“பெண்களுக்கு சொத்துரிமை கூடாது”
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினால் ஸ்த்ரி தர்மமே பாழாகிவிடும்அதற்கு வர இருந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னவர் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி. நாடாளுமன்றத்தில் நேரு பெண்களுக்கு சொத்துரிமை தரும் மசோதாவை கொண்டு வந்த போது அதை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளில் ஈடுப்பட்டவர் சங்கராச்சாரி. இது குறித்து அக்னி கோத்திரம்” ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது? நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“இதப்பார்த்தீரா.. ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயிடுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும்” -என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர்.
நான் சிரித்தபடி பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான். ஸ்வாமி... என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்! -இந்த பதிலைக் கேட்டதும்.
“அசட்டுத்தனமா பேசாதீர். இந்த சட்டம் வந்தா ஸ்த்ரீ தர்மமே பாழாயிடும். ஸ்திரீகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. இப்படிப்பட்ட ஸ்த்ரீ தர்மத்தை நேரு நொறுக்கிட்டார். நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்கறதுக்காக அந்த ‘பில்’லை எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும். அதுக்கு ஸ்த்ரீகளை நிறைய திரட்டணும்.
என்றெல்லாம் அவசர ஆணைகளை பிறப்பித்தார் மகாபெரியவர்.
வேத தர்ம சாஸ்திர பரிபாலனசபை கூட்டங்களின் போதே ஸ்த்ரீ தர்மத்தைப் பற்றியும் நான் நிறைய பேசியிருப்பதால் இந்த கூட்டம் நடத்துவது கஷ்டமாக தெரியவில்லை எனக்கும் எங்கள் சகாக்களுக்கும்.
மகா பெரியவர் சொன்னதன்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள கல்லிடைக் குறிச்சிக்கு போனோம். அங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய், ‘இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு. பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகா பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார். அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும், ஸ்த்ரீகளை கூட்டி வரணும்’ என்றேன்.
அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து ‘எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும். சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்’
என பெண்களை வைத்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
“குழந்தைத் திருமணமே சிறந்தது”
பெண் குழந்தைகளுக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவிட வேண்டும்.சட்டத்தை மீறினாலும் பரவாயில்லை என்கிறார் சங்கரச்சாரி.
“காமம் மனஸில் புகுமுன் காயத்திரி புகவேண்டுமென்பதுபோல், காமம் தெரிகிற முன்பே இவள் பதியைக் குருவாக வரித்துவிடும்படி செய்யவேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வகிக்க முடியும்! இந்தப் பெண் குழந்தை சின்ன வயதில் பதியை குரு-தெய்வமாக பாவித்து இருதயத்தை அவனுக்குச் சமர்ப்பணம் பண்ணி விட வேண்டும்.
உசத்தி - தாழ்த்தி, உரிமை (right) ஸ்தானம் (Position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால் அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதன் வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ளவேண்டும்.
உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ணவேண்டும். அப்போதுதான் சரணாகதி புத்திவரும் - என்று சொன்னால் “இது இந்தக் காலத்தில் ஸாத்தியமா? சட்ட விரோதமல்லவா?” என்று கேட்பீர்கள்.
“ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு” என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (Civil Disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக்காட்டித்தான் இருக்கிறார்கள். “சட்டம் என்று யாரோ எழுதியதற்காக எங்கள் ஸ்வாதந்திரியத்தை விடமாட்டோம்” என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி “ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை; ஆத்ம க்ஷேமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லவுகீக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்க முடியாது” என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லையே என்பது மட்டும் நான் ‘சட்டத்தை மீற வேண்டாம்’ என்று சொல்வதற்குக் காரணமில்லை.” -சங்ககராச்சாரி எப்படி பெண் அடிமையை வலியுறுத்துகிறார். சட்டத்தை மீறுவதற்கு எப்படி தூண்டிவிடுகிறார் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். - ஆதாரம் தெய்வத்தின் குரல் இரண்டாவது பாகம்.
“பார்ப்பனர்கள் நாயனம் வாசிக்கக் கூடாது”
பார்ப்பனர்கள் நாயனம், மேளம் வாசிக்கக் கூடாது அதற்கு உரிய ஜாதி பரத ஜாதி இசை வேளாளர்கள் தான் என்கிறார் சங்கராச்சாரி. நாதஸ்வரம், தவில் வாசிப்பதற்கு உடல் பலம் தேவை. பார்ப்பனர்களுக்கு உடல் பலம் இல்லை, எனவே இதற்கு ஜாதி தர்மத்தை வசதியாக இழுத்துக் கொள்கிறார் சங்கராச்சாரி. தெய்வத்தின் குரல் மூன்றாவது பாகத்தில் இவ்வாறு கூறுகிறார்.
“பிராம்மணனாகப் பிறந்தவன் உள்பட மற்ற எந்த சாதியினரும் பாட்டு, நடனம், நடிப்பு முதலியவற்றைத் தொழிலாக நடத்தப்படாது. அதற்கு ஒரு ஜாதி என்று தொழில்களையெல்லாம் முறைகெட்டுப் போகாதபடி வரம்பு கட்டிக் காப்பாற்றியிருக்கிறது.’’- “இதை ஜீவனோபாயத் தொழிலாகவே பண்ணி, பணம், பரிசு, பட்டம் எல்லாம் வாங்க அதிகாரமுள்ளவர்கள் பரத ஜாதியினர்தான்.” -நம் சீமையில் மேளக்கார ஜாதி என்று சொல்வார்கள். இப்போது இசை வேளாளர்கள் என்ற வார்த்தை பத்திரிகைகளில் அடிபடுகிறது என்கிறார்.
“தமிழ் பேசினால் தீட்டு”
காஞ்சி சீனியர் சங்கராச்சாரி தமிழில் பேசினால் தீட்டாகிவிட்டது என்று குளியல்(ஸ்நானம்) போடும் பழக்கம் உள்ளவர். இந்த அதிர்ச்சித் தகவலை சங்கராச்சாரி உதவியாளராக இருந்த அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற நூலில் கீழ்கண்டவாறு விளக்குகிறார்.
“கும்பகோணத்தில் மாலை நேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’ அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில் குளித்து முடித்து விட்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தேதீருவது, அருளாசி பெற்றேதீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில், நாட்டுக் கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர் மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்.. ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகா பெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்.’.. என்றேன். ‘இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்’ - என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகா பெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார். போனேன். கேட்டார். சொன்னேன். ‘இதோ பாரும் தாத்தாச்சாரி அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை... பாத்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும் நோக்குதான் தெரியுமே.. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ..அதனால நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.
நானும் வெளியே வந்தேன். ‘நான் சொன்னது தானப்பா.. சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்...’ என்றேன்.
‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளை வரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’ என தாய்மொழியாம் ‘தமிழில்’ மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்..
“வேத மதம் தான் தமிழ் மதம்”
முருகனை தமிழ்த் தெய்வம் என்று கூறுவதும் தமிழ் மதம் வேறு வேதம் மதம் வேறு என்று கூறுவதும் தவறு என்று கூறுகிறார் சங்கராச்சாரி. தெய்வத்தின் குரல் பக்கம் 606-ல் இவ்வாறு கூறுகிறார்.
“முருகனைத் ‘தமிழ்த் தெய்வம்’ என்று குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேத நெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களைப் பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பது தான் என் அபிப்பிராயம்.”
“சங்கராச்சாரிக்கு சரியான பதிலடி”
வேலைக்கு செல்லும் பெண்களில் 90 சதவீதம் பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார், சங்கிரச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி. விதவை பெண்கள் தரிசு நிலம் என்றும் கூறினார்.
இது குறித்து எழுத்தாளர் வாஸந்தி (இவரும் பார்ப்பனர்) இந்தியா டுடே’ தமிழ் இதழில் ஹிட்லரும் சங்கராச்சாரியாரும் -பெண்களை இழிவுபடுத்தி மடாதிபதிகள் பேசுவது ஏன்? என்ற தலைப்பில் ஆத்திரம் பொங்க ஒரு கட்டுரையையே எழுதித் தீர்த்தார் இதோ அந்தக் கட்டுரை.
”ஹிட்லரும் சங்கராச்சாரியாரும் பெண்களை இழிவுபடுத்தி மடாதிபதிகள் பேசுவது ஏன்?
ஆரிய கலாச்சாரத்தை நிலைநாட்டும் வெறி கொண்டிருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் சமூகத்தில் தூய்மையைக் காப்பாற்றும் வகையாக பெண்களை சிந்தர் கூஹே ‘கி’கூஹே, (குழந்தைகள் சமையல் சர்ச்) ஆகியவற்றுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழங்கினான். அதாவது,படி தாண்டா பத்தினிகளினாலேயே சமூகத்தின் பண்பாடு காப்பாற்றப்படும். படி தாண்டி விட்டால், பெண்களின் ஒழுக்கம் கெடும் - மதத்தின் பெயரில், அரசியலின் பெயரில் நடக்கும் அராஜகத் தாலும் எதேச்சாதிகாரத்தாலும் கெடாத சமூகம், பெண்கள் வெளியில் சென்றால் கெட்டுப் போகும்.
ஹிட்லர் காலம்தான் ஆச்சே என்று நினைக்காததீர்கள் இதெல்லாம் நம்ம ஊர் ஆள் ஹிட்லர் சாயலில் சொன்னது. ஒரு விசுவாசப் படையைக் கொண்ட காஞ்சி மடத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சொல்லியிருக்கிறார். ‘பெண்கள் வேலைக்கும் செல்லக்கூடாது. பணக் கஷ்டத்தால் தான் வேலைக்குச் செல்கின்றனர் என்றால் வீட்டிலிருந்தபடியே சில வேலைகள் செய்து சம்பாதிக்கலாம் (எப்படி? அப்பளம் இட்டா?). “வேலைக்குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம் பேர்தான் ஒழுக்கமாக இருக்கின்றனர். நமது பாரம்பர்யத்தைக் கட்டிக் காக்கின்றனர்”
காஞ்சி மடத்தில் இப்போ தெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்வதில்தான் நேரம் செலவழிகிறது என்று தோன்றுகிறது, சில மாதங்களுக்கு முன்பு விதவைகளை தரிசு நிலம் என்று சுவாமிகள் சொன்னர். இப்போது வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். எப்படி வந்தது இந்தக் கணக்கு? எப்படி அதை நிறுபிப்பார் சாமியார்? பெண்களில் எத்தனை சதவிதம் ஒழுக்கமானவர்களாம்? அதற்கு ஆய்வு உண்டா அல்லது ஆண்களுக்கு ஒழுக்கமே தேவையில்லை என்ற மனுதர்ம ஸ்மிருதிகளை ஆதாரமாக கொள்கிறாரா?
சங்கர மடம் நடத்தும் ஒரு பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியரின் ஒழுக்கத்தைப் பற்றி புகார் வந்த போது ஆசிரியருக்கு வக்காலத்து வாங்கி பேசினவர் தானே?
ஸ்மிருதிகளில் பெண்களை அடிமைப்படுத்தும் படியான கேவலப்படுத்தும்படியான பகுதிகளை அகற்றி நல்ல அறிஞர்களைக் கொண்டு முற்போக்குச் சிந்தனைகளுடன் மறுபடி எழுதப்பட வேண்டும் என்று மகாத்மா காந்திசொன்னர் ஆனால் இந்தவேலையை நிச்சயமாக மடாதிபதிகளிடம் விடக் கூடரது என்றும் சொன்னார்
தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த சங்கர மடங்கள் எந்த யுகத்தில் புதைத்திருக்கின்றன? ‘ஆணுக்கும் சற்றும் இளைப்பில்லை என்றே இந்த வையகத்தை ஆள வந்தோம்’ என்ற புதுயுகப் பாய்ச்சலோடு, தரிசனத்தோடு புதுமைப்பெண்னை வரவேற்றானே 50 ஆண்டுகளுக்குமுன் பாரதி என்ற கவிஞன் அவனைப் பற்றி சங்கர மடத்துக்கு தெரித்திருக்க நியாயமில்லை ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃதுபொதுவில் வைப்போம்’ என்ற வார்த்தைகளில் சாராம்சமும் இவர்களுக்குப் புரியாது.
முற்போக்குச் சிந்தனைகள் இவர்களுடைய எதேச்சாதிகாரத்துக்கு ஒத்து வராததாலேயே பண்பாடு என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி பலவீனமானவர்களின் சிந்தனையை குழப்புகிறார்கள் வேலைக்குச்செல்லும் பெண்களின் தொலைக்காட்சியின் வழியாக மடத்தின் தலைவர் ஒருவர் இப்படிச் சொல்வது எத்தனை ஆபத்தான விஷயம்? அலுவலகத்திற்குச் செல்லும் மத்திய வகுப்புப் பெண்கள் கையில் மட்டுமே தனது பண்பாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதாக சுவாமிகள் நினைப்பதும் தெரிகிறது. பணத்தேவைக்காக மட்டுமே பெண்கள் வேலைக்கும் போகிறார்கள் என்று நினைப்பதும் மகா கேலிக் கூத்தாகஇருக்கிறது. சுவாமிகளுக்கு உடனடித் தேவை சரித்திரத்தில் சமூகவியலில் டியூஷன்அது கிடைக்கும் வரை வாயை மூடிக்கொண்டு இருக்கட்டும் பெண்பாவம் பொல்லாதது”.
இந்த ஜெயேந்திர சரஸ்வதி தான் மடத்தில் இருந்து இரவோடு இரவாக ஓடிப்போய் போலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு திரும்பி வந்தவர். சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை இராசேந்திரன்