படத்தோட ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர்லாம் வந்தப்பவே தெரிஞ்சிடுச்சி இது மதுரை வட்டாரத்தை மையப்படுத்தி வீரம் விவேகம் வேதாளம் போன்ற தமிழர்குல மாண்புகளை தூக்கி நிறுத்துற படமாதான் இருக்கப்போகுதுன்னு. அதே மாதிரி ஹாக்கி ஸ்டிக் மீசை, ஜல்லிக்கட்டு, விவசாயம், மாமன் - மச்சான் சண்டை, அது இதுன்னு 1980கள்லயே அடிச்சித் துவைச்ச துணியை மறுபடியும் வாஷிங் மெசின்ல போட்டு கிழிஞ்ச கந்தலாக்கி வெளிய எடுத்துருக்கார் இயக்குனர் பன்னீர்செல்வம்.

karuppan movie

ஜல்லிக்கட்டுல நடக்குற வாய்த் தகராறுல "எனனோட காளையை அடக்குனா என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக் குடுக்குறேன்"னு கருப்பன்கிட்ட(வி. சே) சவால் விடுறார் மாயி(பசுபதி). சொன்ன மாதிரியே காளையை அடக்குனப்புறம் கல்யாணமும் பண்ணி வைக்குறாரு. இதனால பொண்ணோட தாய்மாமன் பாபி சிம்ஹா காண்டாகுறார். தன்னோட முறைப்பொண்ணை அடையுறதுக்காக அவர் போடுறதிட்டங்கள்ல குடும்பமே சின்னா பின்னமாகுது. மற்றவற்றை வெள்ளித்திரையில் காண்க. இன்னும் இதுமாதிரியான கதைக்களத்தோட தமிழ்படங்கள் வர்றதை நினைச்சா பரிதாபமா இருக்கு.

விஜய் சேதுபதியுடைய கேசுவலான நடிப்பு என்னைக்குமே சலிப்பை ஏற்படுத்துனதில்ல. அவருடைய வழக்கமான சேட்டைகள், உடல்மொழி, நக்கலான டயலாக் டெலிவரி போன்றவைகளையெல்லாம் இயக்குனர் தேவையான அளவு எடுத்து கட்டுப்பாட்டோட பயன்படுத்தனும். அப்போதான் அதை ரசிக்கமுடியும். ஆனா முதல்முறையா சேதுபதியின் சில்மிஷங்களும் சேட்டைகளும் பல இடங்கள்ல கோவத்தை ஏற்படுத்துச்சு. இந்த மாதிரி ஒரு படத்துல ஏன் நடிச்சாருன்னும் புரியல. தன்னுடைய பழைய நண்பருக்காக செய்திருக்கலாம்னு நினைக்கிறேன். இதே மாதிரி ஒரு நண்பர்தான் "ரம்மி"யில விசேவை வைத்து செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

படத்தோடக் கதையே பழைய பிரபு-ராதாரவி காம்போ படங்கள்ல பலதடவை வந்த கதைங்குறதால எந்தக் காட்சியுமே புதுசா இல்ல. ஹீரோ ஒரு ஜல்லிக்கட்டு வீரன்குறது படத்துக்கு எந்த பயனையும் தரல. ஒருசில எமோசனல் காட்சிகள் நல்லா இருந்தது. ஆனா அந்த ஒரு நல்லக் காட்சி வர்றதுக்குள்ள நாலு மொக்கைக் காட்சிகள் வருது. படத்தோட ஒரே ஆறுதல் கதாநாயகி மட்டுமே. லிப்சிங்க் அருமையா பண்றாங்க. நல்ல நடிகை. கொள்ளை அழகு.

பழைய ஒருபடத்துல (பாண்டித்துரைன்னு நினைக்கிறேன்)ராதாரவி பிரபுவை கத்தியாலக் குத்த வருவாப்புல. ஆனா திடீர்னு ஒரு "ச்சதக்" சத்தம் கேக்கும். நூறுபேர் சுத்தி நிக்குற கூட்டத்துல யாருக்குமே ராதாரவியை பின்னாடியிருந்து குத்துனது யாருன்னு தெரியுது. கேமரா மனோரமாவைக் காட்டும்போதுதான் குத்துனது யாருன்னு அந்தகும்பலுக்கே தெரியவரும். இதுமாதிரி அரியகாட்சிகள் இடம்பெற்றிருக்கும் 'காவியமே' கருப்பன்.

மேலும், தங்கச்சியைப் பந்தயம் கட்டி ஜல்லிக்கட்டு ஆடுறது, வேலைவெட்டிக்கே போகாம ஊர்வம்பு பண்ணிட்டு இருக்கவனுக்கு வலுக்கட்டாயாம ஒரு பொண்ணை கட்டாயத் திருமணம் பண்ணி வைக்குறது, காலேஜ் போய்ட்டிருந்த புள்ளையை கல்யாணம் ஆனதும் அடுப்படியில உக்காரவைச்சி சோறாக்க விடுறது, விதவிதமான டிசைன்கள்ல மீசைகளை ( எல இம்புட்டு டிசைன் இருக்காலே) வச்சிருக்க பெருசுகள்லாம் ஒன்னுகூடி, "அவனை அறுத்துருவே", "அவன் சங்க கடிவே", "அவனை வெட்டிட்டு நம்ம சாதிசனத்துலயே வேற ஒருத்தனைப் பாத்து கல்யாணம் முடிச்சு விடுவே, "போன்ற கலாச்சாரம் சார்ந்த காட்சிகளை இயக்குனர் எதார்த்தமா சொல்லிருக்காரு.

மொத்தத்துல இந்தக் கருப்பன் ரேணிகுண்டா படத்துல "மழைபெய்யும்போது" பாடலைகவித்துவமா திரையிலகாட்டுன பன்னீர்செல்வம் அவர்களோட படமாவும் இல்ல, 'தமிழ்சினிமாவின் சொத்து' விஜய்சேதுபதியின் படமாவும் இல்ல.

இந்திய அளவில் தமிழ்சினிமாவை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் திரு. முத்தையா அவர்களின் வழிவந்த தத்துப்பிளைதான் இந்த Blacky.

- சாண்டியல்யன் ராஜூ

Pin It