கிளர்ச்சியாளர்களே சட்டத்தின் வடிவமைப்புக்கு உதவுகிறார்கள்.  
 
ashes in the snowவலதுசாரி மட்டுமல்ல. இடதுசாரியும் கொன்று குவிக்கும் என்பதை இந்த படம் திரையிட்டு காட்டுகிறது.
 
அதிகாரம் மைனாரிட்டுக்கு வரும் போது மைனாரிட்டியும் அதிகாரமே செய்யும் என்ற பார்வையை முன் வைக்கிறது. அதிகாரத்தின் தோரணை அப்படி. தொழிலாளி முதலாளி ஆன பின் முதலாளியின் குணங்களோடு தான் அவன் ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறான். இது தான் வர்க்க பேதங்களின் அடிப்படை விதியோ என்று பார்க்கிறேன்.
 
இரண்டாம் உலக போர் சமயத்தில் நடக்கும் கதை. நடந்த உண்மைக் கதைகளின் கூட்டு என்று தான் எழுத்தில் போடுகிறார்கள்.
 
16 வயது ஓவிய பெண் தன் அம்மாவோடும் தம்பியோடும் சைபீரியாவுக்கு அடிமையாக.......அகதியாக நாடு கடத்தப்படுவது தான் கதை. கடத்துவது நமது "ஜோசப் ஸ்டாலின்". ஏன் ரஷ்யா உடைந்தது என்று இந்த படத்தை கண்ட பிறகு தான் நுட்பகமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. யூதர்களின் மீது ஹிட்லர் கொண்ட வெறுப்புக்கு சற்றும் குறைவில்லாதது..... சோசலிசம் அல்லாதர்வர்கள் மீது ஸ்டாலின் கொண்ட வெறுப்பு.
 
பகல் முழுக்க கிழங்குகளை பறிக்கும் வேலை,. எல்லாமே ரேஷன் தான். ஒரு ஓவியக்காரியை ஒன்றுமில்லாமல் பண்ணுகிறது இந்த அடக்குமுறை. உரிமையைக் கேட்டால்....அது சொல் பேச்சு கேளாமை. உடம்பு சரியாய் இல்லை என்று இயலாமையில் அமர்ந்தால் கூட அது சட்டத்தை மீறுவது......ஆயுதத்தின் வழி தான் ஒவ்வொரு நாளையும் விடிய வைப்பது என்று ஸ்டாலினின் அராஜகம்...என்னை போன்ற கம்யூனிச சிந்தனைவாதிகளை சற்று அசைத்துப் பார்க்கிறது. 6 வாரங்கள் ஒரு ரயிலில் கும்பலாக மாட்டை அடைப்பது போல அடைத்து செல்லும் காட்சி.. ஹிட்லரின் பலி கூடாரங்களையே நினைவூட்டுகின்றது
 
எல்லாக் காலங்களிலும் அதிகாரம் இருக்கும் கரங்களில் மனிதர்கள் புழுக்களை போல நசுக்கப் பட்டுக் கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். அது அப்படித்தான் தொடருமோ என்று கூட யோசிக்க வேண்டி இருக்கிறது. ஆதிக்கத்தின் அச்சு அப்படி ஒரு வார்ப்பில் தான் ஊற்றப்பட்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பது தான் இங்கு இருத்தல். கீழுள்ளோன் மேலே வந்தாலும் கூட அவன் மேலுள்ளவன் போல தான் கீழுள்ளவனை ஆட்டிப் படைக்கிறான். படைப்பது என்று வந்து விட்டால் அங்கு கொம்பு முளைக்கும் தத்துவம் முளைத்து விடுகிறது.
 
அந்த ரயில் பெட்டியின் இருட்டுக்குள் மூச்சடைத்து சாகும் பச்சிளம் குழந்தையில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அந்த தாய் மூச்சு முட்ட அழுவதில் நம் தலை மீது ஏறி இறங்குகிறது ரயில். நிகழ்வுகள் ஒரு கட்டத்தில் குழந்தை செத்ததையும் மறந்து அணைத்துக் கொண்டே குறுகி அமர்ந்திருக்கும் அந்த தாயின் விசனம் நம்மை கவ்விக் கொண்டே பயணிக்கிறது. மெல்ல குழந்தையின் பிணம் நாற்றம் அடிக்க துவங்க.....பேசி பேசி சமாளித்து..... வலுக்கட்டாயமாக தாயிடமிருந்து பிரித்து வாங்கி அதை ஓடும் ரயிலில் இருக்கும் இடைவெளிக்குள் கீழே போட்டு விடுகிறாள் ஓவியக்காரியின் அம்மா. வேறு வழியில்லாத கொடூரம் அது. அதற்கு சற்று முன்பாக வண்டி ஒரு இடத்தில் நிற்கையில் காவல் அதிகாரியிடம் இந்த விஷயத்தை சொல்லி அந்த குழந்தையைப் புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்கையில்....வேறு வழியின்றி முடியாது என்பது போல கடந்து விடும் காவல் அதிகாரி.... படம் முழுக்க விசித்திரமான மனிதனாகவே வருகிறான். முதல் கொலையை நடுங்கிக் கொண்டே தண்டனையாக தருபவன் பின் பாதியில் அதே தந்திரத்தை அவன் ஜுனியருக்கு வெகு இயல்பாக கற்றுத் தருவதில்.. இங்கு எல்லாமே பழக்கமாகி விடும் என்ற தத்துவம் தான் மானுடத்தின் வழி முழுக்க வலி நிறைந்த வியாக்கியானமாக இருக்கிறது என்று நம்புகிறோம்.
 
பார்த்து பார்த்து திருடுபவனை விட்டு விட்டு பசிக்கு திருடுபவனை கொன்று போடும் கையாலாகாத்தனம் ஸ்டாலின் காலத்தில் வலிமையாகவே இருந்திருக்கிறது.
 
அந்த முகாமில் அந்த பெண்ணுக்கு ஒரு காதல் வருகிறது. அவனும் அவளுக்காக ஓவியங்கள் வரைய தேவையான பொருள்களை எல்லாம் திருடிக் கொண்டு வந்து தருகிறான். நியாயப்படி பார்த்தால் அது திருட்டு அல்ல. எடுத்துக் கொள்வது தான். தேவையின் பொருட்டு நிகழும் பரிணாமங்கள் தான். அந்த கசந்த பகல்களை கழுவி விடும் சாந்த இரவுக்கு இருவருமே காத்திருக்கிறார்கள். அங்கு அன்பின் சுவடுகளாக ஆழமாய் முத்தம் பறி மாறிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான் அவ்விருட்டு தரும் சுதந்திரம். அவனை விட்டும் ஒரு கட்டத்தில் ஓவியக் குடும்பம் உள்பட ஒரு கூட்டத்தை பிரித்து இன்னும் மோசமான வேறு ஓர் இடத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே அவள் தாயிடம் அந்த விசித்திர காவலாளி தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அந்த தவறின் வழியே அவளின் காதலை அடையவே விரும்புகிறான். அவனும் தன் குடும்பத்தை பிரிந்து தனிமையில்..... இந்த முகாமில் தவித்துக் கொண்டு தான் இருக்கிறான். சீருடை அணிந்த அடிமையாகவே தன்னை உணருகிறான். எல்லாருமே ஒரு வகை பித்து நிலையில்....மானுடத்தின் சட்டதிட்டங்கள் அழுத்தும் மூச்சிரைப்பின் தவிப்போடு தான் இருக்கிறார்கள். காவல் காக்கப்படுவர்களும் குற்றவாளிகளாகவே தான் வாழ்கிறார்கள். குற்ற உணர்ச்சியில்..... துடிக்கும் இதயங்களில் வெயிலும் நிர்பந்தமும் கிழங்கு பறிக்கவே ஆணை இடுகிறது. அப்படியே.....ஒரு கட்டத்தில் அந்த தாய் உடம்புக்கு முடியாமல்....கூண்டுக்குள் அடைபட்ட வாழ்வின் மூச்சுத் திணறல் தாங்காமல்.....ஓய்வில்லாத வேலையின் அழுத்தம் தாங்காமல்... நோய்வாய்ப்பட்டு மறித்து போகிறாள். 
 
அதன் பின் ஓவிய பெண்ணையும் அவள் தம்பியையம் விடுதலை செய்து விட்டு அந்த காவலாளி தூக்கிட்டுக் கொள்கிறான். அது தான் அவனுக்கு விடுதலை அளிக்கிறது. சோஷலிச வாழ்வு முறையும் இறுக்கி பிடித்தால் மூச்சுத் திணறவே செய்யும் என்பதன் வெளிப்பாடு தான் இந்த காவல் அதிகாரியின் வாழ்வும் சாவும்.
 
ஒரு ஊருக்காக ஒரு குடும்பம் அழியலாம் என்பது சரி தான். அந்த குடும்பத்தில் ஒருவனாய் இருக்கையில்.... எப்படி எதிர்கொள்வது. அது தான் இங்கே நிகழ்கிறது. ஸ்டாலின் என்றொரு மாபெரும் தலைவன்....... போரின் பொருட்டு....  கட்டமைப்பின் பொருட்டு.... சோஷலிச சித்தாந்தத்தின் பொருட்டு....குடும்பங்களைப் பிரித்து  நாடு கடத்துவது.... என்பதும் பாசிசம் தான். பொதுவாக விதிக்கப்படும் தண்டனைகளில் குற்றம் இழைக்காத ஒருவனும் மாட்டிக் கொள்கிறான் என்பது தான் வரையப்பட்ட விதியாக இருக்கிறது. அது தான் இந்த ஓவியப் பெண்ணின் குடும்பத்துக்கும் நிகழ்கிறது. அவளின் தந்தை எப்போதோ சிறையில் அடைபட்டு அங்கேயே செத்தும் போய்விட்டிருப்பது படத்தின் முடிவில் தான் அந்தப் பெண்ணோடு சேர்த்து நமக்கும் தெரிய வருகிறது. படம் முழுவதும் தன் தந்தை எப்படியும் வந்து நம்மை மீட்டெடுத்து போய் விடுவார் என்று தான் அந்த ஓவியப் பெண் நம்பிக் கொண்டிருப்பாள். நம்பிக்கைகளை ஹிட்லர் உடைத்தாலும் ஸ்டாலின் உடைத்தாலும் ஒன்று தான். திருட்டுக்கு தண்டனை உண்டென்றால் அவனைத் திருடும் அளவுக்கு ஆக்கி விட்ட இந்த சமூகத்துக்கும் தண்டனை உண்டு.
 
படம் முழுக்க இருள் சூழ்ந்த ஒரு நிழலின் பயம் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தின் பின் மண்டையில் எந்த துப்பாக்கியும் எதன் பொருட்டும் வெடித்துக் கொண்டேதானிருக்கிறது. அதற்கு நீங்கள் இரண்டே இருண்டு உருளைக் கிழங்கை திருடியிருந்தாலும் கூட போதுமானது. உங்கள் பசி பற்றிய அக்கறை அந்த சித்தாந்தத்துக்கு இல்லை. நீங்கள் நல்லவர்களாக இருப்பது தான் முக்கியம். நல்லவனுக்கு கீழேயும் அடிமையாய் இருப்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது. எல்லாவற்றையும் களைத்து போட்டு மீண்டும் முதலில் இருந்து ஆடலாம் என்பது ஹிட்லர் செய்தாலும் பிழைதான்.....ஸ்டாலின் செய்தாலும் பிழை தான். 
 
Film: Ashes in the snow 
Direction: Mariys A.Markevisius
Language: English
Year: 2018
 
- கவிஜி
Pin It