பவுத்த மரபில் பவுர்ணமி நாள் என்பது நிறைய தத்துவார்த்த முக்கியத்துவமுள்ள புனிதமான நாள். அதுவும் ‘வைசாகி’ மாதத்தில் (ஏப்ரல்-மே மாதங்களின் இடையில்) வரும் பவுர்ணமி நாள் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில்தான் புத்தபகவான் பிறந்தார். இந்த நாளில்தான் புத்தபகவான் உள்ளொளி பெற்றார். மரண வேளையில் புத்தபகவான் இந்த நாளில்தான் நிர்வாண நிலையை எய்தினார். அசாதாரணமான இந்த முப்பரிமாண இயைவுதான் புத்தபூர்ணிமா எனப் பெறும். இந்தப் பவுர்ணமி நாளுக்கு அதிமுக்கியத்துவத்தினை வழங்குகிறது.

பவுர்ணமி நாள் தரும் ஆத்மீகக் கொடுங் குளிர்மையும், தெற்காசிய நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் கோடை தரும் கடும் வெப்பமும், தமிழ் இனப் பிரச்சினைக்குப் பின்னான சிங்களத் திரைப்படக் கலைஞர்களை, விமோசனம் நோக்கிய தீராத சாபம் போலும் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இநோகா சத்யாங்கினி, பிரசன்ன விதானகே, அசோக ஹந்தகமா போன்ற சமகாலத் சிங்களத் திரைப்படக் கலைஞர்களின் படங்களில், இலங்கை நாட்டின் கோடையில் தகிக்கும் இயற்கை வெப்பத்திலும், அந்த நாட்டின் கந்தக வீச்சில் எரியும் அரசியல் வெப்பத்திலும், வெந்து மடியும் மனிதர்களாகவே அவர்தம் கதைமாந்தர்கள் உயிர் பெற்று அலைகிறார்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் ‘ஈழத்தமிழ் தேசிய இயக்குனர்களின்’ படங்களோடு, சமவேளையில், மேற்கில் அகப்படும் சிங்களப் படங்கள், அனைத்தையும் பார்த்ததில் முக்கியமான வித்தியாசமொன்று இரண்டு வகையான படங்களுக்கு இடையிலான கதை சொல்லலில் உண்டு என்பதை அவதானிக்க முடிந்தது. ஈழத் தமிழ் தேசியப் படங்களள் காலஞ்சென்ற ஞானரதனின் ஓரிரு படங்கள் விதிவிலக்காக, அனைத்துமே ‘தமிழக நாடக பாணி’ அல்லது ‘மிகை யதார்த்தவாத’ சினிமாவின் பாதிப்புக்கு உள்ளானவை. போர்க் காலத்தினைச் சித்தரிக்கும் ஈழத் தமிழ் சாகசப் படங்களில் பெரும்பாலுமானவை ‘ஹாலிவுட் ராணுவ சாகசப்படங்களின்’ பாதிபப்ப் பெற்றவை.

போர்க்காலப் படங்களிலும் யதார்த்த சினிமாவைச் சித்தரிக்க முயன்ற தேசிய விடுதலைச் சமூகங்களான ரஷ்ய, சீன, கியூப வகைச் சித்தரிப்புகளை ஈழத் தேசியச் சினிமாவில் காணவியலாது. ஆனால் தமிழ் இனப் பிரச்சினை உக்கிரம் பெற்ற எண்பதுகளின் பின் தோன்றிய பிரசன்ன விதானகேவின் தலைமுறை சிங்கள இயக்குனர்களின் படங்களில், ஆயினும், அதற்கு முன்பான லெஸ்டர் ஜேம்ஸ் பிரீஸ் தலைமுறையைச் சார்ந்த சிங்கள இயக்குனர்களின் படங்களில் ஆயினும், அவர்களது கதை சொல்லலில் ‘யதார்த்த தேசிய சினிமா’ சித்தரிப்புக்களை நாம் காண முடியும். தமிழ் இனப் பிரச்சினை உக்கிரமடைவதற்கு முன்பாக, ஈழத்தின் யதார்த்தவாத சினிமாவான ‘பொன்மணி’யை இயக்கியவர் சிங்கள இயக்குனரான தர்மசேனா பத்திராஜா எனகிற செய்தியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

சிங்கள யதார்த்த தேசிய சினிமா என்பது கறாராக இரண்டு விதமான காலவகுப்புகளையும், அந்தக் காலவகுப்புகளுக்கேற்ற இரண்டு விதமான அரசியல் பண்புகளையும் கொண்டதாக இருக்கிறது. எண்பதுகளின் முன்னான சிங்கள யதார்த்த சினிமா, மற்றும் எண்பதுகளின் பின்னான சிங்கள யதார்த்த சினிமா என இதனைக் கால வகுப்புச் செய்யலாம். எண்பதுகளின் முன்னான சிங்கள யதார்த்த சினிமாவின் அரசியல் பண்பு என்பது, ‘காலனியாதிக்க எதிர்ப்பு சிங்கள புவுத்த தேசியத்தின்’ அடையாளத்தைக் கட்டுவதாகவும், அந்த அடையாளத்தினை தாராளவாத உலகப் பார்வையுடன் சித்தரிப்பதாகவும் இருந்தது.

எண்பதுகளின் பின்னான சிங்கள யதார்த்தவாதச் சினிமாவின் பிரதான செயல்படுதளம் என்பது, தமிழ் இனப்பிரச்சினை சிங்கள நிலத்திலும் உளவியலிலும் ஏற்படுத்தும் பாதிப்புகளும், அதற்கான சிங்களக் கலைஞர்களின் எதிர்வினைகளும் என்பதாக அமைகிறது. இந்தச் செயல்போக்கில் இந்தக் காலகட்டத்தின் கலைஞர்கள் தமது சிங்கள பௌத்த தேசிய சமூகத்தின் அடையாளத்தின் தகைமைகளையும், அறங்களையும், அரசியல் அதிகாரத்தின் கொடுங்கோன்மையையும் கேள்விக்கு உட்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். சிங்கள பௌத்த தேசிய அடையாளத்தின் மனித விரோத அடிப்படைகளை இவ்வகையில் இந்தக் காலகட்டத்தின் கலைஞர்கள் உடைத்தெறிகிறார்கள்

தொண்ணூறுகளில் இலங்கையில் ஏற்பட்ட பொருளியல் சமூகப் பேரழிவுக்கு முக்கியமான காரணமாக இருந்த ஒரு விசயம், தற்கொலைத் தாக்குதலில் கொலையுண்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் காலத்தில் மேற்கத்திய சுரண்டலுக்காக ‘சுதந்திர வர்த்தக வளையங்கள்’ உருவாக்கப்பட்டதாகும். கொழும்பிலும் அனுராதபுரத்திலும்;தான்; மிகப் பெரிய வர்த்தக வளையங்கள் அமைந்தன. கிராமப்புறத்தில் வறட்சி, அதனால் தோன்றிய வறுமை, வேலையின்மை போன்றவற்நுக்கு மாற்றாக சுபிட்சத்திற்கான வழியாக, வேலைதரும் அட்சயபாத்திரமாக சுதந்திர வர்த்தக வலையங்களை பிரேமதாஸா முன்வைத்தார்.

இலங்கையின் சிங்களப் பெரும்பான்மையின் சமூக வாழ்வில், மூன்று வகையான மக்கள் கூட்டத்தை, தெற்கு இலங்கையின் கிராமப்புறங்கள் இலங்கைக்கு வழங்கியது. முதலாவதாக வேறு வேலை வாய்ப்புகள் ஏதுமற்ற ஏழைச் சிங்கள இளைஞர்கள் இலங்கை ராணுவத்தில் பெருவாரியாகச் சேரலாயினர். நிரந்தரமான மாத வருமானம், போர்க்களத்தில் மரணமுற்றால் மரணமுற்ற ராணுவத்தினனின் மனைவிக்கு அல்லது பெற்றோருக்கு இலட்ச மூபாய் நஸ்டஈடு என இலங்கை அரசாங்கம் ஆசை காட்டியது. ராணுவச் சம்பளத்தில் நிரந்தரமாக ஒரு வீடு கட்டுதல், தமது அக்கா தங்கையைருக்கு மணம்செய்து வைத்தல், தமது பாம்hர்யக் கடன்களை அடைத்தல் போன்ற நோக்கங்களே ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்களின் மனங்களில் நிறைந்திருந்தன. தேசபக்தி என்பதற்கு இவர்களின் வாழ்வில் அர்;த்தமில்லை. வறுமையினின்றும் தப்புதல் மற்றும் தம்மை நம்பிய பெற்றோர்கள் உள்ளிட்ட குடும்பங்களைக் காப்பாற்றுதல் என்பதுவே இந்த கிராமப்புற இளைஞர்களின் நோக்கமாக இருந்தது.

இரண்டாவதாக இந்தக் கிராமப்புற வறுமையில் இருந்து தப்ப நினைத்த ஏழை இளம்பெண்கள் தமது கிராமப்புற வீடுகளில் இருந்து வெளியேறி, சுதந்திர வர்த்தக வளையங்கள் அமைந்த நகரங்களில் இருந்த காலனிகளில் குடியேறி, கூலி அடிமைகளாகத் தனித்து வாழலானார்கள். மூன்றாவதாக இதே கிராமப் புறங்களிலிருந்து வெளியேறிய இன்னொரு பகுதிப்பெண்களாக மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்குச் சென்ற பெண்கள் இருந்தார்கள்.

கிராமப் புறங்களிலிருந்து இலங்கையின் நகரங்களுக்கும் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும் பெயர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாலியல் சுரண்டலுக்கு ஆட்பட்டார்கள். மத்தியக் கிழக்கு நாடுகளின் எஜமானர்கள் தமது வீட்டு வேலைக்காரப் பெண்களை பாலுறவு அடிமைகளாக நடத்த, சுதந்திர வர்த்தக வளையங்களில் வேலை செய்த பெண்கள், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதிக்கான ஆடைகள் தைக்கும் தொழிற்சாலைகளில் இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்தல், தொழிற்சாலை நிர்வாகிகளின் கட்டளைக்கு அடிபணிதல், குறைந்த கூலி, தனிமை போன்ற காரணங்களால் பெரிய அளவில் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

இவர்களது பெரும்பாலுமான வாடிக்கையாளர்கள் ராணுவ விடுப்பில் விடுமுறையைக் கழிக்க நகர்ப்புறங்களுக்கு வரும் ராணுவத்தினர்களாகவே இருந்தார்கள். இவவகையில் பெண்களைத் தேரந்து அழைத்துச் செல்வதற்காகவே சுதந்திர வர்த்தக வளையத் தொழற்சாலைகளின் அருகில் சதா ராணுவத்தினரின் வாகனங்கள் நடமாடியபடியே இருக்கும். ராணுவத்தினர் நகரங்களிலிருந்து தமது கிராமத்து வீடுகளுக்குச் செல்லும் வழியில் நகருக்கு வெளியிலான வீடுகளில் சுதந்திர வளையத்தில் வேலை செய்யும் பெண்களை வைத்து விபச்சாரத்தை ஒரு தொழிலாகச் செய்வதும், அந்த விடுகளில் விடுமுறையைக் கழிக்க வரும் ராணுவத்தினர் தங்கிச் செல்வதும் இலங்கையின் சமூக வாழ்வின் அங்கமாக ஆகிய காலமும் இதுதான்.

இந்த நிலமைதான் இன்று வரையிலுமான தெற்கு இலங்கையின் துயரமான ஏழை மாந்தர்களின், ஆண் பெண்களின் வாழ் நிலைமை. இலங்கை ஊடகங்களிலும் சர்வதேசியப் போர்ச் செய்திகளிலும் வெளியில் வராத ஆண் பெண்களின் இந்தத் துயர வாழ்க்கையைத்தான் மனசாட்சியுள்ள ஈழத்தின் திரைப்படக் கலைஞர்கள் பேசுகிறார்கள். சிங்களப் பெண் இயக்குனர் இநோகா சத்யாங்கினி கீரத்தி நதாவின் ‘காற்றுப் பறவை’ அல்லது ‘சுலாங் கிரில்லி’ எனும் கதைப்படம், பிரஸன்ன விதானகேயின் ‘பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம்’ அல்லது சிங்கள மொழியில் ‘புர ஹந்த கலுவர’ மற்றும் அவருடைய பிறிதொரு படமான ‘ஆகஸ்டு சூரியன்’ அல்லது ‘இரா மதியம்’ எனும் இரு கதைப் படங்கள், சிங்களப் பெண் இயக்குனரான நிலிதா வச்சானி இயக்கிய ’அம்மா கிறஸ்துமஸ்க்கு வீடு வந்தபோது’ என, நான்கு திரைப்படங்களும்; இலங்கையின் மேலே விவரித்த சமூக யதார்த்தத்தைப் பற்றித் தான் பேசுகின்றன.

1995 ஆம் ஆண்டு சர்வதேசிய வெளியில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் வெளியான, சிங்களப் பெண் இயக்குனரான நிலிதா வச்சானி இயக்கிய அம்மா கிறஸ்துமஸ்க்கு வீடு வந்தபோது படம் இலங்கை உழைக்கும் பெண்கள் பற்றிய படம். படத்தின் முன்பகுதி சில காட்சிகள் கிரீஸ் நாட்டிலும், பின்பகுதி முழுப்படமும் இலங்கையிலும் நிகழ்கிறது. நான்கு பிரதான பாத்திரங்களையும் அதன் உப பாத்திரங்களையும் சுற்றிலும் கதை அல்லது வாழ்வு நிகழ்கிறது. ஜோஸ்பின், கீரீஸ் நாட்டில் ஒரு வெள்ளைக்காரக் குடும்பத்தில் வேலைக்காரியாக இருக்கும் சிங்களப் பெண். அவ்வீட்டின் எஜமானி பிரான்ஸிற்குத் தனது படிப்பு தொடர்பாகச் சென்றிருக்கிறார். அவ்வீட்டின் ஆண் பெரும்பாலும் கம்ப்யூட்டர் முன்பு இருக்கிறார். இவர்களது பெண் குழந்தையான இஸடோராவைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் ஜோஸ்பின் இருக்கிறாள்.

ஜோஸ்பினுக்கு இலங்கையில் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டு மகன்கள், ஒரு மகள். பெரிய மகன் சுரேஷ். அடுத்தது வயது வந்த பெண் நார்மா. கடைக்குட்டிப் பையன் பெயர் சுமிந்த். இவர்கள் அனைவரும் ஜோஸ்பினின் தமக்கை வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஜோஸ்பினின் கணவன் ஒரு குடிகாரன். இப்போது இறந்து போய்விட்டான். சுமிந்த் பள்ளிக்கூடத்தின் விடுதியில் தங்கிப் படிக்கிறான். நார்மா ஒருவனைக் காதலித்துவிட்டு கல்யாணத்திற்காகக் காத்திருக்கிறாள். சுரேஸ் ஒரு பேருந்து வாங்கி ஓட்ட வேண்டும் எனும் ஆசையில் அம்மாவுக்காகக் காத்திருக்கிறான். அவன் ஏற்கனவே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன்.

அம்மா ஏழெட்டு வருடங்களாக இலங்கைக்கு வராமலேயே அங்கிருந்து உழைத்து காசு அனுப்பிக் கொண்டிருக்கிறாள். இந்த வருடம் அவள் சேர்த்து வைத்திருக்கும் பணத்துடன் கிறிஸ்துமசுக்காக வீட்டுக்கு வரப்போகிறாள். இரண்டு பக்கமும் காத்திருப்புகள். தனது பெற்ற உறவுகளைப் பார்க்க அம்மாவும், அம்மா கொண்டு வருபவற்றுக்காக குழந்தைகளும் அவளது உறவினர்களும் காத்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் இலங்கையின் நிலவரம் அம்மா எழுதும் கடிதங்களின் வாசிப்பு மூலம் காண்பிக்கப்படுகிறது.

ஜோஸ்பின் சதா வேலை செய்தபடியிருக்கிறாள். சமைப்பது, துடைப்பது, மெழகுவது, தண்ணிர் பிடிப்பது, தோட்டத்தைத் துப்புரவு செய்வது, குழந்தையைக் குளிப்பாட்டுவது, சாப்பிட வைப்பது, பள்ளிக் கூடம் கொண்டு போய் விடுவது, தூங்கச் செய்வது, அவளோடு விளையாடுவது, நாய்க்குட்டியைக் மலம்கழிக்க வெளியே அழைத்துச் சென்று காத்திருப்பது, இடையிடையே இலங்கையிலிருக்கும் தன் குழந்தைகளை நினைப்பது, மறுபடி மறுநாள் சமைப்பது, கழுவுவது என அவளது வாழ்நாள் கழிகிறது. அவளுக்கும் குழந்தை இஸடோராவுக்கு இருக்கும் அன்பும் பாசமும் நெருக்கமும் பல்வேறு காட்சிகளில்; காண்பிக்கப்படுகிறது. ஒரு காட்சியில் ஜோஸ்பின் இஸடோராவிடம் கேட்கிறாள் “இஸடோரா என் குழந்தைதானே?” இஸடோரா சொல்கிறாள் ”இல்லையில்லை. நான் அம்மா அப்பாவின் குழந்தை”. ஜோஸ்பின் மறுமொழியாகச் சொல்கிறாள் : ” இல்லiயில்லை. “இஸடோரா எல்லோரினதும் குழந்தை”. குழந்தைகளுக்காக ஏங்கும் தாயன்பு இங்கு நம்மை உலுக்குகிறது.

ஜோஸ்பின் கொழும்பு விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பொருட்களுடனும், குளிரபதனப் பெட்டியிடனும் வந்து இறங்குகிறாள். தான் குழந்தைகளுக்காக் கொண்டுவந்த காசில் மகனுக்கு அவன் விரும்பின பேருந்து வாங்கித் தருகிறாள். மருமகன் எவ்வளவு சீதனம் கேட்கிறான் என்பதை விசாரித்து மகளுக்காகத் தான் போட்டு வைத்த வைப்பு நிதியிலிருந்த பணத்தை அவர்களுக்குத் தருகிறாள். சின்ன மகனுக்கு அவன் விரும்பும் விளையாட்டுச் சாமான்களைத் தருகிறாள். தன் தங்கை மகனோடு அடிக்கடி சண்டைபோடும் முரட்டு மகன் சமிந்தவுக்கு ஒழுக்கம் சொல்லித் தருகிறாள். பள்ளிப் பாடம் சொல்லித் தருகிறாள். தன் உறவினர்கள் மற்றும் தனது வளர்ந்த மகன் மகளுக்கு இடையிலான சச்சரவுகளை நினைத்து மனம் குன்றிய நிலையில் தனிமையில் அழுகிறாள்.

அவளது ஆசையெல்லாம் இலங்கையில் ஒரு வீடு வாங்கி, நிரந்தரமாக இலங்கையில் குழந்தைகளோடு தங்கி விடுவதுதான். அதற்காக ஒரு பாழடைந்த பழைய வீட்டை விலைக்கு வங்கும் நோக்கத்துடன் சென்று பார்க்கிறாள். ஆனால் அவ்வீட்டைத் திருத்துவதற்கு நிறையச் செலவாகும் என்று தோன்றுகிறது. கையில் கொண்டு வந்த காசு தீர்ந்துவிட்டது. மறுபடி உழைத்து, மறுபடியும் காசு சேர்த்து, சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் எனும் கனவுகளோடு மறுபடியம் கிரீஸ்க்குத் திரும்புகிறாள் ஜோஸ்பின். இஸடோரா அங்கே அவளுக்காகக் காத்திருக்கிறாள்.

இப்படம் கதைப்படம் இல்லை. வாழும் நிஜ மனிதர்களின் கதை. ஒரு இலங்கைப் பெண்ணின் துயர வாழ்வு குறித்த விவரணப்படம் எனவே இந்தப் படத்தைக் குறிப்பிடுகிறார், இயக்குனரான நிலிதா விச்சானி. சோகமும் கண்ணீரும், பாசமும் அவலமும் நிறைந்த நிஜமேயிது. அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்கள். நிஜமான மனிதர்கள். ஜோஸ்பினின் சம்மதத்துடன் அவளது வாழ்வு இங்கு படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இரண்டு காட்சிகள் படம் எழுப்பும் ஆழ்ந்த அர்த்தத்தை நமக்குச் சுட்டி நிற்கின்றன. முதல் காட்சியின் விவரணம் இவ்வாறு அமைகிறது சமைப்பது எப்படி? மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், வாசிங் மெசின் பாவிப்பது எப்படி? சாப்பாட்டு மேசை எப்படி ஒழுங்கமைக்கப்பட வேண்டும்? கண்ணாடி துடைப்பது, கதவு துடைப்பது எப்படி? இவை போலவே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சாதாரணமான பயிற்சி முறையாக விபரிக்கப்படும் ஒரு விசயமும் உண்டு. உடலுறவின் போது அணியும் ஆணுறை தொடர்பான செயல்முறை விளக்கம் தான் அது. பெரும்பாலும் மணமாகாத இளம் பெண்களுக்கே இந்த விளக்கத்தினை அரசு அதிகாரிகள் செய்து காண்பிக்கிறார்கள். ‘

உடலுறவுக்கு முன்பே அணிய வேண்டும். பிற்பாடு அல்ல. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளிநாடு செல்லும் வறிய பெண்களின் மீதான பாலுறவுச் சுரண்டல் தொடர்பான பல்வேறு துக்கங்களை அடக்கிய மிகக் கொடுமையான காட்சிகள் இவை. இரண்டாம் காட்சி இரண்டு சம்பவங்களின் இடைவெட்டிக் காண்பிக்கப்படுகிறது. பிரான்சிலிருந்து திரும்பி வரும் இஸடோராவின் அம்மா, பாடலுக்கு ஏற்ப ஆடியபடி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறாள். அவள் படிக்கிறாள், பாடுகிறாள், ஆடுகிறாள். ஜோஸ்பின் தரை மெழுகிக் கொண்டோ, கண்ணாடிகளைத் துடைத்துக் கொண்டோ, சமைத்துக் கொண்டோ, தட்டுக் கழுவிக் கொண்டோ, அலமாரிகளைத் துடைத்துக் கொண்டோ, நாய் மலம் கழிப்பதைப் கவனித்துக் கொண்டோ இருக்கிறாள்.

இலங்கையின் எற்றுமதி இப்போது தேயிலை அல்ல. மாறாக உழைக்கும் பெண்களின சொற்பக் கூலி உழைப்பே என புள்ளி விபரம் சொல்கிறது. எழுபது சதவீதமான சிங்களப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்து உழைத்துத் தம் குழந்தைகளைக் கவனிக்கிறார்கள். தங்கும் விடுதியில் உள்ள குழந்தைகள், தமது தாய்மார்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளார்கள், எங்கே வேலை செய்கிறார்கள் என வரிசையாகச் சொல்கின்றன. பொறுப்பற்ற அரசாங்கங்கள், மூன்றாம் உலகப் பெண்களைச் சுரண்டும் மேற்குலகப் பெண்களின் வாழ்க்கைப் போக்குகள், தொடர்நது உழைப்புக் காலனிகளின் விளைபொருட்களாக இருக்கும் மூன்றாம் உலகப் பெண்களின் துயர் போன்றவற்றை இப்படம் அற்புதமாகச் சித்தரிக்கிறது.

ஈதவன்றி பிறிதொரு படமான கரோல் மன்சூர் இயக்கிய ‘லெபனானில் தாதிகள் எனும் விவரணப் படம் லெபனானில் வீட்டு வேலைக்காகச் சென்ற 80,000 சிங்களப் பெண்களின் அவல வாழ்வினையும், வேலை செய்யும் வீட்டிலுள்ள அனைத்து வகையான ஆண்களாலும் அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்காரத்தினையும், அவர்களின் மீதான எஜமானர்களின் வன்புணர்வுக் கொடூரங்களையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறது.

1997 ஆம் ஆண்டு வெளியான பிரசன்ன விதானகேயின் ‘பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம்’ திரைப்படம் உடனடியாகவே இலங்கை அரசால் தடை செய்யப்பட்டது. தேசத்திற்காக உயிர்விடும் ராணுவ வீரர்களைக் கொச்சைப்படுத்துவதாகவும், அவர்களது போராடும் ஆற்றலை மட்டுப்படுத்துமாறான தவறான தகவல்களையும் மதிப்பீடுகளையும் திரைப்படம் முன்வைப்பதாகவும் அரசு தரப்பு சொன்னது. இலங்கையில் படம் தடை செய்யப்பட்டாலும் உலகெங்கிலும் திரைப்பட விழாக்களில் வெளியாகின இப்படம், தெற்கு இலங்கையின் சமூகம் குறித்த பிறிதொரு யதார்த்தத்தை சர்வதேச சமூகத்தின் முன்வைத்தது. நீண்ட காலப் போராட்டத்தின் பின், நீதிமன்றத் தீரப்பின்படி இயக்குனருக்கான பொருள்ரீதியான நஷ்ட ஈட்டுடன் திரைப்படம் இலங்கையில் வெளியாகி பெருவாரியான மக்களால் பாரக்கப்பட்டு, இலங்கை அரசினது போர்முகத்தின் அவமானகரமான பக்கத்தை சிங்கள மக்கள் உணரந்து கொள்ளச் செய்தது.

திரைப்படம் புத்தமத சுலோகங்கள் ஒலிக்கும் ஒரு காலை நேரத்தில், வறட்சியில் பிளந்த நிலத்தில் நடந்து, தள்ளாடியபடி ஒரு முதியவர் தனது அந்தகக் கண்களுடன் குளத்தில் நீர் அள்ளும் போது, புழுதி பரப்பியபடி அவரது கிராமத்தை நோக்கி வரும் வாகனத்தின் இரைச்சலுடன் துவங்குகிறது. வடகிழக்கிற்கு விடுதலைப் புலிகளுடன் போரிடச் சென்ற சிங்கள ராணுவ வீரனொருவனது சடலம் அவனது வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அந்தச் சடலம் வந்து சேர்ந்த பின்னால் தொடர்ந்து ஒரு தபாலும் அவனது வீட்டிற்கு வருகிறது. தனது சகோதரியின் கல்யாணம் பற்றிய கனவுகளுடன் தான் சீக்கிரமே போரக்களத்திலிருந்து வீடு வந்துசேர்வேன் என மகன் தனது முதிய தந்தைக்கு எழுதிய பாசக் கடிதம் அது.

முதிய தந்தை, இளைய சகோதரி, அவளை மணமுடிக்கப் போகும் இளைஞன், பெரிய சகோதரி, அவளது கணவன் என அந்த இளம் சிப்பாயின் வருகையை அந்த வீடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. வந்திருப்பது அவனது சடலம்தான் என்பதனை முதியவரைத் தவிர அனைவரும் ஏற்கிறார்கள். முதியவரைப் பொறுத்து அவரது மகன் இறக்கவில்லை. வந்திருப்பது அவனது பிணமும் அல்ல. மகன் உயிரோடு இருக்கிறான். அவன் கடிதத்தில் எழுதியபடி தனது சகோதரியின் திருமணம் பற்றி நல்ல செய்திகளோடு பணத்தோடு அவன் வந்து சேர்வான். அவன் வந்து வீடு கட்டுவான். அவன் கடிதம் அதைத்தான் சொல்கிறது.

சடலம் தாங்கிய பெட்டி வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. சடலத்தை ஏற்றுக் கொண்டு விண்ணப்பத்தை நிரப்பி கிராம அதிகாரியிடம் கொடுத்தால் அரசு ராணுவ வீரனின் மரணத்தின் போது குடும்பத்திற்குத் தரும் இலட்ச ரூபாய் மானியம் அவர்களுக்குக் கிடைக்கும். விண்ணப்பத்தை கிராம அதிகாரியிடமிருந்து பெறும் முதியவர் தனது மகளுக்குத் தெரியாமல் அதனை டிரங்குப் பெட்டியில் ஒளித்து வைத்து விடுகிறார். வரப்போகும் மகனுக்காக கடைவீதிக்குச் சென்று அவன் அணியவென வண்ண உடுப்பொன்றும் வாங்கி வந்து வைக்கிறார்.

விண்ணப்பத்தை நிரப்பினால் வரப்போகிற இலட்ச ரூபாவுக்காக அந்த வீட்டில் நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். இளைய மகளைக் கட்டப்போகும் இளைஞனுக்கு அந்தக் காசு தேவைப்படுகிறது. இலங்கை ராணுவத்திற்குப் போவதைத் தவிர வேறு வேலைகள் கிடைக்க மாட்டாத அந்தக் கிராமத்து விவசாய இளைஞனுக்கு வறண்ட நிலம் மட்டுமே முன்னால் விரிந்து கிடக்கிறது. விண்ணப்பத்தை நிரப்பித் தருமாறு அவன் கோருகிறான். மரணமுற்றவனின் இறுதிச் சடங்கை மரியாதையாக நடத்தவும், தங்களக்கென கொஞ்சம் காசு பெயரவும் அந்த விண்ணப்பம் நிரப்பப்படவேண்டும் என பெரிய சகோதரியும் அவளது கணவனும் கோருகிறார்கள். மரணமுற்றவனின் பெயரில் ஊரில் ஒரு நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதால், மகன் மரணமுற்றதை அங்கீகரிக்க வேண்டும்; என முதியவரை வற்புறதுத்துகிறார் உள்ளுர் புத்தமதத் துறவி.

அரசு, உறவுகள், மதக் காவலர்கள் அனைவரும் வற்புறுத்துகிற போதும் மகன் இறந்த விடயத்தை ஒப்ப மறுத்து விடுகிறார் முதியவர். மகன் தனது குடும்பக் கடமைகளை சம்பாதித்துச் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமுள்ளவன். அவன் ஒரு போதும் மானியம் வாங்கிச் செய்ய விரும்பமாட்டான். அப்படிச் செய்வது அவனுக்கு விருப்பமில்லாதது. அது அவனுக்கு அவமானம் என்கிறார் முதியவர். கடிதத்தைக் கொணர்ந்த தபால்காரன் போலவே தன்மகனும் ஒரு நாள் வருவான் எனக் காத்திருக்கிறார் முதியவர். தனது மகனோடு பணியாற்றிய பிற இரு ராணுவ வீரர்கள் தமது அணியின் சார்பாக மரணமுற்ற தோழனுக்குக் காணிக்கை வைக்க வந்த பின்னும் முதியவர் மகனது மரணத்தை ஒப்புக் கொள்வதில்லை. அந்த வீட்டிலும் அந்தக் கிராமத்திலும் அந்த முதியவரைப் புரிந்து கொள்கிறவர் அவரது இளைய மகள் மட்டும்தான்.

வாட்டும் வறுமையை எதிர்கொள்ள அவள் சுதந்திர வர்த்தக வளையத்தில் அமைந்திருக்கும் ஆடை தைப்புத் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகிறாள். இதன்வழி அவளை விபச்சாரத்திற்குத்; தள்ள நினைக்கிறார் பெரியவர் எனக் கோபம் கொள்கிறான் மணந்து கொள்ளப் போகிறவன். பெரியவரின் மீதான நெருக்கடி அதிகரிக்கிறது. அரசு தரப்பிலிருந்தும், கிராமத்து மனிதரிமிருந்தும், வீட்டு உறவுகளிடமிருந்தும் நெருக்கடி அதிகரிக்கும் போது, முதியவர் தனது மகன் இறக்கவில்லை எனும் செய்தியைத் திட்டவட்டமாக, ஆதாரத்துடன் உலகுக்கு அறிவித்துவிட முடிவு செய்கிறார்.

மண்வெட்டியை எடுத்துக் கொண்டு இடுகாடு நோக்கிச் செல்லும் அவர், மகனது சவப்பெட்யைத் தோண்டி அதை உடைக்கத் துவங்கும்போது, உறவுகளும் கிராமத்தவரும் கிராம அதிகாரியும் இடுகாட்டில் குழுமுகிறார்கள். சவப்பெட்டி உடைக்கப்படுகிறது. சவப்பெட்டியினுள் முதியவரின் மகனது சடலம் இல்லை. ஒரு பெரிய உருண்டையான மரத்துண்டும் வெட்டுண்ட வாளையின் துண்டங்களும்தான் இருக்கிறது. அவரது உள்ளுணர்வின்படி தந்தையின் தரிசனம் சத்தியமானது. அவரது மகன் இறக்கவில்லை. அவரது முகம் சந்தோசத்தில் மலர்கிறது.

ஆனால் என்ன, சவப்பெட்டியை உடைத்துப் பார்த்துவிட்டதால் சட்டப்படி அவருக்குக் கிடைக்க வேண்டிய மானியத் தொகை கிடைக்காமல் போகும். அவர் எப்போதும் அதனை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அது பற்றிய கவலை அவருக்கு இல்லை. அவரளவில் அவரது மகன் இறக்கவில்லை என்பதனை நிரூபித்ததே போதுமானது. அவர் அவனுக்காகக் காத்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு வெளியாகின இநோகா சதாயாங்கினியின் ‘காற்றுப் பறவை’ படம் பிரசன்ன விதானகே சித்தரிக்கும் தெற்கு இலங்கையின் யதார்த்தத்தை இன்னும் நுணுகிச் செல்கிறது. யுத்தம் ஆண்களின் வாழ்வில் எற்படுத்தியிருக்கும் தீராத மன அழுத்தங்களையும், சுதந்திர வரத்தக வலையமும் யுத்தமும் பெண்களின் வாழ்வில் எற்படுத்தியிருக்கும் எல்லையற்ற ரணங்களின் வடுக்களையும் அவரது ‘காற்றுப் பறவை’ சித்தரிக்கிறது. கிராமப்புறத்திலிருந்து சுதந்திர வர்த்தக வலையத்தின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்ய நேரும் ஒரு சிங்கள இளம் பெண்ணுக்கும், அதே கிராமப்புறத்திலிருந்து ராணுவத்தில் சேர்ந்த, விடுமுறைக்கு கொழும்புக்கு வரும் ஒரு ராணுவ வீரனுக்கும் இடையிலான காதலையும் பாலுறவு வாழ்க்கையும் அதனுள் விளைவான பிரச்சினைகளையும் பேசுகிறது இநோகா சத்யாங்கனியின் திரைப்படம்.

மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ் பெறுவதற்காக கோடை வெய்யிலில் ஸ்லிப்பருடன் தளர்ந்து நடக்கும் பெண்ணின் கால்களுடன் துவங்குகிறது படம். அவள் கர்ப்பமுற்றிருக்கிறாள். ரொம்பவும் சந்தோசமான செய்தி. ஆனால் அவள் சந்தோசப்பட முடியாதபடி கசப்பான செய்தியும் அதுதான். அவனோடு கூடியிருந்த நினைவுகள் அவளுக்குள் வந்துபோகிறது. அவள் அவனிடம் விசயத்தை சொல்கிறாள். அவன் ஆரம்பத்தில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. பிற்பாடு குழந்தை வேண்டாம் கலைத்து விடலாம் என்கிறான். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவன் ஏற்கனவே மணிமானவன் என்பதை அறிந்து கொள்கிறாள். அவனது மனைவி அழகானவளா என்கிறாள். அவன் நோக்கம் அவளுடனான பாலுறவு என்பதுதான் என்பது தெளிவாகிறது. அவனது மனைவியை அவனது தாய் அவனது விருப்பமில்லாலேயே கட்டி வைத்துவிட்டதாக அவளுக்குத் தெரியவருகிறது. அவனது நோக்கம் அவளுக்குத் தெளிவானதுதான் என்றாலும், அவனிடம் அவள் காதல் கொண்டிருக்கிறாள். அவனைப் பிரிய அவளால் முடியாது. அவனது வறுமையைம், வேறு வேலை தேட முடியாததால் தான் இராணுவத்தில் பணியாற்ற வேண்டி இருக்கிற அவலத்தையும் அவளிடம் அவன் தெரிவிக்கிறான். அவன் மீது அவளால் வெறுப்புப் பாராட்ட முடியவில்லை.

அவனது கிராமம் நோக்கிப் போகிறாள். அங்கு அவனது வறிய தாயையும் நிறைமாதக் கர்ப்பினியான அவனது மனைவியையும் காண்கிறாள். மகனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்கிறாள் தாய். தனது கழுத்து நகையை விற்று வந்த பணத்தை அவர்களது செலவுக்குக் கொடுத்து விட்டு வருகிறாள். கருவைக் கலைப்பதென முடிவெடுக்கிறாள் தன் தோழியுடன் மகளிர் ஆலோசனை மையம் போகிறாள். கருவைக் கலைப்பது சட்டவிரோதம் என்கிறார்கள். ஆனாலும் கருவைக் கலைப்பது என முடிவெடுக்கிறாள். அதற்கான செலவை அவன் ஏற்கிறான். நாளை காலை கருக்கலைப்புக்குப் போகவேண்டும். நள்ளிரவில் தூக்கம் பிடிக்காமல் எழுகிறாள். வயிற்றில் குழந்தை உதைப்பதை, அது அலைவதை உணர்கிறாள்.

தனது கர்ப்ப காலம் குறித்துச் சரியான மாதம் தெரியாமையால் தான் மருத்துவரிடம் 4 மாதம் எனச் சொல்லிவிட்டேன். ஆனால் இப்போது ஏழாம் மாதமாக இருக்கலாம் என்கிறாள். தோழியிடம் சென்று வயிற்றில் கை வைத்துப் பார் என்கிறாள் தான் கருக்கலைப்பு செய்துகொள்ள மாட்டேன் என்கிறாள். குழந்தை தகப்பன் பெயரில்லாமல் பிறக்கும், அனாதையாக வளரும், அது பாவம் அதனை நீ செய்யத்தான் வேண்டுமா என்கிறான். குழந்தையைக் கலைக்கவும் எனக்கு உரிமையில்லை. பெற்றுக் கொள்ளவும் எனக்கு உரிமையில்லை. வாழவும் சாகவும் எனக்கு உரிமையில்லை. நான் எதற்காகத்தான் இருக்கிறென். எனக்கு எதற்குத்தான் உரிமையுண்டு என அரற்றுகிறாள். குழந்தை என்னுடையது மட்டுமல்ல, என்னுடையது மட்டும்தான் என அவள் அவனிடம் சொல்லிவிடுகிறாள்.

குழந்தை வயிற்றில் வளர்கிறது எனும் உணர்வு வந்தவுடன் தெளிவாக முடிவெடுக்கிறாள். தன்னிடம் மிஞ்சியிருக்கிற காசையெல்லாம் திரட்டிக் கொள்கிறாள். கடைவீதிக்குச் சென்று ஒரு அழகான சுவர்க் கண்ணாடியும், சில வண்ணமயமான துணிகளும், குழந்தை பாரத்துச் சிரிக்கவென ஒரு சுழற்பொம்மையயையும் வாங்கி வருகிறாள். கண்ணாடி மாட்டி தனது முகத்தை திருத்திக் கொள்கிறாள். சுழல் பொம்மையைச் சுழல விடுகிறாள். முன்பகலில் ஒரு வாகனத்தின முன்பு மயங்கி வீழந்ததில், அதன்பின் மருத்துவமனை சென்றதில், அவள் வலி தொடங்கிவிட்டது.

இருட்டில் துளாவியபடி கழிவறைக்குப் போகிறாள், கழிவறையைத் திறந்து வீறெனக் கத்துகிறாள் வலியின் உச்சம். குழந்தையின் வீறிடல் கேட்கிறது. குழந்தை பிறந்துவிட்டது. சேரியைப் போல நாய்கள் திரியும் குப்பைகள் சிதறிக்கிடக்கும் வறிய மககள் வாழும் அந்தக் காலனியில், இரவின் இரண்டாம் கட்டத்தில், சுதந்திர வரத்தக கவலையத்தின் பெரும்பாலுமான வறிய பெண்கள் வாழும் அந்தக் காலனியில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து அலறுவதுடன் படம் முடிகிறது.

2003 ஆம் ஆண்டு வெளியான பிரசன்ன விதானகேயின் ‘ஆகஸ்டு சூர்யன்’ திரைப்படம், இலங்கையின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய மூன்று கதைகளை, அந்தக் கதைகளின் கதை மாந்தர்கள் அறியாத வகையில், ஒரு மகா கதையின் மூன்று கிளைக் கதைகளின் நிஜ மனிதர்களாக அவர்களை ஆக்கியிருக்கிறது. ஒரு வகையில் ‘பவுர்ணமி நிலவில் நிகழ்ந்த மரணத்தில்’ அவர் சொல்லத்; துவங்கிய ஒரு கதை, இந்தத் திரைப்படத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது. பிரேமதேசாவின் சுதந்திர வர்த்தக வலையத் திட்டத்தின் விளைவாக அனுராதபுரத்தில் வளர்ந்துவந்த விபச்சாரம், அதில் திளைத்த ரரணுவம் என ‘பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணத்தில’; கோடிகாட்டும் அவர், ‘ஆகஸ்ட் சூரியனில்’ ஒரு தனித்த கதையாகவே அதனை வெளிப்படுத்துகிறார்.

பிற இரண்டு கதைகளில் ஒன்று 12 மணிநேரங்களே கொடுக்கப்பட்டு உடமைகளையும் வீடு வாசல்களையும் துறந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறவேண்டும் என விடுதலைப் புலிகளால் கோரப்பட்ட ஒரு முஸ்லீம் குடும்பத்தின் துயரப் பயணம் பற்றியது. இரண்டாவது கதை தனது அன்புக் கணவனை விமான விபத்தில் இழந்து அவனைத் தேடித் திரியும் சிங்களப் பெண் பற்றியது. வடகிழக்கிற்குப் போர்க்களத்திற்குச் சென்ற தனது துணைவன், விமானம் வெடித்துச் சிதறி விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குள் வீழந்து விட்டதாகவும், அவன் உயிரோடு இருப்பதாகவும் நம்பி, அவனை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என நினைக்கிற ஒரு தனித்த பெண்ணின் யத்தனங்கள் பற்றியது.

ராணுவத்தின் விடுமுறை நாட்களைச் சந்தோசத்தடன் கழிக்கவும் தமது குடும்பத்தினரைச் சந்திக்கவும் எனப் புறப்படும் சில வாலிபர்கள், தமது வீடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக விபச்சார விடுதி நடத்தும் ஒரு ஒதுங்கிய பங்களாவுக்குச் செல்கிறார்கள். முதலில் பெண்களுடன் கூடி மது அருந்தும் இளைஞர்கள் பிற்பாடு அறைகளுக்குள் சென்று ஒதுங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இளைஞன் ஒரு அறைக்குள் ஒதுங்குபோது, அருகிலிருக்கும் அறைக்குள் முழுதும் தெரியாத ஒரு பெண்ணின் முகம் தோன்றி மறைகிறது. அது அவன் சகோதரி. அந்த அறையின் கதவுகளைத் தள்ளிக் கொண்டு கோபத்துடன் பாயும் அவன், குடும்ப கௌரவத்திற்கே அவள் ஒரு இழுக்கு என இரத்தம் வரும்வரையிலும் அவளை அடிக்கிறான். விடுதியின் குண்டர்களிலொருவன் துப்பாக்கியை இவன் முகத்தருகில் நீட்டும் போது, அவன் விலகுகிறான். பிற்பாடு தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஒதுங்கிய பெண்ணுடன் உடலுறவு கொள்ளாது, விடுதியிருந்து புறப்படுகிறான்.

அவனைப் பொறுத்து அவனது சகோதரி சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் ஒன்றில் வேலை செய்கிறவள். அவள் தனது தோழியரோடு ஒரு காலனியில் சேர்ந்து வசிக்கிறாள். தான் சம்பாதிக்கும் கொஞ்சக் காசை வீட்டுக்கு அனுப்புகிறாள். சகோதரன் சம்பாதித்து தனக்கு மணம் செய்விப்பான் எனக் காத்திருக்கும் ஒரு பெண் அவள். ஆனால் அவளுக்கு வேலை இல்லாமலும் போகக் கூடும், பெறுகிற கூலி போதுமானதாக இல்லாமல் போகக் கூடும், அவளை தொழிற்சாலையின் அதிகாரிகள் அவளை இவ்வாறான நிலைமைகளுக்குத் தள்ளக் கூடும், இவ்வாறான ஏதோ ஒரு பெண்ணுடன்தான் தான் பல முறைகள் இவ்வாறான உறவு கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய சாத்தியங்களை அவன் யோசித்துப் பார்த்திருக்கவில்லை.

கிராமத்திலிருக்கும் அவனது வீட்டுக்குப் போகும் வழியில் சகோதரி தங்கியிருக்கும் காலனிக்குப் போய் அவள் அங்கு இல்லை என்பதை அறிகிறான். வீட்டுக்கு வரும் அவனை, பூசப்படாத கட்டிடத்தின் சுவர்களும், வறிய நிலையில் உள்ள அவனது துக்கமான அன்னையும் வரவேற்கிறார்கள். சகோதரி வீட்டினுள் அமர்ந்திருக்கிறாள். வீட்டைக் கட்டி முடிப்பது பற்றியும்; சகோதரியின் திருமணம் பற்றியும் தாய் பேசுகிறாள். சகோதரன் சகோதரிக்கு என வாங்கி வந்த அன்பளிப்பைத் தருகிறான். சகோதரி ஆற்ற முடியாது அழுகிறாள். சகோதரனைக் கண்ட துயர சந்தோசத்தில் மகள் அழுகிறாள் எனக் கருதும் தாய் அவளைத் தேற்ற முனைகிறாள். அவன் மறுபடியும் போர்முனையில் பணியாற்றவென வீட்டை விட்டு வெளியேறி பஸ் தரிப்பில் நிற்கிறான்.

சமவேளையில் இங்கிலாந்திலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு விஜயம் செய்ய வந்திருக்கும் பத்திரிக்கையாளனின் உதவியுடன், தனது துணைவனைத் தேடிச் செல்ல ஆயத்தமாகிறாள் ஒரு சிங்களப் பெண். தமது உறவை விமானியின் பெற்றோர் ஏற்கவில்லை என்றும், முறைப்படி அவனுக்கும் அவளுக்கும் இன்னும் திருமணம் முடியவில்லை என்பதனையும், தனக்கென இந்த உலகில் அவன் மட்டுமே இருக்கிறான் என்றும் பத்திரிக்கையாளரிடம் தெரிவிக்கிறாள் அப்பெண். ஆளற்ற தீவில் அந்தப் பத்திரிக்கையாளரைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்த விடுதலைப் புலிகளின் பிரதிநிதி, யாழப்பாணத்தில் முஸ்லீம்களின் வெளியேற்றத்தினால் தோன்றியிருக்கும் புதிய நிலைமை சார்ந்த அலுவல்களால் அவரால் வர இயலவில்லை எனும் செய்தி அவருக்குக் கிடைக்கிறது. அவளது நம்பிக்கைக்கான பதில் கிடைக்காததில் அவள் உடைந்து விடுகிறாள்.

மக்கிய மனித உடல்கள் சிதறிக் கிடக்கும் அந்தத் தீவின் தனிமையில், என்ன செய்தேனும் அவளது துணையைக் கண்டுபிடித்து விடவேண்டும் எனும் அவஸ்தையில் மனக்கொந்தளிப்பில் இருக்கும் அப்பெண், தான் அவரை நேசிப்பதாகச் சொல்லியபடி பத்திரிக்கையாளரைக் கட்டியணைக்க எத்தனிக்கிறாள். விலகும் பத்திரிக்கையாளர் ‘நீ உனது துணைவனை மட்டுமே காதலிக்க முடியும்’ என்கிறார். கரைக்குத் திரும்பி நகரத்துக்குத் திரும்பும் அவள், அன்றும் தேநீரை ஒரு கையில் வைத்துக் கொண்டு பத்திரிக்கையை மேய்ந்தபடி, அன்றும் தொலைபேசியில் அவசரமாகத் தனது துணைவன் பற்றி ஒரு விசாரணயை மேற்கொண்டு வெளியே செல்ல மறுபடி ஆயத்தமாகிறாள்.

கடலிலிருந்து அவள் கரைக்குத் திரும்பும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, கடல் பயணத்தின் வழி பிறிதொரு இடம் வந்து சேரும் முஸ்லீம் அகதிகளை எதிர்கொள்கிறாள. அவளைப் பொறுத்து அவர்கள் ஒரு மக்கள் கூட்டம். ஆனால் இவள் போலவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதையிருக்கிறது. அப்படியான ஒருவரின் கதையையும் விதானகே சொல்கிறார். 12 மணி நேர அவகாசத்தில் தனது மனைவி குழந்தையுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட துணி வியாபாரியான முஸ்லீம் ஒருவர், கிடைத்த வாகனத்தில் முடிந்த உடமைகளை ஏற்றிக்காண்டு மனைவியோடும் தனது சிறுவனான மகனோடும் மக்கள் கூட்டத்தோடு படகில் ஏறுகிறார். இடையில் மறிக்கும் புலிகளிள் பிரிவினர் கூட்டத்திடமிருக்கும் ஆபரணங்களையும் பணத்தையும் பறிமுதல் செய்கிறார்கள்.

சிறுவனுக்கு இருக்கும் ஒரே கவலை தனது பிரியமான நாயை உடன் அழைத்து வரமுடியாது என்பதுதான். முடிந்த வரையிலும் வாகனத்தைப் பின்தொடரும் நாய், கடலில் இறங்கி ஒரு கட்டம் வரை வந்துவிட்டு முடியாமல் திரும்பிப் போய்விடுகிறது. புதிய இடத்தில் குடிசையொன்றில் அகதியாகக் குடியேறும் அந்தக் குடும்பம் வந்த இடத்திற்கு ஏற்ப தமது வாழ்வைத் தகவமைக்கத் துவங்குகிறது. தமது குடிசைக்கு வெளியில் உள்ள செடிகளைக் கண்டு அதற்குச் சுற்றிலும் வட்டமாகக் குழி தோண்டி, நீர்வார்த்து வாழ்வைத் துவங்குகிறாள் குடும்பத் தலைவி. துணிப்பொதியை சைக்கிள் கேரியரில் கட்டி விற்று வரச் செல்கிறார் தகப்பன். ஓடி வரும் மகன் தகப்பனது ஹேண்டில்பாரில் அமர்ந்து கொள்கிறான். அவனைப் பார்த்து ஒரு நாய் வாலை ஆட்டியபடி ஓடி வருகிறது. சைக்கிளுக்குப் பின்னாலேயே நாய் ஓடி வந்துகொண்டிருக்கிறது. சிறுவன் திரும்பிப் பார்த்தபடி சிரிக்கத் துவங்குகிறான்.

இவர்கள் மூவரையும் சாலையில் பயணிக்கும் பேருந்து ஒன்று இணைக்கிறது. பேருந்தில் ராணுவத்திற்குத் திரும்பிச் செல்லும் இளைஞன் அமர்ந்திருக்கிறான். இடைவெளியில் துணைவனைத் தேடிச்செல்லும் பெண் அந்தப் பேருந்தில் ஏறுகிறாள். பேருந்தின் ஜன்னலில் முஸ்லிம் அகதி தனது துணிப்பொதியுடனும் தனது மகனுடனும் பேருந்துவின் பின் செல்வது தெரிகிறது. காலமும் அரசியல் உற்பவமொன்றும் அவர்களை இணைத்தாலும் அவர்கள் தம் அளவில் தனி மனிதர்கள்தான், அவர்கள் துயரை அவர்கள் அனுபவித்த ஆக வேண்டும் என்பதனைத் துயருடன் நமக்குச் சொல்கிறார் விதானகே. அரசியல் சூத்திரதாரிகளின் கண்களுக்குத் தெரியாத மானுட அவலங்களைக் கலைஞன் மட்டுமே சொல்ல முடிகிறது என்பது ஒரு மகா வாக்கியம் போல நமக்குப் புலப்படுகிறது.

பிரசன்ன விதானகேவின் ‘பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம்’ திரைப்படத்தினை அடுத்து உலக அளவில் தனது ‘இது எனது சந்திரன் அல்லது மே மக சந்தாய’ படத்தின் மூலம் எதிர்பபார்ப்பு அலைகளை உருவாக்கியவர் அசோகா ஹந்தகம. அவரது சமீபத்திய திரைப்படம்தான் ‘இந்த வழியால் வாருங்கள்’ அல்லது ‘கம் அலாங்க் திஸ் ரோடு ஏ நைன் ஹைவே’ எனும் படம். 2002 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும்; விடுதலைப் புலிகளுக்கும் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதையடுத்து, ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் வேறு வேறு விதங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் எழுந்த அபிலாசைகள் குறித்தாக அவரது ‘இந்த வழியால் வாருங்கள்’ திரைப்படம் இருக்கிறது.

விவரணப்படமும் கதைப்படமும் முயங்கியதாக, சர்வதேச நிதி வழங்கும் நாடுகளின் பிரச்சார நோக்கமும் கொண்டதாக இந்தத் திரைப்படம் இருக்கிறது. ‘சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிதியமைப்பின்’ உதவியுடன் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரச்சினைகளுக்கு ஆட்பட்டவர்களக்கிடையில் புரிந்துணர்வுக்கான உரையாடல்களை உருவாக்குவது, பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு உதவுவது, வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிவாரணத் திட்டங்களுக்கும் உதவுவது இந்த அமெரிக்க நிதியுதவியின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு ஒப்பவே படத்தின் திரைக்கதையும் அமைந்திருக்கிறது என்பதனை ஒருவர் சாதாரணமாகவே அறிய முடியும். இந்த நிதியமைப்பு செயல்படும் நாடுகள் லெபனான், சோமாலியா, சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்றனவே என்பதை ஒரு செய்தியாகவேனும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

கண்ணி வெடிகளை அகற்றுகிற சேவை அமைப்பில் செயல்படுகிற அரசு சாரா அமைப்பின் பிரதிநிதியாக வருகிறவர்தான் இந்தப் படத்தில் வடகிழக்குத் தமிழர்களின் அரசியலைப் பிரதிநிதித்திதுவப்படுத்துகிறவராக வருகிறார். திரைப்படம் இரண்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் பயணத்தின் தொடக்கமாக அமைகிறது. ஒரு சிங்களக் குடும்பம் வடகிழக்கில் நாகதிபம் என அழைக்கப் பெறுகிற நயினா தீவிலுள்ள புத்த விகாரைக்குப் போக வேண்டும் என விரும்புகிறது. புத்தர் இலங்கையில் இங்குதான் முதலில் எழுந்தருளனார் எனும் ஐதீகம் இதற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. பிறிதொருவர், தமது குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்குச் செல்ல விரும்புகிறார். அவர் யாழப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம் குடும்பத்தவர். சிங்களவருக்கு மனைவி ஒரு மகன் ஒரு மகள். முஸ்லீமுக்கு மனைவி மற்றும் மகள். இருவரது பயணமும் தொடங்குகிறது. பயணத்தின் வழியில் முஸ்லிமின் வாகனம் பழுதுபட்டுவிட சிங்களவர் உதவுகிறார். இடையில் இரு குடும்பமும் சிற்றுண்டிகளைப் பறிமாறிக் கொள்கிறது. பயணம் தொடர்கிறது.

முஸ்லீம் குடும்பம் யாழ்ப்பாணம் வந்து அடைகிறது. ‘மிதிவெடிகள் இன்னும் அகற்றப்படவில்லை’ எனும் அறிவிப்புடன் இடிந்த நிலையில் முஸ்லீமின் வீடு இருக்கிறது. அண்டை வீட்டிலுள்ள தமிழ்ரகள் இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார்கள். ஆரம்பத்தில் அன்புடன் இருக்கும் அவர்கள் பிற்பாடு இவர்களிடம் வாடகைக்கு காசு கேட்கலாமா என நினைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் மனம்பேதலித்த ஒரு இளைஞன் இருக்கிறான். களவு செய்வது அவன் தொழில். அம்மா வேலை தேடிக்கொள் என்கிறாள். ஆனால் அங்கு வேலை என்று ஒன்றுமில்லை என்பது ஒரு யதார்த்தம்.

மனம் பேதலித்த இளைஞன் முஸ்லீம் பெண்ணின் மீது முரட்டுத்தனமான மோகம் கொள்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அடைக்கலம் தந்த அண்டை வீட்டுப் பெண் முஸ்லீம் பெண்ணை விபச்சாரத்திற்கும் தள்ள நினைக்கிறாள். அவளும் அகதி முகாமில் அப்படி வாழ்ந்தவள் என்கிற உண்மையும் ஒரு உரையாடலில வெளியாகிறது. ஆண்களுக்கு வேலையில்லை. வருமானமும் இல்லை. இச்சூழலில் வறுமையைப் போக்கவும் குழந்தைகளுக்கு உணவு தரவும் பெண்கள் விபச்சாரத்தை தேற வேண்டியிருக்கிறது எனும் சமிக்ஞையை இயக்குனர் வெளிப்படுத்துகிறார். தனது சொந்த வீட்டை விட்டுப் போக முடியாமல் வேறு மார்க்கம் தெரியாமல் அல்லலுறும் முஸ்லிம் குடும்பத்தின் வாழ்வு அழுத்தமாக இப்படத்தில் சித்தரிப்புப் பெறுகிறது.

புத்தகவிகாரைக்குச் செல்லும் வழியில் சிங்களக் குடும்பம் ஒரு தமிழ் இளைஞனைச் சந்திக்கிறது. அந்தத் தமிழ் இளைஞர்தான் அரசு சாரா அமைப்பில் செயல்படுபவர். அவர் சிங்களக் குடும்பத்தின் பெண்ணுடன் கொழும்பில படித்தவர். அவர்களது பழைய தோழமை துளிர்க்கிறது. தங்குவதற்கு இடமில்லாத அவர்கள் யதேச்சைiயாக தங்க இடம் கேட்க, இளைஞன் தங்கள் வீட்டில் தங்கலாம் என்கிறான். பிற்பாடு அவனை நம்பாமல் பெண் அவன் வீட்டில் வேண்டாம் என்கிறாள். ஆனாலும் அதனைத் திட்டவட்டமாகச் சொல்வதில்லை. முடிந்தால் வருகிறோம் என்கிறார்கள். தமிழ் இளைஞன் வீட்டில் வந்து செய்தியைச் சொல்கிறான். அந்த வீட்டிலுள்ள அவனது தம்பி சிங்களவர்கள்பால் மிகுந்த வெறுப்புக் கொண்டவன். அவனது சகோதரிக்கும் அவர்கள் அங்கு தங்குவதில் பெரிய விருப்பமில்லை. அவரது தந்தை முன்னாள் சமசமாஜக் கட்சியினர் அடிக்கடி கொழும்பு சென்றவர். ஆசிரியத் தொழில் செய்தவர்.

இன்று வர்க்க அரசியலிலும் சமசமாஜ அரசியலிலும் அதிருப்தியுற்றவர். தமிழ்த் தேசியவாதியாக ஆனவர். மனிதாபிமானி. புத்த விகாரைக்கச் சென்றவர்கள் வேறு எங்கும் தங்க இடம் கிடைக்காததால் இளைஞனது வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களுக்கிடையில் அரசியல் விவாதம் நடக்கிறது அதே தருணத்தில் எதிர்பால்களுக்கு இடையிலான நெருக்கம், கவர்ச்சி என்பதும் உருவாகிறது. அவனது சகோதரிக்கு இவர்களது நெருக்கம் பொறாமையை மூட்டுகிறது. சிங்களக் குடும்பத் தலைவரும் தமிழ்க் குடும்பத் தலைவரும் பண்டாரநாயகாவை முன்வைத்துத் தொடர்ந்து அரசியல் விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த விவாதம் வன்முறையாகப் பரிமாணம் பெற்று விடுமோ எனும் பயத்தை சிங்களக் குடும்பத்தலைவி சதா வெளிப்படுத்தியபடியே இருக்கிறார். இலங்கை என்பது சிங்கள நாடு, ஒரே மொழி ஒரே நாடு ஒரே இனம் போன்றவற்றை முன்வைத்த, சிங்கள தேசியத்தை வலியுறுத்திய சிங்கள தேசிய அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சனத்தை மேற்கொள்கிறார் தமிழ்க் குடும்பத் தலைவர்.

காலனியாதிக்கத்தின் பின்பான சுதந்திரத்தின் பின்பு தெற்காசிய நாடுகளில் இனங்களுக்கிடையிலான உரிமைகள் குறித்த உரையாடல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவி;ல்லை என்கிறார் தமிழக் குடும்பத் தலைவர். விவாதிப்பவர்களுக்கிடையில் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது எனக் கவலையுறும் குடும்பத்தலைவிகள், சிங்களவர்களை வெறுக்கும் இளைய சகோதரன். அதே அளவில் தமிழர்கள் மீது அவநம்பிக்கையை வெளியிடும் சிங்களக் குடும்பத்தின் வாகன சாரதி, அன்னியப் பெண்ணின் நெருக்கத்தினால் தனது சகோதரனின் மீது பொறாமைப்படும் சகோதரி. அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் பால்கவர்ச்சியினால் நெருங்கி வரும் முன்னாள் கல்லாரித் தோழமைகள் என்பதாக, தமிழ் சிங்களக் குடும்பங்களின் இடையிலான உறவு என்பது படத்தில் சித்தரிப்புப் பெறுகிறது.

தமிழ்க் குடும்பத்துப் பெண்ணின் வகுப்பிற்கு நடனத்திற்கு வரும் சிறுமி கண்ணிவெடியில் சிக்கி காலை இழக்கிறாள். அதைக் கண்டு சிங்களக் குடும்பத் தலைவர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மனம் பேதலித்த இளைஞன் தமிழ் குடும்பத்துப் பெண்ணின் கைப்பையைத் திருடி விட்டு ஓடிச்சென்று, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட வீட்டினுள் ஒளிந்துகொள்கிறான். அவனைத் தேடிச்செல்பவர்களை கடப்பாரையை எடுத்த்துத் துரத்துகிறான். வேலையின்மை நம்பி;க்கையின்மை, பரஸ்பரம் இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை போன்றன இந்தக் குடும்பங்களளப் பிடித்து ஆட்டி வைக்கிறது. படத்தின் மையம் இந்த அவநம்பிக்கைகள் எவ்வாறு அனைவரிடமும் கொலைவெறியாகப் பரிமாணம் பெறுகிறது என்பதனைச் சித்தரிக்கிறது.

விவாதத்தில் ஈடுபடும் குடும்பத்தலைவர்கள் விவாதத்தின் போக்கில் கடுமையான வார்த்தைகளைப் பறிமாறிக் கொள்கிறார்கள். தமிழர் கோபாவேசமாகிறார். சிங்களவர் தமது தேசியத் தலைவர்களை அவர் புண்படுத்திவிட்டதாகக் கருதுகிறார். விவாதத்தின் பின் அதற்காக வருத்தப்படுகிறார் தமிழர் இரவில் சொப்பனம் காணும் சிங்களவர் தன்னைக் கொல்ல தமிழர் அரிவாளோடு வருவதாகக் கணவு காண்கிறார். அவர் சொப்பனத்தை நிஜமெனக் கொண்டு அவரைத் தொடர்ந்து சென்று, தென்னை மட்டையால் அடித்துக் கொன்று, அதே தென்னை மட்டைகளால் அவரை மூடி விட்டதாக நம்புகிறார். காலையில் எவரும் எழுந்திருந்து விசாரிக்கும் முன்னரே அங்கிருந்து போய்விட வேண்டும் எனவும் விரும்புகிறார்.

இதே நம்பிக்கையின்மையால் தமிழ் வீட்டின் இளம் சகோதரன் தன்னைக் கொல்ல வருவதாகக் கருதும் சிங்கள வாகன சாரதி அவனைக் கொல்ல முயல்கிறான். சிங்கள இளைஞனால் அவன் சாய்க்கப்படுகிறான். பிற்பாடு வாகன சாரதி பிழைக்கிறான். கொலை செய்யப்பட்டதாகக் கருதும் தமிழ்க் குடும்பத் தலைவர் மன்னார் சென்றுவிட்டு உயிருடன் வருகிறார். சிங்களக் குடும்பத்தவர் தமது முகவரியையும் குடும்பப் படத்தையும் கொடுக்கிறாரகள். கொழும்புக்கு வர அழைப்பு விடுக்கிறார்கள். தமிழ்க் குடும்பத்தின் புகைப்படம் ஒன்றை சிங்களப்பெண் எடுத்துக் கொள்கிறாள். அனைவரும் விடை பெறுகிறார்கள். த

தனது கல்லாரித் தோழனைத் தேடியபடி வாகனத்தில் ஏறுகிறாள் சிங்களப்பெண். சிங்கள வாலிபன் முஸ்லீம் குடும்பத்தைப் பார்த்துவிட்டுப் போகலாம் என அங்கு வருகிறார்கள். முஸ்லிம் குடம்பத்திற்கும் அவர்களுக்கு அடைக்கலம் தந்தவர்களுக்கும் இடையில் மனம் பேதலித்த இளைஞன் காரணமாக பிரச்சினை வருகிறது. முஸ்லிம் மனிதர் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட தனது வீட்டுக்குள் சென்று மரணமடைய யத்தனிக்கிறார். இறுதியில் அல்லாவிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார். அங்கு வரும் சிங்கள இளைஞர் அவரைக் காப்பாற்ற கண்ணி வெடிகளினுள் போகிறார். அவர்களைக் காப்பபாற்ற சிங்களவர்களை வெறுத்த தமிழ் இளைஞர் போகிறார். அங்கு கூடியிருக்கிற சகல இனத்தவர்களும் அந்த வீட்டின் முன்பு குழுமுகிறார்கள்.

தூரத்தில் கண்ணி வெடி அகற்றும் வாகனத்தில் அரசு சாரா இளைஞர் வருவதுடன் படம் முடிகிறது. படம் சர்வதேச வளரச்சிக்கான அமெரிக்க நிதியுடன் தயாரிக்கப்பட்டதென்றும், அந்த நிதி நிறுவனத்திற்கும் படத்தின் செய்திக்கும் சம்பந்தம் இல்லை எனவும், படத்தின் செய்தி, நிதி நிறுவனத்தின் செய்தி அல்லவெனவும் டைட்டில் கார்டுகள் போட்படுவதுடன் திரையில் இருள் பரவுகிறது.

‘இந்த வழியால் வாருங்கள்’ திரைப்படம் ஒரு கற்பிதமான சூழலை உருவாக்கி, அரசியல் விவாதங்களையும், பரஸ்பர உரையாடல்களையும் உருவாக்கி இருக்கிறது. அவநம்பிக்கையில் மனித மனம் அடையம் விகாரத்தினையும், அதனால் விளையும் தற்காப்பின் அடிப்படையிலான கொலைத் திட்டங்களையும் விவரிக்கிறது. இனச் சமத்துவத்திற்கான நடைபெற்றே தீர வேண்டிய உரையாடல்களையும் அது சித்திரிக்கிறது. பாலுறவு வேட்கை, விபச்சாரம், மனப் பேதலிப்பு, கொள்கை போன்ற சமூக அவலங்களின் பின்னுள்ள அரசியலையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. இனப் பிரச்சினையில் அரசியல் பரிமாணத்தின் அளவு பாலுறவும் முக்கியமானதாக இருக்கிறது என்கிறார் ஹந்தகம. இதனை வெளிப்படையாகவும் அரசு சாரா இயக்கத்தவனாக வரும் தமிழ் இளைஞனின் வாய்வழிச் சொற்களின் வழி வெளிப்படுத்தவும் செய்கிறார் அவர்.

இந்தப் படத்தில் அனைத்துப் பாத்திரங்களையும் சம்பவங்களையும் உரையாடல்களையும் இணைக்கிறவராக வருகிற இளைஞன்தான் ஹந்தகமாவின் மனக்குரல் என்று கொள்ளவும் இடமுண்டு. கதையின் ஓட்டத்தில் இவரது பிரசன்னதை நாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் காமெராவின் அளவு படத்தில் நீக்கமற நிறைந்தபடி வாழ்வு குறித்த தத்துவ தரிசனத்தைத் படம் முழுக்க இறைத்தபடி நடமாடிக் கொண்டிருப்பவர் அவர்தான். ‘இந்த வழியால் வாருங்கள்’ படத்திற்கு வெளியில் சர்வேதச அமெரிக்க நிதிகளின் தன்மை பற்றியும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட தேசத்தின் சகலவிதமான கட்டுமானங்களுக்குள்ளும், நுண்பரப்புகளுக்குள்ளும் அமெரிக்க நிறுவனங்களும் அதிகாரிகளும் இவ்விதமான நிதி நிறுவனங்களின் செயல்போக்கினிலேதான் ஊடுறுவுகிறார்கள். இதன்வழிதான் இவர்கள் அறிவுஜீகளையும் அணுகுகிறார்கள். அமெரிக்காவின் மிகப் பெரிய ஓவியக் கலைஞனான ஜேஸன் பொல்லாக்கை இடதுசாரிகளுக்கு எதிராக அமெரிக்க சிஐஏ பயன்படுத்தியது. அவர் கலைஞனாக இருந்ததால்தான் சிஐஏ அவரைப் பயன்படுத்தியது என்று சொல்வார்கள். வால்ட் டிஸ்னியும் அப்படித்தான் திரைப்படத் துறையிலிருந்த தனது சொந்தத் தோழர்களையே கம்யூனிஸ்ட்டுகள் என அமெரிக்க அரசக்குக் காட்டிக் கொடுத்தவராகவும் இருந்தார். அமெரிக்க அரசு சார் நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன் இயங்க நேர்ந்த ஹந்தகம போன்ற கலைஞர்கள் ஒரு செய்தியாகவேனும் இதனை அறிந்திருப்பார்கள் என்றே நம்புவோம்.

அரசியல் சாரந்த உற்பவங்களைப் படமெடுக்கிற கலைஞர்கள் பற்றிப் பேசுகிறபோது துரதிருஷ்டவசமாக நாம் திரைப்படத்தின் அரசியல் அம்சங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பேச வேண்டியிருக்கிறது. இந்த ஆறு படங்களில் திரைப்படம் எனும் அளவில் உச்சபட்சமான அழகியல் அனுபவத்தைக் கொடுத்த படங்கள் என இரண்டு படங்களைக் குறிப்பிடுவேன். பிரசன்ன விதானகேயின் ‘பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம்’ மற்றும் இநோகா சத்யாங்கினியின் ‘காற்றுப் பறவை’ என்பனதான் நான் குறிப்பிடும் இரண்டு உன்னதக்கலை ஒருமை கொண்ட படங்கள். இந்த இரண்டு படங்களின் கலை ஒருமையுடன் வைத்தப் பேசமுடியாத படமாகவே விதானகேயின் ‘ஆகஸ்டு சூரியன்’ படம் இருக்கிறது.

‘ஆகஸ்டு சூரியன்’ படத்தின் சொல்முறையை நாம் குவின்டன் டரான்டினோவின் பல கிளைக்கதைகள் கொண்ட, நேரடியான உறவுகள் கொள்ளாத பாத்திரங்கள், ஆனால் அவரவர் வாழ்வின் செயல்போக்கில் பிறமனிதர்களை இடைவெட்டுபவர்களாக ஆகிறவர்கள் என்பதை குவின்டன் டாரன்டினோவின் ‘ரிசர்வொயர் டாக்ஸ்’ மற்றும் ‘பல்ப் பிக்ஸன்’ போன்றவற்றிலும், இலத்தீன் அமெரிக்கப் படமான ‘அமரோஸ் பெரோசி’லும் நாம் பாரக்கவியலும். ஆனால்; வண்ணத் திரை ஓவியங்களின் தீற்றலைப் போன்ற தூரத்துக் காட்சியமைப்புகள், அதில் கோடை வெளிச்சத்தில் நகரும் மனிதர்கள் என, ‘சினிமா எனும் காட்சிரூப வடிவத்தின் சாத்தியத்தை’ அற்புதமாக உள்வாங்கிய காட்சிகள் நிறைந்த, குறிப்பாக பத்திரிக்கையாளனும் விமானியைத் தேடும் பெண்ணும் தீவின் மணலில் அலையும் மாயா நிலைக் காட்சிகள் கொண்ட படம் ‘ஆகஸ்டு சூரியன் என்பதையும் நாம் நிச்சயாகப் பதிந்துவிட வேண்டும்.

விதானகேயின் ‘பவுர்ணமி நாளில்; நிகழ்ந்த மரணம்’ படத்தில் வருகிற முதியவரான ஜோ அபே விக்ரமாவிடம் தெரிகிற முதிர்ச்சியுற்ற கவிதையின் மென்மையும், அவரில் நாம் தரிசிக்கிற பெண்மையும் திரைப்படம் எனும் மொழி இருக்கும் காலம் வரையிலும் நின்று நிலைக்கும் தன்மையன. அது போலவே சத்யாங்கினியின் ‘காற்றுப் பறவை’ படத்தில் கூலிப் பெண்ணாகப் பாத்திரமேற்கும் தமிதா அபேரட்னாவின் உடல் மொழியும் வியர்வையில் நனைந்த முகமும் பெண்ணெனும் பெருமிதமும் கெஞ்சதலும் மிஞ்சுதலும் என காலந்தோறும் வாழும் அற்புத கணங்களை அவர் திரையில் காட்டியிருக்கிறார்.

சுதந்திர வர்த்தக வலையத்தில் பணிபுரியும் பெண்கள் வதியும் காலனியில் நம்மை முக்கியெடுத்து மூச்சுத்திணறவைக்கும் மேதைமையுடன் ஒளியையும் காமெராவையும் பாவித்திருக்கிறார் இநோகா. அவரது படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் கால முயக்கம்தான். முக்காலத்திலும் படம் நகர்கிறது. ஆனால் படம் முழுக்கவும் நிகழ் காலத்திலானது என நம்மை உணரவைத்திருக்கிறார் அவர். ‘மார்க்சியத்தில் கடந்த காலமோ அல்லது எதிர்காலமோ இல்லை, என்னளவில் நான் அறிந்ததெல்லாம், எல்லாமும் நிகழ்காலம்தான்’ என்பார் கிரீஸ் நாட்டின் மகத்தான திரைப்பட இயக்குனரான தியோ ஆஞ்சல பெலோஸ். சத்யாங்கினியிடம் அந்தத் தரிசனத்தை நான் கண்டேன்.

நான் பார்த்த சிங்களப் படங்கள் எனக்குத் தெரிவித்த முக்கியமான செய்தி இதுதான் : சிங்களப் படங்கள் வாழ்வின் யதார்த்தத்தைத் திரையில் சித்தரிப்பதில் வெகுதூரம்பயணம் செய்துவிட்டது. தெற்கு இலங்கையின் வரலாற்றையும், வாழ்வையும், சேறும் இரத்தமும் நிணமும் வியர்வையும் கவிச்சையும் கலந்து திரையில் படைக்கிற ரசவாதத்ததைக் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். உலக யதார்த்த சினிமாவின் கொடுமுடிகள் என்று சொல்லப்படுகிற, கியராஸ்தோமி, ஸத்யஜித்ரே, கிஸ்லாவ்ஸ்க்கி, அபர்ணாசென் போன்றவர்களுக்கு எந்தவிதத்திலும் சளையாத கலைநேர்த்தி மிக்க படங்களை பிரசன்ன விதானகே, இநோகா சத்யாங்கினி போன்ற சிங்களக் கலைஞர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

பிரசன்ன விதானகே படத்தின் பரந்த புழுதியின் வாசம் இன்னும் எனது மூக்கைத் துளைக்கிறது. அவரது வறண்ட நிலங்களை நினைக்க இப்போதும் எனது நா வறழ்கிறது. இருள் மண்டிய சத்யாங்கனியின் காலனிகளை நினைக்க என் மனம் அழுகிறது. அந்தக் குழந்தையை கழிவறைக்குள் நாமே சென்று ஏந்திக் கொண்டு வெளியே கொண்டு வந்துவிடுவோமா என மனம் அரற்றுகிறது. ஈழத் தமிழ்மக்களின் அவலமும் குரூரமும் நிறைந்த வாழ்வு உலக மக்களின் மனங்களை எட்ட வேண்டுமானால், ஒப்பனைகளையும் மிகை யதார்த்தத்தினையும் கடந்த வகையிலான யதார்த்தத் திரைப்படங்கள் தமிழ் மொழியிலும் உருவாகி வர வேண்டும் என்பதுதான் எதிர்மறையில் விதானகேயும் சத்யாங்கினியும் நமக்கு முன்வைக்கும் செய்தியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------

நன்றி : நாவலாசியர் சுப்ரபாரதிமணியனால் வெளியிடப்படும் ‘கனவு’ படைப்பிலக்கிய சஞ்சிகையில் அதனது 2008 ஆம் ஆண்டின் ஜனவரி மாத இதழில் வெளியான கட்டுரையின் மறுபிரசுரம் இது. ‘கனவு’ இதழின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியனுக்கு எனது மனமுவந்த நன்றி.

இலண்டன் விம்பம் அமைப்பைச் சேர்ந்த ஓவியர் கே.கிருஷ்ணராஜா, இலக்கிய ஆர்வலர் இ.பத்மநாப ஐயர், புகைப்படக் கலைஞர் சாந்தகுணம், தமிழகத்தைச் சேர்ந்த ‘செவ்வகம்’ சஞ்சிகை ஆசிரியர் விஸ்வாமித்திரன், கனடா சுயாதீனத் திரைப்படக் கழகத்தைச் சேர்ந்த ரதன், ‘மண்’ திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் கஜேந்திரா போன்றோர்களின் உதவியும் அன்பும் உரையாடலும் இல்லையெனில் இக்கட்டுரை எழுதியிருப்பது சாத்தியமேயில்லை. பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் திரைப்படங்களின் டிவிடிக்களை எனக்குக் காலத்தில்; தந்து உதவியமைக்காக இவர்கள் அனைவருக்கும்; எனது மனமார்ந்த நன்றி உரியது.

- யமுனா ராஜேந்திரன்