பக்கத்து வீட்டு முகம்... இன்னும் சொல்ல போனால் நமது சித்தப்பா அல்லது மாமாவின் சிரிப்பு தான். சந்திரசேகர் எனும் நடிகனை அநேகமாக சின்ன வயதில் நிறைய படங்களில் பார்த்திருப்போம். சினிமாவின் ஓட்டத்தில் எப்போதும் ஒரு சப்போர்ட் பாத்திரம்... நண்பனாக... சில படங்களில் வில்லத்தனம் கூடிய தோற்றத்தில்... எப்படி வந்தாலும்... அந்த பாத்திரத்தை பிடித்து... அதில் தன்னை வெகு அழகாக நிரப்பிக் கொள்ளும் நடிகன். சின்ன பாத்திரமாக இருந்தாலும்... அதில் தன் சித்திரத்தை தத்ரூபமாக வடித்து விடும் வகையில்.... எப்போதும் எப்படியும் தென்றலும் சூறாவளியும் கலந்த கலவை தான்... இந்த வாகை. குரல் வழியே நிரம்பும் கம்பீரம்... திரையில் தான் தோன்றும் போதெல்லாம் தன்னை நோக்கி பார்வையாளர்களை இழுத்து விடும் வசீகரம் கொண்டவர்.

vaagai chandrasekar"செந்தூர பூவே" டாக்டர் ஆகட்டும்... "ஆறும் அது ஆழம் இல்ல" பாடலில் வலி தரும் திரைக்கதையை தன் வாயசைப்பில் உடல் அசைவில் காட்டி விடும்...கைகள் இல்லாத பாத்திரமாகட்டும்... "கரகாட்டக்கார" னில் உதவாக்கரை மாமாவாகட்டும்... தன்னளவில் எப்போதும் தனித்துவம் கொண்ட நடிகன் தான் சந்திரசேகர். "ஊமை விழிக"ளில் ரிப்போர்ட்டராக வரும் பாத்திரத்தில்... என்று... எந்த ஒரு வெற்றி படத்திலும் தன்னை அதில் ஏதோ ஒரு வகையில் இணைத்துக் கொண்டிருக்கும் சினிமா தெரிந்த சப்போர்ட்டர் என்றால்... மிகை இல்லை.

அப்படியே அவரைப் பற்றி தேட ஆரம்பித்தால்.. ஆரம்ப காலங்களில் ஹீரோவாகத்தான் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

"பாலைவன சோலை" ஒரு ட்ரெண்ட் செட்டர் படம் என்று நாம் அறிவோம். அதில் நான்கு நண்பர்களில் ஒருவராக முதன்மை பாத்திரத்தில் வசீகரித்திருப்பார். தாடி தாண்டி முகம் முழுக்க சிரிக்கும் பாத்திர வடிவத்தை சினிமா உள்ள காலம் வரை நாம் ரசிக்கத்தான் செய்வோம்.

"ஆளானாலும் ஆளு" பாடலுக்கு ஆட்டமும் பாட்டமுமாக நால்வர் அணியோடு... ஆடியும் ஆடாமல்... பாவனைகளால் வசீகரிக்கும் சந்திரசேகருக்கு அதே படத்தில் சுஹாசினியோடு "மேகமே மேகமே" பாடல் வாழ்நாள் வரம். புல் மைதானத்தில் லாங் ஷாட்டில் இடைவெளி விட்டு அமர்ந்து... ஹீரோயின் சோகமாய் தன் கதையை பாட... புரிந்தும் புரியாமல்... ஆனாலும் காதல் எனும் நூல் பற்றி புரியாத புதிராக இருக்கும் அவளை கவனித்து அமர்ந்திருக்கும் காட்சி... காலத்துக்கும் நெக்குருக செய்யும் வானவில் துண்டுகள் போல...வசீகர பிலிம் துண்டுகள்.

பெல்ஸ்- ல்... டைட் சட்டையில்... ஒல்லி பிச்சான் உடல்வாகில் வாத்து ஆட்டம் போடும் அவரை காண காண உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

சாதாரண உடல் அமைப்பில்... எதிர் வீட்டு பையன் கூட ஹீரோவாக ஆகலாம் என்று செயலாற்றி காண்பித்ததில் தனுஷ்க்கு எல்லாம் முன்னோடி சந்திரசேகர்.

அவரிடம் நான் ரசிப்பது.. படக்கென சிரிக்கும்... அந்த வெள்ளந்தி சிரிப்பும்.. குரல் வழியே நிரப்பும் கம்பீரமும். கூட... அவர் இடது கை பழக்கமுள்ளவர். அதை அப்படியே படங்களிலும் காட்டி விடுபவர். இடது கை பழக்கமுள்ளவர்கள் சினிமாவுக்காக வலது கையில் செயலாற்றுவது... வலிய திணித்த காட்சி அமைப்பாக இருக்கும். அதில் உடன்படாத நமக்கு.. இவரின் இடது தோள் முந்திக் கொண்டு வர... நடந்து கொள்ளும் உடல்மொழி... பார்க்க நன்றாக இருக்கும். எந்த பாத்திரத்திலும் தன் இலகுவான உடல் மொழியால்... சுலபமாக நம்மை காட்சியோடு இணைத்து விடும் லாவகம் வாய்த்தவர்.

எத்தனை நீளமான வசனங்கள் என்றாலும் உச்சரிப்பு பிசகாமல்... மொழி வழியே தமிழூன்றி நிற்கும் கால படைப்புகளில் அவரின் பங்கு அசாத்தியம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்ததால் நடிப்பின் டைமிங் அறிந்த நடிப்பறிஞராக இருக்கிறார். "சிவப்பு மல்லி" யில் விஜயகாந்த் உடன் ஆரம்பித்த பயணம்... அவர்கள் நட்பில் கூட காலம் தாண்டிய கதை இருக்கிறது.

சந்திரசேகருக்கு "நிழல்கள்" மிக முக்கியமான படம் என்று நினைக்கிறேன். "மடை திறந்து தாவும் நதி அலை நான்... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்...." பாடல் இப்போது வரை கலைத்துறையில் வெற்றி வாகை சூட நினைக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் உந்து சக்தி. உற்சாக கானம். அது வாகை சந்திரசேகருக்கு எப்போதும் அடுத்தடுத்த தலைமுறைக்கு விசிட்டிங் கார்டாகவும் இருக்கிறது.

"பெரியதம்பி"... "மறவன்"... :சின்னவர்" படங்களில் பிரபுக்கு நண்பன். அதே பிரபுக்கு "பாஞ்சாலங்குறிச்சி" யில் மாமனார். "சாத்தான் சொல்லைத் தட்டாதே" படத்தில் பூதத்தோடு ஜாலி செய்திருக்கும் ஹீரோ நண்பர்களில் ஒருவராக என்று.. எந்த பாத்திரத்திலும் பக்குவம் நிரம்ப தன்னை பதித்து விட்டு சென்று விடும்.. சந்திரசேகருக்கு வாழ்நாள் சினிமா என்றால் அது "நண்பா நண்பா". சிறந்த துணை பாத்திரத்துக்கான தேசிய விருதை அந்த படத்துக்காக வாங்கினார். கழுத்துக்கு கீழே செயல் இழந்த பாத்திரத்தில் நம்மை அமைதியாக உறைய விட்டிருப்பார். படம் முடிகையில்... கண்களில் நடுக்கமும்... எப்போதோ எங்கோ எப்படியோ நின்ற காலத்தின் தவிப்பும் இன்ன வகை என தெரியாமல் வந்து நம்மை சூழ்ந்து கொள்ளும். உயிரோடு இருக்கும் கிடை பிணமாக கட்டிலில் படுத்தே கிடக்கும் பாத்திரம்.... மெல்ல மெல்ல படம் முழுவதும் இனம் புரியாத பயத்தை நம் மீது ஊர செய்து விடும். படுத்துக் கொண்டே ஜெயித்த ஒரு சிறந்த நடிகனை நாம் மெய்மறந்து மனம் முழுக்க வியாபித்திருப்போம். உடல் எனும் பெரு மந்திரம் கொஞ்சம் சொதப்பினால் கூட கூடு விட்டு நகராது உலகம். அப்படி கட்டிலில் கனத்தோடு கிடக்கும் அந்த பாத்திரத்தில் வடிவதெல்லாம் கண்ணீர் எனும் குருதி தான். மனுஷன் தன்னையே கொண்டு ஒரு தவத்தை படைத்திருப்பார்.

எதிர்பாராமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் நிதர்சனத்தை எதிர்த்து ஒரு சராசரி வாழ்வு முறை நிகழ்த்தி காட்டி இருக்கும் இந்த "நண்பா நண்பா"... இரு நண்பர்களின் நட்புக்கான கால பேரொளி. பேரன்பின் வழியே தான் அது சாத்தியம்.

சந்திரசேகர் எனும் நடிகனுக்கு மிக கச்சிதமான வாழ்நாள் விருது இந்த படம். 

- கவிஜி

Pin It