இந்திய நாடகத்துறையில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு உன்னதக் கலைஞன் அன்றிலிருந்து இன்றுவரை உண்டென்றால் அது நடிகவேள் எம். ஆர். ராதா மட்டும்தான் என்று எவ்விதத் தயக்கமும் இன்றிச் சொல்லிவிடலாம்.
கலைத் தாகமும், நவீன சிந்தனையும், பழமைக்கெதிரான போர்க்குணமும் இறுதிவரை உறுதியுடனிருந்தது அவர் ஒருவரிடம் மட்டும்தான்.
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் ஏழ்மைக்கும், மடமைக்கும் எதிராகச் சமர் புரிந்து கொண்டிருந்த பொதுவுடைமை இயக்கத்திடமும், பகுத்தறிவு இயக்கத்திடமும் தன்னைப் பறிகொடுத்த கலை யின் தலைமகன் அவர். அதிலும் குறிப்பாக, தந்தை பெரியாரின் வலதுகரமாக, அவரின் கைத்தடியாக, போர் வாளாகவே தன் வாழ்நாள் முழுவதையும் மகிழ்வோடு நடத்திக் காட்டியவர் நடிகவேள்.
பெரியாரைச் சந்திப்பதற்கு முன்னரே - அவரின் இளம் வயது முதலே கலகக் குணம் இயல்பிலேயே அவருக்கு இருந்தது. அதனைப் பின்னர் அடையாளங்கண்டு, பேணி வளர்த்து, தமிழகம் பயனுறச் செய்தவர் பெரியார். புராணக் கதைப்புனைவுகளும் பிற்போக்குத்தனமான பழங்கதைகளும் மட்டுமே மேடை நாடகங்களாகக் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த நாளில் இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்து ஆங்காங்கே சிலர் நாடகங்களை நடத்துவதும் நடந்தது. ஆனால், முற்றிலும் புதிய ஒளி பாய்ச்சப்பட்ட விழிப்புணர்வுக் கருத்துக்களை எம்.ஆர்.ராதாபோல வேறெவரும் துணிந்து சொன்னதில்லை.
ஏற்ற, இறக்கமான அவரது தனித்துவக் குரலும், பல்வேறுபட்ட பாவங்கள் காட்டும் அவரது உடல் மொழியும், புதிய சோதனை முயற்சிகளை நாடகங்களில் புகுத்தும் பேரார்வமும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் நிலவிவந்த மூடத்தனங்களின்மீது அவருக்கிருந்த தீராத கோபமும் சேர்ந்துதான் மதராஸ் ராஜகோபால நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணனை நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று உயர்த்தியது.
அப்பா ராஜகோபாலநாயுடு ஒரு ராணுவ வீரர். விருதுகள் பலபெற்ற அவர் ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா எனுமிடத்தில் வீரமரணமடைந்தார். மூர்மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவந்த தாத்தாவும் கொஞ்ச நாளில் கண் மூடினார். வறுமை சூழ்ந்து கொண்ட குடும்பத்தில் படிப்பு ஏறாத ராதாவை அவரது அம்மா கோபித்துக் கொண்டதால் வீட்டைவிட்டு வெளியேறி, ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி முதலாளியிடம் அடைக்கலமானார். முதலாளியின் பெட்டியைச் சுமக்கும் சுமைப்பணிதான் அவர் செய்த முதல் வேலை.
ராதா போட்ட முதல் வேடம் கிருஷ்ணலீலா நாடகத்தில் பாலகிருஷ்ணன் வேடம்தான். பிறகு. சிறுசிறு வேடங்கள். அந்தக்கால வழக்கப்படி சிறுபையன்கள் ராஜபார்ட் நடிகர்களுக்குக் கை கால்கள் பிடித்துவிட வேண்டும். எடுபிடி வேலைகள் செய்ய வேண்டும். ராதா அங்கே எல்லோருடைய துணிகளையும் துவைக்கும் வேலையைச் செய்துவந்தார். தனக்குக் கொடுக்கப்படும் வேடம் எதுவானாலும் அதில் தனி முத்திரை பதிக்கமட்டும் அவர் தவறவில்லை. இப்படி அவர் தன்னை ஒரு பெருங்கலைஞனாக உருவாக்கிக் கொள்ள மிகுந்த துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு நாளைக்குக் காலணா சம்பளம். அதில்தான் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அல்லது கதாநாயக நடிகர்களுக்கு வரவழைக்கப்படும் ஸ்பெஷல் சாப்பாட் டில் அவர்கள் சாப்பிட்டதுபோக மிச்சம் மீதி இருந்தால் அதைத் தருவார்கள்.
கொஞ்சகாலம் கழித்து ராதா அவரது அண்ணன் ஜானகிராமனையும், தம்பி பாப்பாவையும் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ந்த இராவண கோவிந்தசாமி நாயுடு நாடகக் குழுவிலோ சரியாக நடிக்க வில்லையென் றால் கடுமையாக அடிப்பார்கள். இதைத் தனது சுயமரிதைக்கு இழுக்கென்று நினைத்த ராதா அங்கிருந்து வெளியேறினார். அந்தக்காலத்து நாடகக் குழுக்களில் சாதி வித்தியாசம் பார்ப்பது அதிகம் இருக்கும். உயர் சாதியைச் சேர்ந்த கலைஞர்கள் தனியாகச் சாப்பிடும் ஏற்பாடு நாடகக் கம்பெனிகளில் சகஜம். எம்.ஆர். ராதா இதற்கு எதிராக அப்போதே கலகம் செய்வார். பிராமணர்கள் குடிக்கும் காப்பி டம்ளர்களை எச்சில் படுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பார். நுழையக்கூடாது என்று வைத்திருந்த பிராமணர்கள் சமைய லறைக்குள் நுழைந்துவிட்டு ‘இப்போது என்ன, சாப்பாடு கெட்டாபோச்சு?’ என்று சிரிப்பார்.
இதெல்லாம், பெரியார் என்ற ஒருவர் நாளெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கிறார் என்பதே அறியாத இளம் பருவத்து ராதாவின் கலகக்குறும்புகள். நாடகக் கம்பெனிகள் பலவும் அடிமை முறை பேணு பவையாகவும், சனாதனக் கூடாரங்களாகவும் இருந்த அதே காலத்தில்தான் ஜெகந்நாதய்யர் கம்பெனியும் இருந்தது. இராவண கோவிந்தசாமி நாயுடு குழுவைவிட்டு வெளியேறிய ராதா, அடுத்துபோன சாமண்ணா குழுவில் படித்தவன் - படிக்காதவன் பாகுபாடு இருப்பது கண்டு அங்கிருந்தும் வெளியேறி இந்த ஜெகந்நா தய்யர் குழுவில் வந்து சேர்ந்தார்.
அக்குழு ஏற்கெனவே பிரசித்தி பெற்றிருந்தது. 1924 - ல் ஜெகந்நாதய்யர் நடத்திய ‘கதரின் வெற்றி’ நாடகத்தை யாரெல்லாம் பார்த்தார்கள் என்ற பட்டியலைப் பார்த்தாலே இக்குழுவின் கீர்த்தி விளங்கும். இந்த நாடகத்தை மகாத்மா காந்தி, கஸ்தூரிபா, சுப்பிரமணிய பாரதி, ராஜாஜி, சீனிவாச ஐயங்கார், தேவதாஸ் காந்தி முதலானவர்களெல்லாம் பார்த்தார்கள். இந்த நாடகத்தில் தான் ராதா ‘பாயசம்’ என்ற பாத்திரத்தில் முதன் முதலில் நகைச்சுவை வேடமேற்றார். யாரையுமே அவ்வளவு எளிதில் பாராட்டாத ராஜாஜி எம்.ஆர். ராதாவைக் கூப்பிட்டு வெகுவாகப் பாராட்டிச் சென்றாராம். அப் போது ராதாவின் வயது 12
இந்த ஜெகந்நாதய்யர் நாடகக் குழுவில் சாதி ஏற்றத் தாழ்வு இல்லை. மற்ற முதலாளிகள்போல இல்லாமல் அவர் எல்லோரோடும் சமமாக அமர்ந்து சாப்பிடுவார். ராஜபார்ட் நாயக நடிகர்களிலிருந்து எடுபிடிகள் வரை -முதலாளி உட்பட எல்லாருக்கும் ஒரே விதமான உணவு, உடை, வசதிகள். யதார்த்தம் பொன்னுசாமி, கே.சாரங்கபாணி, எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன், பி.டி. சம்பந்தம், நவாப் ராஜமாணிக்கம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்,வி.வெங்கட்ராமன், எம்.ஆர். எஸ்.மணி பின்னாளில் டி.ஆர். மகாலிங்கம், டி.எஸ். பாலையா போன்றோரெல்லாம் வேலைசெய்த பெருமை ஜெகந்நாதய்யர் கம்பெனிக்கே இருந்தது.
இதனால்தான் எம்.ஆர். ராதா சங்கரதாஸ் சுவாமிகளை நாடக உலகின் தந்தை என அழைப்பதை ஏற்க மறுத்தார். இந்த விஷயத்திலும் அவர் துணிந்து இந்தக் கருத்தை முன்வைத்தார். நல்ல நாடகக் கலைஞர்களை உருவாக்கியவர் ஜெகந்நாதய்யர்தான் என்பார் ராதா.
இங்கே தன் நடிப்புக் கலையைப் பட்டை தீட்டிக் கொண்டதோடு, கார் டிரைவராகவும், மெக்கானிக்காகவும், சிறந்த எலக்ட்ரீசியனாகவும் ராதா விளங்கினார். நாடகக் காட்சி அமைப்புக்கேற்ப புதிய புதிய உத்திகளுடன் மின்சார விளக்குகளை அமைத்து அனைவரையும் ராதா அசரவைத்தார்.
இப்படித் தன்திறன் முழுமையையும் மெருகேற்றி வளர்த்துக் கொண்டு, தமிழக நாடகத்துறையின் முன்னணிக் கலைஞனாக உயர்ந்திருந்த எம்.ஆர். ராதாவைப் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த தனது “நான் ஏன் பிறந்தேன்?” தொடரில் எம்.ஜி.ஆர். இவ்வாறு எழுதினார்:
“நான் நடித்துக் கொண்டிருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பையன்களுக்குள் அதிசயமாய்ப் பேசப்பட்டது. இன்னொரு கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற ஒருவர் எங்கள் கம்பெனிக்கு வருகிறார் என்று கேள்விப்பட்ட சேதிதான் அது. அவர் சண்டைக் காட்சிகளில் இயற்கையாக நடிப்பவர், எந்த வேடத்தையும் ஏற்றுத் திறமையாக நடிப்பவர். யாருக்கும் பயப்படாதவர், எந்தக் கட்டுப்பாட்டுக்கும் வளைந்து கொடுக்காதவர், எல்லோரிடமும் சரளமாகப் பழகுபவர். இப்படி எத்தனையோ செய்திகள் எங்களுக்குத் தரப்பட்டு அந்த நடிகர் என்று வருவார் என்று ஆவலோடு காத்திருக்கும் நிலைக்கு நாங்கள் ஆளாக்கப் பட்டோம். கடைசியாக ஒருநாள் வந்து சேர்ந்தார். தலைநிறைய முடி, கழுத்தில் மப்ளர், கோட், வேட்டி, செருப்பு, பயமற்ற வேக நடை, உரக்கப் பேச சங்கோஜப்படாமல் வாய்விட்டுச் சிரித்து அளவளாவும் தன்மை, இவைகளைப் போன்ற நடைமுறைகளைக் கொண்ட அந்த நடிகர் வந்த சிறிது நேரத்திற்கெல்லாமே கம்பெனிவீட்டை கலகலப் பாக்கிக் கொண்டிருந்தார். அவர்தான் எம். ஆர்.ராதா அண்ணன் அவர்கள்!”
இப்படிச் சொல்லிய எம்.ஜி.ஆர். இன்னொன்றையும் இங்கே மறைக்காமல் எழுதிச் செல்கிறார். அது அவரது பெருந்தன்மையை மட்டுமல்ல... எம்.ஆர். ராதாவின் உயர் பெருமையையும் உரக்கவே இயம்புகிறது. இதோ எம்.ஜி.ஆர். இன்னும் பேசுகிறார்:
“எனது நாடக வாழ்க்கையில் திரு. எம்.ஆர்.ராதா அவர்களுடைய நடிப்பை நாடகத்தில் காணவும், அதே நாடகங்களில் நானும் நடிக்கக்கிடைத்த அந்த நாட்கள் குறைவாயினும் எனக்கு அது ஒரு காலகட்டமாகவே இருந்தது. எனது நடிப்புலகில் எனக்குப் பெரிய புதிய ஒரு திருப்பத்திற்குக் காரணமாயிருந்த ஒரு காலகட்டம் அது என்றால் மிகையாகாது. அந்தத் திருப்பத்திற்கு ஓரளவில் திரு. எம்.ஆர்.ராதா அவர்களும் காரணமாயி ருந்தார் என்பதைச் சொல்லுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.”
எம்.ஜி.ஆருக்கு மட்டுமா? இதோ எம்.ஆர்.ராதா யாருக்கெல்லாம் ஒரு ஆதர்சமாக இருந்திருக்கிறார் பாருங்கள். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை தனது நாடகக் குழுவை நடிப்பு, சண்டைப் பயிற்சி, தொழில் நுட்பம் எல்லாவற்றிலும் கைதேர்ந்த ராதாவிடம் ஒப்படைத்துவிட்டார். ராதா தனது பன்முகத் தன்மை கொண்ட நடிப்பால் அந்தக் குழுவை உயர்த்தினார். ராதாவைப்போல நடிக்க விரும்பி, அவர் இல்லாதபோது அவரைப்போலவே நடித்துப்பார்த்து முயற்சிசெய்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா? சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, டி.கே.ராமச்சந்திரன். அதாவது நடிகர் திலகத்துக்கே ராதாவின் நடிப்பு பாடமாகியிருக்கிறது, வழிகாட்டியிருக்கிறது.
ஈரோட்டிலிருக்கும்போது சக நடிகர் உதவியோடு பெரியாரையும், நாகம்மையாரையும் சந்திக்கும் பேறு ராதாவுக்குக் கிட்டியது.
எம்.ஆர். ராதா தனது சகாக்கள் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து புதிய நாடகக் குழுவைத் துவங்கினார். அக்குழு கோலாரில் முகாமிட்டிருந்தபோது ராதாவின் பணக்கார ரசிகர் சாமிநாதன் என்பவர் அவரது ராஜசேகரன் நாடகத்தைப் படமாக்க விரும்பி ஒப்பந்தம் செய்தார். படம் வெளி வந்து சரிவர ஓடாத நிலையிலும் ராதாவுக்குப் பெரும் புகழ் சேர்த்துவிட்டது. ஆங்கில நடிகர் டக்ளஸ் பேர் பாங்க்ஸ் நடிப்பை விஞ்சிவிட்டதாக அவரை ‘இண்டியன் டக்ளஸ்’ என பத்திரிகைகள் எழுதின. அப் போது அவருக்கு 20 வயதுதான். இராஜசேகரனுக்குப்பின் ராதாவே சொந்தமாக ‘பம்பாய்மெயில்’ என்ற படத்தைத் தயாரித்தார். எனினும் அவரால் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருக்கப் பொறுமை இல்லை. மனசெல்லாம் நாடகத்தையே நினைத்துக் கொண்டிருந்தது. சமயம் பார்த்து யதார்த்தம் பொன்னு சாமிப்பிள்ளை மீண்டும் வந்து சந்தித்தார். மறுபடியும் நாடகமேடைக்கு உயிர் வந்தது. அந்தக் காலகட்டத்தில் எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தனர். ஆனால் ராதாவோ தன்னை விரும்பி அழைத்த புதிய ஊடகத்தை - சினிமாவை உதறித்தள்ளிவிட்டு நாடகத்தை நோக்கிப் போனார். இதைப் பலரும் வியப்போடு பார்த்தனர். ரசிகர்களை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ள, பேசுகிற வசனத்தின் கருத்துக்கேற்ப மக்களின் பிரதிபலிப்பை உடனுக்குடன் காண சாத்தியமான நாடகக் கலை அவருக்கு லயித்ததில் வியப்பில்லை. அவர் வெறும் பிழைப்புக் கலைஞனல்லவே, அதையும் தாண்டிய லட்சிய வீர ரல்லவா?
ராதாவின் இழந்த காதலைப் பார்த்த அண்ணா குடியரசு இதழில் அவரை மேற்குலக நடிகர் பால் முனிக்கு ஒப்பானவர் என எழுதி மகிழ்ந்தார்.
ஒருமுறை பெரியாரும், அண்ணாவும், ஈ.வி.கே. சம்பத்தும் டிக்கட் எடுத்துக் கொண்டு ராதாவின் நாடகத்தைப் பார்க்க வந்தனர். இடைவேளையின்போது அண்ணா மேடையேறிச் சொன்னர்:
“ராதாவைப்போல ஒரு நடிகரைப் பார்த்ததில்லை. நாங்கள் நடத்துகிற நூறு மாநாடுகளுக்கு ராதாவின் ஒரு நாடகம் ஒப்பாகும்!”
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எம்.ஆர். ராதாவின் நாடகங்களில் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள், சீர்திருத்தக் கருத்துக்கள் இன்னும் அதிகம் இடம் பெற்றன. திராவிடர் கழகத்தின் மாநாடுகளில், கூட்டங்களில் பங்கேற்றார் ராதா. பெரியாரின் தீவிரத் தொண்டராகத் தமிழகம் முழுவதும் நெருப்பாய்ப் பறந்த எம்.ஆர்.ராதா பெரியாருடன் அண்ணாவுக்கு முரண்பாடு வந்து அவர்கள் பிரிந்து சென்ற போதும் பெரியாரிடமே பற்றுக் கொண்டவராக நின்றார். அவர்வழி நின்று அண்ணாவை விமர்சிக்கவும் தயங்க வில்லை.
தொடர்ந்து ராதாவின் நாடகங்கள் மக்களின் பேராதரவுடன் அரங்கேறின. ஆளும் கூட்டத்தையோ அவரின் நாடகங்கள் சிம்மசொப்பனமாக இருந்து மிரட்டின. பெரியாரின் விருப்பப்படி வால்மீகி ராமா யணத்தை நாடகமாக்கி அரங்கேற்றும் நேரம் அதற்கு அரசு தடை போட்டது. ராதா சளைக்கவில்லை. நீதி மன்றம் சென்று அனுமதி பெற்றார். சட்டமன்றத்தில் அன்றைய அமைச்சர் சி.சுப்பிரமணியம் ராதாவுக் கெதிராகக் கடுமையாகப் பேசினார். ராதா சட்டமன்ற வளாகத்துக்கே தனி ஆளாகப் போய் ஆளுங்கட்சி யினருடன் சொற்போர் நடத்தினார். ராதாவுக்காகவே நாடகத்தடைச்சட்டம் 1954 -ல் சி.சுப்பிரமணியத்தால் கொண்டுவரப்பட்டது.
‘இராமாயணம்’ நாடகத்தையும், மற்ற நாடகங்களையும் சட்டம் குறித்துக் கொஞ்சமும் கவலையின்றி தொடர்ந்து நடத்தினர்.
‘ஒரு அவதாரத்தின் ஊழலைச் சொல்லும்போதே இவ்வளவு எதிர்ப்பா? ஏன் பத்து அவதாரத்தின் ஊழல் களையும் ஒரே நாடகத்தில் காட்டக்கூடாது?’ -என்று எண்ணி ‘தசாவதாரம்’ நாடகத்தை உருவாக்கினார். ராமாயணம் 200 நாட்களும், தசாவதாரம் 125 நாட்களும் ஓடி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. யாரையுமே எளிதில் பாராட்டிவிடாத பெரியார் ‘ராதா மன்றம்’ என்ற அமைப்பையே உருவாக்குமளவுக்கு எம்.ஆர்.ராதா பெரியாரின் கொள்கைப் போர்வாளாகவே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தார்.
தந்தை பெரியார் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்த பின் தீவிரமாக கம்யூனிஸ்ட் ஆதரவு நிலை மேற்கொண்ட போது ராதாவுக்கும் கம்யூனிசம் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் ஈர்ப்பு ஏற்பட்டது. தனது நாடகங்களில் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி அடக்கு முறைக்கு உள்ளானபோது அதன் தலைவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே கட்சியையும் நடத்தி வந்தனர். அப்போது தலைவர் ஜீவானந்தத்தை தோழர் ஒருவர் ராதாவிடம் கொண்டுபோய்ச் சேர்ந்தார். உங்களால்தான் இவரைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இயலும் என்று கூறி அவரிடம் விட்டுவிட்டார். ராதா யோசித்தார். ஜீவாவுக்கு மொட்டை அடிக்கச் செய்தார். நெற்றியிலும், உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்டது. யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க இயலாதபடி மாறிப்போன ஜீவாவைத் தன்னுடன் நடிக்கும் திருச்சியைச் சேர்ந்த நடிகை எம்.ஆர். மங்களத்தின் தந்தை என்று எல்லோரிடமும் கூறி அவரைப் பாதுகாத்தார் ராதா.
அந்தச் சமயம் ஜீவா அடிக்கடி கடிதங்கள் எழுதி ஒரு ஆசிரியையிடம் ராதாவின் மூலம் சேர்ப்பார். ஜீவாவின் கடிதத்தை ராதா அந்த டீச்சரிடம் கொண்டு சேர்ப்பது தொடர்ந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் என ராதா கருதிவந்தார். ஏதோ புரட்சி வெடிக்கப் போகிறது என்றே நம்பினார் அவர்.
கொஞ்சநாளில் ஜீவா அங்கிருந்து தப்பிவிட்டார். அரசின் தடையும் அகன்றது. ஒருமுறை ஜீவாவை சந்திக்க நேர்ந்தபோது ராதா கேட்டார்: “என்ன காம்ரேட் புரட்சி வெடித்ததா?”
ஜீவா சொன்னார்: “நாட்டில் வெடித்தால்தான் புரட்சியா? இந்தப் புரட்சி வீட்டில் நடந்த புரட்சி” - என்றார். ராதா விழித்தார். ஜீவா விளக்கினார்: “நீங்கள் கொண்டுபோய்க் கொடுத்த கடிதங்கள் கட்சி தொடர்பான வையல்ல... அவையெல்லாம் நான் அந்த டீச்சருக்கு எழுதிய காதல் கடிதங்கள். இப்போது எங்களுக்குத் திருமணம் நடந்துவிட்டது.”
கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனது நாடகங்கள் மூலமாகவும், பிரச்சாரங்கள் மூலமாகவும் உதவிகள் பல செய்த ராதா கம்யூனிசத்தின் மீது தனக்கு இருந்த பற்று காரணமாக தனது ஒரு மகளுக்கு ‘ரஷ்யா’ எனப் பெயரிட்டார். லட்சுமி காந்தன், போர்வாள், கலைஞரின் கை வண்ணத்தில் உருவான தூக்குமேடை, ரத்தக் கண்ணீர் முதலான நாடகங்கள் எம்.ஆர். ராதாவின் புகழுக்கு மகுடம் சூட்டின. இதில் போர்வாள் நாடகத்தில் ராதாவுடன் கலைஞர் கருணாநிதியும் கொஞ்சநாட்கள் நடித்தார்.
பதினைந்து ஆண்டுகள் திரும்பிக்கூடப் பார்க்கா மல் நாடகத்துக்காகவே மூச்சும், பேச்சுமாகத் திரிந்த ராதாவுக்கு ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம் மீண்டு மொரு வெண்திரை வாய்ப்பாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, நல்லவன் வாழ்வான், தாய்சொல்லைத் தட்டாதே என்று மொத்தம் 125 படங்கள்.
நாடகங்களில் தானே எல்லாமுமாக இருந்து ஒரு பேரரசாட்சி செய்த ராதாவை சினிமா எப்படிப் பயன் படுத்தியது?
தன்னைப் பார்த்து எல்லாமும் பழகிய எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலருக்கும் கதாநாயகவேடம். இவருக்கோ வில்லன்பாத்திரம். எம்.ஆர்.ராதா சினிமாவைப் பெரிய அளவு நேசிக்காமல் போனதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கக்கூடும். இது ஆய்வு செய்யத் தக்கது. மறுபுறம், தனது தனித்துவக் கலை ஆற்றலினால் தனக்குத்தரப்பட்ட வில்லன் பாத்திரத்தை எதிர்க் கதாநாயகனாக (Anti Hero) வடிவமைக்கும் புதிய வகை முயற்சியில் பெருவெற்றி பெற்ற நடிகர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
இது சினிமாவில் ராதாவின் தனிச்சிறப்பு. கொள்கை வழியில் சிறுவயதுமுதலே இந்தச் சமூகத்தின் பிற் போக்குத்தனங்களின்மீது அவருக்கிருந்த தீராத கோபமானது அவருக்குத் தரப்பட்ட வில்லன் பாத்திரத்தை எதிர்க் கதாநாயகனாக ஒருபடி உயர்த்தி, நாயகனை எதிர்க்கவேண்டிய சாதாரண கதைச்சூழலிலும் இந்தச் சமூகத்தையே சாடும் சாதுர்யம் கொள்ளச் செய்திருக்கிறது.
இது எம்.ஆர்.ராதா மட்டுமே நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனை. தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமே கிடைத் திட்ட பெரும்பேறு.
வேறொரு நடிகர் அவர்போல் அன்றுமில்லை, இன்றுமில்லை எனச் சொல்லத்தக்க வகையில் நடிப்பு மட்டுமல்ல....அவருக்கு மல்யுத்தம் தெரியும், வாள் சண்டை தெரியும், குதிரையேற்றம் தெரியும்... ஏன், அவருக்குக் கர்னாடக சங்கீதம்கூட மிக அற்புதமாகத் தெரியும். அவருக்குத் தெரியாதது எது? பிறரை ஏமாற்றத் தெரியாது. உதவி என்று வருபருக்கு இல்லை என்று சொல்லத் தெரியாது. காசு பணம் சம்பாதிப்பதற்காக எதுவும் செய்யலாம் - கலையை எப்படியும் விற்கலாம் என்பதெல்லாம் தெரியவே தெரியாது!
‘கலை புனிதமானது. அதில் பிரச்சாரம் என்பது அந்தக் கலையையே தீட்டுப்படுத்திவிடும்’ என்றெல்லாம் பம்மாத்துசெய்யும் போலி அபிமானிகளுக்கு எம்.ஆர்.ராதாவின் சாதனைத்தடமே நல்ல பதிலடி யாகும். கலையார்வத்துடன் கொள்கைப் பற்றும் இணைகிறபோதுமட்டுமே அந்தக்கலை பயன் விளை விக்கும் என்பதும், அந்தக் கலையை மட்டுமே மக்கள் தங்கள் மனங்களில் குடியமர்த்துவார்கள் என்பதும் நடிகவேளின் கலைவாழ்வு நமக்குத் தரும் அரிய செய்தியாகும்.
இன்றைய வியாபாரச் சூழலில் நம் சினிமாத் துறையினர் இந்தத் திசைவழியிலும் சிந்திப்பது தமிழ்க் கலைப் பெருவெளியின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானதாகும்.
இப்படித்தான் எம்.ஆர். ராதா இறுதிவரை வாழ்ந்தார். தமிழகக் கலைஞர்களின் மனசாட்சியாக வாழ்ந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் சச்சரவேற்பட்டு, அந்தத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் நிகழாமல் போயிருந்தால், அவரும் ஐந்து வருடங்கள் வனவாசம் - சிறைவாசம் செல்லாமலிருந்திருந்தால், தமிழ் நாடக உலகிற்கும், தமிழ் சினிமாவுக்கும் இன்னும் பல நல்ல கலைப் படைப்புகள் கிடைத்திருக்கக்கூடும். அதன்வழி தமிழர் சிந்தை இன்னும் உயர்த்திருக்கக்கூடும். அந்த இழப்பையும் யாரே ஈடு செய்வார்?
- சோழ. நாகராஜன், துணை ஆசிரியர், செம்மலர்
- தகவல் ஆதாரங்களுக்கு நன்றி:
தஞ்சை ச.சோமசுந்தரம் எழுதிய
‘பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா’நூல்,
பழைய ‘இந்து’ நாளிதழ்கள், சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பன்முக ஆளுமை கொண்ட பகுத்தறிவுக் கலைஞன்!
- விவரங்கள்
- சோழ.நாகராஜன்
- பிரிவு: கட்டுரைகள்