யாத்திரையின் முழுமை யாத்திரையில் தான் கிடைக்கும். பயணங்களே அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது. தூர தேசத்தின் வழியே தான் உலகம் வரைபடமாகி இருக்கிறது.
"யுவான் சுவாங்" பற்றி நாம் சிறுவயதில் படித்திருப்போம். அதன் நீட்சியாகத்தான் இந்த சினிமா... காட்சிகளின் ஞானமாய் நம்முள் விரிகிறது. யுவான் சுவாங் 13 வயதில் புத்த துறவி ஆனவர். அறம் தேடி... அதன் இதயம் தேடி வரும் கதையே இந்தப் பயணம்.
ஏழாம் நூற்றாண்டில் கதை நடக்கிறது.
இயல்பிலேயே இருந்த படிப்பின் வேட்கை அவரை இந்தியாவை நோக்கித் திருப்புகிறது. உலகத்துக்கே இந்திய மண்ணில் முளைத்தெழுந்த வெளிச்சம் ஒன்று அவரை வழி நடுத்துகிறது. புத்தன் என்னும் முதுமனிதனின் மூச்சு அவரை சூழ்ந்திருக்கிறது. ஒளியின் தீட்சதையில் கலங்கரை விளக்கமாக புத்தர் இருந்தார் என்பது தான் இங்கே வட்டமிட்டு காட்ட வேண்டிய காலப் பதிவு.
சீனாவில் அப்போது பரவியிருந்த புத்தரைப் பற்றிய முரண்களைக் களைந்து தெளிவடைய புத்தன் பூமிக்கே வந்து புத்தனைக் கற்கலாம் என்ற விதையை அவருள் அறிவின் தேடல் விதைக்கிறது. அப்படி புத்தனைத் தேடி இந்தியா வந்த ஒற்றை மனிதனின் யாத்திரை தான் இந்த சினிமா.
தனித்திருப்பதன் அவசியம் முக்திக்கு அருகாமை. முகமற்ற சிந்தனைக்கு மூச்சு விடுதல் பற்றிய அக்கறை இருக்காது. அது முக்திக்கான துவாரங்களை துளைத்துக் கொண்டே நகரும். நகருதலின் நிமித்தம்தான்... இந்தப் படத்தின் ஆரம்பம். யுவானின் இந்த இந்தியப் பயணத்தை பெரும்பாலும் அங்கே யாரும் விரும்புவதில்லை. காரணம்... அத்தனை கடினமானது. ஆபத்து நிறைந்த பயணம் அது. முறையான அனுமதியும் இல்லை.
மலையும்... குன்றுகளும்... பாலைவனமும்.... காடுகளும்.... வெள்ளமும்... சூழ்ந்த கடுமையான பயணத்தில் அவர் இறகைப் போல நகர்ந்து கொண்டே இருக்கிறார். நகர்த்திக் கொண்டே இருப்பது புத்தனின் போதி மர நிழல் என்று சொல்லலாம். காலத்தில் தங்கி விட்ட புத்தன் என்று நம்பலாம். நம்புவதில்தானே ஞானத்தின் முதல் கண் திறக்கிறது. எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவருக்கு உதவி கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் தொடர்ந்து நடக்க முடியாத சூழலில்... மயங்கிக் கிடக்கும் அவரை குதிரை கூட கீழ் அமர்ந்து அவரை முதுகில் ஏற்றிச் செல்கிறது. உண்மையும் அறமும்... உள்ள இதயத்துக்கு ஒருபோதும் மரணமில்லை.
இந்தியாவின் முதல் பல்கலைக் கழகம் "நாளந்தா" பல்கலைக் கழகம். அங்கு தான்.. புத்தரைப் படிக்க வருகிறார். ஆறாத வேட்கையும் தீராத தாகமும்.. அவரை இடைவிடாமல் முன்னேறச் செய்கிறது. வரும் வழியெல்லாம் இயற்கையின் இன்முகத்தைக் காண்கிறோம். இணுங்கிக் கொள்ளும் காற்றின் கைகளில் மலைக்குன்றுகளின் செந்நிறம்... வரி வரியாய் வானம் வரைந்த ஓவியமாய். கேமராவின் மொத்தக் கண்களும் புத்த கண்கள் தான் போல.
நீரின் வன் கொடுமையை 'கோபி' பாலைவனத்தைக் கடக்கையில் யுவானோடு சேர்ந்து நாமும் உணர்கிறோம். நா நீளும் தவத்தின் தாக ரட்சிப்பு மணல் அள்ளி முகத்தில் அப்பிக் கொண்டு அழ வைக்கும். நீரின்றி அமையாது உலகு மட்டும் அல்ல. உண்மையும் கூட.
கானல் நீர் பேயுருவம் கொண்டு யுவானை அலைக்கழிக்கும் போதும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு நினைப்பு புத்தன். பாலைவனத்தில் நடந்து வருகையில்... கழுகுப் பார்வை பார்க்கும் சூரிய தூர ஷாட்டில் பாலைவனமே நடக்கிறது. பாலைவனத்தில் புதைந்தெழும் பாதங்களின் வெளிப்படுதல் ரகசியம் தூர்ப்பவை. புதையல் தோண்டுபவை. ஒவ்வொரு சுவடுக்கும்... ஒவ்வொரு ஆயுள்.
பாலைவனம் கடந்து நீர் நிலை கொண்ட இடத்துக்கு வந்து சேர்ந்ததும்.. யுவானின் கண்களில் புத்துயிர் சிமிட்டும். நீரை அள்ளி உள்ளங்கையில் வைத்து பார்க்கும் நொடி நேரம்... நீர் பற்றிய ஞானம் நம்முள் ஒழுக ஆரம்பிக்கும். முகத்தில் தேய்த்துக் கொள்ளும் போது.. மனதுக்குள் இருந்த பேரழுகை கருணையாகும். வானம் பார்த்து கைகளில் சிலுவை பூக்க நீரில் இலையாக சரிகையில்... பேரமைதி திரையில். புது வரிகள் மொழியில்.
சீனப் பட்டு பற்றி கூட ஓரிடத்தில் காட்சியும் உரையாடலும் வருகிறது. ஓயாமல் நகரும் ஒப்பனைக்கு பாலைவனம் எனப் பெயரிடலாம். பசுமை வனம் என குறிப்பிடலாம். மலைக் குன்றென கோடிடலாம். அற்புதங்களின் அற்புதங்கள் நடை பயிலும் காற்றின் கால்களில் காணலாம். லாங் ஷாட் தான் சினிமாவின் மொழி என்று கூட ஒரு சிந்தனை வந்து போகிறது. இந்த பூமியின் மறுபக்கம் பாதங்களற்ற இதயங்களால் ஆனது. ஏற்கனவே ஃபிரேம் போட்டு மாட்டப் பட்ட காட்சிகளை பயணம் கோர்த்துக் கொண்டே சினிமாவாக்குகிறது. ஒரு பயணத்தின் வாயிலாக யுவானுக்கு எதுவெல்லாம் நிகழுமோ அதுவெல்லாம் நமக்குள்ளும் நிகழ்கிறது.
ஓரிடத்தில் யுவானிடம் உதவிக்கு வரும் ஒரு இளைஞன் கேட்பான்.
"இந்தியா எங்கே இருக்கிறது...?"
அதற்கு யுவான் பதில் சொல்வார்.
"இந்தியா இதயத்தில் இருக்கிறது"
உலகத்தின் இதயத்தை புத்தன் மூலமாக இந்தியா துடிக்கிறது.
படம் தொடங்கியதில் இருந்தே காற்றில் துளையிட்ட வெளியின் சப்தம் புல்லாங்குழல் செய்வதை அனிச்சையாக ரசிக்கிறோம்.
வாட்ச் டவரில் காவல் காக்கும் ஒரு பகுதியின் தளபதி...தான் தங்கி காவல் பணி புரியும் இடத்தை "இது சிறை " என்று சொல்வார்.
"உங்களுக்குத் தான் இது சிறை.. என்னைப் போல பயணம் செய்து வருவோர்க்கு இது சொர்க்கம்" என்பார்...யுவான்.
எதிர்முனையில் நின்று காண்கையில் எம்முனையிலும் இன்பம் உண்டென்ற போதும் நிலை வந்தடையும். மகத்துவம் மனம் அடக்கிய மனிதனுக்குள் இருந்து வெளிப்படும் என்ற புரிந்துணர்வு ஏற்படுகிறது. விழிப்புணர்வே இங்கு அடிப்படைத் தேவை என்று கோடிட்ட வாக்கியத்துக்கு புள்ளிகளற்ற தவம் தேவைப்படுகிறது. பாலைவனத்தில் யுவானுக்கு மட்டும் மழை வரும் நிஜத்தை உலகம் கற்பனை என்று சொல்லும். இங்கே கற்பனைகளின் முடிச்சில் இருந்து தான்... நிஜங்கள் தம்மை விடுவித்துக் கொண்டது என்பது தான் அறிதல்.
நான்கு வருடப் பயணத்துக்கு பின் கைபர் கணவாய் வழியாக சிந்துவை அடைந்து விடுகிறார். சிந்து என்பது இந்தியா தான். நாளந்தாவில் நுழைந்து விடுகிறார். அவருக்காகத்தான் தான் காத்திருப்பதாக மூத்த குரு சொல்கிறார். கனவின் வழியே எண்ணங்களின் வழியே செய்திப் பரிமாற்றம் அடைந்தது என்பதன் பின்னால் அறிவியல் இருப்பதை நாம் மறுக்க இயலாது.
புத்த மதம் ஒரு கட்டத்தில்.....இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டது. விரட்டுவதற்காகவே உருவாக்கப் பட்ட மதம் எது என்றும் நமக்குத் தெரியும். ஆனாலும் நாம் தெரியாத மாதிரி தான் இருப்போம். மதத்தின் மேல் நின்று மத்தியஸ்தம் பேசுவது தானே.. மகத்தான அரசியல் நமக்கு.
"புத்தன் பிறந்த நாட்டில் புத்த மதம் இப்போது நாளாந்தாவில் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது.." என்று யுவான் வினவுகையில்..."இது புத்தர் நாடு தான்.. ஆனால் எல்லாரும் இங்கு புத்தர் இல்லையே..." என்று குரு சொல்வதில்... மானுடப் மறுபரிசீலனை தேவை குறித்த நமக்கான விவாதம் நம்மிடம் இருந்தே துவங்குகிறது.
கிடைக்கப் பெறுவதற்கானது அல்ல, அன்பு. அது செலுத்தப் படுவதற்கானது. புத்தனை நெருங்க நெருங்க நம்மில் இருந்து நாம் விலகுகிறோம்.
புத்த மதப் பிரிவுகளான மஹாயானம், ஹீனயானத்தின் வித்தியாசம் என்ன என்ற கேள்வி வருகிறது.
ஹீனயானம்.... புத்தரின் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. உருவ வழிபாடு இல்லை.
மஹாயானம் புத்தரையே கடவுளாகக் கொள்கிறது. உருவ வழிபாடு கொண்டவை.
ஒரு நல்ல விதை உருவாகும் இடத்தில்தான் அதன் நகலும் உருவாகும். நம் வாய் முணுமுணுக்கிறது. யுவான்... தான் சொல்லும் பதில் மூலமாக நிஜத்தைத் தேடுகிறார்.
இன்னமும் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பதை தட்டையாகத்தான் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். புத்தன் சொன்ன ஆசையே வேறு. அதைப் புரிந்து கொள்ள விழிப்புணர்வு தேவை. மனதின் ஓட்டத்தை சாட்சியாக நின்று கவனிக்கும் அவதானிப்பு தேவை. அதன் மூலமாகத்தான் அவரவர்களின் போதி அவரவர்களின் இலையை விடுவித்துக் கொள்ளும்.
யுவான்.. மேலும் இந்தியாவை சுற்றிப் பார்க்கிறார். இந்திய நடனங்கள்.... இந்திய பழக்க வழக்கங்களை கண்டுணர்கிறார். கசடறக் கற்பதில் தான்... மூச்சின் மொழி அறியும். பேச்சின் மௌனம் புரியும். எல்லாரோ குகைகள் பார்க்கிறார். போதி கயாவில் போதி மரத்தடிதடியே நிற்கிறார். வானம் உயர்ந்து நிற்கும் மரத்தின் காட்சி நம்மை புத்தன் மடியில் கிடத்துகின்றது. இந்தியாவில் நிலவும் சாதிய முறைமைகளை அறிவுபூர்வமாக அணுகுகிறார். வினா எழுப்புகிறார். விடை தேடுகிறார். சாதியின் பெயரால் சபிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விடுதலை அளிக்கிறார்.
மனதின் சுமை காலில் இறங்க கால்களின் சுமை காலத்தில் இறங்க... அந்த யாத்திரீகன் புத்தன் பூமியில்.. அழுது கொண்டே நாடு திரும்புகிறார். மனம் உருகிக் கொட்டும் பேரழுகையில்.... களங்கமற்ற துளிகளின் கூட்டு அறிவுச்சுடரை எரிய விடுகிறது. மிச்சமிருந்த புத்தனையும் பத்திரமாய் மீட்டுக் கொண்டு அந்த ஒற்றை மனிதன் கூடடைகிறான்.
சிறகுள்ள பறவைக்குத் தான் புத்த கூடுகள் சாத்தியம்.
Film: XUAN ZANG
Director : Huo Jianqi
Language: China
Year : 2016
- கவிஜி