புஷ்பா படத்தின் "சாமி" மற்றும் "ஊ சொல்றியா" ஆகிய இரு பாடல்களுக்கும் நடனமாடி ஏராளமான பெண்கள் வீடியோ போடுகிறார்கள். "அர்த்தமெல்லாம் எதுவா இருந்தா என்ன; பாட்டு நல்லாருக்கு அவ்வளவுதான்" என்பதே அவர்களின் வாதம்.

oo solriya mamaஒரு பாடலின் இசையை, வரிகளை, காட்சிகளை தனித்தனியே பிரித்துப் பார்த்து ரசிக்கவும் முடியும், மதிப்பிடவும் முடியும். உண்மைதான். ஆனால் அதற்குரிய பக்குவம், பயிற்சி, பலம் நமக்கு எல்லோருக்கும் இருப்பதில்லை. காட்சியும் வரிகளும் மோசமாக இருக்கும்பொழுது, இசைக்காக பாடலை கேட்கிறேன்; பாடுகிறேன்; ஆடுகிறேன் என்று கவுரவமாக சொல்லி தப்பித்துக் கொள்வதுதான் நடக்கிறது. காட்சியும் வரிகளும் திரும்ப, திரும்ப நம்மை தொடுகிற பொழுது அதை மறுக்கிற மன வலிமை, எதிர் கருத்தியல் பலம் கொண்டவர்களிடையேயும் குன்றும். எதிர் கருத்தியல் பலமில்லா இளைஞர்கள் எம்மாத்திரம்?

சரி அந்த இசை எப்படி இருக்கிறது? வாழ்வோடு - உணர்வோடு (அது நிலக்கிழாரிய அடிப்படையிலானதாக இருந்தாலும்) பிண்ணியிருந்த தமிழ் திரை இசை, இளையராஜா காலத்திலேயே பிரிய தொடங்கிவிட்டது. ரஹ்மான் வரவிலிருந்து அந்த ஓட்டம் வேகமெடுத்து இன்று அனிருத் காலத்தில் தனித்தனியே நிற்கிறது. அதாவது அது ஏகாதிபத்திய விரைவு வாழ்க்கைக்கு ஏற்ப ராக்-ராப் இசை வடிவத்தில் குத்தாட்டப் பாடல்களாகி நிற்கின்றன. அன்று இசையை கேட்டு ரசிப்பதை முதன்மையாக்கி பாடல்கள் உருவாக்கம் இருந்தது; இன்று கேட்டால் 'ஜாலி'யாக இருக்க வேண்டும் - ஆட வேண்டும் என்பதை முதன்மையாக்கி பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. குத்தாட்டம் - குதூகலம்தான் ஒரே இசை என்பதாக மாறி மெல்லிய உணர்வுகளெல்லாம் வன்மையான உணர்வுகளாக மாற்றப்படுகின்றன. வீட்டில் கழிவறையும் இருக்கும் என்று அன்று பாடலாசிரியர் வாலி ஆபாச பாட்டு வரிகளுக்கு நியாயவாதம் பேசினார். ஆனால், இன்று படிப்பறை - பூஜையறையை எல்லாம் விழுங்கி வீட்டில் கழிவறை மட்டுமே பெரிதாக இருக்கிறது.

"இந்த நொடியை என்ஜாய் பண்ணு" என்ற உதிரி வர்க்க வாழ்வியல் சிந்தனையை விதைப்பதுதான் இன்றைய அநேக திரைப்படங்கள். அதுதான் "இது வெறும் இசைக்காக மட்டும்தான். அதன் வரிகளின் பொருளை நாங்கள் சட்டை செய்வதில்லை" என்று பேச வைக்கிறது‌. ஆனால் இசை நீங்கலாக அந்த வரிகளும் காட்சிகளும் சிந்தனையில் அட்டை போல் ஒட்டி உறிஞ்சி ஆளும்வர்க்கங்கள் எதிர்பார்க்கிற வாழ்வியலை நோக்கி இன்றைய இளைஞர்களை நகர்த்துகிறது.

"சாமி" பாடல் நிலக்கிழாரிய ஆணாதிக்க - பெண்ணடிமை அடிப்படையிலான பொருளும், "ஊ சொல்றியா" பாடல் பின்நவீனத்துவ பெண்ணிய அடிப்படையிலான பொருளும் கொண்டுள்ளன. இது நமது அரைக்காலனிய - அரைநிலக்கிழாரிய சமூகத்தின் வெளிப்பாடு - எடுத்துக்காட்டு.

பொதுமையாக ஆண்களை தாக்குகிற பின்நவீனத்துவ பெண்ணிய தாக்குதலை கூட ஆண்கள் உணர்ந்துவிடக் கூடாது என, ஆடைக்குறைப்பு - வக்கிர நடன அசைவு கொண்ட 'ஊ சொல்றியா - அயிட்டம் சாங்'கு மூலம் ஆண்களுக்கு பாலியல் போதையேற்றிதான் மறைக்கிறார்கள். இதுவும் ஒருவகை ஆணாதிக்க போக்கே.

ஒன்று அடிமைத்தனம்; மற்றொன்று கட்டற்ற பெண்ணிய தாக்குதல் வகை. இரண்டுமே பெண்களுக்கு எதிரானது என்பதை உணராதவர்கள்தான் அப்பாடல்களுக்கு அதே நடன அசைவுகளை ஆடி மகிழ்கிறார்கள்; வீடியோவை பதிவேற்றுகிறார்கள்.

இசைக்காக மட்டுமே, ஜாலிக்காக மட்டுமே என்கிற காரணமெல்லாம் யாரோ வணிகமாக்கவே பயன்படுகின்றன. தமிழ்நாட்டில் வந்த சில எதிர்ப்புகளை வைத்து "லைக்கா" நிறுவனம் தெலுங்கு சினிமா பக்கம் நகர்ந்து தென்னிந்திய சந்தையில் கோலோச்ச "புஷ்பா" போன்ற படங்களை இறக்குகிறது.

இளைஞர்களுக்கு "Stress buster" என்று வக்காலத்து வாங்கி இப்போக்கை சிலர் ஆதரிப்பது அச்சீரழிவைவிட ஆபத்தானது. நாமும் ஆடல் பாடலை எல்லோரும் பங்கெடுக்கும் வண்ணம் சமூக கூட்டுறவில் வெளிப்பட வேண்டும் என்று சொல்கிறோமே ஒழிய, மன அழுத்தங்களைக் குறைக்க வாழ்வியலை - சிந்தனையைக் கெடுக்கும் இத்தகைய ஆடல் - பாடல் போதை வகையை மாற்றாகக் குறிப்பிடவில்லை.

-  ஞாலன்

Pin It