unbrokenஉடைந்து நொறுங்கிடாத ஒன்றில் மனம் இருந்தால் மரணம் ஒன்றுமில்லை.

அவமானத்தின் உச்சியிலும் சிலுவை தூக்கிய சித்திரம் தான் வரலாறு. அப்படித்தான் எலும்பும் தோலுமாய் எல்லாம் இழந்த 'லூயிஸ்' அந்த ஆளுயர தடித்த கட்டையை தூக்கிக் கொண்டு நிற்பதும். இறக்கினாலோ... கீழே போட்டு விட்டாலோ... சுட்டு விடுவான் ஜப்பான் அழகன். ஒரு குயுக்தனிடம் தோற்றுப் போவதை போல கேவலமான சாவு வேறென்ன இருக்க முடியும்.

'நான் நத்திங்... ஒண்ணுமே இல்லை' என்று சிறுவயதில் சொல்லும் லூயிஸ் ஒரு முறை கண் முன்னே வந்து போகிறான்.

"உன்னால் முடியும்... ஓடு..." என்று விரட்டும் லூயின் அண்ணனும் வந்து போகிறான். இப்படி ஒரு அண்ணன் இருந்தால் இப்படி ஒரு தம்பி ஜெயிப்பான்.

இந்த உலகம் ஒதுக்கி வைத்த பிள்ளை தான் ஒலிம்பிக்கில் தன் பலம் கொண்ட மனதால் ஓடி ஓடி... நத்திங் என்று ஒன்று இல்லை நிரூபித்தது.

இரண்டாம் உலக போரில் நிஜமாக நடந்த சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மனித கண்டு பிடிப்புகளில் லாஜிக்கே இல்லாமல் நிகழ்ந்ததுதான் இந்த போர் என்பது. வேட்டை சமூகத்தின் மிச்ச மூர்க்கத்தனம்தான் உலக போர்கள். பேசினால் தீர்ந்து விடும் அளவுக்கு தான் இங்கே வாழ்க்கை இருக்கிறது. அதற்குள் எதற்கு அத்தனை ஆயுதம். எதற்கு அத்தனை வன்மம். அதுவும் போர் கைதியாக அந்நிய நாட்டில் சிக்கிக் கொள்ளும் அவலம்.. மரணத்தைக் காட்டிலும் மோசமானது.

பொண்டாட்டி செஞ்ச தோசை சரி இல்லை என்று வேலைக்கு வந்து... கீழே இருப்போரை திட்டி தீர்க்கும் இயலாமை அதிகார கோமாளிகள் இருக்கும் உலகத்தில் ஜப்பான்காரன் மட்டும் என்ன சப்பையா. மூளைக்காரன் இருக்கும் ஜப்பானில்தான் அகந்தையின் ஆறடியாய்... சிறை காவலன் ஒருவனும் இருக்கிறான். எல்லாவற்றுக்கும் அவனுக்கு ஒரு காரணம் வேண்டும். லூயிஸை கண்டதுமே அவன் மீது ஒரு வகை ஈர்ப்பு அவனுக்கு. ஈர்ப்பு என்பது வெறுப்பின் உச்சமாகவும் இருக்கும். வன்மம் கொப்பளிக்கும் புன்னகையில்.... அது ஒரு வாழ்நாள் சாபம்.

ஒரு கட்டத்தில் காவலனை கொன்று விடலாமா என்று கூட யோசிக்கிறான் லூயிஸ். அத்தனை வன்மத்தில் லூயிஸை போட்டு தாழ்த்தி அடித்து கொடுமைப் படுத்தும் இடமெல்லாம் ஒரு தோட்டா தேவலை என்று தோன்றியது. சக போர் வீரன்... என்று இல்லை. ஒலிம்பிக்கில் ஓடி ஜெயித்தவன் என்றும் இல்லை. சக மனிதன் என்பதெல்லாம் இல்லவே இல்லை. கேம்பில் வந்து மாட்டி இருக்கும் அந்நிய நாட்டு வீரர்கள் எல்லாரும் அடிமைகள். மாட்டை விட கேவலமாக வேலை வாங்கப் பட வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். எங்கோ சேர்த்து வைத்த கோபம் எங்கோ வெளியேறும் சீக்கு. அத்தனை பேர் நடுவிலும் லூயிஸ் மீது கொண்ட வன்மம் மட்டும் குறைந்தபாடில்லை. அந்த ஜப்பான் காவலனுக்குள் ஓசையில்லாத ஓநாயின் நாள்பட்ட ... பொறாமை எனும் ஊளை நோய். ஈகோ தலைக்கேறினால்... தன் நாக்கை தானே கடிக்குமாம் பிறழ்ந்த மனம். அது தான். அந்த காவலன். அத்தனை அழகான முகத்தில் அத்தனை அசுத்தமான வஞ்சம்.

எத்தனை அடி... எத்தனை அவமானம்.... எத்தனை கொடுமை... எத்தனை முறை தான் மரணத்தை நெருங்கி நெருங்கி விலகுவது. சாவு மேல் என்று தோணும் போதும்... சரணடைந்து கீழே சரிகையிலும்... லூயிஸின் கண்களில் தோல்வி இல்லை. பயம் இல்லை. நிதானமாக நின்று ஆடும் காந்தியின் கவசம் தான்.

மனதளவில் ஒரு போர் வீரனை குன்ற வைப்பது... அவனை ஒன்றுமில்லாமல் செய்து விடும். திடகாத்திரமான மனதை நிலை குலைய வைப்பதில் அதுவரை அவன் கொண்ட பயிற்சிகள் சட்டென அவனை விட்டு விலகி விடும். சோற்றைக் குறைத்து.... பேச்சைக் குறைத்து... அவமானத்தை அதிகப்படுத்தி... கீழ்த்தரமாக நடத்தி.... இருட்டில் அடைத்து வைத்து... ஆடைகளை குறைத்து... அழுக்கை நிறைத்து... ஆனாலும் லூயிஸ் நிற்கிறான். எதிர்த்து அடிக்காத இறுதிக் காட்சியிலும் துவண்டு கிடக்கும் லூஸிஸ் தான் ஜெய்க்கிறான்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே இரு சக வீரர்களோடு கடலுக்குள் மாட்டிக் கொள்கிறது லூயிஸின் திரைக்கதை. நாட்கள் நகர நகர உடலும் உள்ளமும் வற்றும் காட்சியில் கடல் அழகென்று எவன் சொன்னது... அது வலை. மீனும் வானும் தான் உணவு. நினைவும் தானும் தான் மிச்சம். அங்கிருந்து தப்பினால் அது கடலை விட வன்மம் பெருகிய ஜப்பான் நாட்டு சிறை.

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமான சண்டை கேடு விளைவிக்கும் பாடு. அதிலும் இரு நாட்டு வீரர்களும் செய்து கொள்ளும் கோமாளித்தனம் மாற்றி மாற்றி மாட்டிக் கொள்கையில் புரிந்து கொள்ள முடியும். ஒருவேளை ஜப்பான்காரன் அமெரிக்காவில் சிக்கினாலும் இதே கதை தான்.

இரு நாட்டு தலைவர்களை நீங்க போயி சண்டை போடுங்கன்னு சொல்ல வேண்டும். அப்போது தெரியும்...சண்டையின் உண்மையான அர்த்தம்.

ஒருவரை ஒருவர் அடித்து... சுட்டு வீழ்த்திக் கொள்வதில் என்ன வெற்றி இருந்து விட முடியும். எந்த தோட்டா முதலில் வெளியேறுகிறதோ... அதுவா வெற்றி. போர் காலங்களின் முடிவிலி... தப்பித்த அந்த வீரர்களின் வாழ்நாள் முழுக்க ஒரு கெட்ட கனவாக தொடர்வதை மிக நுண்ணிய புள்ளியில் இந்த படம் பதப்படுத்தி நினைவூட்டியது. ஒவ்வொரு முறையும் லூயிஸையே குறி வைத்து தாக்கும் அந்த ஜப்பான் காவலனை பிறகு லூயிஸ் விடுவிக்கப்பட்டு... ஒரு கட்டத்தில் ஜப்பான் செல்ல நேரிடுகையில் பார்க்க விரும்பி இருக்கிறார். ஆனால் குற்ற உணர்ச்சி உள்ள ஜப்பான் காவலன் பார்க்க மறுத்திருக்கிறார். இது தான் வெற்றி. உண்மையின் நிழலில் வன்மத்தின் நிஜம் உடைந்து போகும். எத்தனை நாள் வாழ்கிறோம் என்பதிலா இருக்கிறது. எப்படி வாழ்ந்தோம் என்பதில் தானே எல்லாம்.

"நான் சாகவில்லை... உயிரோடு தான் இருக்கிறேன். என் துப்பாக்கியை சரி பண்ணி வைக்கவும். நான் வந்த பிறகு வேட்டைக்கு சொல்வோம்..." என்று ஒரு முறை ரேடியோவில் பேச கிடைத்த வாய்ப்பில் அழுகைக்கும் ஆளுகைக்கும் இடையே லூயிஸ் தவிப்பது கிளாசிக். அதே நேரம் இறந்து விட்டதாக நினைத்து இல்லை இல்லை இதோ நம் லூயிஸ் பேசுகிறான் என்று தெரிந்து வீட்டிலுள்ளோர் துடிப்பதெல்லாம் கோட்டுக்கு அந்த பக்கம் வீழ்ந்து விட்ட கருப்பு பக்கங்கள். அது காலத்துக்கும் கண்ணீரால் தான் எழுதப்படுகிறது.

எல்லாம் முடிந்து விடுதலைக்கு முந்தைய சில கணங்களில் ஜப்பான் காவலன் அறைக்குள் மெல்ல செல்வான் லூயிஸ்.

அங்கே நீண்ட கைத்தடி கை மாற காத்திருக்கும். ஆனாலும் அங்கே ஒரு ஜென் அரங்கேறும். மிக நீண்ட வன்மத்தின் அடிநாதம் வேறொன்றாக ஆகும் இடம் அது.

போர் கைதிகள் பற்றிய சரி தவறு என்ற கூற்று இங்கில்லை. கைதிகளையும் குறைந்த பட்சம் மரியாதையுடன் நடத்த வேண்டியது மானுட விதி என்பது உலகத்துக்கே ஒன்று தானே.

அந்த வகையில்... தலைவர்களும்.... ஆதிக்க மனோ நிலைகளும் செய்த... செய்து கொண்டிருக்கும் தவறுகளுக்கு யாரோ ஒரு பொதுவானவன் - லூயிஸை போல ஒருவன் - காலத்துக்கு மரத்தால் ஆன சிலுவை சுமக்க வேண்டி இருக்கிறது. ஜப்பான் காவலன் போன்ற ஒருவன் காலத்துக்கும் கண்ணுக்கு தெரியாத சிலுவையை சுமக்க வேண்டி இருக்கிறது. யார் சுமர்ந்தாலும் சிலுவையின் பாடுகள் மானுட நேயத்துக்கானவை. 

தயாரித்து இயக்கி இருப்பது ஏஞ்சலினா ஜோலி. - முத்தங்கள்.

 

Film: Unbroken
Language: English
Director: Angelina Jolie
Year : 2014

- கவிஜி