எதேச்சையாக பேராசிரியர் தோழர் ஒருவர், “ஓரு ட்ரிப் போகிறோம் நாக்பூருக்கு! வருகிறீர்களா?” எனக் கேட்டார். அண்ணல் அம்பேத்கரின் யுகப் புரட்சி நடந்தேறிய பூமி ஆயிற்றே! அதுவும் அதே அக்டோபர் மாதம்! ஒரு ஆண்டுக்கு மேலாக யோசித்துப் பலரிடமும் கேட்டு நிறைவேறாத ஒரு விருப்பம், இப்படி திடுப் என்று கையில் வந்து விழுமா?! சரி என்று உடனடியாகச் சொல்லியானது. 3 குடும்பங்கள், ஒரு இளைஞர் குழு என்று மொத்தம் 18 பேருடன் ஒரு அருமையான பயணம்! வாருங்கள்! சேர்ந்தே போவோம்...
இந்தியாவின் நடுமத்தியில், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என எல்லாத் திசைகளிலிருந்தும் நட்ட நடுவில், ‘சுழி’யம் மைலில் அமைந்திருக்கும் ஒரு நகரம்தான் நாக்பூர். அதன் காரணமாகத்தான் இந்துத்துவவாதிகள் அவர்களின் தலைமையிடமாக நாக்பூரைத் தேர்ந்தெடுத்தனர். கூடுதலாக, இந்தியாவின் தொல்குடி மக்களான நாகர்கள் பெயரால் அறியப்பட்ட மண் என்பதாலும் தன் மதமாற்ற நிகழ்வுக்கு அந்த நகரத்தைத் தெரிவு செய்திருந்தார் அம்பேத்கர்!
சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி வழியாக, ஆந்திரம், தெலுங்கானாவைக் கடந்து 18 மணி நேரத்தில் வந்தது நாக்பூர்! இரயில் நிலையக் கோபுர முகப்பே அண்ணலின் சிந்தனையில் தோய்ந்த நகரம் என பறைசாற்றுகிறது!
புதைக்கப்பட்ட பௌத்தம் உயிர்த்தெழும் காட்சிகளாக வெண்கலச் சிலைகளும், விகார்களும், பயண வழி எங்கும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு விகாரும் அண்ணலின் கனவைத் தாங்கி இருந்தது. நாங்கள் தங்கிய கிறித்துவ மய்யத்தின் பேராயரின் பேச்சிலும் அக்கனவே ஆயுதமாக மின்னியது! சிறிதும் நேரவிரயமின்றி நாங்கள் உலகத்தின் இரு பெரும் சிந்தனையாளர்களின் தடங்களையும், தடயங்களையும் கண்ணுறக் கிளம்பினோம்! முதலில் அம்பேத்கர் அவர்கள் மதமாற்றத்துக்கு முன் தங்கியிருந்த ‘சிச்சோலி’யைக் கண்டோம்! கோபிகாபாய் என்ற பெண் 11 ஏக்கர் பரப்பளவில் சாந்திவனம் எனும் நிலத்தை அம்பேத்கருக்கு நன்கொடை அளித்திருந்தார்! அம்பேத்கரின் உதவியாளர் நானக்சந்த் ரட்டு அவர்கள் ஒப்படைத்த அண்ணல் பயன்படுத்திய பொருள்களைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த குழுவிடம் இரசாயனப் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தன. அவற்றின் ஒளிப்படங்கள் காணக் கிடைத்தன. அவருடைய பேனாக்கள், மூக்குக் கண்ணாடிகள், கோட்டுப் பொத்தான்கள், மேசை, நாற்காலிகள், அவருடைய உணவுப் பாத்திரங்கள் என ஒரு அறிவரின் எளிய வாழ்வின் வரலாற்று நினைவுகளை அவை நமக்குக் கடத்தின! அண்ணல் வரைந்த கண் திறந்த மண்ணின் புத்தர் ஓவியத்தை அங்கு கண்டோம்! அண்ணல் பௌத்தம் ஏற்கையில் வைக்கப்பட்டிருந்த 1 ½ அடி கண் திறந்த புத்தர் சிலையையும் அருங்காட்சியகம் தன்னகம் வைத்திருக்கிறது!
மாநில, ஒன்றிய அரசுகளிடம் இருந்தும், பவுத்த சங்கத்திலிருந்தும் பணம் ஒதுக்கப்பட்டுச் சாந்திவனம், பெரியார் உலகம் போன்று ஓங்குதாங்கான பல்கட்டடப் பெருவெளியாக உருவாக இருக்கிறது என்று அங்கிருந்த புத்த பிக்கு- நாகராஜன் என்ற தமிழர் - நமக்கு விளக்கினார். அதில் அம்பேத்கர் அருங்காட்சியகம், 2000 பேர் அமரும் பெரும் மாநாட்டு மண்டபம், பௌத்த கல்வி மற்றும் பயிற்சி மய்யம், விடுதி, நூலகம் ஆகியவை வர இருப்பதாக அவர் தெரிவித்தார். இறுதியில் நிதியும் கொடுத்து, உயிரையும் கேட்டார்கள், நிதியைத் திருப்பி அனுப்பி, அவர்களையே கட்டிக் கொடுக்கச் சொல்லிவிட்டேன் என்றாரே பார்க்கலாம்! இந்துத்துவ அரசின் நிதியால் பௌத்தம் மீண்டுமொருமுறை தோற்காமல் இருப்பதாக!
அங்கேயே ரோட்டி-ஜூன்கா, சாவல்-பைங்கன் சப்ஜி என பகல் உணவை முடித்த பின் நேரே நாகலோகா எனும் அம்பேத்கரின் மற்றொரு கனவுலகத்தை அடைந்தோம். அம்பேத்கரின் கனவில் அவரை நோக்கி நடந்து வந்த புத்தரை அங்கே மெய்சிலிர்க்கும் வகையில் சிலைகளாக வடித்திருந்தார்கள்! மய்யத்தில் உயர்ந்தோங்கி புத்தர் நடந்து வர, அவருடைய இடப்பக்கத்தில் அம்பேத்கர் அவரைப் பார்க்கும் விதமாக சிலைகள்! அதே வளாகத்தில், ஒரு புத்த விகாரும், பல்வேறு பவுத்த பட்ட, பட்டயப் படிப்புகளை வழங்கும் நாகர்ஜூனா பௌத்த கல்வி மய்யமும் அமைந்துள்ளன!
அதன் பின்னர் க்ஹயிரியில் இருந்த இலங்கை பவுத்த விகாருக்குச் சென்றோம்! அங்கு சிங்கள மொழியில் புத்த வணக்கங்களைச் சொன்னார் ஒரு துறவி! உயிரோட்டமான ஓவியங்களால் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கியது அந்த விகாரின் மேல்தளம்!
சீனக் கட்டட முறையிலும் பராமரிப்பிலும் இருந்த ட்ராகன் பேலஸ் எனும் புத்த விகாரையும் அடுத்து கண்ணுற்றோம்! மிகப் பெரிய அகண்ட தூய்மையான கட்டடத்தில், சுற்றி புல்வெளியும் வண்ண விளக்குகளும், நீர் ஊற்றுகளும் களிப்பூட்ட, பேரமைதியின் இடையே சீன இசைக் கருவிகள் இசைத்து புத்த வணக்கம் நிகழ்ந்தது! அச்சூழலின் அடர்த்தியை ரசித்துத் திரும்பினோம்.
மறு நாள், அண்ணல் 10 லட்சம் தொண்டர்களுடன் பவுத்தம் ஏற்று உரை நிகழ்த்திய தீட்சா பூமியைக் கண்டு வந்தோம்! சாஞ்சி ஸ்தூப வடிவ முகப்பும், குவிமாட வடிவிலான கோபுரமும் வட்ட வடிவ அரங்கில் மய்யத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணலின் அஸ்தியும், ஒரு புத்தர் சிலையும், அங்கு பல்லாயிரக் கணக்கில் வந்த வண்ணமிருந்த தொண்டர்களும் 1956இல் அண்ணல் நடத்திய பெரும் புரட்சியைக் கண்முன் கொண்டுவந்தனர்.
16 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வங்கி அலுவலராக, அங்கு வரும் மக்களுக்கு தண்ணீரும், குளிர்பானங்களும், திண்பண்டங்களும் எடுத்துக்கொண்டு சங்க நிர்வாகிகளோடு சென்றிருக்கிறேன்! அப்போது வாடிய முகங்களோடு, பசித்த களைத்த வயிறுகளோடு இருந்த மக்கள் இப்போது கொஞ்சம் தெம்போடும், தெளிவோடும் இருப்பது சற்று நிம்மதி அளித்தது!
ஜெய்பீம் என்று வணக்கம் வைத்த மராட்டியத் தோழர்கள், ஜெய்ஸ்ரீ ராம்களைத் தோற்கடிப்பார்களா? அண்ணலின் கனவை நிறைவேற்றுவார்களா?
- சாரதா தேவி