பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி - அண்ணல் அம்பேத்கர்.
பெண்களுக்கு கல்வி அளிக்கப்படாவிட்டால் கல்வி என்பது அர்த்தமற்றது. பெண்களால் நடத்தப்படும் இயக்கங்களின் மேல் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அத்தகைய இயக்கங்கள் தற்போதைய ஏற்றத்தாழ்வான சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் மிகுந்தவை என்றார் அண்ணல்.
பெண்கள் இயக்கங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான விஷயங்கள், பிரச்சனைகள் இந்திய பத்திரிக்கைகளினால் முக்கியத்துவமில்லாததாகவும், இரண்டாம் தரப்பட்டதாகவும் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் செய்திகளை வெளியிட ‘மூக் நாயக் மற்றும் பகிஸ்கிரித் பாரத் ஆகிய செய்தித்தாள்களை துவங்கி வெளியிட்டார் அண்ணல் அம்பேத்கர்.
சாதி ஒழிப்பு மட்டுமின்றி பெண்களின் சமவாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் உழைத்தவர் அண்ணல்.
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் நடைபெற்ற அண்ணலின் 6 -வது நினைவு தினத்தில் புனே பல்கழைக்கழக கிரத்தி சாவித்திரிபாய் பூலே பெண்கள் கல்வி நிலைய இயக்குநர் திருமதி. சர்மிளா ரேஜ் பின்வருமாறு உரையாற்றுகிறார்.
‘பெண்ணியம் பற்றிய அம்பேத்கரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை அண்ணல் மேற்கொண்ட சட்ட ரீதியிலான போராட்டங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசரம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும், பெண்களைப் பொறுத்த வரையில் எந்த சாதியைச்சார்ந்த பெண்களானாலும், பாலினப்பாகுபாட்டுடன் இரண்டாம் தரக்குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர்.
எனவே, பாலினப் பாகுபாடு, சாதி, மதம், வர்க்கம் போன்றவற்றை அம்பேத்கரின் பார்வையில் ஒருசேர பேசவேண்டிய காலமிது.
டாக்டர் அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, மகாத்மா ஜோதிபா பூலே ஆகியோரின் பங்களிப்பு இல்லாமல் இந்திய பெண்ணிய இயக்கம் முழுமையடையாது.
பெண் உரிமைப் போராளிகளை பட்டியலிடும்போது, அரசியலமைப்பு சட்டங்களால் பெண் உரிமை காத்திட்ட அண்ணலைப் பற்றி மறுவாசிப்பு செய்வது அவசியமாகிறது.
அண்ணலைப் பற்றி சாதி ஒழிப்பிற்காக பாடுபட்டவர் என்ற சொல்லாடல் மட்டுமே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இந்து சட்ட மசோதா, தொழிலாளர் நலச்சட்ட முன்வரைவுகள், பெண்களுக்கான வாக்குரிமை கொண்டுவருதல் உள்ளிட்ட அண்ணலின் ஏனைய பணிகளைப் பற்றி பேசவேண்டியது காலத்;தின் கட்டாயமாகிறது.
ஏனென்றால் ஒவ்வொரு இந்திய குடிமகனும் அண்ணல் இயற்றிய சட்டதிட்டங்களால் மற்றும் அயராத உழைப்பினால் பயனடைந்தவர்கள் என்றால் அது மிகையல்ல.
சாதி, மதம், வர்க்கம், பாலினம் என பிரிந்து கிடக்கும் இந்திய நாட்டில், ‘சமத்துவம்” என்பதை அடிப்படை உரிமையாக அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.
ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும், உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் மனு அதர்மவாதிகளின் வீட்டுப் பெண்களுக்கும் பாலின சமத்துவ ரீதியிலான உரிமைகளைப்பெற இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி பாடுபட்டவர் அண்ணல்.
இந்தியாவில் சாதி மற்றும் பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது அண்ணலின் கோட்பாடு.
1917 ஆம் ஆண்டில் ‘இந்தியாவில் சாதிகள்” என்ற ஆய்வறிக்கையினை வெளிட்டார் அண்ணல் அம்பேத்கர். இந்திய சமூகத்தில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தைத்தடுக்கும் அனைத்து தடைகளும் சாதி அமைப்பை பராமரிப்பதில் தீவிரம் காட்டுபவை என குறிப்பிட்டார் அண்ணல்.
315 சரத்துக்கள் கொண்ட அரசியலமைப்புசட்டம் 1949 ஆம் ஆண்டில் நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்து பெண்களுக்கான வாரிசுரிமை தொடர்பான ‘இந்து சட்ட மசோதாவை“ நடைமுறைப் படுத்துவதில் தீவிரம் காட்டினார் அண்ணல் அம்பேத்கர்.
1951 ஆம் ஆண்டில் பிப்ரவரி 5 ஆம் நாள் இந்து சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான நிலப்பிரபுக்கள் எனப்படும் மிகப்பெரும் பணக்காரர்களை உறுப்பினர்களாகக் கொண்ட காங்கிரஸ் அரசாங்கம் அண்ணலின் சட்ட முன்வடிவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தது.
அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருக்கும் காலம்வரை நாங்கள் இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து, சட்ட மசோதாவின் பலஅம்சங்களை திருத்தக் கோரியும் பிடிவாதம் செய்தனர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இருந்த ஏனைய பெரும்பணக்காரர்கள்.
இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவரான இராஜேந்திர பிரசாத் இந்து சட்ட மசோதாவை பின்வருவாறு விமர்சித்தார்.
அதாவது ’ இந்து சட்ட மசோதா முற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களை மட்டுமே திருப்திபடுத்த முடியும் “ என்றார் அவர். அதாவது அப்போதைய இந்தியாவின் பெரும்பாலான மக்களை பிற்போக்குத்தனமானவர்கள் என மறைமுகமாக குறிப்பிட்டார் டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து தாமாக பதவி விலகிய பின்னர், 1956 ஆம் ஆண்டில் பல நீர்த்துப்போன அம்சங்களுடன் ‘இந்து சட்ட மசோதா” நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
அதன்பின்னர் பெண் உரிமைகள் தொடர்பான பல்வேறு சட்டங்கள் இந்திய அரசாங்கங்களால் அறிமுகம் செய்யப்பட்டன. 2005 ஆம் ஆண்டில் இந்து சட்ட மசோதாவில் வாரிசுரிமை தொடர்பான சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
2020 -ல் குடும்பசொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தகைய சட்டதிட்டங்களுக்கு முன்னோடியாய் அமைந்தது அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த இந்துசட்ட மசோதா என்பதை வரலாறு அறிந்த யாராலும் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது.
‘பெண் உரிமை, பாலின சமத்துவம் பற்றிய கேள்விகளுக்கு அம்பேத்கரின் சமூக சிந்தனைகளிலிருந்து விடைதேடுவதே பொருத்தமானதாகும்” .
- சுதேசி தோழன்