Cheran and Padmapriya

தமிழ்த் திரைப்படச் சூழலில் படங்களை இரண்டு வகையாக அணுகமுடிகிறது. ஒன்று வணிகத் திரைப்படம் பிறிதொன்று கலைப்படம். (வரலாற்றுப் படங்கள் தனி) இங்கு கலைப்படங்களைவிட வணிகத் திரைப்படங்கள் அதிகளவில் தொழிலுற்பத்தி செய்யப்படுவதில் கவலைகளிருப்பினும் கலையைப்பற்றி பேசுவதற்கும் அதன் ரசனை குறித்து எழுதுவதற்குமாக வருடத்தில் ஒரு திரைப்படமேனும் நமக்கு கிடைக்கிறது என்பதில் மனம் சற்று ஆறுதலடைகிறது. சில ஆண்டுகளில் ஏதுமற்று வறட்சி நிலவுவதும் உண்டு. (சில வேளைகளில் இரண்டு மூன்று கலைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யங்கள் நிகழ்ந்திருப்பதும் நடந்திருக்கிறது. அந்த ஆண்டை குறிஞ்சியாண்டு என்று வழங்கிக்கொள்ளலாம்) அதேபோல் கடந்த ஆண்டு நமக்கு ஒரு கலைப்படம் கிடைத்திருப்பதில் கலைகுறித்தான ஆர்வத்தில் மனம் முன்னோக்கி நகர்ந்துச் செல்கிறது. எந்தவொரு விசயமும் அறிவுசார் தளத்தில் பரவலாகப் பேசப்படும்போதும் எழுதப்படும்போதும் அதனுடைய செயல்பாடும் நிலைப்பாடும் சரியான நேர்க்கோட்டில் பயணிப்பதாக பொருள்கொள்ள வேண்டும். இந்தப் பார்வையில் இன்றைக்கு அறிவுஜீவிகள் வட்டத்திலும் விமர்சகர்கள் மத்தியிலும் அதிகப்படியான விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்கும் ஆட்பட்டிருக்கிறது சேரனின் `தவமாய் தவமிருந்து' திரை(கலை)ப்படம்.

2004 - ல் வெளிவந்த பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படத்திற்கு வந்த ஆரோக்கியமான விவாதங்களும் விமர்சனங்களும் 'தவமாய் தவமிருந்து' படத்திற்கும் வந்தன, வந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது கூடுதலான மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது. சேரனின் முந்தைய படங்களான தேசிய கீதம், பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர்பூமி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கும் ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து படங்களை பார்த்தவர்களுக்கும் அவருடைய வரிசையான படிநிலை வளர்ச்சியை விளங்கிக்கொள்ள முடியும். குருட்டாம்போக்கில் சொல்வதனால்கூட சேரனுடைய அனைத்துப்படங்களும் ஏதோவொருவகையில் சமூகத்தோடு ஒன்றியிருக்கிறது என்று சொல்லிவிடமுடியும். ஆனால் அவருடைய படங்களை வெறுமனே இப்படி பார்த்தல் என்பது கூடாது. ஆட்டோகிராஃப்பில் சொல்லப்பட்ட கதையுத்தியானது தவமாய் தவமிருந்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. கதை சொல்வதிலும் கதைநாயகனே கதைசொல்லியாகிவிடுவதிலும் நிகழ்காலத்தில் தொடங்கி முந்தைய காலத்திற்குச் சென்று மீண்டும் நிகழ்காலத்திற்குத் திரும்பி மீண்டும் சென்று மீண்டும் திரும்பும் முறைமை இரண்டு படங்களிலும் கையாளப்பட்டுள்ளது.

Cheran and Padmapriyaதவமாய் தவமிருந்து படத்தைப்பற்றி பேசும்போது ஆட்டோகிராஃபிலிருந்து இப்படம் வளர்ச்சி கண்டிருப்பதையும் அதேநேரத்தில் கதையமைப்பு சிறிது பின்னோக்கி நகர்வதையும் குறிப்பிட்டாக வேண்டும். சேரனின் முந்தைய படங்களிலிருந்து இப்படத்தைப் பார்க்கும்போது இதில் வசனக்குறைப்புகள் நிகழ்ந்து visuvalation கூடியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இப்படம் முழுக்க முழுக்க எதார்த்தத்தை முன்னிறுத்தி நகர்ந்துச் செல்லும்படியாக பின்னப்பட்டிருக்கிறது. படத்தில் ஒரு எளிய தகப்பனாய் முத்தையாவின் (ராஜ்கிரண்) பாத்திரம் போற்றுதலுக்குரியது. காலை தொடங்கி இரவு உறங்கும் வரை பிள்ளைகளுக்காக (குடும்பத்திற்காக) உழைத்துழைத்து காப்புகாய்த்த முத்தையாவின் கால்கள் படத்தின் நிகழ்காலத்தில் பார்வையாளனுடைய நெஞ்சின் ஈரப்பதத்தில் வந்து தைக்கிறது. 

முத்தையா பிள்ளைகளுக்காக அவர்களது கல்விக்காக தொடர்ந்து வட்டிக்குமேல் வட்டிகட்டி அல்லல்படுவதை வட்டி வசூல் செய்யும் பாத்திரம் கேட்கும்போது, அடுத்து தன் பிள்ளைகள் படித்து முடித்து பணியிலமர்ந்து விட்டால் தன் குடும்பத்தை அவர்கள் சுமப்பார்கள் என்ற முத்தையாவின் நம்பிக்கை ராமநாதன் (முத்தையாவின் மூத்த மகன் ) போன்ற (நிஜ)பாத்திரங்களின் நெஞ்சில் ஈட்டியாய் மோதுவதாய் இருக்கிறது. ராமநாதன் (செந்தில்) விபச்சார விடுதியில் சிக்கியதாக காவலர் மூலம் தகவல் வரும்போதும் பெற்றோரோடு சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறும்போதும் வாழ்வின் ஊசலாட்டத்தில் தவிக்கும் தந்தையின் முகபாவங்களை ராஜ்கிரணிடத்தில் பார்க்க முடிவது அவருடைய அசாத்திய நடிப்புத்திறனுக்கு சான்றாகும். ஆனால் முத்தையா பாத்திரத்திற்கு கொடுத்திருக்கிற முக்கியத்துவம் சாரதா(சரண்யா- கதையில் முத்தையாவின் மனைவி)விற்கு கொடுக்கப்படாதது அந்த பாத்திரத்தை சிறிது மட்டுப்படுத்துவதாகப்படுகிறது.

கதையின் நாயகன் ராமலிங்கம் (சேரன்) தன் கல்லூரித் தோழியை காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளோடு கலந்து அவளை கர்ப்பமாக்கி விடுகிறான். தன்னால் கர்ப்பமாக்கப்பட்டவளை கைவிடக்கூடாது என்றெண்ணி தந்தையிடம் interview - க்குப் போவதாக சொல்லி தோழி வசந்தியோடு (பத்மப்பிரியா) சென்னைக்கு பயணப்படுகிறான். அங்கு கதை நாயகி பிரசவக்காலத்தில் படும் வேதனையும் அவஸ்தையும் பிரசவத்திற்கு பணம் புரட்ட முடியாமல் நாயகன் படும் பாட்டையும் வர்த்தைகளில் அடக்கிவிட முடியாது. குழந்தை பிறப்புக்குப்பின் நாயகியின் வலிமிகுந்த குரல் நாயகனை அவனது பிறந்த மண்ணிற்கு பெற்றோரின் பாசத்தைத்தேடி புலம் பெயரச் செய்கிறது. அதன்பின் ராமலிங்கம் பணிக்குச் சென்று அடையும் வளர்ச்சியானது அபரிமிதமானது. பிள்ளைகளை வளர்க்கப் பெற்றோர் படும்பாட்டை உணர்ந்த (சேரன்) மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் - எனும் குறள் பின்னணியில் நெஞ்சை வருடி விழிகளில் நீர்த்ததும்பச் செய்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியமைப்பும் காட்சிப்படுத்தலும் நெஞ்சச் செம்புலத்தில் பாசப்படர் வேர்களை துளிர்த்திடச்செய்கிறது.

பெற்றெடுத்த பிள்ளைகளுக்காக ஓய்வின்றி பாடுபட்ட தாய் சாரதா இளைய மகன் ராமலிங்கத்தின் வாரிசையும் அவனது வளர்ச்சியையும் கண்டு நிம்மதி கொண்டவளாய் மரணத்தைத் தழுவி ஓய்வெடுக்கிறாள். பிறகு மனைவியின் நினைவுகளோடு வாழும் முத்தையா மூத்தமகன் ராமநாதன் கேட்கும் கேள்வியால் (எனக்கு மட்டும் ஏம்பா கொற வெச்சீங்க?) அதைத் தாங்காது இதயம் சுக்குநூறாய் உடைந்து தானும் உயிர்நீத்துவிடுகிறார். இன்றைக்கு உலகமயமாக்கலால் குடும்ப அமைப்பே நிலை குலைந்து நிற்கும் நிலையில் `தவமாய் தவமிருந்து' படத்தின் மூலம் அதை மீட்டெடுத்து பரிசீலிக்கிறார் இயக்குநர் சேரன்.

பாலா, பாலாஜி சக்திவேல், சேரன் வரிசைகாரர்களால் படைக்கப்படும் படங்கள் தமிழ் சினிமாவை கலை ரசணையின் வளர்முகத்தில் கொண்டுசெல்வது ஆறுதலான போக்காகவும் ஆரோக்கியமான வளர்ச்சியாகவும் உள்ளது. சேரனது தவமாய் தவமிருந்து அதிலொரு மைல்கல்.

- இலாகுபாரதி