ஜூல்ஸ் டாசின், அமெரிக்காவின் ஹாலிவுட் இயக்குநர், திரைக் கதையாசிரியர், நடிகர் என்று பன்முக ஆளுமைகள் கொண்டவர். ஐரோப்பாவில் தனி முத்திரை பதித்த திரைக் கலைஞராவார்.

Dassinஅமெரிக்காவின் துரைத்தனத்தை விமரிசித்தும், வர்க்க வேறுபாடுகளை சமூக நிலையிலிருந்து முன்வைத்தும் அவரின் படங்கள் துணிச்சலோடு பேசின. புதுமை எண்ணமும், உழைக்கும் மக்களின்மீது காதலும் கொண்டிருந்த டாசினுக்கு அமெரிக்காவில் செல்வாக்கு பெருகியது. சினிமா ரசிகர்கள் டாசினின் படங்களை விரும்பிப் பார்த்தனர். வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையிலிருந்து சற்றே உயர்ந்து, சமூக விமரிசனமாக விரிந்த டாசினின் படங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினரின் உறக்கத்தைக் கலைத்தன.

ஜூல்ஸ் டாசின் 1930 களிலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகியிருந்தார். அமெரிக்க சினிமாவில் அவரின் வர்க்க சாய்மானம் கொண்ட படங்களால் டாசின்மீது அமெரிக்க ஆட்சியாளர்கள் வெறுப்புற்றனர். கருப்புப் பட்டியலில் அவரின் பெயர் இடம் பிடித்தது. அந்தச் சமயத்தில்தான் அவரின் புரூட் ஃபோர்ஸ் (1947), தி நேக்கட் சிட்டி (1948), தீவ்ஸ் ஹைவே (1949) முதலான படங்கள் வெளி வந்திருந்தன. இவற்றுள் முதலாவது படம் அமெரிக்கச் சிறை குறித்த விமரிசனமாக இருந்தது. இரண்டாவது படமோ நியூயார்க் நகரின் செல்வாக்குமிக்க காவல்துறை வலைப்பின்னல் குறித்த கதை. அது அந்த நாளிலேயே ஒளிப்பதிவுக்காகவும் படத் தொகுப்புக்காகவும் அகாடமி விருதுகளை வென்றது. கலிபோர்னியாவின் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை வழிமறித்துக் கொள்ளையடிக்கும் கிரிமினல்கள் குறித்துப் பேசியது மூன்றாவது படம். இந்தப்படங்கள் வந்த போதுதான் டாசின்மீது அமெரிக்க ஆட்சியாளர்களின் கழுகுக் கண்களின் பார்வை விழுந்தது.

1950 ல் அவரின் நைட் அண்ட் த சிட்டி படம் வெளிவந்த சில நாட்களிலேயே அவர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அது லண்டனில் எடுக்கப்பட்ட படம். சூதுவாதற்ற மல்யுத்தக் கலைஞரையும், ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் இரவு விடுதி உரிமையாளரையும் பற்றிய கதை இது. சில விமரிசகர்கள் இந்தப் படத்தை டாசினின் மிகச்சிறந்த படைப்பு என்கின்றனர்.

மனக்கிலேசமும், கையறுநிலையும் உண்டாக்கும் அச்சமூட்டும் சிதைவு களும் கொண்ட குறுகிய வழிப் பாதை போன்று லண்டன் மாநகர் காட்சியளிப்பதாக டாசின் இப்படத்தில் சொல்லியிருக்கிறார் என்று மைக்கேல் ஸ்ராகோ 2000 ஆண்டில் இணையதளமொன்றில் எழுதினார். ஆழ்மனக் கனவு நிலையையும், யதார்த்தத்தை நுட்பமாக டாசின் கலந்து தந்திருக்கின்றார் என்றார் அவர்.

தயாரிப்பாளர் டாரில் எப். ஜான்யூக் இந்தப் படத்திற்காக டாசினை ஒப்பந்தம் செய்த அதே நேரத்தில் அவர் அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படுவோரைக் கண்காணிக்கும் கமிட்டியின் முன் ஆஜராக நேர்ந்தது. சக இயக்குநர்கள் எட்வர்ட் டிமிட்ரிக் மற்றும் பிராங்க் டட்டில் ஆகியோர் அவருக்குச் சான்றளித்தனர். 1993 களில் டாசினின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பதிவு குறித்து நினைவு கூர்ந்தனர். டாசினின் சினிமாத் தொழிலை மூழ்கடிக்கச் செய்ய இதுவே போதுமானதாக இருந்தது.

1953 ல் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார். பிரான்ஸ் தேசம் வந்து சோர்ந்தார். அங்கே அவருக்கு மொழி ஒரு பெருந்தடையாக இருந்தது. அங்கே ஐந்து வருடம் வேலையின்றித் திரிந்தார். பண நெருக்கடி மிகுந்தபோது அவர் ரிஃபிஃபி எனும் குறைந்த செலவுப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். அது ஒரு நகைக்கடைக் கொள்ளை குறித்த படம். அதில் இசையோ, வசனங்களோ கிடையாது. நகைகள் கொள்ளையடிக்கப்படும் காட்சிமட்டும் அரைமணி நேரம் ஓடும். பார்வையாளர்கள் சலிப்பின்றி அதனைக் காணும் வண்ணம் விறுவிறுப்பாகப் படமாக்கியிருந்தார் டாசின்.

அந்தப்படத்தில் டாசினும் ஒரு இத்தாலிய பாதுகாப்பு நிபுணராக நடித்திருந் தார். அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட டாசின்மீது ஐரோப்பாவின் பார்வை விழ இந்தப்படம் பெரிதும் காரணமானது. 1955 ல் நடந்த கேன்ஸ் பட விழாவில் இந்தப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதினை டாசின் வென்றார்.

டாசினின் இன்னொரு திருப்புமுனைப் படம் நெவர் ஆன் சன்டே. உழைக்கும் வர்க்கத்திலிருந்து கடும் வறுமை காரணமாக விபச்சாரத் தொழிலுக்குத் தள்ளப்பட்ட பெண்ணைப்பற்றிய கதை இது. இதில் டாசின் அமெரிக்காவின் படிப்பாளி வர்க்கத்தினுடைய பிரதிநிதி பாத்திரத்தில் நடித்தார்.

அவர் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பிற தேசத்தவர்மீது திணிப்பது குறித்து உபதேசிப்பவராகத் திறம்பட நடித்தார். நகைச்சுவை இழையோடும் இந்தப் பாத்திரப்படைப்பின் மூலம் இந்தப்படமே ஒரு நகைச்சுவைப்படமாக வெற்றி பவனி வந்தது.

இதன் எழுத்துக் காட்சிப்பாடல் வீடுகள்தோறும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. மீண்டும் மீண்டும் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்டது. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த மெலினா மெர்க்யூரியை டாசின் தனது இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார். இஸ்தான்புல்லின்டோப்காப்பி அரண்மனையிலிருந்து வைரத்தைக் கொள்ளையடிக்கிற டோப்காப்பி அவரின் அடுத்த படம். அதிலும் மெர்க்யூரிதான் கதாநாயகி. பிற்காலத்தில் தன் மனைவி மெர்க்யூரியுடன் இணைந்தே பல படங்களை எடுத்தார். 1957 ல் வெளிவந்த ஹீ மஸ்ட் டை, 1959 ல் வெளிவந்த லா லெக்கி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1968 ல் அப் டைட் அவர் மெர்க் யூரி துணையில்லாமல் பண்ணிய படம்.

கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் டாசினுக்கு விதிக்கப்பட்ட தடை அமெரிக்காவில் திரும்பப் பெறப்பட்டது. டாசின் உடனே உற்சாகமானார். தனக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதும் அமெரிக்காவில் அவர் எடுத்த முதல் படம் தி இன்பார்மர். அண்டை வீட்டு ஏழைக் கருப்பினத்தவர் பற்றிய படம் இது. அவர் அமெரிக்கா செல்வதற்கு ஓராண்டுக்கு முன் எடுத்த இசை - நகைச்சுவைப் படமான இலியா டார்லிங் மெர்க்யூரிக்கு டோனி விருதினைப் பெற்றுத் தந்தது.

மெர்க்யூரி தீவிர பாசிச எதிர்ப்பு மனோபாவம் மிக்கவர். 1967ல் கிரீசின் வலது சாரி அரசு அவர் தேசவிரோதச் செயலில் ஈடுபட்டார் எனச்சொல்லி அவரின் கிரீஸ் குடியுரிமையை ரத்து செய்தது. 1970ல் ஆட்சிமன்றக்குழுவைத் தூக்கி யெறிய நடந்த சதிக்கு உடந்தையாக இருந்தார் என டாசின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மீண்டும் ஒரு நாடுகடத்தல் தண்டனை. 1974ல் கிரீசில் ஜன நாயகக் காற்று வீசத் தொடங்கியபோது, நாடு கடத்தப்பட்டு பெரும்பகுதி நாட்களைப் பாரிசில் கழித்துவந்த டாசின் தம்பதி மீண்டும் கிரீசின் குடிமக்களாயினர். அங்கு சோசலிஸ்ட் கட்சியின் ஆட்சி ஏற்பட்டபோது மெர்க்யூரி கலாச்சாரத் துறை அமைச்சரானார். கலையால் இணைந்தவர்கள் கலையையும் ஏகாதிபத்திய- பாசிச எதிர்ப்புணர்வுகளையும் வளர்த்துக் கொண்டனர் டாசின் தம்பதியினர். 1994 ல் மெர்க்யூரி காலமானார்.

1911 ல் அமெரிக்காவின் மிடில் டவுனில் ரஷ்யாவிலிருந்து அங்கு புலம் பெயர்ந்து குடியேறியிருந்த சாமுவல் டாசினுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஜூல்ஸ் டாசின். அவரின் தந்தை ஒருநாவிதர். பள்ளிப்படிப்பைக்கூட சரியாகக் கடக்கமுடியாத டாசின் கலை ஆர்வத்தால் புகழ்மிக்க ஆல்பிரட் ஹிட்ச்காக் முதலான இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார். கடந்த 2008 மார்ச் 31 அன்று தனது 96 வது வயதில் மரணம் அவரைத் தழுவும் வரை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு எனும் நெருப்பு விடாப்பிடியாக அவர் உள்ளத்தில் எரிந்துகொண்டேயிருந்தது.

- சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It