முற்போக்காளர்கள் சிலரிடம் ஒரு சிக்கல் இருக்கிறது. பாரதியின், கம்பனின் உள்ளார்ந்த ஆரியப் பாசத்தை விட்டுவிடுவார்கள்; மொழித் திறனுக்காக, கவி அழகுக்காக அவர்களைக் கொண்டாட வேண்டும் என்பார்கள். வெட்டரிவாள் கலாச்சாரத்தை விமர்சிக்கும் நோக்கத்தை விட்டுவிட்டு, 'போற்றிப் பாடடி பெண்ணே' பாடலுக்காக 'தேவர்மகன்' படத்தை விமர்சிப்பார்கள். பார்ப்பனியத்திடம் சரணாகதி அடைந்த இளையராஜாவை ஆதரிப்பார்கள். 'தொட்றா பார்க்கலாம்' என்று பார்ப்பனர்களுக்கு எதிராக மீசை முறுக்கும் பாரதிராஜவை 'சாதிவெறியன்' என்பார்கள். உள்ளீடு முக்கியமில்லை, மேற்பூச்சுதான் முக்கியம் அவர்களுக்கு.
அவர்களுக்கு வேண்டுமானால் 'படைவீரன்' படம் ஒரு சாதிவெறிப் படமாகத் தோன்றலாம். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. சாதிவெறியின் முகத்தில் ஓங்கி அறைந்தவனாக 'படைவீரனைப்' பார்க்கிறேன்.
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான மனநிலையை காட்சி ஊடகத்தில் வலுவாக இப்படம் கொண்டு செல்கிறது. வெறுமனே காட்சிப்படுத்துதலோடு மட்டும் நின்றுவிடாமல், செய்ய வேண்டியது என்ன என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது.
சாதியை ஒழிப்பது, ஒடுக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியாது. சுயசாதி விரோதிகளும் அவர்களுடன் கைகோர்த்தால் மட்டுமே அது விரைவில் சாத்தியம். சுயசாதி விரோதிகள் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தான், சங்கர் ஆணவப் படுகொலையில் தோழர் கவுசல்யா செய்து காட்டினார். அதை திரைமொழியில் சொல்லும் படம்தான் 'படைவீரன்'. தோழர் கவுசல்யாவும், படைவீரனும் கொண்டாடப் வேண்டியவர்கள்.
பாரதிராஜா என்ற இயக்குநர் இமயத்திற்குள் ஒளிந்திருக்கும் மகத்தான நடிகரை தமிழ் சினிமா ஏன் அதிகம் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி இப்படத்தைப் பார்க்கும்போதும் வருகிறது. 'அருவி' படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாத்திரம் கவிதாபாரதிக்கு. முகபாவங்களில் பின்னுகிறார். வேல.ராமமூர்த்தி போல் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து 'படைவீரன்' போன்ற சுயசாதி விரோதிகள் இன்னும் நிறைய வர வேண்டும்.
- கீற்று நந்தன்