ஒரு சில மாதங்களாக, குழந்தைகள், சிறியவர், பெரியவர் என்றில்லாமல் அனைவரின் வாயிலிருந்தும் ஒரு பாடல் வரி தன்னிச்சையாக வந்து விழுகிறது. அனைவர் வாயிலிருந்தும் வருகிறதா ! ஒரு வேளை பெரிய அறிஞரின் மேற்கோளாக இருக்குமோ என்றெல்லாம் கற்பனையில் மூழ்கிவிட வேண்டாம். "ஒய் திஸ் கொலவெறி...!' இதுதான் அந்த புகழ்பெற்ற பாடல் வரி.
நடிகர் தனுஷ் பாடிய திரைப்படப் பாடலின் முதல் வரிதான் இந்தக் கொலவெறி. பாடல் இடம்பெற்ற படம் "3'. மூன்று படங்கள் அல்ல, படத்தின் பெயரே இதுதான் - 3 என்னும் எண். "ஒய் திஸ் கொலவெறி... கொலவெறி...கொலவெறி..கொலவெறிடி' என்று தொடங்கும் அந்தப் பாடல் தமிங்கலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாடல் தமிழைக் கொலை செய்கிறது, மொழியைச் சிதைக்கிறது, வன்முறையைத் தூண்டுகிறது, குழந்தைகளின் மனத்தில் நச்சுக் கருத்துகளை விதைக்கிறது என்கின்ற விமர்சனங்கள், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தாண்டி, அந்தப் பாடல் தேசிய அளவில் புகழ்பெற்று விட்டது என்பது வேறு கதை.
எல்லாவற்றிலும், எதற்கெடுத்தாலும் "ஒய் திஸ் கொலவெறி' என்று சொல்வது இன்று வாடிக்கையாகியிருப்பதை அந்தப் பாடலுக்குக் கிடைத்த பெருமையாகக் கருத முடியாது. அதன் பொருள் புரியாமல்தான் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள், என்றாலும் கூட, அந்தச் சொல் அவர்கள் மனத்தில் பதிந்து விட்டது. குழந்தைகளின் உலகத்தில் இல்லாத ஒன்றை, இசை என்னும் கலை வடிவத்தைப் பயன்படுத்தி விதைத்து வருகின்றனர். இவையயல்லாம் வெற்றுச் சொற்கள்தானே (empty words) என்று அலட்சியப்படுத்தி விட முடியாது. "இறந்துபோன செல்கள்' தான் புற்றுநோய்க்குக் காரணமான கேடுவிளைவிக்கும் கழலைகளை (Malignant tumours) உண்டாக்கு கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பாடல் பற்றிய விவாதத்தில், இது புதிய இசை வடிவம், ரசிகர்களின் ரசிப்புத் தன்மை மாறி வருகிறது அதற்கேற்றவிதத்தில் பாடல்களை அமைப்பதில் என்ன தவறு என்பது போன்று கருத்துகள் முன் வைக்கப்பட்டன. "அதிநவீனத்துவவாதி'யான சாருநிவேதிதா "இசையின் புனிதத்தை உடைக்கிற முயற்சிதான் இதுபோன்ற பாடல்கள்... நவீனத்தை வரவேற்க வேண்டும்' என்று சொன்னார். உடைக்க வேண்டிய புனிதங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அங்கெல்லாம் இவர்கள் மூக்கை நுழைப்பதில்லை. சொல்ல வருவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடி சொல்வதுதான் இவர்கள் சொல்லும் நவீனத்துவம் போலும்.
அண்மையில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியை உமாமகேசுவரியை, பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே, இர்பான் என்னும் மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. அந்த மாணவன் அக்னிபாத் என்னும் இந்திப் படத்தை அடிக்கடி டிவிடியில் போட்டுப் பார்த்திருக்கிறான். அதில் வரும் கொலைவெறி பிடித்தலையும் ஒரு கதாபத்திரம் இவனை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது. இதுவும் இந்தக் கொலையைச் செய்ய ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
திரைப்படங்கள் இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டு கின்றன, சமூகத்தைச் சீரழிக்கின்றன என்பது ஒரு பக்கத்தில் சொல்லப் படும் குற்றச்சாட்டு. சமூகத்தில் நடப்பதைத்தானே நாங்கள் திரைப் படத்தில் காட்டுகிறோம் என்பது திரைத்துறையினர் சொல்லும் விளக்கம். இது ஏறத்தாழ, "காற்றுவந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததால் காற்று வந்ததா' என்ற வகையைச் சேர்ந்தது. திரைப்படங்களில் பேசப்பட வேண்டிய சமூகப் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன. இரத்தம் நம் உடலுக்குள்ளே இருக்கிறது என்பதைக் காட்ட, அதை வெளியில் எடுத்து ஓடவிடுவது புத்திசாலித்தனம் ஆகுமா?
குடும்பப் பொறுப்புள்ள கதாநாயகனைக் காட்டிய திரைப்படங்கள், "போக்கிரி'யாகவும், "பொல்லாதவனா'கவும் காட்டுகின்றன. தாதா ஹீரோயிசம் திரைப்படங்களில் போற்றி வளர்க்கப்படுகிறது. "நல்லாப் படிடா, படிப்புதான்டா நாளைக்கு சோறுபோடும்'' என்று சொல்லும் பெற்றோரிடம், "வராத படிப்ப வா வான்னா எப்படி வரும்?'' என பொல்லாதவன் படத்தில் தனுஷ் பேசிய வசனத்தைச் சொல்கின்றனர் பிள்ளைகள். தேர்வு நெருங்குகிறது எனவே சிறப்பு வகுப்பு எடுக்கப்போகிறேன் என்று ஆசிரியர் சொன்னால், "ஒய் திஸ் கொலவெறி டீச்சர்'' என்று கேட்கின்றனர் மாணவர்கள்.
"வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
............
என் பொண்டாட்டி பொண்டாட்டி ஐ லவ் யூ டில் யூ ஆர் எ பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி எனக்குத் தேவையில்ல வப்பாட்டி''
இது ஒஸ்தி படத்தின் பாட்டு. இதுவும் நீக்கமற எல்லோராலும் பாடப்படுகிறது.
சூத்திரர்களாக்கி நம்மை இழிவு படுத்திய சொல்லை, இசை என்ற கலை வடிவில் நம் தலைமுறைகளை உச்சரிக்க வைத்துவிட்டனர். இவர்களைக் கலைஞர்கள் என்றும், அவர்கள் பிழைப்புக்காகக் கையாள்கின்ற "கருத்தியல் வன்முறை உத்தி'யைக் கலை என்றும் ஏற்றுக்கொள்ள முடியுமா? இதுதான் சாருநிவேதிதா, தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சொல்லும் புனிதத்தை உடைக்கும் வழியா, பழைமையைத் தகர்க்கும் நவீனத்துவமா?
"மயக்கம் என்ன' என்றொரு படம். அதில் ஒரு பாட்டு,
"அடிடா...அவள, ஒதடா...அவள' என்கிறது.
"எவன்டி பெத்தான் உன்ன
அவன் கையில கெடச்சா செத்தான்' - இது இன்னொரு பாட்டு.
"கலை எனப்படுவது இனப்படுகொலை என்றால்...' என்ற எஸ்.வி. ராஜதுரையின் நூல் தலைப்பைத்தான் இதுபோன்ற திரைப்படங்களும், பாடல்களும் நமக்கு நினைவூட்டுகின்றன. குறைந்த பட்ச சமூக அக்கறைகூட இல்லாதவர்களால் திரைப்படக்கலை என்பது ஆபத்தான ஆயுதமாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
இது காட்சி ஊடகங்களின் காலம். தொலைக்காட்சி, இணையத்தளம், வலைத்தளங்கள் போன்றவை வேண்டியவை வேண்டாதவை என எல்லாவற்றையும் நம் வீட்டிற்குள்ளே கொண்டுவந்து குப்பையைப் போலக் கொட்டுகின்றன. நம்முடைய குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதில் பெற்றோர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். வீடியோ கேம்ஸ் எனப்படும் விளையாட்டுகளிலும், கணினியில் ஆடும் விளையாட்டுகளிலும் கூட வினை விதைக்கப்படுகிறது.
விப் த வொர்க்கர் (whip the worker) என்றொரு விளையாட்டு கணினியில் இருக்கிறது. ஒரு மனிதனின் முகத்தில் இரண்டு கைகளாலும் மாறி மாறிக் குத்துவிடுவதுதான் அந்த விளையாட்டு. நம்முடன் வேலை பார்ப்பவர்களில், நாம் அடிக்க விரும்பும் மனிதரை அடிப்பதாக நினைத்துக் கொண்டு இந்த விளையாட்டை விளையாடினால் நமக்கு மன அழுத்தம் குறையும் என்கிறது இந்த விளையாட்டின் அறிமுகப் பகுதி. சக மனிதனை அடிப்பதும், அவன் அடி வாங்குவதைக் கண்டு கைதட்டி மகிழ்வதும் இவர்களுக்கு விளையாட் டாகப் போய்விட்டது.
இந்த மனநிலையில் வளர்க்கப்படும் பிள்ளைகள், எவன் செத்தால் எனக்கென்ன, என்னுடைய மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம் என்று நினைக்கின்ற சுயநலவாதிகளாக உருவாவார்கள். இன்னும் சில விளையாட்டுகள் ஒரு பக்கச் சார்பான சிந்தனையை பிள்ளைகளிடம் வளர்க்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக ஒரு விளையாட்டு: பாறைகள் நிறைந்த ஒரு நிலப்பகுதி. அந்தப் பாறைகளின் பின்புறம் இருந்து பின்லேடன் வெளியே வருகிறார். அப்படி வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டுச் சிதறடிக்க வேண்டும். இப்படி எத்தனை முறை பின்லேடனைக் கொல்கிறோம் என்பதைப் பொறுத்து வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
பின்லேடனை தீவிரவாதியாக மட்டுமன்று, இசுலாமிய மதத்தின் ஓர் அடையாளமாகவும் சித்தரித்து வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, இந்த விளையாட்டின் நோக்கம் என்னவாக இருக்க முடியும் என்பதையும், இதை வடிவமைத்தவர்கள் யார் என்பதையும் நாம் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
குற்றவாளிகளில் 90 விழுக்காட்டினர் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். சிறு வயதிலேயே இத்தனை புறத்தாக்கு தல்களுக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்களாகும் போது ஆபத்தானவர்களாக மாறிவிடுகின்றனர். போலச் செய்தல் (இமிடேசன்) குழந்தைகளின் இயல்பு. எனவே முதல் கவனிப்பும், அக்கறையும் வீட்டிற்குள்ளிருந்தே தொடங்க வேண்டி யிருக்கிறது. சொத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் நமக்குத்தான்.