thanga_meengal_640

தங்கமீன்கள் திரைப்படத்திற்கான விளம்பரம் வெளிவந்ததிலிருந்து அத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. எந்த திரைப்படம் வந்தாலும் முன் முடிவுகளுடன் விமர்சிக்கும் முகநூல் அறிவு ஜீவிகள் சிலர் இந்த திரைப்படத்தையும் மகள், காமம், அப்பா, முத்தம் என சில வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு விமர்சித்துக் கொண்டிருந்தனர். இதன் தாக்கத்தால் “கற்றது தமிழ்” படத்தில் இருந்த அபத்தமான காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்குமோ என்கிற அச்சம் எனக்குள்ளும் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தையெல்லாம் தவிடு பொடியாக்கி நெஞ்சை நெகிழச் செய்தது தங்கமீன்கள்.

மனன‌ம் செய்வதையும், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதையும் கற்றல் முறை என்று உள்வாங்கிக் கொண்ட இந்த கல்வி அமைப்பின் பார்வையில் இந்த கற்றல் முறையில் ஆர்வமில்லாமல் இருக்கும் செல்லம்மா படும்பாடுதான் தங்கமீன்கள். செய்திகளை நினைவில் தேக்கி வைத்துக் கொள்ளும் மெமரி கார்டு போல் குழந்தைகளை நடத்தும் பள்ளிகளின் அவலத்தை தோலுரிக்கிறார் இயக்குனர். எட்டு வயது குழந்தையின் கல்வி கற்கும் திறன் குடும்பத்தின் நடைமுறையை எந்த அளவிற்கு பாதிக்கிறது, கல்வி கடைச்சரக்காக ஆனது மட்டுமில்லாமல் மதிப்பெண்கள் எடுக்கும் குழந்தைகள் மட்டுமே இங்கு அலங்காரப் பொருட்களாக சந்தைக்கு வருகிறார்கள் என்பதும் இப்படத்தில் சுட்டி காட்டப்பட்டுகிறது.

குழந்தைத் தன்மையை களங்கப்படுத்துவதில் இன்றைய தனியார் பள்ளிகள் துவங்கி தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வரை முக்கிய பங்காற்றுகின்றன. கல்வி முறையும் நுகர்வு கலாச்சாரமும் பின்னிப் பினைந்துள்ளன என்பதை ராம் அழகாக சொல்லியிருக்கிறார். அவன் ரொம்ப நல்லவன், கொஞ்சம் கெட்டவனா திரும்பி வரட்டும் என்று செல்லம்மாவின் தாத்தா பேசும் வசனம் எதார்த்த உலகம் நல்லவர்களுக்கு நரகமாக மாறியுள்ளதை அப்பட்டமாக பதிவு செய்கிறது.

'பணம் இல்லாதது பிரச்சனை இல்லை, பணம் அதிகமா சில பேரிடம் இருப்பதுதான் பிரச்சனை', 'நுகர்வு கலாச்சரத்தைத் தூண்டும் விளம்பரங்கள் பணம் இல்லாதவனையும் பார்க்கத் தூண்டுதே', 'குழந்தைக்கு தெரியுமா இந்த நாய்க்கு 25000 ரூபாய் தேவைப்படும்னு, ஏதோ காட்டுல திரியும் அப்பா பிடிச்சுட்டு வருவார்னு நினைக்கும்', 'பணம் இல்லாதவனை முட்டாள்னு நினைச்சுடாதீங்கடா'ன்னு இயக்குனர் கதையின் போக்கில் அள்ளித் தெளிக்கிற வசனங்கள் நிகழ்கால சமூகத்தின் வக்கிர முகத்தை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.

பெற்றோர் ஆசிரியரை நேரடியாக வந்து பார்க்கக் கூடாது, தாய் மொழியில் பேசக்கூடாது போன்ற கண்டிப்புகள், தனது வகுப்பு மாணவியை சக குழந்தைகளை வைத்து ஏளனம் செய்யும் ஆசிரியர்களின் இழிவான செயல்கள், கற்றல் திறன் குறைவான குழந்தைகளை வேறு பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு நிர்பந்திப்பது, மறுதேர்வு என்கிற பெயரில் மீண்டும் தேர்வு வைத்து பணம் பறிப்பது, கல்லூரி படிப்பினை முடிக்காத பெற்றார்களை அலட்சியமாகப் பார்ப்பது, மேல்தட்டுவர்க்க வெள்ளைத்தோல் குழந்தைகளிடம் குலைந்து பேசும் அற்ப புத்தி என இன்றைய தனியார் பள்ளிகளின் எதார்த்த சூழலை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் ராம் பாராட்டுக்குரியவர்.

பணி நிரந்தரம் இல்லாத உலகமயமாக்கப்பட்ட சூழலில் நேர்மையான குடும்பத் தலைவன் எந்த அளவிற்கு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. பகட்டிற்கும், பணத்திற்கும் கிடைக்கும் மரியாதை நேர்மைக்கு துளி அளவும் இல்லை என்கிற எதார்த்த்தை செல்லம்மாவின் தந்தை கதாபாத்திரம் கதை நெடுக நமக்கு விளக்குகிறது. படிப்பையும் பொருளாதார சூழலையும் அடிப்படையாகக் கொண்டு சமூகம் மட்டும் அல்ல குடும்ப அமைப்பும் பாகுபாடு காட்டுகிறது என்பதையும் இப்படம் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

'கற்றது தமிழ்' படத்தில் முழுக்க முழுக்க ஆண் பார்வையில் இருந்து நுகர்வு கலாச்சாரத் தன்மையை விமர்சித்த ராம் இந்தப் படத்தில் சற்று முதிர்ச்சியோடு அணுகி இருப்பது பாராட்டுக்குரியது. 'கற்றது தமிழ்' படத்தில் பணம் இருக்கிறவனுக்கு பொண்ணு கிடைக்குது என்று ஆவேசப்படும் அடிப்படைவாத மனநிலை வெளிப்பட்டது. நுகர்வு கலாச்சாரத்தை விமர்சிக்கும் போக்கில் பழமைவாதத்தையும் ஆணாதிக்கத்தையும் பாதுகாக்கும் தொனி கற்றது தமிழ் ராமிடம் இருந்தது. 'தங்க மீன்கள்' ராம் ஜனநாயகத்தன்மையுடனும் முதிர்ச்சியுடனும் மாறியிருக்கிறார். இன்றைய கல்வி சமூகத்தில் குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளுக்கு அதில் கூடுதல் சுமை இருக்கும் கொடூரத்தையும் பதிவு செய்திருக்கிறார். பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதை விழாவாக கொண்டாடி வரும் இந்த காட்டுமிராண்டி சமூகமும் மதிப்பெண்களை வைத்து குழந்தைகளை சந்தைக்கு தயாரிக்கும் கல்விக் கூடங்களும் இணைந்து பெண் குழந்தைகளின் வாழ்வியலை பாதிப்பதை பதிவு செய்திருப்பது மக்களிடம் கவனம் பெற வேண்டிய ஒன்று.

“இவ வயசுக்கும் வந்து இரண்டாங்கிளாசு பெயிலாயிட்டா நான் என்ன பண்ணுவேன்" என்று செல்லம்மாவின் தாயின் கதறல் சடங்கு சம்பிராதாயங்களில் தோய்ந்த இந்திய மனங்களின் பலவீனத்தைக் காட்டுகிறது. மதத்தின் பெயரால் கலாச்சரத்தின் பெயரால் நடத்தப்படும் சடங்குகள் அனைத்தும் பெண்கள் மீதான வன்முறை என்பதை தமிழ்ச் சமூகம் உணர வேண்டும். பெண் விடுதலை குறித்து பெரியாரின் கருத்துக்கள் இன்னும் வீரியமாக்கப்பட வேண்டும் என்பதையே இன்றைய சூழல் உணர்த்துகிறது.

குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் ஆகிய மூன்றும் குழந்தைகளை செதுக்குகிற சிற்பிகளாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு சிதைக்கிற கருவிகளாக இருக்கின்றன என்கிற உண்மையை படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் ராம். "கிறிஸ்மஸ் தாத்தா உன்னை பாசாக்குவாரு”, "தண்ணியில செத்துப் போன அனைவரும் தங்க மீன்களா மாறிருவாங்க” போன்ற அபத்தமான விசயங்களைப் பேசும் போது பொறுப்பான தந்தை கதாபாத்திரத்தின் லாஜிக் காணாமல் போய்விடுகிறது. இது போன்ற தர்க்க குறைபாடுகளை ராம் தவிர்த்திருக்க வேண்டும். இது போன்ற சிறு சிறு குறைகளை களைந்துவிட்டுப் பார்த்தால் திரைவானில் தனியாக மின்னும் இந்த தங்கமீன்கள். தங்க மீன்கள், குடும்பம் குடும்பமாய் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம். பார்க்க மட்டுமில்லாமல் விவாதிக்க வேண்டிய படம். வாய்ப்பிருந்தால் குழந்தைகளின் ஆசிரியர்களையும் இத்திரைப்படத்திற்கு அழைத்து கொண்டு போகலாம்.

Pin It