வன்முறை தீர்வென்று சொல்லவில்லை. அதே நேரம் அகிம்சையும் இங்கு தீரவில்லை.
இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது உறியடி 2 படத்தின் பார்வையை.
விவேகானந்தர் கேட்ட அந்த பத்து இளைஞர்களின் ஒருவன் தான் இந்த விஜய் குமார். சினிமாவுக்காக வரவைக்கப்பட்ட கோபம் இல்லை. இன்றைய கேடுகெட்ட அரசியல் 'பிழை' ப்பின் மீதுள்ள பெரும்கோபம்.....விஜய் குமாரின் ஒவ்வொரு அசைவிலும் தெரிவதை மனதார கொண்டாடத்தான் வேண்டும். பல நேரங்களில் வரும் மௌனங்களில்......யோசனைகளில்.... அமைதியில்.... உள்ளூர யோசிக்கும் தேவையின் கோபத்தை உற்று நோக்கத்தான் வேண்டும். புது நம்பிக்கையை இந்த மனிதன் தருகிறான் என்றால்...அவன் பின்னால் செல்ல ஒரு போதும் தயங்காது இந்தக் கூட்டம். இங்கு சரியான தலைவன் இல்லை. அது தான் எதிர்வினை ஆற்றுகிறது. காசும் அது சார்ந்த வியாபாரமும் மணிமண்டபம் காட்டுகிறது. கிரிமினல்களிடம் எல்லாத்தையும் தந்துவிட்டு வாயில் ஈ போக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் மூடத்தனம் அல்லது மோடித்தனம் நமக்குள் எப்படியோ விதைக்கப்பட்டு விட்டது. கண்கள் திறந்து களைய வேண்டிய தருணம் இது.
தத்ததிகிட தத்தகிட தத்தகிட தத்தோம்....
பாரதியின் மீசை எப்படி மழுங்கும்.. அது கூர் கொண்ட ஈட்டியின் சுவாசத்தில் தானே இயங்கும். இயங்குகிறது......தி ருப்பி தாக்கும் போதெல்லாம் எதிரியின் பலமும் சேர்ந்து கொள்கிறது.
"அக்கினி குஞ்சொன்று கண்டேன்... அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்று மூப்பென்று உண்டோ...."
நிகழ்கால அரசியலை தோலுரித்துக் காட்டும் விஜய் குமாரின் இரண்டாவது படம் இது. இரண்டு படத்தில் வரும் கதைக்களமுமே....இந்த மனித குலத்துக்கு விட்ட எச்சரிக்கை.
"கவனமா இரு.. இல்ல.. விஷவாயு தாக்கி சாவாய்.... அந்நிய முதலீட்டுக்கு பலிகடா ஆவாய். மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு தயாராக வேண்டி வரும்...."
போபால் விசவாயு சம்பவம் மறந்திருக்க மாட்டோம். அது தான்..,. தூத்துக்குடியில் நிகழ இருக்கிறது. அது தான்.. மேற்கு தொடர்ச்சி மலைகளில் நிகழ இருக்கிறது. டெக்னாலஜி என்ற பெயரில்... முன்னேற்றம் என்ற பெயரில்.. இயற்கை வளங்களை அழித்து அழித்து சுடுகாட்டுக்கு நம்மைத் தத்தெடுக்கும் வேலைகளை கைக்கூலிகள் செய்து கொண்டிருப்பதை இன்னமும் புரிந்து கொள்ளாவிட்டால்... இந்த இனம் அழிந்து தான் போகும். விழித்துக் கொள்ளவில்லை என்றால்... இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகம் அழிக்கப்படும். உலகம் முழுக்க பரவி இருக்கும் தமிழ் இனம் அறிவிலும் ஆற்றலிலும் முன்னோடி யாக இருக்கும் உலக சக்தி,. அதை அழிப்பதில் தான் அந்நிய சக்திகளின் ஆட்சியும் சந்தையும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
தயவு செய்து இந்த ஆண்ட பரம்பரையெல்லாம் கொஞ்சம் முகம் கழுவி விட்டு படம் பாருங்கள். நீங்கள் பகல் கனவு காண ஆரம்பித்து வெகு நாட்களாயிற்று.
எப்போதெல்லாம் இந்த சமூகத்தின் சமநிலை தவறுகிறதோ அப்போதெல்லாம் விஜய் குமார் மாதிரி ஒருவன் வந்து கொண்டேயிருப்பான். கல்புர்கியைக் கொன்றது போல, நரேந்திர தபோல்கரை கொன்றது போல, கவ்ரி லங்கேஷ் ஐ கொன்றது போல நாளை அவனை யாரும் கொல்லவும் கூடும். ஆனால் அது பற்றியெல்லாம் அவன் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அவன் எல்லாவற்றையும் கடந்து தான் இங்கு கருப்பு சட்டை அணிந்து, சிவப்பு சட்டை அணிந்து, "அரசியல்ல நாம தலையிடலனா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்" என்று உண்மையைப் பேசுகிறான்.
அவன் இவன் என்று ஏன் சொல்கிறேன் என்றால்.....நாங்கள் பாரதியை அப்படித்தான் சொல்வோம். அத்தனை நெருக்கம் அவன் எங்களுக்கு.
ஒரு தொழிற்சாலைக்குள் நடைபெறும் தொழில் நுட்பம் சார்ந்த விவரணைகளை இதற்கு முன் எந்த படத்திலும் இத்தனை நெருக்கத்தில் நாம் கண்டிருக்க மாட்டோம். இடைவேளை காட்சியில் ஆழ்மனம் அலறும். சுவாசிக்க திணறும் பாவனையில் ஒவ்வொரு இருக்கையிலும் பெருமூச்சு.
சினிமா என்பது கலை. கலை என்பது ஒருவகையில் ஆயுதம். அது மக்களுக்கான ஆயுதம். அதை சரியாக கையாண்டிருக்கிறான்... நம் தோழன். உலக முதலாளிகள் பத்து பேருக்காகவா இந்த உலகம் இயங்குகிறது...! அப்படிதான் அது இயங்க வேண்டுமா? அப்படி இயங்கினால் அதில் தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம். வியாபாரமே வாழ்வென்று ஆக்கியது யார். காற்றையும் நீரையும் காசாக்கியவனை கொன்றால் தான் தகும். சமூகத்தின் சமநிலை தவறும் போதெல்லாம் அதை சரி செய்ய வேண்டியிருக்கிறது.....ஆயுதம் கொண்டோ அகிம்சை கொண்டோ...
ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை பாத்திரங்கள்.. எப்படி முடிந்தது. ஒரு கதாபாத்திரம் கூட நடித்ததாக தெரியவில்லை. வாழ்ந்திருக்கிறது. நிஜத்துக்கு வெகு அருகில் இருக்கையில்... படம் மறந்து ஆவணப்படம் வந்து விடுகிறது. அது பற்றியெல்லாம் கவலை இல்லை விஜயகுமார். உன் எச்சரிக்கை மணி கட்டங்களை அழித்து விடுகிறது. இது சினிமாவாக சரியாக உருவாகாமல் கூட போயிருக்கலாம். ஆனால்... உள்ளே இருக்கும் ஆன்மாவை புரிந்து கொள்ள முடிகிறது. அது போதுமானதாக இருக்கிறது.
எந்த கட்டுப்பாடும் பாதுகாப்பும் இல்லாமல் இயங்கும் ஆலைகளின் வியாபாரம், கொன்று குவிப்பது மானுட சந்தைகளின் தவிப்பை என்பதை கன்னத்தில் அறைந்து சொல்லும் இந்த தோழனுக்கு சல்யூட் அடித்து தான் தீர வேண்டும். ஊரே கிரிக்கெட் பார்க்கையில் ஒருத்தன் மட்டும் கத்தி கொண்டு இனி இருக்க முடியாது. தியேட்டரில் விஜய்குமார் பேசும் காட்சிகளில் எல்லாம் கரகோஷம் குவிந்தது. நம்பிக்கை வந்த பொழுது அது. நாம் கேட்க நினைத்த அத்தனை கேடுகெட்ட கேள்விகளையும் அவன் கேட்கிறான். செருப்பால் அடிப்பது போல இருக்கிறது. ஆளும் கட்சி எதிர்கட்சினு இந்த 50 வருசத்துல ஜான் ஏறி முழம் சறுக்கிய அரசியல் நமது. எல்லாவற்றையும் உள்வாங்கி டீடைலிங் செய்த திரைக்கதை இது. பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் இல்லை. ஆனால் மனம் பதபதைக்கும் மரணங்கள் உண்டு. நம் வீட்டுக்கு வராத வரை டெங்குவும் பன்றிக்காய்ச்சலும் நமக்கு செய்தி தான். செய்தி தாண்டி அதில் உள்ள பரிதவிப்பை ஒவ்வொரு மனிதனும் உணர்கையில்.... இந்த சந்தையின் நோக்கம் புரிந்து கொள்ள முடியும். எதிர்வினையாற்ற மானுடன் வினைக்கு சாவும் போக்கு இனியும் வேண்டாம்.
எல்லா களவாணிகளும் எல்லா கூட்டத்திலும் இருப்பார்கள். கண்டு களையெடுக்க வேண்டும். உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
இறுதிக் காட்சியில்... தத்தகிட தத்தகிட தத்தகிட பி ஜி எம்......அதே வேகத்தோடு அதே கோபத்தோடு நம் மனசாட்சியின் வடிவில்.. விஜய் குமார் கையில் ஆயுதம். வன்முறை தீர்வென்று சொல்லவில்லை. அதே நேரம் அகிம்சையும் இங்கு தீரவில்லை. வேறு வழியின்றி நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.
இது மிக மோசமான அரசியல் களம்.... நின்று போராடித்தான் விட்ட இடத்தை பிடிக்க முடியும்.
உறியடி1 ல் இருந்த நண்பர்களே இதிலும் இருந்திருக்கலாம். அதுவும் அந்த கண்ணாடி நண்பன் இருந்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும். சினிமாவுக்கே உண்டான குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் வாழ்வின் சாயலைக் காட்டுகையில் அங்கே குறைகள் கண்டுகொள்ள தேவை இல்லை. தூத்துக்குடி விஷயம் தான் கதையின் மையம். பரிதவிக்கும் சாவுகளின் கோரத்தை சினிமாவில் காணவே நடுங்குகிறது. டெட் பாடி ஆட்சி செய்தால் நிஜமாகவும் ஆகும். செத்தாலும் அடிமை வாழ்வை தமிழினம் ஒருபோதும் ஏற்காது. சாதி விட்டெறிந்து விட்டு சாமியை வீட்டுக்குள் வைத்து விட்டு வீதிக்கு வந்து நில்....போராடு.....
போராடி செத்தாலும் அது தான் நிம்மதி. எட்டப்பன்கள் வாழும் இதே மண்ணில் தான் கட்டபொம்மன்களும் வாழ்கிறார்கள். வேடிக்கை மனிதராய் ஒரு போதும் வீழ்த்திடக்கூடாது.
பாரதி வாழ்ந்த நாட்டில்.... அக்கினி குஞ்சுகளுக்கு பஞ்சம் இல்லை.
விஜய்குமாருக்கு வீர வணக்கங்கள்.
- கவிஜி