"முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா"

12 வது படித்திருந்த காலத்தில் வந்த பாடல். கேட்ட முதல் முறையே மறுமுறை கேட்க தூண்டியது பாட்டும் அது கொண்ட மெட்டும்...காதல் வனத்தில் காய்ந்து பழுத்து தொங்கிய நிலவென தோன்ற வைத்தது.

aaha movie songகாதல் வந்த பிறகு தன்னை தாண்டி போகும் நிழலை காதலில் எழுந்தோர் ஒவ்வொருவருமே உணர்ந்தே இப்போம். நம்மில் இங்கு நாமே இல்லை.. காதல் போல ஏதும் இல்லை தானே.. அது தனக்குள்ளே நீந்தி.... நெடிய தூரம் அழைத்து சென்று.... தன்னையே தேடி.... தன்னையே தொலைத்து.... தன்னையே கண்டடையும் ஒரு கனவு மாதிரி தானே. வந்து சேர்ந்த இதயத்தில் அன்பின் ஆவல்கள் சொட்டும்... கண்டதுண்டா.

முதல் முறை காதல் கொண்டவன்.... உலகம் சிலிர்க்க தன்னையே உதயமாக்குகிறான். தானே நிலவுமாகிறான். எந்த பக்கம் திரும்பினும் அந்த பெண்ணின் உருவம். மெல்லிய நிதானம் அவன் மேனியில் படர.... குரலுக்கு ஹரிஹரனை சேர்த்துக் கொண்டு... அவன் அலையும் இடமெல்லாம் தேனிசைக்கார தேவன் இசை ஊற்றிக் கொண்டே வருவது... காண கேட்க உணர பார்க்க தேன் மழை நமக்கு. தேகம் தேன் என இருக்கு.

"நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்"

நந்தவனத்தை கண்ட மறுநொடி தன் ஜீவனை நேரினில் காணும் வரமும் பெறுகிறான். காதலில் விழுந்தோர் என இனி சொல்லாத தருணத்தை காதலில் எழுந்தோர் என வர்ணம் பூசி...அந்த நல்லவளால் நாளையின் மீது நம்பிக்கை கொள்கிறான். நம்பிக்கை எனும் கோட்பாடுக்கு ஆக சிறந்த வடிவம் காதல் இன்றி வேறென்ன. காதலியின் கரம் பற்றினால் போதும்... காலங்களில் காவியம் கூடி விடும். உள்ளம் மெருகேற... உருவம் அழகாக... உயிர் உணரும் தருணமெல்லாம் காதலின்றி வேறு என்ன தரும். தந்தவள் காற்றில் அங்கும் இங்கும் நினைவுகளாய் நிற்கிறாள். கண்டவன் உறவு தேடி காற்றாய் பூக்களில் நிறைகிறான்.

"நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே உயிர் வாழுமே"

ஒவ்வொரு நொடியும் உன் நெடி பெண்ணே. ஒவ்வொரு நொடியும் உன்னுதடி கண்ணே என்கிறான். நினைத்துக் கொண்டே இருப்பதில் இருக்கும் நிம்மதியை அவன் அனுபவிக்கிறான். வாழ வந்த வாழ்வில் பெரும்பகுதி நிறையுதேன நம்புகிறான். அந்த முதல் பார்வையை அடி நெஞ்சில் கொண்டவனுக்கு ஆதி பூமி சுழல்கிறது. ஆகாயம் கூட புல்லாங்குழல் ஊதுகிறது. உயிர் வாழ்தலை எப்படி உணர்வது. இப்படித்தான் வரிக்கு வரி... காதலின் உளியால் சுய சிற்பம் செய்வதில் உணருகிறான். அதன் வழியே கொஞ்சம் உளறவும் தான் செய்கிறான். உளறல் இல்லாத காதலில் உணர்தல் எப்படி சாத்தியம்.

"ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ
நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட
தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ
நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட"

மலையை துரும்பாக்கி மழையை வெள்ளி கம்பியாக்கும் காதல். ஏழு ஸ்வரம் போதாது.. எட்டு வேண்டும்... என்கிறான். அவன் காதலின் தனித்துவம் தாங்க... போதாமை அவன் இதயத்தில் இசையாய் துடிக்கிறது. செல்ல கெஞ்சலாய் மின்னும் மோகத்தை உடல் முழுக்க கண்கள் வேண்டி ஒரு பிரார்த்தனையை போல கேட்கிறான். அவ பாக்கும்போது சாருக்கு வெக்கம் அப்பிடி. ஹாஹ்... ஆணில் இருக்கும் வெட்கத்துக்கு அணில் தாவல் பூட்ட தெரிந்த... பூ போட்ட தாவணிகளுக்கு தான் எத்தனை சித்திர வேலைப்பாடு தெரிகிறது.

"இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்குமுன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது......நீ தந்தது"

இதயம் முறைப்படி துடிக்கவில்லை... அது சரி... இது இதுக்கு முன்னால நடந்ததே இல்லை எனும் அவனுக்கு காதல் யானையின் பிளிறல் இதயம் முழுக்க. முறையாக துடிக்காத இதயத்தில் தான் முயலாக வந்து தாவும் மயில் இருக்கும். இது முதல் முறை நடக்கையில் பருவம் தூண்டிய பருக்கள் கூட சிறு பூக்கள் பூத்து வெட்கப்படும். அவன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நகர வீதிகளில்.. பேருந்து மாடிகளில்... தான் கொண்ட அன்பை எல்லாரிடமும் காட்டுகிறான். தன் இதயத்தில் நடக்கும் முறையற்ற நடனங்களை மற்றோருக்கு சொல்லி மகிழ்வதில் காதல் எடை கூடும் யதார்த்தத்தை அங்கே செய்து பார்க்கிறான். காதல் வேடிக்கை பார்க்கிறது. நாமோ காதலை பார்க்கிறோம்.

பேரின்ப நகர்வுகளை அவன் தொடர்ந்து நிகழ்த்தி பார்க்க... தொந்தரவு நமக்கும் தான். அவன் காதலை சுமலைந்தலையும் அவனைக் காண காண நாம் சுமந்தலையை ஒரு காதலை தேட ஆரம்பிக்கிறோம்.

"நல்லவளே அன்பே உன்னால் தான்....நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்"... இந்த வரியிலேயே அவன் தன் மொத்த காலத்தையும் அவள் காலடியில் கொட்டி விடுகிறான். பேரன்பில் திளைத்து... நம்புதலின் வழியே ஒரு புது உலகத்தை அதன் பிறகு கட்டமைக்கும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் உயிர்ப்பு இருக்கிறது. உள்ளம் நிறைந்திட ஒருமுறை கேட்டு விட்டு உடல் முழுக்க இதயம் முளைக்க மறுமுறையும் கேட்க செய்யும். வரிக்கு வரி காதலின் வழி. இசைக்கு இடையே காதல் கொண்ட இதய ஓசை.

உயிருக்கு இத்தனை நெருக்கமான பாடலுக்கு சொந்தக்காரன் "வாசன்" எனும் கவிஞன். காதல் ரசிகன். காலத்தின் விரல் அவனை 25 வயதிலேயே உடைத்துப் போட்டது. என்ன நினைத்தானோ... எழுதியது போதும் என்ற எண்ணத்தில் மரண வண்ணம் சேர்ந்ததோ. பூமியை விட்டு நகர்ந்து கொண்டான். ஆனால் அவன் கொடுத்த வரிகள் பூமியில் இதயம் பூத்துக் கொண்டே இருக்கிறது.

" இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது....நீ தந்தது"

அந்த நீ தந்தது என்ற ஆழத்தில்...இந்த வாழ்வின் பெரும் பொருள் காதலாகவே இருக்கிறது என்று உணர்கிறோம். வந்து போவதற்கான சாட்சியே இந்த காதல் தான். சத்தமாக ஒரு மௌனத்தில் முனங்குறேன். "காதல் போல ஏதுமில்லை. எங்கே எந்தன் இதயம் அன்பே.... வந்து சேர்ந்ததா..."

வாசன் வாழ்கிறான்

- கவிஜி

Pin It