கீற்றில் தேட...

"மழைக்காட்டு வழியில பெரும் மத யானை கதிகலங்க
புலி சிங்கம் புதருக்குள்ள புரியாம கொல நடுங்க
புரியாம கொல நடுங்க புலி சிங்கம் புதருக்குள்ள
பெரும் மத யானை கதிகலங்க மழைக்காட்டு வழியில
கதிகலங்க கதிகலங்க மத யானை கதிகலங்க
புலி சிங்கம் புதருக்குள்ள புரியாம கொல நடுங்க

வர்றான் பாரு வர்றான் பாரு வாட்டாக்குடி இரணியன்
தாறான் பாரு தாறான் பாரு தானதருமம் இரணியன்
செத்தவன் நடந்து வர்றான் சிவலோகம் போயி வர்றான்
மற்றவனை போல இல்ல... மரணத்தை இவன் வென்று வர்றான்"

படம் ஆரம்பிக்கையிலேயே தேவாவின் குரலில்..... செவ்வணக்கம் தானாக பிறக்கிறது.

murali in iraniyanகண்கள் கலங்காமல் என்னால் இந்த பாட்டை கடக்கவே முடியவில்லை. அடிமைப்பட்ட கூட்டத்தின் கண்ணீரை நான் உள்ளும் புறமும் கண்டேன்.

"மாணிக்கம் உன்ன புதைக்கல... விதைச்சிருக்கோம்..." அந்த அப்போராட்டத்தின் முதல் உயிரை பறி கொடுத்து விட்டு இரணியன் பேசுகையில்...சினிமாவைத் தாண்டி நிஜம் சுடுகிறது.

முறுக்கு மீசையும்... நெருப்பு கண்களுக்குமாக இரணியன் ஆண்டையை எதிர்த்து பேச ஆரம்பிக்கையிலேயே முரளி என்று அற்புதமான நடிகன் இரணியன் ஆக மாறி விடுகிறான்.

"காஞ்சி கிடந்த பூமியிலே இவன் காலு பட்டதும் ஈரம் தான்..
கானக்குயிலும் மானும் மயிலும் இவன் வருகையில் ஆடும்தான்
ஆறு போல மனசு தான்... அஞ்சிடாத வயது தான்
காடும் மழையும் நடுங்குதா... கருப்பு சிங்கம் வருகுதா.."

ஆண்டை அடிமை சண்டை... தான் கதைக்களம். நிலச்சுவான்களின் ஒட்டு மொட்டு அடையாளமாக ஆண்டை. ஆக்கிரமிப்பின் அடாவடித்தனம்.. தன்னை கடவுளென நினைக்கும் மனோபாவம். அகங்காரத்தின் உச்சம்....என அந்த பாத்திரத்தில் நம்ம ரகுவரன்.... பார்வையாலேயே மிரட்டுவதெல்லாம்.... நடிப்பு ராட்சசனின் ரட்சிப்பு.

சாணிப்பால்..... சவுக்கடி.. அடிமைத்தனம்.. எல்லாவற்றையும் எதிர்க்கும் இரணியன்... ஆண்டைக்கு தலைவலி ஆகிறான். மாற்றி மாற்றி போராட்டம். வேலையில்லா பட்டினி பஞ்சம் என்று ஆண்டையால் அந்த ஊர் ஒதுக்கப்படுகிறது. "சூரியன் உதிச்சு மறையற வரை எல்லாமே ஆண்டையின் நிலம். ஆண்டையை பகைச்சிகிட்டு ஏழை மக்கள் சோத்துக்கு எங்க தான் போறது" என்று கேள்வி நிலவுடமை தத்துவத்தை ஆழமாக யோசிக்க வைக்கிறது. பிரபுத்துவ வழிமுறையை மறுபரிசீலனை செய்ய சொல்கிறது. வலியவன் எடுத்துக் கொண்டால் எளியவன் என்ன செய்வான்.

"இருப்பவன் தரமாட்டான்... இல்லாதாவன் விடமாட்டான்" பட்டுக்கோட்டையாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

சண்டை முற்றுகிறது. ஆண்டையின் இரு மகன்களை கொள்கிறான்... இரணியன். காவல்துறை வழக்கம் போல ஆண்டை பக்கம் நின்று இரணியனை வேட்டையாட அலைகிறது. காட்டுக்குள் ஒளிந்து திரிந்தாலும் ஊருக்கு காவலனாகிறான் இரணியன். ஊரே பஞ்சத்தில் இருக்கையில்... "நாம உழைச்சது தான...கேட்டு கிடைக்கலனா நாமே எடுத்துக்கணும்" என்று தனியுடமையை கூறு போடும் சித்தாந்தம் விதைக்கிறான். பொதுவுடமை பொன்னுலகத்துக்கு தவியாய் தவிக்கும் அவன் கண்களில் உறக்கம் இல்லை. உரிமை மட்டுமே எரிகிறது.

"அசுரன்" படத்துக்கெல்லாம் முன்னோடி இந்த "இரணியன்". கொண்டாடி இருக்க வேண்டிய பாடம்.

படம் ஆரம்பிக்கையிலேயே "இது ஒரு கற்பனை கதை. யாரையும் குறிப்பிடுவன அல்ல" என்று கார்ட் போடுகிறார்கள். ஊரறிந்த கதையைக் கூட இங்கே இப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கிறது என்பதில் உள்ள அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலை புரிய முடிகிறது. அதே நேரம் "வரலாற்றில் மறைக்கப்பட்ட சரித்திர புருஷர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் " என்று கார்ட் போட்டு நிம்மதியைத் தேடிக் கொள்கிறார் இயக்குனர். படம் நிறைய இடங்களில் தாறுமாறாக வெட்டப் பட்டிருக்கிறது. நிறைய இடங்களில் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. முதலில் இப்படி ஒரு விஷயத்தை படமாக்க வேண்டும் என்ற முயற்சிக்கே இயக்குனர் வின்சென்ட் செல்வாவை பாராட்ட வேண்டும்.

"இரணியன் மூச்சு விட்டா இரும்பு கதவு பறந்தது
தடைகளும் சிறைகளும்தான் தவிடு பொடிகள் ஆனது
உருக்கமாக சொன்னா உலகில் இவன் கதையோ பெருசுடா
சுருக்கமா சொன்னா இவன் சுபாஷ் சந்த்ர போஸுடா"

தன் கொள்கையின் போக்கை எதிர்க்கும் தன் அப்பா அம்மாவிடம் இரணியன் பேசும் வசனம் உண்மையின் கூர்.

"முக்கால் துட்டுக்கு நாள் முழுக்க அம்மா போய் ஆண்டை வயல்ல இறங்கி வேலை பாக்கட்டும்... முழு நாளும் ஆண்டை வயல்ல மாடு மாதிரி அப்பா உழுகட்டும்... அப்போ தான் இந்த வேகாத வெயில்ல உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்காம மக்கள் படர பாடு புரியும்..." வாழ்வின் வலி நிறைந்த பக்கம்....அடிமைப்பட்ட வயல்வெளிகளில் ஒளிந்திருக்கிறது.

இரவுகளில் ஊருக்குகள் மாறு வேஷத்தில் உலா வருகிறான். எல்லாருக்கும் உதவுகிறான். காதல் மனைவியை பிரிந்திருக்கிறான். அவன் அப்பாவை அடித்தே கொள்கிறது காவல் துறை. ஊரில்.... பாதி பேரை கஞ்சியில் விஷம் வைத்துக் கொள்கிறான் ஆண்டை. உருக்குலைந்த ஊரில் தனித்த அய்யனாராக அலைகிறான் இரணியன். இனி ஆண்டையை கொன்று கூறு போடுவது தவிர வேறு வழி இல்லை. எல்லா வழிகளையும் ஒருவன் அடைத்துக் கொண்டால்.... மனிதன் போவதற்கு மட்டுமல்ல... பிணம் போவதற்கும் அடித்து ஒழிக்கத்தான் வேண்டும்.

வன்முறை தீர்வல்லதான். சரி, எது தான் தீர்வு. அகிம்சையா...? அகிம்சை மிகப்பெரிய ஆயுதம் தான். மிக மென்மையாக பொறுமையாக வெற்றி பெரும். பொறுத்தவன் பூமி ஆள பொறுத்தவன் உயிரோடு இருக்க வேண்டுமே... திரும்பவும் மாவோ தத்துவம்தான் முன்னே வருகிறது.

"நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்..." இரணியன் கையில் அறுவாளைக் கொடுத்தது ஆண்டையே. ஆண்டைகள் இருக்கும் வரை இரணியன்களும் இருப்பார்கள். வலுத்தவனே எடுத்துக் கொண்டிருந்தால்..... இளைத்தவன் என்ன செய்வான்.

"பொறந்தது ஒரு கதை தான்...இவன் வளந்தது ஒரு கதை தான்
சாதி சண்டையும் சாமி சண்டையும் விரும்பிடாத மனம் தான்
யாருக்காக நடந்தான் ஏழை சனத்தில் கலந்தான்
போரைத் தொடர்ந்து வளந்தான்
பொன்னி மனசை கவர்ந்தான்"

இந்த வரி தாண்டுகையில் கண்ணீர் கொட்ட தான் எழுதுகிறேன். காரணம் எல்லாம் தேவை இல்லை.... விடுதலை இன்னும் வேண்டி இருக்கிறது.

ஆண்டை என்பது ஒரு குறியீடு. அது ஒரு மனநிலை. ஆண்டை என்பது ஒரு தொடர் நிகழ்வு. பரம்பரை பரம்பரையாக அது ஒரு மதி மயக்கத்தை விதைத்திருக்கிறது. அதை தெளிய வைக்க நேரம் எடுக்கத்தான் செய்யும். அதற்கு விலை கொடுக்கத்தான் வேண்டும். ஆண்டையின் கண்களில் எப்போதும் ஒரு ஆக்கிரமிப்பு.. அதிகார தொனி ஊர்ந்து கொண்டேயிருப்பதை காண முடிகிறது. அடிமைப்பட்ட கூட்டமும் அதற்கு மிக இலகுவாக பழகி இருக்கிறது. ஆண்டையின் உடல் மொழியில் ஆண்டாண்டு காலமாக உக்காந்து சாப்பிட்ட வயிற்றின் நிறைவு இருக்கிறது. தனக்கு கீழே அடிமைகளைக் கொண்டிருப்பது ஒரு வித நிதானமிழப்பு. அது தான் நடக்கிறது. அது ஒரு ஈகோவின் வெளிப்பாடு. தனக்கு கீழே வேலை செய்தவன் தன் சோற்றை தின்றவன் தனக்கு எதிராக நியாயம் பேசுவதா.....நின்று நேருக்கு நேர் பார்ப்பதா..... செருப்பு போட்டுக் கொண்டு நடப்பதா..... தோளில் துண்டு போட்டிருப்பதா......போன்ற வயித்தெரிச்சலின் அடுத்த கட்டம் தான்... ஏழைகளுக்கு எதிரே ஒரு அதிகார வர்க்கம் இன்னும் பலமாக தன்னை கட்டமைத்துக் கொள்வது.

எங்கெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ அங்கெல்லாம் தர்மம் ஒரு தலைவனை உருவாக்கும். அவன் கேள்வி கேட்பான். உரக்க பேசுவான். கண்ணீர் சிந்தி வெற்றி பெற்ற சரித்திரம் இல்லை. ரத்தம் சிந்திய வரலாறு தான் இருக்கிறது. ஏசுவில் ஆரம்பித்து சே குவேரா வரை அது தான் நிதர்சனம். உரிமைக்கு குரல் கொடுத்தவன் கொல்லப்படுவான். சாவதெல்லாம் சாதாரணமானவனுக்குதான். சரித்திரத்தை மாற்றியவனுக்கு இல்லை. கொடி ஏற்றுபவனா தலைவன். கொள்கைக்கு உயிர் கொடுப்பான் தான் தலைவன்.

எல்லா புரட்சியிலும் சாவு எதிரியிடம் இருந்து தான் வரும். இரணியனுக்கு மட்டும் தன் சொந்த மக்களால் நிழ்ந்தது தான் வரலாற்றுக் கொடுமை. காலப்பிழை. சினிமாவில் அப்படித்தான் காட்டப் படுகிறது. எந்தளவுக்கு நிஜம் என்று தெரியவில்லை. ஆனால் இரணியன் இறந்தது நிஜம்.

"உன்னாலதான் நாங்க ஊரை காலி செய்யறோம்... உன்னாலதான் நாங்க அடிமையா இல்லாம போனோம்..... உன்னாலதான் நாங்க ஆண்டையின் பகையை கட்டிக் கொண்டு நடுங்கறோம்... உன்னாலதான் ஊர்ல பாதி பேர் செத்துப் போனாங்க... " சொல்லி சொல்லி கல்லால் அடித்தே கொல்கிறார்கள். பதறுகிறது நமக்கு. சொந்த இனத்தின் அறியாமை தான் பல நல்ல தலைவர்களை இழக்கச் செய்திருக்கிறது....

" எனக்கு சந்தோசமா இருக்குடா ஆண்டை......என்னைக் கொல்ல கூடுன என் மக்கள் கூட்டம்.....ஒரு நாள் உன்னையும் கொல்லக் கூடுண்டா.. உன் அதிகார திமிர அடக்கும்.. பொதுவுடமை பொன்னுலகம் பூக்கும்னு நம்பிக்கை வந்திருச்சுடா... நான் செத்தா வரலாறுடா.... நீ செத்தா வெறும் பொணம்...." என்று உயிர் போகையில் இரணியன் பேசுவதெல்லாம் குலை நடுங்க செய்யும் நிஜங்கள்.

இரணியனின் ரத்தத்தில் அந்த ஊரின் பாவம் கழுவப்படுகிறது.

"சுயநல துளியும் இல்லை... பொதுநலமாக வாழ்ந்துட்டான்
சுதந்திரம் ஊருக்காக இவன் தனியா வாங்கிட்டான்
எங்க ராசன் இரணியனை எந்த நாடும் பேசுண்டா
எங்க ஊரு புல்லு பூண்டும் இவன் பேர சொல்லுண்டா..." 

படம் : இரணியன்
மொழி: தமிழ்
இயக்குனர்: வின்சென்ட் செல்வா
வருடம் : 1999

- கவிஜி