மனிதனில் சத்தானாய் வாழ்வது...
அகால மரணத்தால் மரணித்தவர் சாத்தானாய் மாறுவது...
பிறகு அவர் வேறு வழியின்றி கடவுளை அடைவது...
பிறகு அந்த கடவுளுக்கும் முன் சொன்ன மனித சாத்தானுக்குமான யுத்தம்...
இறுதியில் என்ன ஆகிறது இது தான் "நெஞ்சம் மறப்பதில்லை" சினிமா.
ஒற்றை ஆளாய் SJ சூர்யா படம் முழுக்க பலம். நடிப்பில் நடிப்பதாகட்டும்... ஆழ்மன ஓவர் ஆக்டிங் -க்கு முகபாவனையும் உடல் தோரணையும் கொண்டு பூசுவதாகட்டும்... வன்மத்தையும் காமத்தையும் கண்களில் காட்டி ஓர் இயந்திர நடையில் தன்னை கூட்டுவதாகட்டும்... மனுஷன் ஒரு பாத்திர படைப்பே நிகழ்த்தி இருக்கிறார்.
கண்டிப்பாக இது மாதிரி ஒரு கதாபாத்திரத்தை நாம் நம்மில் எப்போதாவது உணர்ந்திருப்போம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அடியே ஆழத்தில் தேங்கி கிடக்கும் குரூரத்தின் ரகசிய சிற்பம் அது. அது செல்வராகவன் என்ற கிரியேட்டரின் பேனா பிடித்து மேல் எழுந்து வந்து வித்தைக் காட்டி இருக்கிறது.
தொடர்ந்து ஒரு வகையான வேறு ஒரு கதாபாத்திரத்தை தன் உடலில் சுமந்துக் கொண்டு படம் முழுக்க அலைவது... ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை படம் நெடுகிலும் தக்க வைத்துக் கொண்டேயிருக்கும் SJ சூர்யா மிகச் சிறந்த நடிகன் என்பது ஊர்ஜிதம்.
குரலில் கொள்ளும் ஏற்ற இறக்கம்... இரக்கமின்றி தத்ரூபம் செய்கிறது. சாத்தான் மனதின் கிறுக்குத்தனம் எப்போது எப்படி திசை மாறும் என்ற பாத்திர வடிவமைப்புக்கு சூர்யா உடலைக் கொடுத்து நடித்திருக்கிறார். உயிரைக் கொடுத்து முடித்திருக்கிறார்.
நந்திதா பணக்கார வர்க்கத்தில் இருக்கும் சாத்தானைக் கண் முன் நிறுத்துவது குறியீடு. நந்திதாவின் நிதானமான உடல்நிலையும் ஏறி இறங்கும் மன நிலையும்... ஒரு காதலிக்கும் ஒரு மனைவிக்கும் இடையே நின்று திரும்பி... திரும்பி நிற்கும் வேதியியலும்... மறத்துப் போன மானுட யுகத்தின் சாம்பிள். நாய் பிசாசை விரட்டும் என்பது பிசாசை நம்பும் கடவுளர்களின் வாக்கு. அதுவும் இங்கே நிகழ்கிறது.
மூன்று முக்கிய பாத்திரங்களுமே கடவுள் சாத்தான் நடுநிலை என்ற குறியீடுகள் தான்.
கடவுளின் பிள்ளை ரெஜினா... பெண் ஜீசஸ். முற்பாதியில் உலகத்தை விட்டு ஒதுங்கி இருக்கும் பாங்கும்... அமைதியும்... வறுமையின் பிடியில் இருக்கும் வாழ்வின் சித்திரம் அது. அத்தனை துயரங்களையும் சுமந்துக் கொண்டு இந்த உலகின் மூலை முடுக்குகளை கடக்கப் படும் பாடு தனித்த மனுஷிகளின் குவளை நிரம்பா வழிதல். பிற்பாதியில்... கண்ணுக்கு தெரியாத ரெஜினாவை நாம் காணும் போதெல்லாம் ஒரு ஜீசஸின் சாய்ந்த கோணம் வந்து போவதை மனம் உணருவதைத் தாண்டி செல்ல வழி இல்லை.
அந்த கண்ணில்லாத தாத்தா தான் இந்த சாத்தான் உலகத்தின் சாட்சி. அவர் எல்லாமும் முன்பே அறிந்தவராகவும் அறிய போகிறவராகவும்... ஒரு கால சாட்சியாக அமர்ந்திருக்கிறார்.
"நாசமா போய்டுவ" என்று அந்த சிஸ்டர் விடும் சாபத்தில் நாமும் கூட நம்மை ஒருமுறை உணர்ந்துக் கொள்ள தோன்றுகிறது. சந்தேகத்தை வீட்டை சுற்றிலும் அலைய விட்டு சந்தர்ப்பத்தை உள் நோக்கி யோசிக்கும் அவரின் உடல்மொழி இதுவரைக் காணாத சிஸ்டர் உலகம்.
நல்லதுக்கும் கெட்டதுக்குமான மெல்லிய கோட்டில் தன் சினிமாவை அழுத்தமாய் பதிக்க முயற்சி செய்திருக்கிறார் செல்வராகவன். பத்து வருடம் கழித்தெல்லாம் இல்லை... இப்போதே நன்றாகவே புரிகிறது. இசைக்கு இன்னொரு முறை முன்னமே தன்னை "இளைய" ராஜா என்று நிரூபித்திருக்கிறார் யுவன். கற்றுக் கொண்டது தான் மறக்கும். காதல் கொண்டது எப்படி மறக்கும்.
எப்போதெல்லாம் குதூகலம் கொள்ளும் மனதை சாத்தான் கொள்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நவ நாகரீக கோமாளியைப் போல கிடாருடன் வந்து ஆடி அங்கலாய்க்கும் SJ சூர்யாவின் உருவம் இறுதியில்... கிடாரை கீழே வைத்து விட்டு சோகம் தாங்கிய உடலோடு அமைதியாய் நகர்வது மொத்த படத்துக்கான ஒன்லைன்.
ஒருவன் செத்த பின் தான் சாத்தான் ஆக முடியும் என்ற வழக்கத்தை தாண்டி வாழும் போதே டெவில்கான எல்லா வகைமைகளிலும் இருக்க இயலும் என்ற உதாரண பாத்திரங்கள் தான் ராம்சே மற்றும் நண்பர்கள். ராம்சேவின் நட்பு வட்டமும்... அவர்களுக்கான குடிசையும்... குடிசைக்குள் குடிக்கான செட் அப்பும்... அவர்கள் பேசும் முறையும்... முற்றிலும் மனிதனிர்களிடம் இருந்து வேறு படுகிறது.
"டே சும்மா இருடா..." சும்மா இருக்க விடவில்லை...
தங்களின் தனித்த உலகில் இருந்து வேறு வழியின்றி இவ்வுலகில் தொடர்பு கொண்ட திரைக்கதையில்... முரண்கள் வரத்தானே செய்யும். முன்னும் பின்னும் அற்ற ஒரு சாத்தானின் வாழ்வு முறை... முன் பின் கொண்ட கடவுளின் வாழ்வு முறையோடு முட்டிக் கொண்டு நிற்பதில் தான் ராமசாமிக்கும் ராம்சேவுக்குமான வண்ணம் வேறுபடுகிறது.
யாருமற்ற போது கண்ணாடியில் உங்களை நீங்களே உற்று பாருங்கள். உங்கள் சாத்தானை நீங்கள் கண்டடைவீர்கள். "நெஞ்சம் மறப்பதில்லை" தலைப்பைத் தவிர எனக்கு படம் பிடித்திருக்கிறது.
- கவிஜி