நாள் 3 (கார்கில் → லே)

அதிகாலை எழுந்து ஒவ்வொருவராக குளித்து 7 மணிக்குள் கிளம்பிவிட்டோம். இன்றைய நாள் பயண தூரம் 220 கிலோமீட்டர். கார்கிலிலிருந்து முல்பெக், லாமாயுரு, பாஸ்கோ நகரத்தில் வழியாக லே செல்வதாய்த் திட்டம்.

கார்கிலில் காலை வேளைப்பயணம், முந்தய நாள் காலைப் பயணம் (காஷ்மீர்-கார்கில்) போல் அல்லாமல் வெறும் மணல் போன்று மலைகளை உள்ளடக்கிய தோற்றங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும் சிந்து நதி, அதன் போக்கில் எங்களுக்கு எதிர் திசையில் சிறப்பாய் வந்துகொண்டிருந்தது.

mountain roads 60020 கிலோமீட்டர் பயணத்திற்குப் பின்னர், மலைகளின் தோற்றம் மிகவும் வியக்க வைத்தது. எவ்வாறெனில் ஹல்க் என்ற ஆங்கில படத்தின் கற்பனை கதாபாத்திரத்தைப் போன்றிருந்ததது. ஹல்க் கதாபாத்திரத்தின் விரல்களை மடக்கி ஓங்கி அடிக்கும் போது காணப்படும் தோற்றத்தை இம்மலைகள் கொண்டிருந்தது.

himalaya roads 600hima mountins 600இன்னும் சில தூரத்தில், சிந்து நதி பக்கவாட்டில் உள்ள மணல் திட்டுக்களை அரித்துச்சென்றதாலும், மலைகளின் உச்சியிலிருந்து பனி உருகி, பெருக்கெடுத்த நீரும் சேர்ந்து உயரமான தூண்களை உருவாக்கி, வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

him moun 1 600காலை உணவிற்க்காக , முல்பெக் எனுமிடத்தில் வாகனத்தை நிறுத்தி ரொட்டி, முட்டை வறுவல், தேநீர் என குளிருக்கு இதமாக உண்டோம்.

சாலையில், காஷ்மீர் முதல் லே வரை செல்லும் அரசுப் பேருந்தும் காலை உணவிற்காக நிறுத்தப்பட்டிருந்தது.

இப்பேருந்து பயணத்திற்கும் எங்களது மகிழ்வுந்து பயணத்திற்கும் கட்டண வித்தியாசம் (ஒருவருக்கு) ஏறக்குறைய இருமடங்கு..! பேருந்தில் ரூபாய் 1500 மட்டுமே..!

மேலும் இந்த பகுதியில் என்னை மிகவும் கவர்ந்த பறவை ஒன்றைக் காண நேரிட்டது. (Black-billed magpie) இது காக்கை வகையைச்சார்ந்த மிக நுண்ணறிவுள்ள பறவையாகும்.பறக்கும் போது, அதன் கருப்பு வெள்ளை சிறகுகள் மிகவும் அழகானதாய் இருந்தது.

அவ்வாறே, ஒரு கடையிலிருந்த பெரியவரிடம், இப்பகுதியைப்பற்றியும், அந்த பறவையின் பெயரைப்பற்றியும் கேட்டறிந்து, புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். அவர் பேசிய எளிமையான ஆங்கிலம், புகைப்படத்திற்காக தன்னை தயார் செய்த விதம், என எங்களை மிகவும் கவர்ந்தே விட்டார்.அவர் அப்பறவையின் பெயரை புர்கி (Furkey) என்றார். அது இணையத்தில் தேடும்போது எதிலும் பொருந்தவில்லை. இருந்தாலும் இது அவர்களுடைய வட்டாரச் சொல்லகக்கூட இருக்கலாம்.

himalaya shop 600முந்தய நாள், ஓட்டுநர் எங்களிடம் "சில கிலோமீட்டர் நீளத்திற்கு நேரான சாலை ஒன்று உள்ளது. அங்கு புகைப்படம் எடுக்க நல்ல இடமாக இருக்கும் என கூறியது நினைவில் வர, அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தோம்.

ஆதலால் சிறு தூரம் நேரான சாலை வரும் போதெல்லாம், “இதுவா அவ்விடம்” ? என அடிக்கடி கேட்டுக்கொண்டோம்.

ஓட்டுனரும், “நானே அவ்விடம் வரும் போது சொல்கிறேன்” என புன்முறுவலிட, நாங்கள் அமைதி கொண்டோம்.

நண்பகல் நேரத்தை நெருங்கும் வேளையில், ஒரு சாலை கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேராகச் செல்ல, நங்கள் “இதுதான் அந்த நேரான சாலை" என உறுதிப்படுத்திக்கொண்டு அனைவரும் உற்சாகத்தில் கத்த, வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டது.

சாலையானது மேடு பள்ளமாக இருந்ததால் ஒரு குறிப்பிட்ட தூரமே பார்க்க முடிகிறது. இருப்பினும் ஆங்காங்கே சிலர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதால் நாங்கள் சிறுது நேரம் காத்திருந்து, புகைப்படம் எடுக்க ஆவலாயிருந்தோம்.

him roads people 600அவரவர்களுக்கேற்ற யோசனையில் புகைப்படம் எடுக்கப்பட்டது. அனைவரும் உயரே குதிப்பது போன்று, சாலையில் தனியாக நடப்பது, சாலையின் நடுவே நிற்பது, மனிதசங்கிலி போன்று நிற்பது என நண்பகல் வெயிலை பொருட்ப்படுத்தாமல் இருந்த தருணங்கள் அனைத்தும் இனிமையாக இருந்தது.

him lanscaperoad 450இந்த சாலையானது கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நேராக உள்ளது.

இதனை அடுத்த பெரிய ஊர் என்றால் அது பாஸ்கோ.

இந்த சாலையின் இருபுறமும் செம்மண் போன்ற நிலப்பரப்பும், வலதுபுறம் சிந்து நதியும், அதைத்தாண்டி பனிமலைகளும், இடதுபுறம் ஓங்கி உயர்ந்த மலை முகடுகளை, மாசற்ற நீல வானமும், உச்சி வெயிலில் கண்கூசும் வெண்ணிற மேகமும் எங்கள் கண்களுக்கு விருந்தானது.

கார்கிலிலிருந்து லே செல்லும் போது ஒவ்வொரு மலைத்தொடர்களும் ஒவ்வொரு பண்புகளை அதன் தோற்றத்தில் பெற்றிருந்தன. எவ்வாறெனில், காஸ்மீர் மற்றும் சோனாமார்க் பகுதியில், கருங்கற்களின் நிறத்தையொட்டிய பாறைகள் ஓங்கி உயர்த்து காணப்பட்டு, அதன் உச்சியில் பனிமலைகள் இருந்தன. அதன் பின்னர் பல்டல் பகுதியில் சரியும் தன்மை கொண்ட கடினப் பாறைகளாக செம்மை நிறத்தில் காணப்பெற்றது.

Leh 600அதனைத் தொடர்ந்து பாஸ்கோ ஊர் வர, அங்கு முழுவதும் ராணுவ முகமாக இருந்தது. அங்கிருந்து லே வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே. ஆதலால் மகிழ்வுந்தில் இரெண்டு நாள் பயணம் முடிவடையும் தருணம் வந்துகொண்டிருந்தது.

இவ்விருநாள் பயணமானது, மலை முகடுகள், வளைந்து நெளிந்து மலைகளைத் தாண்டிச் செல்லும் சாலைகள், கூடவே வரும் நதி, அவ்வப்போது தமிழ்ப் பாடல்கள் என நேரம் செல்வதே தெரியாமல் ஒரு சிறப்பான பயணத்தை “தேசிய நெடுஞ்சாலை எண் 1” எங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது.

லே -க்கு 25கிலோமீட்டர் முன்னதாக காந்தமலை உள்ளது.

இங்கு ஒரு குறிப்பிட்ட சாய்வான இடத்தில் வாகனங்களை நிறுத்தினால், அது தானாகவே பின்னோக்கி செல்லும். ஆனால் அதன் புவியியல் அமைப்பின் படி நமக்கு வாகனம் முன்னோக்கிச்செல்வதாக உணரப்படும்.

leh moun 600நாங்கள் இதை போகும் வழியில் பார்த்ததோடு சரி.

அங்கே சென்று மேற்கூறிய கூற்றை சோதனை செய்திடவில்லை.

இறுதியாக மாலை மூன்று மணியளவில் நங்கள் லே நகரத்தை அடைந்து, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதியைத்தேடிச்சென்றோம்.

இங்கு பேருந்து நிலையம், கடைவீதிகள், விமான நிலையங்கள் சம தளத்தில் அமைந்திருந்தாலும், விடுதிகள் பெரும்பாலும் மலையின் மேல் அடுக்கடுக்கான அமைப்பில் இருந்தன. மிகவும் சாய்வான, குண்டும் குழியான குறுகுகிய சாலைகளில் கிட்டத்தட்ட 10 நபர்களிடம் கேட்டுக் கேட்டு இறுதியாக இலக்கை அடைந்தோம்.

எளிதில் தேடுவதற்கு வசதியாக வழிகாட்டிகளை நகல் எடுத்து வைத்திருந்தும், அங்கே கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

அனைவரும் ப்ரீபெய்ட் இணைப்பென்பதால் கைப்பேசிகள் செயலற்ற நிலையிலே இருந்தது...!

தம்பி சிவகுமார் வைத்திருந்த கைப்பேசி மட்டும் ஏர்டெல் போஸ்ட்பெய்டு.அவ்வப்போது வீட்டிற்குப் பேச பெரும் உதவியாய் இருந்தது.

ஓட்டுனரும் உடனடியாக காஷ்மீர் சென்று மற்றொரு வாடகை இருப்பதால் திரும்பிச்செல்லத் தயாராக இருந்தார்.

நாங்கள் சென்ற வாகனம் இன்னோவா..! அதனால் ஆறு பேருக்கு அது மிகவும் இடவசதியாக, களைப்பின்றி சொகுசான பயணமாக இருந்தது.

leh road lorry 600வாகன ஓட்டுனரும், நாங்கள் காஷ்மீரில் தங்கியிருந்த படகுவீட்டின் உரிமையாளரும் சகோதரர்கள். ஆதலால் வாகனத்திற்கு 18ஆயிரம் பேசி இறுதியாக 16ஆயிரத்திற்கு சம்மதித்தனர்.

இப்பயணத்தில், ஓட்டுநர் எங்களிடம் பழகிய விதம், எங்களது விருப்பத்திற்கேற்றவாறு ஆங்காங்கே நிறுத்தி , உணவகத்தில் நங்கள் வற்புறுத்தியும் எங்களது பணத்தில் சாப்பிடாமல் அவரது சொந்த செலவில் பார்த்துக்கொண்டது, மிகவும் பாதுகாப்பாகவும், சீரான வேகத்திலும் வாகனத்தை செலுத்தியது என எங்களை பெரிதும் கவர்ந்து விட்டார்.

ஆதலால் 16ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, கூடுதலாக ரூபாய் 500 தந்து, "இது சிறப்பான சேவைக்காக" என அண்ணன் பழனிசாமி ஓட்டுனரிடம் கொடுக்கும் போது, அவரும் அகம் மகிழ்ந்து அதைப்பெற்றுக்கொண்டு நன்றியுடன் விடைபெற்றார். நாங்களும் நன்றியோடு அவரை வழியனுப்பினோம்.

மறுபடியும் அவர் காஷ்மீர் செல்லும் பயணத்தை எண்ணி நான் மிகவும் வியப்படைந்து அவருடைய நிலையை என்னிக் கவலையுற்றேன். பேச்சுத்துணைக்குக்கூட யாருமின்றி இத்தனை மலை தொடர்களையும் இரவு எங்கும் தங்காமல் ஓட்டிச்செல்வது மிகவும் கடிமான ஒன்றாக எனக்குத் தெரிந்தது.

இது அவர்களுக்கு பெரும்பாலும் வழக்கமான ஒன்றே..!

தங்கும் விடுதியில் (Ecology Hostel, Leh) ஒருவருக்கு 300ரூபாய் மட்டுமே. அறைகள் மூன்று பேர் தனித்தனியாக உறங்கும் வகையில் கட்டிலும், கடுங்குளிரைத் தாங்கக்கூடிய ஈரடுக்குப் போர்வைகளும் வழங்கப்பட்டன.

ஆனால் இங்கு இங்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நண்பர்கள் என்னிடம் சொல்லும் போது சற்று வித்தியாசமாகவே இருந்தது..!

கதையின் ஓட்டத்தில் அந்ததந்த விதிமுறைகளை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். இவ்விடுதியானது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காவண்ணம், அதன் பயன்பாடுகள் விதிமுறைகளாக புகுத்தப்பட்டுள்ளன.

உதாரணமாக இங்கு மின்சார தேவை அனைத்தும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. நீரை சூடு பண்ணுவதற்கு சூரிய சக்தியே..!

விடுதியின் உள்ளே காலணிகளை அணிந்து செல்ல அனுமதி இல்லை.

வெறுங்காலில் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். தரையானது மரக்கட்டையால் ஆனதால் அவ்வளவாக குளிர் தெரியவில்லை.

உடமைகளை அறையில் வைத்துவிட்டு சிறுது நேர ஓய்விற்கு பிறகு மதிய உணவிற்காக மாலை 4 மணி அளவில் வெளியே சென்று அசைவ மற்றும் சைவ உணவுகளை சுவைத்தோம்.

அதன் பின்னர், மறுநாள் பயணத்திற்கான மோட்டார் சைக்கிள் வாடகைக்கு எடுக்க ஒவ்வொரு கடைகளாக தேடிச்சென்றோம். எங்களுக்கு ராயல் என்பீல்ட் வாகனங்களை தவிர்த்து மற்ற சிறிய ரக வாகனங்களை எடுப்பதாகத்திட்டம்.

ஏனென்றால் இவ்வாறான மலை பிரதேசங்களில் ராயல் என்பீல்ட் வாகனங்களை ஓட்டிச்சென்ற அனுபவம் இல்லாததே முக்கிய காரணம்.

ஆனால் அனைத்து கடைகளிலும் ராயல் என்பீல்ட் வாகனங்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இரெண்டு மூன்று மணி நேரங்கள் தேடியும் சிறந்த வாகனங்களை கணிசமான வாடகையில் பெற முடியவில்லை.

ஒரு கட்டத்தில், மகிழ்வுந்தில் சென்றிடலாமே..? என்று கூடத்தோன்றியது.

நண்பர்கள், “மோட்டார்சைக்கிளில் செல்வதே சிறப்பானதொரு அனுபவமாக இருக்கும்” என்று கூற, மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம்.

ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ஹிமாலயன் வாகனமே இங்கு வாடகைக்கு அதிகமாக காணப்பட்டது. இதன் தின வாடகை 2000ரூபாய். மற்ற புல்லட் வாகனங்களுக்கு சராசரியாக 1500 ரூபாய் வரை கட்டணமிருந்தது.

லே மற்றும் லடாக் பகுதியை சுற்ற அவ்வூர் சுற்றுலாத் துறையிடம் முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒரு நபருக்கு 420 ரூபாய் செலுத்தி இணையத்தின் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம். இது மூன்று வாரங்களுக்குச்செல்லுபடியாகும்.

இதை அண்ணன் பழனி ஏற்கனவே இணையத்தின் வாயிலாக தங்கும் விடுதி முன்பதிவிற்கு ஒரு நபரிடம் பேசியிருந்தார். அவரிடம் இதைக் கூற, எங்களிடம் முன்பணம் வாங்காமல் 6 பேருக்கும் அனுமதி பெற்று வைத்திருந்தார். ஆனால், ஒருவருக்கு 600 ரூபாய் என வசூலித்தார். இறுதியாக அவரிடமே மோட்டார்சைக்கிள் வாடகைக்கு எடுத்துத் தரக் கூற, அவரும் இரண்டு கடைகளைக் காட்டினார்.

ஒரு கடையில், ஏற்கனவே வாடகைக்குச் சென்றிருந்த வாகனங்கள் இரவு 8 மணிக்கு மேல் வருவதாய்க்கூறினார்கள். பிறகு மற்றொரு கடையில் கேட்கும் போது, வாகனம் தயாராயிருந்தது. அதுவும் புதிதான நிலையில்…! 1500கிலோமீட்டர் மட்டுமே ஓடிய ஹிமாலயன் வாகனத்தை ஓட்டிப்பார்த்து மூன்று வாகனங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டோம்.

தின வாடகைரூபாய் 2000 லிருந்து1600 என குறைக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு மொத்தப்பணத்தையும் செலுத்தி, அசல் அடையாள அட்டையை (ஏதாவதொரு) கொடுத்து வாகனத்தைப் பெற்றுக்கொண்டோம்.

அதன் பிறகு மற்றொரு கடையில் ஒரு பஜாஜ் விக்ராந்த் மற்றும் ஒரு ஸ்கூட்டர் என மொத்தம் 5 வாகனங்கள் வாடகைக்கு எடுத்தோம்.

அனைத்திலும் எரிபொருள் நிரப்பி, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கும் விடுதியை அடையும் போது இரவு 10 மணியைக் கடந்தது. அதன் பிறகு வாங்கி வந்த இரவு உணவை பிரித்து உண்ணத்தயாரானோம்.

அண்ணன் பழனி திராட்சை ரசத்தை அனைவருக்கும் பங்கிட, மறுநொடி சிவகுமார் கடகடவென வாயில் ஊற்றிவிட்டு உணவை அருந்த, அண்ணன் சற்றே வாயடைத்துப் போனார்...! என்ன தம்பி ? ஏன் இவ்வளவு அவசரம், நிறுத்தி நிதானமாக ரசமும் சோறும் சிறிது சிறிதாக அருந்த வேண்டும் எனக் கூற, அனுபவங்கள் அங்கே பகிரப்பட்டன.

இந்த நேரத்தில் திரைப்படத்தில் வருவது போல, நானும் இக்கட்டுரையில் "மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்" எனக் கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறாக நேரம் இரவு பன்னிரெண்டை நெருங்கியது.

பின்னர், பயணக்களைப்பும், குளிரும் எங்களை ஆட்க்கொள்ள தூக்கம் தானாய் வந்தது.

லே, கடல் மட்டத்திலிருந்து 11480 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

பொதுவாக 8000அடி உயரத்திற்கு மேல் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். ஆதலால், மாலை நேரத்தில் லே நகரத்தில் நகரத்தை உலா வந்த போது அவ்வளவாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவில்லை.

ஆனால் சிறுது தலை வலி இருந்தது.

இரவு உணவு உண்டு, ஓரிரு மணி நேரம் தூங்கியிருப்போம். நள்ளிரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. கூடவே பின் தலை நன்றாக வலிக்கத் துவங்கியது. அறையில் தூங்கிய அனைவரும் ஒவ்வொருவராக தூக்கம் களைந்து எழுந்து உட்கார்ந்தோம். அறையில் மின்விளக்கு இல்லை..! இரவு 11 மணி வரை மட்டுமே மின்சாரம். அதுவும் அறையில் ஒரு மின்விளக்கு மற்றும் ஒரு மின்னிணைப்பு.

இங்கு கழிப்பிட வசதி தரைத்தளத்தில், விடுதிக்கு அருகில் தனியாக அமைந்துள்ளது. இரெண்டு கழிவறை மற்றும் குளியலறைகள்.

தம்பி சிவகுமார், சிறுநீர் கழிக்க கைபேசியின் வெளிச்சத்தில் முதல் தளத்திலிருந்து கீழே செல்ல, நானும் சிறுது நேரத்தில் பின் சென்றேன். வெளியில் எங்கும் கும்மிருட்டு.

வெப்பநிலை தோராயமாக 2~3 டிகிரி. இது ஜூன் மாதம் என்பதால் மட்டுமே..! குளிர் காலங்களில் இது -23 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.

இங்கு இருக்கும் கழிவறை “பாதாளத் தொட்டிக்கு மேல் 1 சதுர அடி துளை கொண்டது. இத்துளையில் உட்கார்ந்து, இருந்து விட்டு, அருகே கொட்டியுள்ள மணலை, ஒரு கரண்டி (சுவர் பூச உதவும்) கொண்டு எடுத்து உள்ளே போட்டு விட்டு, நாம் கொண்டு போகும் மர இலைகளில் துடைத்துவிட்டு வர வேண்டும்” இதுதான் விதிமுறை.

துடைக்கும் மேற்கத்திய கலாச்சாரத்தை நாங்கள் கடைபிடிக்க வில்லை. இலைகளுக்கு பதில் சிறிதளவு தண்ணீர் உபயோகித்தோம்.

அந்த வெப்பநிலையில் உள்ள நீரானது பனிக்கட்டியாக மாறும் நிலைக்கு சற்றே முன்பு…! ஆதலால் தண்ணீரும் எங்களைப்பதம் பார்த்தது...!

முந்தைய நாளில் இருந்தே இந்த கழிவறை எங்களுக்கு சுவாரசியமான தலைப்பு..!

அவ்வாறாக சிவகுமார் கழிவறையை விட்டு வரும் போது, கடைசி இரெண்டு படிக்கட்டில் தட்டுத்தடுமாற, கையிலிருந்த ஈய வாளி கீழே விழுந்து ஓசையெழுப்பியது, நள்ளிரவில் மயான அமைதியை கலைத்துபீதியை உண்டாக்கியது.

ஏனென்றால் கீழிருந்து முதல் இரெண்டு படிக்கட்டு மிக உயரமாகவும், அதற்கடுத்த படிக்கட்டுகள் சீரான உயரத்தில் இருந்ததால், மேலிருந்து கீழிறங்கும் போது இத்தடுமாற்றம் ஏற்பட்டது.

பின்னர் நான் சென்று வரும் வரை சிவகுமார் காத்திருக்க, கழிவறையில் ஒரே ஒரு மங்கலான மின்விளக்கு. இவ்விளக்கு வெளிச்சத்தில் அருகிலிருக்கும் நபரின் உருவத்தை காணலாம்..! ஆனால் முகத்தை பார்ப்பது அரிது...அவ்வளவும் மங்கலான வெளிச்சம்.

அந்த 1 சதுர அடி துளை மேலும் திகிலூட்டியது. ஆங்கில படங்களில் பேய் வரும் காட்சிகள் கண்முன் வந்து போயின.

சிறுநீர், மலம், மணல் என அனைத்தும் சேர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் மனதில் ஒரு மகிழ்ச்சி..! ஏனென்றால் சாதாரண கழிவறையில் நாம் செலவழிக்கும் நீரானது சேமிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கழிவுகள் மறுசுழற்சி முறையில் உரமாகவும் தயாராகிறது.

பின்னர் இருவரும் மிகக்குளிர்ந்த நீரில் கை கால் அலம்பிவிட்டு, அறையை அடைந்தோம். அங்கு ஆதியும் மூச்சு விடுவதில் சிரம மேற்பட்டு முனங்கிக் கொண்டிருக்க, மூவரும் நிலையும் விடிய விடிய இதுவே.

அருகிலிருந்த அறையில், மற்ற மூன்று நண்பர்களின் நிலையும் எங்களைப்போலவே..!

Pin It