SP Balasubrahmanyamகடந்த 50 ஆண்டுகளாக தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப். 25-ம் தேதி. கொரோனா நோயினால் மரணமடைந்து விட்டார்.

சுமார் ஐம்பது ஆண்டுகளாக 16 இந்திய மொழிகளில், இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பாலுவின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது தமிழக அரசு. எஸ்.பி.பி.யின் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கலங்க வைத்திருக்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூகவலைத் தளங்களிலும் கலந்து கொண்ட பலரும் தங்களது கடந்த கால நினைவுகளையும், அவர் பாடிய பிரபல பாடல்கள், அதன் இசை நுணுக்கங்கள், அவரது அசாத்திய குரல்வளம், சிகரம் தொட்ட பின்னும் அவரிடமிருந்த தன்னடக்கம் ஆகியவற்றை இரண்டு நாட்களாக கவலையுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

“முறையாக செவ்வியல் இசையை கற்றுக் கொள்ளாமலே இவ்வளவு சாதனைகளைப் படைத்திருக்கிறார். பழக எளிமையானவர். தெலுங்கராக இருந்தும் தமிழில் சரியான உச்சரிப்போடு பாடுபவர்” என்பதெல்லாம் உண்மையே! எதுவும் மிகையில்லை.

அவரது பாடல்கள், இனிமையான குரல், குழந்தை உள்ளம், சிரித்த முகம் ஆகிய எல்லைகளுக்குள் மட்டும் எஸ்.பி.பி.யின் பிம்பத்தை அடக்கிவிட முடியாது. தமிழ் சினிமாக்களின் பாடல்கள் மூலம் தமிழக மக்களின் கலைரசனையை வடிவமைத்துக் கொடுத்ததில் எஸ்.பி.பி-யின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் எவரும் புறக்கணித்துவிட முடியாது.

தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் ஆகியோரின் கூட்டுக்குரல்தான் ஒரு திரையிசைப் பாடகரின் குரலாக வெளிப்படுகிறது. மேற்கண்ட மூவரின் விருப்பத்தை, எதிர்பார்ப்பை தனது குரல்வளத்தின் மூலமும், தனித்துவமான திறமைகள் மூலமாகவும் மேலும் ரசனைக்கு உரியாதாக்கி வெளிப்படுத்துபவர்தான் திரைப்பாடகர்.

உதாரணமாக, “வந்தனம் என் வந்தனம், நீ மன்மதன் ஓதிடும் மந்திரம், புன்னகை சுந்தரம், பூமுகம் பொன்னிறம், உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்” என்ற குடிபோதையுடன் பாடும் சோகப் பாடலில் சுந்த(ரம்), பொன்னி(றம்)” ‘ரம்’ என்ற வார்த்தையை உச்சரிப்பதில் போதையின் தள்ளாட்டத்தை வெளிப்படுத்தி மெருகேற்றியிருப்பார் SPB.

"பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று” பாடலின் இறுதியில் SPB-யின் குரலில் கண்ணீர் வழியும்! இதுதான் ஒரு திரைப்பாடகனின் சிறப்பு, தனித்துவம். இது SPB-க்கு மட்டுமே உரிய திறமை என்று கூறிவிட முடியாது. இவருக்கு முந்தைய, பிந்தைய, சினிமாப் பாடகர்கள் அனைவரிடமும் உள்ள சரக்குதான் இது. SPB என்ற பாடகனின் தனித்துவம் என்பது, தமிழ் சினிமாவின் வளர்சிதை மாற்றங்களில் அடங்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி-யின் ஆதிக்கம் இறுதிக் காலத்தை எட்டிய 70-80-களில் தமிழ் சினிமாக்களில் மேற்கத்திய டிஸ்கோ கலாச்சாரம் மேலோங்கத் தொடங்கியிருந்தது. பெல்ஸ், பெல்பாட்டம், அகன்ற காலர் சட்டை, பட்டையான பெல்ட், பிடரி வரை சுருண்டு கிடக்கும் தலைமுடி, மற்றும் சிவப்புத் தோலுடன் அன்று இதற்குப் பொருந்தி எழுந்தவர்தான் பிக்பாஸ் கமல்ஹாசன்.

நடிகர் மோகனுக்கு முன்பே ‘மைக்பிடி மன்னன்’ பட்டம் பெற்றவர் இவர். இவரின் டிஸ்கோ ஆட்டத்திற்காகவே இவரது படங்களில் தவறாமல் ஒரு மேடைப் பாடல் காட்சி இடம்பெறும். அந்த துள்ளல் இசைப் பாடல்களுக்கு இளமையான குரலாகப் பொருந்தி நின்றது எஸ்‌பி‌பி-யின் குரல்வளம்! ‘நடிகனின் காதலி... நாடகம் ஏனடி’, ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு', ‘எங்கேயும் எப்போதும்’, ‘இளமை இதோ இதோ’, ‘வேதாளம் வந்திருக்குது’ போன்ற கமல்பட துள்ளலோசைப் பாடல்கள் மூலம்தான் அன்றைய இளைஞர்களின் உள்ளம்கவர் பாடகரானார் SPB.

வேறு சில நடிகர்களுக்கும்கூட இதுபோன்ற பாடல்களைப் பாடியிருக்கிறார். பாடல்களின் இடையே குரலை மாற்றிப் பாடுவது, ’ஊ’...’ஹா’...’ஹே’... என்று கத்துவது போன்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளால் சினிமா கதாநாயகனுக்கு இணையாக SPB-யும் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பாரதிராஜா, பாலுமகேந்திரா, டி.ராஜேந்தர் வருகையினால் தமிழ் சினிமா காதல்நோயில் வீழ்ந்தது. ‘வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது’, ‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது’, ‘தோகை இளமயில் ஆடி வருகுது…’ என்று தனது மெல்லிய குரலால் காதல் கனிரசத்தை இவர்களுடன் இணைந்து பிழிந்தெடுத்தார் எஸ்பிபி. பின்பு காதலில் கொஞ்சம் சலிப்பு தட்டியதும், ஒரு சுறுசுறுப்புக்காக கவர்ச்சியை தொட்டுக் கொள்ளத் தொடங்கியது தமிழ் சினிமா.

அனுராதா, சிலுக்கு சுமிதா, டிஸ்கோ சாந்தி போன்ற கவர்ச்சி நடிகைகள் முன்னிலைக்கு வந்தனர். இவர்களுடன் கதாநாயகன் ஒரு ஆட்டமாவது போடாவிட்டால், படம் கல்லா கட்டாது எனுமளவுக்கு தமிழ் சினிமா பரிதாப நிலைக்கு ஆளானது. ‘நேத்து ராத்திரி யம்மா... தூக்கம் போச்சுடி யம்மா...’ இந்த ரகப் பாடல்.

இதன்பிறகு கதாநாயகிகளே கவர்ச்சி வேடம் போட்டுக் கொண்டபோது, ‘நான் பூவெடுத்து வக்கனும் பின்னால’, ‘விளக்கு ஏத்தட்டும்… பகல் வெளிச்சம் ஏறங்கட்டும்’, ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’, ‘அடுக்கு மல்லிக... இது ஆள்பிடிக்குது’ என்று பாடத் தொடங்கினார்கள். இந்த ஆபாசப் பாடல்களுக்கு முக்கல்-முனகல், செல்லச் சிணுங்கல், 'ச்சீ’ போன்ற கலவையுடன் சுவையூட்டி இளைஞர்களை வெறிகொள்ளச் செய்தவர் நமது SPB!

கமலுக்காக பாடிய ‘பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே’, ‘மீண்டும் மீண்டும் வா’ போன்ற பாடல்கள், சில்க் - சுருளிக்காக பாடிய ‘வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட’ போன்ற பாடல்கள் தனித்துவமான குரலால் விரசத்தின், ஆபாசத்தின் உச்சத்தை எட்டின. 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தில் வரும் ‘கடவீதி கலகலக்கும் அக்கா மக அவ நடந்து வந்தா’ போன்ற பாடல்கள் பெண்களை சீண்டும் விதமான பாடலாக வெளியானது.

உச்சமாக, கமல் தயாரிப்பில் வெளியான ‘மகளிர் மட்டும்’ படத்தில் இடம்பெற்ற ‘காள மாடு ஒண்ணு... கறவ மாடு மூணு’ என வாலி எழுதிய பாடல். பெண்களை இழிவுபடுத்தும் இந்த ஆபாசப் பாடலுக்கு எதிராக அன்று இடதுசாரி கட்சிகளின் மகளிர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துப் போராடினார்கள். அப்போது, பாடலைப் பாடிய SPB, “இனிமேல் இரட்டை அர்த்தம் தொனிக்கும் மற்றும் ஆபாச வரிகள் உள்ள பாடல்களை பாட மாட்டேன்” என்று பேட்டியளித்தார். பேட்டி மாத்திரம் தான் அளித்தாரே தவிர தொழிலில் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை எஸ்பிபி.

                                      ***

மெலடிக்கு பேர் போனவர் எஸ்பிபி. கமகங்களை இழுத்து பாடும் போதும் சரி, சங்கதிகளை காட்சிகளுக்கு இணையாகப் பார்த்துப் போடுவதிலும் சரி முற்போக்காளர்களையே மயங்க வைக்கும் திறன் கைவரப் பெற்றவர். ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’, ‘மஞ்சப்பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள’, ‘அபிசேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’, ’நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’, ‘வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா’, காலை நேரப் பூங்குயில்', 'மடை திறந்து', 'அந்திமழை பொழிகிறது', 'இளமை எனும் பூங்காற்று', 'பேரைச் சொல்லவா', 'இது ஒரு பொன்மாலைப் பொழுது', 'கண்மணியே காதல் என்பது', 'ஜெர்மனியின் செந்தேன் மழையே', 'காத்தோடு பூ உரச', 'ராமன் ஆண்டாலும்', 'நான் பொல்லாதவன்', 'நதியோரம்', 'காதல் வைபோகமே', 'கீதம் சங்கீதம்', 'இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு', 'மழைக்கால மேகம் ஒன்று' போன்ற பாடல்கள் எண்பதுகளின் இளைஞர்களை சொக்க வைத்திருந்தன. அந்த சொக்குப் பொடியைப் போட்டவர்களில் முதன்மையானவர் காந்தர்வக் குரல் மன்னன் எஸ்பிபி.

அது எம்ஜிஆரும், இந்திராவும், ராஜீவும், மண்டல் கமிசனுக்கெதிரான போராட்டங்களும், கரசேவையும் நடந்து கொண்டிருந்த காலம். புதிய கல்விக் கொள்கையை கோத்தாரிக்குப் பிறகு இருபதாண்டு கழித்து ராஜீவ் அறிமுகம் செய்கிறார். ஈழப் போராட்டமும், தலித் எழுச்சியும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.

அமைதிப்படையின் அட்டூழியம் தலைதூக்கி திரும்பி வருகிறது. எஸ்பிபி-யோ மூச்சு விடாமல் ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’ எனப் பாடிக் கொண்டிருந்தார்.

'கூவுங்கள் சேவல்களே', 'பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம்', 'புஞ்சையுண்டு நஞ்சையுண்டு' போன்ற இடதுசாரி சாயல் கொண்ட பாடல்களையும் எஸ்பிபி பாடி இருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அளவில் சொற்பமே.

                                **

தொன்னூறுகளில் ‘போவோமா ஊர்கோலம்’ என்ற சின்னத்தம்பியின் சிறப்பான பாடலும், கிழக்கு வாசல் படத்தில் வரும் ‘தளுக்கி தளுக்கி உடல் குலுக்கு குலுக்கி வரும்’ பாடலையும், 'பாடிப் பறந்த கிளி' பாடலையும் ஒருங்கே எஸ்பிபியால் பாட முடிந்தது. தளபதி படத்தின் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' சிறந்த பாடல்களில் ஒன்றாக வெளியானது.

பிறகு ரகுமானின் காலம் வந்தது. 'காதல் ரோஜாவே' பாடலும் பாடி, 'எரானி குரானி கோபாலா' பாடலும் பாடினார் எஸ்பிபி. 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் உலகப் புகழ்பெற்ற அதே நேரத்தில், சாதியை அபத்தமாக புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட படமான இந்திராவில் ‘ஓடக்கார மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சவுக்யமா?’ என்று பாடி விசாரிப்பார் எஸ்பிபி. 'பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட' என்றும் அவரால் பாட முடிந்தது.

அந்த வகையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கொச்சையான காதல் மயக்கத்திலும், ஆபாசப் போதையிலும் இளைய தலைமுறையை கட்டிப் போட்டதற்கு எஸ்பிபி-யின் குரல் வளமும் ஒரு முக்கிய காரணம். புரட்சிகர இயக்கங்கள் மக்களை, குறிப்பாக இளைஞர்களை அணுக முடியாமல் போனதில் எஸ்பிபி பாடிய பாடல்களில் உள்ள அவரது சேட்டைகளுக்கும், கமகங்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது.

வரலாறு, தமிழ் போன்று கேட்க இனிமையாக இருக்கும் எஸ்பிபி-ன் பாடத்தை ஒரு மாணவன் விரும்புவானா அல்லது கோவன் போன்றவர்களது பாரதிதாசன் பாடல்களை விரும்புவானா? கோவனது பாடல்கள் கணக்கு பாடம் போல கேட்பதற்கு கடினமாக இருக்காதா? அந்த வகையில் எல்லாவகை முற்போக்கு இயக்கங்களும் பாவப்பட்ட பெந்தேகோஸ்தே குழுவினர் போலவே வலம் வருகிறார்கள் என்பது உண்மைதானே!

அந்த கோவனே இன்று விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருக்கையில் குறைந்தபட்சம் ‘புஞ்சையுண்டு நஞ்சையுண்டு’ பாடலைச் சொல்லாமல் வேறு ஒரு நோஸ்டால்ஜியாவைக் கிளறிய ’ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ பாடலை தனது அரண்செய் நேர்காணலில் (https://www.youtube.com/watch?v=K9bnfwQ5ubI) தெரிவித்துள்ளார். புரட்சிகரக் கட்சியில் இருந்தவராகக் கருதப்படும் இவருக்கே இந்த நிலைமை என்றால் பெரும்பான்மை மக்களின் நிலைமையை எப்படி கணிப்பது?

தேவர் மகன் திரைப்படத்தில் வரும் பாடல் ‘வானம் தொட்டுப் போனான் மானமுள்ள சாமி’ என்ற சோகப் பாடல் வரும். அதில் ‘பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு? தங்கத்துக்கு மாற்று வேறு யாரு கூறு?’ என சாதிய பரம்பரை அதிகாரத்தை தனது குரலின் தனித்துவத்தால் புனிதமான சரக்காக மாற்றியிருப்பார் எஸ்பிபி. அதிலும் ‘போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ வரிகள் வரும். தொன்னூறுகளில் வெளியான இந்தப் பாடலை கூம்பு ஒலிப்பெருக்கிகளின் வழி தலித் குடியிருப்புகளை நோக்கி கட்டி வால்யூமைக் கூட்டி வைத்து சண்டை இழுக்காத தேவர்கள் வாழும் கிராமங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் பொறுப்புகள் முதன்மையானவை என்றாலும் பாலுவின் தனித்துவமான பாடும் முறை அதற்கு தனது பங்களிப்பினை வழங்கவில்லையா? இதுவும், தொன்னூறுகளில் உருவான லிபரலைசேசன் உருவாக்கிய தலித் மக்கள் மத்தியில் தோன்றிய புதுப் பணப்புழக்கமும், அதன் மீதான ஆதிக்க சாதிகளின் காழ்ப்புணர்ச்சியும் இணைந்து தானே கொடியங்குளம் போன்ற சாதிக் கலவரங்களை நடத்தின.

1997ல் வெளியான மின்சாரக்கனவு திரைப்படத்தில் வரும் ‘தங்கத்தாமரை(றை) மகளே’ பாடல் எஸ்பிபிக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தது. அதில் ஒரு தலைக் காதலில் இருக்கும் கதாநாயகன் காதலியை காமத்துக்கு அணுகும் போது ‘நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை’ எனப் பாடுகிறார் பாலு. ’நோ என்றால் நோ தான்’ என பெண்கள் சொல்வதை நாகரீகம் என்று கொச்சைப்படுத்தியது பாடல்.

தாராளமயமாக்கல் துவக்கத்தில் வந்த காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு லிபரல் அப்பாவாக ’நவீன’ தந்தையாக நடித்திருப்பார். அதாவது அப்பாவும் மகனும் ஒண்ணா உக்காந்த்து வீட்டுக்குள்ள வச்சு தண்ணியடிப்பாங்க. நானும் அப்போது பதின்ம வயதில் இருந்ததால் இப்படி ஒரு அப்பா நமக்குக் கிடைக்கவில்லையே என ஏங்கியிருக்கிறேன். இவையெல்லாம் பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

                                     **

டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற நாவல் அன்னா கரீனினா. அதில் வரும் லெவின் பாத்திரத்தை ‘1861-1905 காலகட்டத்தின் இயல்பான வரலாற்றுத் திருப்புமுனைகளின் பிரதிநிதி’ என்று வர்ணிப்பார் தோழர் லெனின். விவசாயத்தில் சீர்திருத்தங்களை செய்ய முற்படும் லெவின் பாத்திரம் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும்.

எஸ்பிபி-யை டால்ஸ்டாய்க்கு நிகராக நிறுத்திப் பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்கள். லெவின் பாத்திரத்தை ஏற்பதற்கு இயேசுவின் கடைசி நேரப் பதற்றம் வேலைக்கு ஆகாது. எஸ்பிபி அதற்கு சற்றும் பொருத்தமானவர் அல்ல.

என்ன செய்வது, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

- தளபதி சண்முகம்

Pin It