kavalthurai ungal nanban நடுத்தர வர்கத்தின் ஒட்டு மொத்த சாயலும் படத்தின் கதாநாயகனான சுரேஷ் ரவியின் முகத்தில் திரையில் மிகைப்பு இல்லாமல் வலம் வருகிறது.

ஒவ்வொருவருக்குள்ளும் மின்னலென பளிச்சிடும் அச்சம் அவ்வப்போது நம் வாழ்ந்துவிடும் வாழ்க்கைக்கான தேடலின் குறுக்கே வந்து மறைவது தெரிந்து போகிறது.

இருவர் கொண்ட அழகான குடும்பம் ,இன்னமும் அழகாக காட்டப்படுகிறது ரவீனா ரவி உதிர்க்கும் காதலில். எப்போதும் போல காதலை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம். காதலியின் தோள்களில் துயில் கொள்வதற்காகவே களைப்பின் சுமையை இரவில் களைந்துவிட்டு வரும் சுரேஷ் ரவி தினமும் காதலை வெவ்வேறு கோணத்தில் ஏற்றுக் கொள்கிறார்.

கடன் வாங்கினால், அரேபியா நாடுகளில் வேலைக்கென தஞ்சம் புகுந்து குறைந்தது ஐந்து வருடங்களில் அடைத்து விடலாம் என்னும் பிற்போக்கான சிந்தனையில் விழுந்துகொண்ட கூட்டம் புரையோடிப் போயிருப்பதை இயக்குனர் அதிகமாக விமர்சிக்காமல் இந்த கதைக்கேற்ப கையாண்டிருப்பது பொருந்திப் போகிறது.

இரவில் மனைவியை வக்கிரம் கொண்டு நெருங்கியவனை தேடும் பயணத்தில் காவல் துறையிடம் சோதனைக்காக நிறுத்தப்படும் போது நியாயமான தர்க்கம் சுக்குநூறாக உடைந்து போவது இன்னும் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கத்தான் செய்கிறது. அப்படி தர்க்கம் செய்தவனை இந்தத் திரைப்படம் முழுக்க சித்திரவதைச் செய்வது தான் மீதி கதை.

மைம் கோபிக்கு நிகர் மைம் கோபிதான், எப்போதும் போலும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். திரைப்படத்தைத் தாண்டி அவர் மேல் கொள்ளும் வெறுப்பு நீங்காதவையாய் நமக்குள் தங்கிப் போய்விடுகிறது அவரது நடிப்பு.

முருகேசன் கதாபாத்திரத்தில் காவலராக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி காவல் துறையின் தத்துவார்த்தத்தைத் கோடிட்டு காடுவது, ஒரு சிலரால் ஒட்டு மொத்த காவல் துறையை களங்கத்திற்குள் ஆக்குவது தவறு என்னும் கருத்தை திரைப்படத்தின் முதல் பகுதியில் முளைவிட செய்வது இயக்குனரின் நுணுக்கமான திரைக்கதை ஓட்டம்.

சுயமரியாதை கொள்ளப்படும் நேரத்தில் முதலில் கொதித்து பின் அடங்கிப் போகும் நெருப்பில் குளிர்காய்ந்து கொள்ளும் அதிகார ஆணவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

குருவிக்கூட்டை கலைப்பது போல அந்தக் குடும்பத்தில் இன்னொன்றாக இணைய வளர்ந்து வரும் கரு, அடக்கமுடியாத அழுகையில் கரைந்து போவது மேலும் திரையில் மென்சோகத்தை சேர்த்துக் கொள்கிறது.

பொறியியல் துறை பயின்றவர்கள் பலர் இன்று அதை சார்ந்த பணியில்லாமல் உணவு விநியோகம் செய்யும் துறையில் விழுந்து கிடப்பது கல்வியின் கட்டமைப்பை ஒரே வரியில் சொல்லிப் போகிறது.

கதாநாயகன் அடிவாங்குவதை அவர்களே படம்பிடித்து அரசியல் செய்வது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தாதது திரைப்படத்தின் பலவீனம். பின்னணி இசை காட்சிக்கேற்ப அழகாக கதை சொல்கிறது .

சில இடங்களில் சிறு நெருடல் இருந்தாலும் சொல்லவந்த கருத்தை ஆழமாக ஊன்றிக் கொள்கிறார் இயக்குனர்.

கதையோட்டத்தின் இடையில் வரும் பாடல்கள் கட்சிதமாக பொருந்திக் கொள்கிறது. ஒரு ஆவணப் படமாகவே பார்க்கப்படுறது இந்த படம்.

‘இங்க மேல இருக்கிறவன் கை ஓங்கித்தான் இருக்கனும், கிழ இருக்கிறவன் கை ஏந்திதான் இருக்கனும்’ என்ற வசனமும் ‘இங்க போலீஸ் பப்ளிக் சர்வன்ட் இல்ல பப்ளிக் தான் போலீசுக்கு சர்வன்ட்’ என்ற வசனமும் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கியே வைக்கப்பட்ட வசனம்.

ஆகமொத்தம் ‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்பது வஞ்சப் புகழ்ச்சியென முடிகிறது…

- சன்மது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.