.. தொடும் தூரத்தில் கூட சில வளைவுகளில் தேயிலை செடிகள் கண்டது நினைவு.

நடுமலை....பச்சைமலை தாண்டி பிறகு கருமலை. கருமலை பஜாருக்குள் சென்று விட்டு மீண்டும் சென்ற வழியே திரும்பி வந்து இடது பக்கம் மேலே அக்காமலை நோக்கி பேருந்து ஏறும். கழுகுப் பார்வையில் கண்டால் இந்த லேண்ட்ஸ்கேப் மிக அற்புதமான வளைவுகள் நிரம்பிய தேயிலைக் காடுகளின் நடுவே அழகு வரைந்த கோடுகளாய் நீண்டு வளையும்... வளைந்து நெளியும் தத்ரூபங்கள். அரூபத்தின் வழி நின்று பச்சையம் செய்த மாய யதார்த்தங்ககளை சிறகுள்ளோர் காண முடியும். சிறுபிள்ளை பொம்மை போல குறுகிய சாலைகள் கொண்ட மலை மீது பேருந்து நகரும் காட்சி பிக்காஸோ வரையாமல் விட்ட ஓவியத்தில் ஒன்றென தோன்றும். அக்காமலை போகும் வழியில் கருமலை லோயர் டிவிஷனில் பேருந்து நிற்க... எல்லாரும் இறங்கிக் கொண்டோம். இறங்கி எதிரே பார்த்தால் தெரியும் முதல் வீட்டில் தான்.. எங்கள் மச்சானுக்கு பெண் எடுத்தோம் என்பது பின்னாளைய நிகழ்வு. அப்போது தெரியாது.

அங்கிருந்து எதிரே மேல் நோக்கி ஒரு 1 KM நடக்க வேண்டும். அதுவும் வளைந்து நெளிந்த குறுகிய சாலைதான். மேடு என்றால் அப்படி ஒரு மேடு. நடை தான். கூட்டம் கூட்டமாக முன் பின்னாக இருவர் மூவராக... என்று ஜெகஜோதியாக நடை இருக்கும். நடையில்... ஆச்சரியக் கதைகள் இருக்கும். ஏதாவது ஓரிரு ஜோடிகளின் கண் ஜாடை இருக்கும். விடுமுறை குயில்களின் கயமுய சத்தம் மனதுக்குள் ராகம் மீட்டும். அது ராகம் என்று பின்னாளைய ரீவைண்டிங் மனது கண்டு பிடித்தது ரசனையில் நீண்ட தீராத மெழுகுவர்த்தி வெளிச்சம்.

ஒரு பயணத்துக்கு ஆசை இருந்தால் அது பல அனுபவங்களைத் தரும். ஒரு தேடலுக்கு ஆர்வம் இருந்தால் அது பல பொக்கிஷங்களைத் தரும். அடுத்த சில மணி துளிகளில் பாலாஜி கோயில் கிடைக்கப் பெற்றோம்.

என் கற்பனை போலவே ஒரு காட்டுக்குள் மரங்கள் சூழத் தான் பாலாஜி கோயில் இருந்தது. ஆனால்... மரத்தடி கோயிலாக இருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக ஒரு கோயில் வீடு மாதிரி கட்டடத்துக்குள் இருக்கும் என்பது அப்போது புதிது. அந்த சிறு வயதுக்கு அது வைட் லென்ஸில் காட்டப்பட்ட பிரம்மாண்டமான ஷாட்.

போக ஒரு வழி. திரும்பி வர ஒரு வழி. இடையில்.... சாலை ஓரங்களில்... பூந்தோட்டம். பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற பலகை கூட இருந்தது.

முன்னால் நகர்ந்து வலது பக்கம் சரிந்த சாலையில் சென்றால் செருப்பு வைக்கும் இடம். அங்கே சென்று செருப்பை பத்திரப்படுத்தி விட்டு கோயிலுக்குள் செல்லலாம். கோயிலுக்கு பின்னால் இருக்கும் பூங்காவுக்கு செல்லலாம். பூங்காவிற்கு பின்னால் இருக்கும் காட்டுக்குள் செல்லலாம். காட்டுக்குள் செல்ல கூடாது என்று முள்வேலி எல்லாம் போட்டிருந்தாலும் காதலால் கசிந்துருகும் இளசுகள் அந்த இடத்தை நந்தவனமாக தேர்ந்தெடுப்பது இயல்பு. இலகு.

பார்த்து பரவசமாகி... அன்று ஏதோ விஷேசம் போல. இரவு வரை அங்கிருந்து விட்டு வந்தோமா அல்லது இரவு தான் அங்கு சென்றோமா என்று சற்று குழப்பம் இருக்கிறது. ஆனால்... பாலாஜி கோயில் என்று ஒரு சுற்றுலாத் தள ( நான் அப்படித்தான் பார்க்கிறேன் ) வாசலில் நின்று பார்க்கையில் ஆயிரம் மின்மினிகள் வெளிச்சம் பூசி பறப்பதாக தான் உணர்கிறேன்.

பொள்ளாச்சியில் இருந்து வருகையில்... 40 வது வளைவில் மெயின் சாலையில் இருந்து பிரிந்து உள் நோக்கி செல்லும் சாலையில் சென்றாலும்... பாலாஜி கோயில் சென்று விடலாம்.

இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன். இப்போது பாலாஜி கோயில் எப்படி இருக்கிறது... அல்லது இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால்.. பாலாஜி கோயில் என்ற சின்னம் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இப்படி பேருந்தை மலையேற்றி பாலாஜி கோயிலுக்கு ஒரு ரவுண்ட் போய் விட்டு வர என் மனதுக்கு வாய்த்திருக்கிறது. மனமெல்லாம் நிரம்பிய வால்பாறையை ஒட்டகப் பசியின் உள்ளுணர்வோடு அசை போட்டுக் கொண்டேயிருக்கிறேன். அது ஆசை போட்டுக் கொண்டே இருக்கிறது.

- கவிஜி

Pin It